ஷாலு மை வைஃப்

image

இன்னிக்கு ஜனவரி ஒண்ணு! ஷாலு காலை ஆறு மணிக்கு எழுந்து காபி குடித்துக்கொண்டே இன்னிலிருந்து ஏதாவது புதுசா ஆரம்பிக்கணும்! என்ன பண்ணலாம் என்று யோசித்தாள். மேஜை மேலே இருக்கும் ஸ்வாமினியின் போட்டோவைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். படத்தை எடுக்கும் போது அதன் அருகிலிருந்த டி‌வி ரிமோட் கீழே விழுந்து டி‌வி தானாக ஆன் ஆகியது.

அதில் “நலந்தானா” என்ற பாடல் ஆடலுடன் திரையில் வந்தது.

உடனே அவளுக்கு ஒரு பொறி தட்டியது. தலைக்கு மேலே ஒரு பல்ப் எரிந்தது.

image

ஆஹா இது தான் ஸ்வாமினியின் கட்டளை என்று ‘கண்டேன் சீதையை’ பாணியில் புல்லரித்தாள். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்து அழிச்சாட்டியம் பண்ணியது எப்படி ஸ்வாமினிக்கு தெரிந்தது? நான் இந்த மாதம் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் ஸ்வாமினியின் ஆணை. தன் அறிவைத் தானே மெச்சிக் கொண்டாள்.அந்தப் பாடல் முடிவில் வந்த உருவமும் ( மோகனாம்பாளின் தாயார் வடிவாம்பாள் தான்) ஸ்வாமினி சாடையில் இருந்தது அவளுக்கு தெய்வாதீனமாக இருந்தது.

உடனே செயலில் இறங்கினாள் ஷாலு. ஸ்டூலை எடுத்துப் பரணில் இருக்கும் அவளது கருப்பு டிரங்க் பெட்டியை தேடலானாள். அதில் தான் அவளுடைய பரத நாட்டிய டிரஸ், கொண்டை, காகித கனகாம்பரப்பூ, ராக்கொடி, நகை செட், அத்தர் எல்லாம் இருந்தன. ஆறாவது படிக்கும் போது நலந்தானா பாட்டுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவில் அபிநயம் பிடித்த போது டான்ஸ் டீச்சர் கோமளாவுடன் போய் மைலாப்பூரில் பத்து கடைகளில் ஏறி இறங்கி வாங்கியது. இருபது வருஷமானாலும் பத்து இடத்துக்கு சேகர் டிரான்ஸ்பரில் சென்ற போது கூட இந்த டிரங்க் பெட்டியைத் தூக்கி எறிய மனசு வரவில்லை. ஒவ்வொரு வருஷமும் விஜயதசமி அன்றைக்கு அதைத் திறந்து பார்த்து கற்பனையில் கொஞ்ச நேரம் ஆடிவிட்டுத் தான் டிரங்க் பெட்டியை மூடுவாள்.

மெள்ள டிரங்க் பெட்டியை கீழே வைத்துத் திறந்தாள். அதில் முக்கியமான ஒன்றைக் காணோம்! அவளது சலங்கை! எங்கே போயிற்று என்று புரியாமல் ஒரு நிமிடம் குழம்பினாள். சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. ஒருமுறை ஷிவானிக்குச் சலங்கையைக் காட்டிவிட்டு சேகரிடம் ஒரு மஞ்சப் பையில் போட்டு டிரங்க் பெட்டியில் வைக்கச் சொன்னது. சேகர் வேணுமென்றோ ( அல்லது வேண்டாமென்றோ) அதை பெட்டிக்குப் பின்னால் எறிந்து விட்டான். ‘சரி பிறகு எடுத்துக் கொள்ளலாம்’ என்று அவளும் அப்போது விட்டுவிட்டாள். இப்போ அது ரொம்பப் பின்னாடி போய் விட்டது. கிடைக்க மாட்டேங்குது.

அப்பொழுது ஷ்யாம் ஒன் பாத் ரூம் போக அவசர அவசரமாக ஓடி வந்தான்.

“ஷ்யாம் கண்ணா ! அம்மாவுக்கு ஒரு ஹெல்ப் பண்ணிரியா?”

“போம்மா ரொம்ப அர்ஜண்ட்” என்று சொல்லி பாத் ரூமுக்குள் போய் டமால்ல்ன்னு கதவைச் சாத்தினான்.

