மாதொருபாகன் by பெருமாள் முருகன்

image

பெருமாள் முருகனின் மாதொருபாகன் ஒரு மாபெரும் இலக்கிய சர்ச்சையைத் துவக்கிவிட்டது. 

இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் சிலர் குழந்தை பிறக்க கணவனால்  முடியாது என்ற போது சமூகம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறைப்படி கண்ணுக்குத் தெரியாத ஒருவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று  எழுதியிருக்கிறார்.. 

 {இதே முறைப்படி தான்  மகாபாரதத்திலும் வம்ச விருத்திக்காக வியாசர் மூலம்  திருதராஷ்ட்ரனும் பாண்டுவும் விதுரனும் பிறந்ததாகச்  சொல்லப்படுகிறது. }

இது சரியா தவறா என்ற கேள்வி இல்லை இந்த சர்ச்சைக்குப் காரணம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தி எழுதியதற்காக பெருமாள் முருகனுக்கு எதிராகப்  போராட்டம் நடைபெற்றது. அலுவலகர்கள் முன்னிலையில்  அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார். அவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் திரும்பப் பெறுவதாக அவரைக் கூற வைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்,  பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டார் – இனி கதையே  எழுதமாட்டார் என்றும்  அவரே அறிவித்தார்.

image
image

அதற்குப் பிறகு மற்ற எழுத்தாளர்களும் சில சமூக ஆர்வலர்களும் எழுத்தாளரின் உரிமையைப் பறிக்கும் விதத்தில் பெருமாள் முருகனை அந்த அமைப்புகள் நடத்திய விதத்தைக் கண்டித்தனர். நீதி கேட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். 

இப்போது  நிறைய எழுத்தாளர்கள் அவருக்காகவும் எழுத்து சுதந்திரத்துக்காகவும்  வரிந்துகட்டிக் கொண்டுப்  போராட வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. 

எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்? அளவில்லா சுதந்திரம் சரியானதா? திரைப் படங்களுக்கு சென்சார் இருக்கின்றன. ஆனால் பத்திரிகைகள், கதைகளுக்கு அந்த மாதிரி இல்லை. ஆராய்ச்சி அல்லது கற்பனை என்ற பெயரில் யார் எதை வேண்டுமானாலும் எழுதலாமா?    

மாற்றாக யார் எழுத்தை வேண்டுமானாலும் சமூக ஆர்வலர்களும் பலம் படைத்த அரசியல், ஜாதி, ஊடக குழுக்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் தடை செய்யக் கூறிப் போராட்டம் நடத்தலாமா?

இதப் பற்றி குவிகத்தின் கருத்து என்ன  என்று நண்பர்கள் கேட்டனர். 

நாம் சொல்வது இது தான். 

எழுத்தாளர்களுக்கு வானளாவிய சுதந்திரம் தரப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ‘your liberty stops where my nose starts ’ என்ற தத்துவப்படி பிறர் நலனுக்கு உணர்வுகளுக்குப் பாதகம் ஏற்படுமே என்றால் எழுத்தாளரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 

இதற்காக எழுத்தாளர் நீதி மன்றங்கள் நாட்டளவில் உலக அளவில் அமைக்கப் பட்டாலும் தவறில்லை!