மீனங்காடி

                                           திட்டம் 

 

image

மேரி திட்டம் தீட்டினாள் !

 எப்படி  ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ கருத்தை வலியுறுத்துவது ?  மீனங்காடி மக்கள் தினமும் தவறாது அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  அதில் ஒருவன் சொன்னானே ! ‘ இந்த வேலையைச் செய்யும்போது உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ். ஒன்று உலக நாயகன் ஆவது : இரண்டாவது  கலக நாயகன்.  ஒன்றில் விருப்பு: மற்றொன்றில் வெறுப்பு:  உலக நாயகன் ஆக வேண்டும் என்றால் அது மாதிரி வித்தியாசமாகச் செய்ய வேண்டும் “  நாம் யாராக இருக்கப் போகிறோம்? மேரி யோசித்தாள் !

 அடுத்தது ‘ ஆட்டம் கொண்டாட்டம் ‘ மீனங்காடி மக்கள் தான் எப்படி எல்லோரும் ஓடி ஆடி விளையாடுகிறார்கள்?  அதில் தான் எவ்வளவு சந்தோஷ சக்தி  ! நாமும் விளையாட வேண்டும் ! எப்படி அந்த ஜாலி, சக்தியைக் கொண்டு வருவது ? – மேரி தீவிரமாக யோசித்தாள்.!

 மூன்றாவது படி ! ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ‘ – மீனங்காடியில் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களுடன் விளையாடி அவர்கள் நெஞ்சில் இடம் பிடிக்கிறார்கள்.  அது நல்ல எண்ணத்தையும் மகிழ்ச்சியான சூழ்நிலையையும் உருவாக்குகிறது.  நமது வாடிக்கையாளர்கள் யார் யார் ? நாம் எப்படி அவர்கள் கவனத்தை ஈர்க்கப் போகிறோம்? நாம் எப்படி அவர்களுக்கு ‘ அந்த நாள் ஞாபகத்தை நெஞ்சில் ‘ நிறைய வைக்கிறது ?

 கடைசியா ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் ‘ – எவ்வளவு அருமையான கருத்து ! மீனங்காடி மக்கள் எல்லோரும் ஒருமித்து வாடிக்கையாளர்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்.  நாம் எப்படி நமது வேலையோடு வாடிக்கையாளர்களோடு ‘ ஒண்ணா இருப்பது ?

       இவற்றை எல்லாம் விவரித்து விட்டு மேரி தன்  டிபார்ட்மெண்ட் மக்களிடம் சொன்னாள் !

       “இவற்றைப் பற்றித் தீவிரமாக யோசியுங்கள் ! எப்படி நாம் இவற்றை நம் செயலில் கொண்டு வருவது ? என்பது பற்றி ஆழமாக யோசியுங்கள்.  திங்கட்கிழமை நாம் சந்திக்கும்போது திட்டங்களோடு வாருங்கள்.  நாம் நிச்சயம் வெல்வோம்.!”

 

                         சனி – ஞாயிறு – மீனங்காடி  

 

image

      “ டீச்சரம்மா உங்களுக்கெல்லாம் ‘ ஹோம் ஒர்க்‘ கொடுத்து இங்கே அனுப்பியிருக்காங்களா?” டோனி சிரித்துக்கொண்டே சுஜாதாவிடம் கேட்டான்.  அவள் தலைக்கு மேலே ஒரு மீன் பறந்து போய்க் கொண்டிருந்தது 

 “ ஆமாம் எங்கள் பாஸ் எங்களை ஹோம் ஒர்க் செய்யச் சொன்னார்கள்!”

 “ யாரு மேரியா?”

 “ அட! மேரி மேடத்தை உங்களுக்குத் தெரியுமா?” அதற்குள்ளே ஆரம்பித்து விட்டது ‘ போகுது பார்’ ‘ போகுது பார் ‘ – இந்த சுறாமீன் சிங்கப்பூர் போகுது.’ டோனிக்கு சுஜாதாவின் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆசை! சுஜாதாவிற்கும் எப்படி இந்த மக்கள் அனைவரும் மனதும் வேலையும் ஒன்றாக இருக்கிறபடி இருக்கிறார்கள் என்று டோனியிடம் கேட்க ஆசை!.

 “ போன வாரம் மேரி கூட நீங்கள் வந்தபோது பார்த்திருக்கிறேன்.  நீங்கள் தானே அந்த கவுண்டர் பின்னால் போய் வெற்றிகரமாக மீனைப் பிடித்தது?”