“சனியனே மெல்ல சாத்துடா!" 

எவன் தயவும் வேண்டாம் நாமே எடுப்போம் என்று அந்த மஞ்சப்பையை நகர்த்தினாள். அவள் போறாத நேரம். அது இன்னும் கொஞ்சம். ஒரு அடி  உள்ளே தள்ளிப் போய் விட்டது.

திடீரென்று அவள் காலில் ஏதோ பிறாண்டுவதை உணர்ந்து ‘ஐயோ’ என்று அலறினாள். கீழே பார்த்தால் ஷ்யாம் தான் அவள் காலடியில்.. அந்த அலறலில் கீழே விழப் போன அவள் சுவத்தைப் பிடித்துக் கொண்டதால் தப்பித்தாள்.

"ஷ்யாம் கண்ணா அம்மாவுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா! நான் உன்னைத் தூக்கிப் பிடிச்சுக்கறேன். நீ அந்தப் பரணுக்குள்ளே இருக்கிற மஞ்சப் பையை எடுத்துத் தாயேண்டா!”

“சரி, நான் எடுத்துத் தர்றேன். இன்னிக்கு சாயங்காலம் பீச்சுக்குக் கூட்டிட்டுப் போகணும் சரியா? ”

“சரிடா! வா!”

“மஞ்சப்பை தெரியுதாடா?”

“அம்மா என் கிரிக்கெட் பேட்-பால் இருக்கும்மா ! தொலைஞ்சு போச்சுன்னு பொய் தானே சொன்னே!”

பக்கத்து விட்டு ஜன்னலை உடைச்ச கோபத்தில தூக்கி எறிஞ்சது! இப்போ அவன் கண்ணிலே படுது

“முதல்லே மஞ்சப்பையை எடு!”

“அதெல்லாம் முடியாது. முதல்லே பேட்-பால்”.

“சரி எடுத்துத் தொலை!” பேட் பாலைத் தூக்கி கீழே வீசினான்.

“அம்மா !மஞ்சப் பையைக் காணோம்மா!”

“நல்லாப் பாருடா! நான் இன்னும் கொஞ்சம் தூக்கி விடறேன்!”

“அம்மா என் டமாரம்!”

ஐயோ! அது வேற அவன் கண்ணில பட்டுடுச்சா! இனிமே நம்ம காதெல்லாம் டமாரம் தான்!

“ஷ்யாம்! ஒழுங்கா மஞ்சப் பையை எடுத்துக் குடு! இல்லேன்னா உன்னைப் பரணுக்குள்ளேயே இறக்கி விட்டிடுவேன்!”

“சரிம்மா! டமாரம் மட்டும் எடுத்துக்கிட்டு மஞ்சப்பையை எடுத்துத் தர்றேன்!”

“அம்மா! மஞ்சப்பை கிடைச்சுடுத்து! அதுக்குள்ளே என்னம்மா ஜால்ரா மாதிரி?”

“அது சலங்கைடா”!

“சலங்கையை என்னம்மா பண்ணுவாங்க? ”

“அதைக் காலிலே போட்டு டான்ஸ் ஆடணும்டா!”

“நான் போடவா?”

“முதல்லே இறங்கு! அப்பறம் போடலாம்!”

“அட சனியனே! ஏண்டா சலங்கையை என் காலிலே போட்டே! வலி பிராணன் போறது?”

“நீ தானேம்மா சலங்கையைக் காலிலே போடணும்னு சொன்னே! ”

மெல்ல அவனை இறக்கிவிட்டுக் காலைத் தடவிக் கொண்டே சலங்கையை எடுத்துத் தடவிப் பார்த்தாள்.

அவளுக்கே அவள் கொஞ்சம் கொஞ்சமாக சந்த்ரமுகி ஸ்டைலில் மாறுவது போல் உணர்ந்தாள்.

“அம்மா பசிக்குது” என்று ஷிவானி வந்தபோது தான் ஷாலுவுக்குத் தெரிந்தது. இன்னிக்கு காலை டிபனைப் பத்தி யோசிக்கவே இல்லை என்பது.

image

அதற்குப் பிறகு ஷாலு  சுத்தமாக மாறிவிட்டாள். 

“இத பாருங்கோ! இன்னிக்கி நாம கோமளா டீச்சரைப் பார்க்கணும்! திரும்ப நான் பரத நாட்டியம் கத்துக்கிட்டு இந்த மாசம் 26ம் தேதி குடியரசு தின விழாவிலே நம்ம காலனியில் பரத நாட்டியம் ஆடப் போறேன்!”

