இது ஒரு புது மாதிரி தொடர்..
என் மனைவி . ஹவுஸ் வொய்ஃப் . பெயர் ஷாலினி. கூப்பிடும் பெயர் ஷாலு. வயது சொல்லக்கூடாது. என்னைவிட மூன்று வயது சின்னவள். எனக்கு 36 . இரண்டு குழந்தைகள். மூத்தவன் ஷ்யாம். ஒரு கழுதை வயது – 7 . இரண்டாவது ஷிவானி நாலடி நீளம் வாயும் வாலும். வயதா? 4 அப்படியே பாட்டி சொன்னதை உள்வாங்கிப் பேசும் சாமர்த்தியம்.
ஷாலு! இந்தத் தொடரின் நாயகி!
கல்யாணமான புதிதில் நான் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் ஷாலு கலகலவென்று சிரிப்பாள். எனக்கு என் ஜோக்கைப் பற்றிப் பெருமையாக இருக்கும்.
அதே ஜோக்கை ஒரு வருடம் கழித்து சொன்னேன். ஒரு நமுட்டுச் சிரிப்பு.
இன்னும் ஒரு வருடம் கழித்து.. .ம்ம்ம்ம் என்று சிரிப்பே இல்லாத அமானுஷ்யக் குரல்.
இன்னும் ஒரு வருடம் கழித்து ..‘இதெல்லாம் ஒரு ஜோக்கா என்கிற பார்வை.
அடுத்த வருடம் ஸ்ஸ்.. இப்ப ஜோக் ஒரு கேடா?
அடுத்த வருடம் ‘உங்க ரோதனை தாங்க முடியலையே?
இப்பெல்லாம் நான் வாயைத் தொறந்தாலே ஆரம்பிச் சுட்டார்டா உங்கப்பா!
இதுக்கும் மேலே ஜோக்கடிச்சா பறக்கும் தட்டு தான் !
இந்த கால கட்டத்தில் தான் மேல் பிளாட்டுக்கு புதியதா ஒரு மாமா மாமி வந்தனர். அவர் முகத்தைப் பார்த்தாலே ஒரு தனி தேஜஸ். மனைவி போட்ட மழைக் கோட்டைக் கூடத் தாண்டியதே இல்லை என்பதை சுத்தமாக எடுத்துக் காட்டும் முகம். அந்த மாமி கண் ஜாடையிலேயே மாமாவை ரிமோட் கண்ட்ரோலில் வைத்திருப்பவர் என்பது அவர்களைப் பார்த்த ஒரு நிமிடத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்.
அவர்களின் பையன் அம்மாவின் கொத்தடிமையாக இருந்தான். மாமி செய்த ஒரே தப்பு ! அவனை அவர்களிடமிருந்து தப்பி ஓடச் செய்தது. அப்படி என்ன தப்பு செய்தார் என்று கேட்கிறீர்களா? அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். அப்பாவின் ஜீன் அப்படியே அவனுக்கு. கல்யாணம் ஆன மறு நாளே பொண்டாட்டி சொற்படி கேட்டு அம்மா அப்பாவை தனிக் குடித்தனம் போக வைத்தான். நான் தான் கொழந்தைகளைத் தனியே இருக்கச் சொன்னேன் என்று மாமி சொல்வாள்! நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். அதனால் மாமா மாமி எங்கள் வீட்டுக்கு மேல் பிளாட்டில் குடி வந்தனர்.
விட்ட குறையோ தொட்ட குறையோ மாமியைப் பார்த்ததுமே அவர் தான் தன் நண்பி.. தத்துவ மேதை. வழிகாட்டி என்று ஷாலு தீர்மானம் செய்துவிட்டாள். அவள் இதில் விஜய் ஸ்டைல். ஒரு தடவை தீர்மானம் எடுத்துட்டான்னா அப்பறம் அவ பேச்சையே அவ கேட்கமாட்டா! என் பேச்சை எப்போதும் கேட்க மாட்டா -அது வேற விஷயம்.
இந்த வருடம் புத்தாண்டில் அவள் புது தீர்மானம் எடுத்தாள். . அவளது கனவுகளை யெல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதினாள். உபயம் அவளுக்குக் கிடைத்த புது குரு -சுவாமினி குசலா தேவி. ஒவ்வொரு மாதமும் தனது ஒவ்வொரு கனவை நிறைவேற்ற முயல வேண்டும். அதன் வெற்றி தோல்விகளை மாதக் கடைசியில் சுவாமினியிடம் சொல்ல வேண்டும்!
சும்மா இருந்த ஷாலுவை சந்திரமுகி ஸ்டைலுக்கு உசுப்பி விட்டார் அந்த சுவாமினி. அவரை அறிமுகப் படுத்தியது மேல் வீட்டு மாமி.
இந்த கால கட்டத்தில தான் நீங்க வர்ரிங்க எங்க வீட்டுக்கு -நான் கொடுத்த போர்வையைப் போர்த்திக் கொண்டு – கண்ணுக்குத் தெரியாத மனிதராய்! எனக்கு மட்டும் தான் நீங்க தெரிவீங்க! வேற யாருக்கும் தெரிய மாட்டீங்க. குறிப்பா ஷாலுவுக்குத் தெரிய மாட்டீங்க. உங்களால் பார்க்க கேட்க மட்டும் தான் முடியும். மற்றபடி பேசவோ தொடவோ சாப்பிடவோ காபி குடிக்கவோ முடியாது. சுருக்கமாகச் சொன்னால் டிவியில் சீரியல் பார்க்கும் ஒரு ஜடம் மாதிரி தான் இருப்பீர்கள்.
முதல் மாதம். அவளது குறிப்பு நோட்டில் முதல் கனவு..
“நான் சிறு வயதில் கற்றுக் கொள்ள முடியாத பரத நாட்டியத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்…….”
.
( தொடரும்)
பக்கம் 6/25