 “ அட! நீங்களும் பார்த்தீர்களா! அது உங்களுக்கும் ஞாபகம் இருக்கா?”

 “ நல்லா ஞாபகம் இருக்கு! ஆமாம்! ஏன் நீங்கள் கொஞ்சம் டல்லாக இருப்பது போல் இருக்கிறீர்கள்?”

 

image

சுஜாதா தான் எழுதிய நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள். “ டோனி! எனக்கு உங்கள் செயல்பாட்டில் எல்லாம் புரியுது. ஒண்ணே ஒண்ணைத் தவிர. ‘ ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ என்கிறீர்கள். இப்போ நீங்க என்னோட இருக்கீங்க! அது ஓகே!  அப்புறம் அந்த ‘ அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே‘ அன்றைக்கு நான் மீன் பிடித்தது இன்றைக்கு மட்டும் அல்ல, என்றைக்கும் என் நெஞ்சில் இருக்கும்.  அதுவும் ஓகே! மூணாவது ‘ ஆட்டம் கொண்டாட்டம் ‘ விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய பேரை கலாட்டா செய்திருக்கிறேன் !  ஆனால் இந்த ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்று சொல்கிறீர்களே! அதுதான் புரியவில்லை.  அது எப்படி நாம் எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது? மற்றவர்கள் தான் நம்மீது அதைத் திணிக்கிறார்களே! “

 “ சரியான கேள்வி சுஜாதா! இதுக்கு பதில் நம்ம ஓநாய்த் தலைவர்கிட்டேதான் இருக்கு.  அவர் ஒரு பெரிய ரேஸ் கார் ஒட்டினவர்.  ஒரு நாள் பலமான விபத்தில் அடிபட்டு பிழைத்ததே பெரிய காரியமாகக் கிடந்தார்!  மீதிக் கதையை அவர்கிட்டேயே கேளுங்கள்!  ஆனால் அதுக்குக் கடைக்குப் பின்னால் வார வேண்டியிருக்கும்.  அங்கே ஐஸ் கொட்டியிருக்கும். ரொம்ப குளிராக இருக்கும்! வர முடியுமா?” டோனி கேட்டான்.

 “ நான் அங்கே வர அனுமதி உண்டா?” – சுஜாதா கேட்டாள்.

 “ நாங்களும் வரலாமா?”

 திரும்பிப் பார்த்தால் சுரேஷ்! ரமேஷ்! அவனின் அழகான பையன்.

“ வாருங்கள் “ என்று சொல்லி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஓநாய்த் தலைவரைப் பார்க்கச் சென்றார்கள். அவர் தன் கதையை அழகாகச் சொன்னார்.  உருக்கமாகவும் இருந்தது. “ அந்த விபத்துக்குப் பிறகு நான் ஒவ்வொரு நாளும் என் எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்  கொண்டேன்! அதுதான் எனக்குத் திருப்பு முனை – வழி காட்டி !  ஒவ்வொரு நாளும் எப்படி எப்படி அவர் மாறினார் என்பதை விளக்கமாகச் சொன்னார்.  மூவரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.  திங்கட்கிழமை மீட்டிங்கில் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.

 அதற்குப் பிறகு சுரேஷ் வெளியே போய் விட்டான்.  சுஜாதாவும், ரமேஷும் அவனுடைய குழந்தையும் அருகில் உள்ள சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று காபி, சாக்லேட். கேக் என்று வாங்கி சாப்பிட்டார்கள்.  சுஜாதா தான்  முதலில் ஆரம்பித்தாள். “ ரமேஷ்! நம்ம குப்பைத் தொட்டியை முதலில் சுத்தம் செய்ய ஆரம்பிக்கணும்! இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போனால் அதுவும் இப்படி இருக்காது என்பது என்ன நிச்சயம்?  மேரி மாதிரி ஒரு நல்ல மேனேஜர் கிடைக்குமா? சந்தேகம் தான்! எனக்கு அவங்க கிட்டே ஒரு மரியாதை தோணுது.  பிரசாத்தைக் கூட அவங்க எதிர்த்துப் பேசினார்களாம்! எந்த மேனேஜருக்கு அந்த தில் இருக்கு?’

 “ சுஜாதா! நான் நினைச்சதையே நீயும் சொல்கிறாய்!  இந்த மீனங்காடி தொழிலாளர்களால் செய்ய முடியும் என்றால் நம்மால் ஏன் செய்ய முடியாது?  அதுவும் மேரி மாதிரி ஒரு மேனேஜர் இருக்கும்போது.  ஆனாலும் அது அவ்வளவு சுலபம் இல்லை சுஜாதா! நம்ம மக்கள் சிலருக்குக் கொஞ்சம் பயமா கூட இருக்காம். நாம் அவர்களுக்குத் தைரியம் சொல்லணும்.  அப்பத்தான் நாம் நினைக்கிற – எதிர்பார்க்கிற மாறுதல் கிடைக்கும்.”

 சுஜாதா மீனங்காடியை விட்டுக் கிளம்பும்போது பார்த்தாள், – மேலும் நாலைந்து அவளது ஆபீஸ் நண்பர்கள் குழந்தை குட்டிகளுடன் மீனங்காடியில் நுழைவதை!

  

                        திட்டத்தின் முதல் கட்டம்

 

image

திங்கட்கிழமை காலை முதல் குரூப் மீட்டிங்கில் ஆரவாரம் அதிகமாகவே இருந்தது.  மேரி வழக்கம் போல் பேச்சை ஆரம்பித்தாள். 

 “ இன்று நாம் புதிய அத்தியாயத்தைத் துவக்கப் போகிறோம்! நமது குப்பைத் தொட்டியைத் தூக்கி எறியப் போகிறோம்.  திட்டத்தை எப்படி செயலாற்றுவது என்பது தான் முதல் கட்டம்.  மீனங்காடியில் நாம் கண்டதை – கேட்டதை –  கற்றதை எப்படி நாம் அலுவலகத்தில் செயல் படுத்தப் போகிறோம் என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களை – ஆலோசனைகளை – யோசனைகளை தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  அவற்றை எல்லாம் நாம் தீவிரமாகப் பரிசீலிப்போம்.”

 சுஜாதாவும், ரமேஷும் எழுந்து தாங்கள் ‘ ஓநாய்த் தலைவருடன் ‘ பேசியதைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.  சுஜாதா தான் ஆரம்பித்தாள்.

 “ ஓநாய்த் தலைவர் நல்ல ஜாலியான மனிதர்.  ஆளைப் பார்த்தால்முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.  அதிலும் அவர் குரல் ரொம்பவே பயமுறுத்துவது போலத் தான் இருந்தது.  ஆனால் அவர் சொன்ன அவருடைய வாழ்க்கைக் கதை எங்களை மிகவும் உருக்கி விட்டது. அவர் ரேஸ் கார் வீரராக இருந்து ஒரு பெரிய விபத்திற்குப் பிறகு வாழ்க்கையே நொந்து போய்த் தவித்துக் கொண்டிருந்தாராம்.  அவரோட காதலி அவரை விட்டு விட்டுப் போய் விட்டாளாம்.  நண்பர்கள் கூட அவரிடம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டார்களாம்.  அவர்மீது அவருக்கே வெறுப்பும் கோபமும் தோன்றியதாம்.  வாழ்க்கையே இருட்டாக இருப்பதைப் போல உணர்ந்தாராம்.

அப்போதுதான் அவருக்கு அந்த இரண்டு வழித் தத்துவம் தோன்றியதாம்.  ஒரு வழி – வாழ் நாள் முழுவதும் இழந்து போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே சோகமாக இருப்பது, – மற்றொன்று அதை மறந்து விட்டு சந்தோஷமாக ஜாலியாக இருப்பது.  இந்த இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்து எடுக்க வேண்டும். அன்றைக்கே முடிவு செய்தாராம் – இனி வரும் நாட்களில் தான் மகிழ்ச்சியாக, ஜாலியாக இருப்பது என்று.  அதுதான் ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘ என்ற தத்துவத்தின் கருத்து என்று விளக்கினார். “

 

image

ரமேஷும் தொடர்ந்தான் . “ என் பையனுக்கும் ஓநாய்த் தாத்தாவை மிகவும் பிடித்திருந்தது.  அவர் சொன்ன பிறகுதான் என்கிட்டே –  நம் மக்கள்கிட்டே எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ‘ ஓநாய்த் தலைவருடைய அறிவுரைப்படி நாம் செயலாற்றினால் இந்த அலுவலகத்தை நாம் ஒரு சந்தோஷமான இடமாக மாற்றலாம்.  ஒவ்வொரு நாளிலும் நாம் நமது எண்ணத்தைத் தேர்ந்தெடுப்போம்.  அது நல்லதா, சிறப்பா அமையணும்! அமையும்! “

 சுரேஷும் தன் கதையைச் சொன்னான்.

“ ஓகே! சுரேஷ்! ரமேஷ்! சுஜாதா! இந்த வார விடுமுறையில் நிறைய ‘ ஹோம் ஒர்க் ‘  செய்திருக்கிறீர்கள்.  ‘ ஓவர் டைம்  ‘கேட்காததற்கு நன்றி “

 மேரி சொல்லவும் கூட்டத்தில் கசமுசவென்று சிரிப்பு தெளித்தது.

 அதற்குப் பிறகு கிட்டத்தட்ட அரைமணி நேரம் எல்லோரும் அவரவர் கருத்துக்களைக் கூற ஆரம்பித்தனர்.  கடைசியில் மேரி, “ நாம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யாராவது புதிதாக ஏதாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.

 இதுவரை வாயையே திறக்காமல் இருந்த ஒருவன் கூறினான்.

 “ நாம் ஏன் நான்கு டீம் தயார் செய்து அந்த மீனங்காடியின் நான்கு ஐடியாக்களையும் எப்படி உபயோகப் படுத்துவது என்று திட்டம் தீட்டக் கூடாது ?”

 மற்ற எல்லோரும் அதை ஆமோதித்தனர்.  அதைத் தொடர்ந்து மேரியும் “ ரொம்ப சரி! எனக்கும் இந்த யோசனை நன்றாகவே படுகிறது! எதற்கும் அடுத்த குரூப்பையும் கலந்து கொண்டு முடிவைச் சொல்கிறேன்”.

 மீட்டிங் முடிவில் ஒரு பேப்பரைக் கொடுத்து யார் யார் நான்கு டீமில் எதில் சேர ஆசைப்படுகிறார்கள் என்று கையெழுத்து வாங்கினாள்.  இரண்டாவது குரூப்பும் முதல் குரூப்பின் யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டது.  அவர்களும் அவர்களுக்குப் பிடித்த டீமில் சேரக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.

 முதல் கட்டம் தயார் ! செயலாற்ற வேண்டியதுதான் !

                         அணியில் சிறு சிறு மாறுதல்கள்

image

 ‘ ஆட்டம் கொண்டாட்டம்’ அணியில் சேர நிறையப்பேர் பெயர் கொடுத்திருந்தார்கள்.  மேரி அவர்களுடன் கலந்து பேசி ‘ எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘  அணிக்குச் செல்பவர்களுக்கு மீனங்காடியில் இலவச ‘ டீ ஷர்ட் ‘ கிடைக்கும் என்றதும் சிலர் தாவினர்.  அணிகள் சரியாக அமைந்ததும் அதை ஆபீஸ் ஆர்டராகப் போட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டினாள் மேரி!  அணிகள் எப்படி செயலாற்றுவது என்பதற்கான அறிவுரைகளையும் தயார் செய்தாள்.

                         அணிகளுக்கான அறிவுரைகள்

 ஒவ்வொரு அணிக்கும் ஆறுவார நேரம் தரப்படும்.  அதில் அவர்கள் மீட்டிங் போடுவது, வேண்டிய தகவலைச் சேகரிக்கிறது, கலந்து ஆலோசிப்பது எல்லாம் அடக்கம்!  கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ‘ விளக்கப் படமாக ‘ – ‘ பிரஸன்டேஷன் ‘ தயார் செய்து மக்கள் முன் காட்ட வேண்டும்.

 விளக்கப் படங்களைத் தொடர்ந்து திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்ற குறிப்புகளையும் தர வேண்டும்.

 அணிவேலைக்கென்று வாரத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மணி நேரம் அலுவலக நேரத்திலேயே சௌகரியப்படி ஒதுக்கித் தரப்படும்.  மற்றவர்கள் அந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு அணிக்கும் கைச் செலவிற்காக ஆயிரம் ரூபாய் தரப்படும்.

 அணிகள் அவரவர்களுக்கான மீட்டிங்கைத் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.

 எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைத் தீர்த்து வைக்க நான் எப்போதும் தயார்.  இருந்தாலும் அணிகள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வது தான் நல்லது.

   நாம் வேலை செய்யும் இடத்தை

  நாம் விரும்புகிற இடமாக மாற்றுவோம் !

  குட்லக்  –   மேரி 


(தொடரும்)