“இங்கே பாரு ஷாலு! கோமளா டீச்சர் அன்னிக்கு உனக்கு சரியா கத்துக் குடுக்கலைங்கிறதுக்காக இன்னிக்கு அவங்களைப் பழி வாங்கக் கூடாது! அவங்களுக்கு இப்போ 75 வயசு இருக்கும்.சும்மா நின்னாலே கால் ரெண்டும் ஆடும்.”

கோமளா டீச்சரைப் பார்க்கப் போனோம் அவர்கள் படுத்த படுக்கையில் இருந்தார்கள். ஷாலு மனம் தளரவில்லை. அவர்கள் நடத்துற டான்ஸ் ஸ்கூல் போனோம். அங்கே ஷியாமளா என்ற அவரது மாணவி சொல்லிக் கொடுப்பதாகக் கேள்விப் பட்டோம்.

போய்ப் பார்த்தால் ஷியாமளா ஷாலுவின் கிளாஸ்மெட். சின்ன வயதில் ஷாலு மாதிரி ஆட முடியவில்லை என்று கோபித்துக் கொண்டு டான்ஸை நிறுத்திவிட்டு கராத்தே சேர்ந்தவள். அவளிடம் கற்றுக் கொள்ள ஷாலுவுக்கு ஈகோ பிரச்சினை.

“நான் என் குரு கோமளாவின் போட்டோவை வைத்துக்கொண்டு ஏகலைவி மாதிரி கத்துக்கப்போறேன் ” என அறிவித்தாள் ஷாலு.

அதற்குப் பின் ஷாலுவின் போக்கே மாறிவிட்டது. தினமும் ஆறு மணிநேரம் அசுர சாதகம் செய்தாள். மற்றவர்களுடைய மெய் வருத்தம் பார்க்காமல் மற்றவர்களைக் கண் துஞ்சவிடாமல் கருமமே கண்ணாக இருந்தாள். மூன்று ஜீவன்கள் பசி பட்டினியில் துடித்தாலும் கவலைப்படாமல் நாட்டியமே உயிர் மூச்சு என்று இருந்தாள்.

image

ஏற்கனவே நான் சமையலில் மாஸ்டராக இருந்ததால் பட்டினிச் சாவிலிருந்து தப்பினோம். இது தான் சாக்குன்னு ஷ்யாம் இருபத்து நாலு மணி நேரமும் விளையாட்டே கதின்னு இருந்தான். பக்கத்து பிளாட் காரர்கள் உணர்ச்சிகள் – முதலில் பாராட்டு.. சந்தோஷம் .. அனுசரணை..பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் ஆத்திரம் கோபம் கடைசியில் கொலைவெறி அளவிற்குப் போய்விட்டார்கள். பிளாட் செக்ரட்டரி மொழி பட செக்ரட்டரி மாதிரி எங்களைக் காலி பண்ணிப் போகச் சொன்னார். அப்புறம் தான் அவருக்குத் தெரிந்தது இது  எங்க சொந்த வீடு என்று. லீகல் நோட்டீஸ் கொடுக்கப் போவதாகக் கத்தி விட்டுச் சென்றார்.

.எல்லாரும் என்கிட்டே தான் சொல்வார்களே தவிர ஷாலுகிட்டே பேச பயம்.“என்ன கொடுமை சேகர் சார் "என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டம் அழுதுவிட்டுப்  போவார்கள்.

ஷிவானி தினமும் அம்மா ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். ஷாலு தூங்கும் போது இவள் சலங்கையைக் கட்டிக்கொண்டு தையா தக்கா என்று குதிப்பாள்.

image

ஜனவரி 26 குடியரசு வந்தது. அன்று மாலை கலை நிகழ்ச்சிகள். ஷாலுவின் நண்பிகள்  மற்றும் அவள் உறவினர்களெல்லாம் வந்து அவள் பங்குபெறும் பரத நாட்டியத்தைக் காண ஓடோடி வந்தார்கள்.

அதே நலந்தானாவுக்கு ஷாலு ஆடினாள். .மேடையில் ஷாலுவைப் பார்க்க அவள் ஆட்டதைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பிரமாதமாக ஆடினாள். ‘கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ’ என்று அபிநயம் பிடிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மேடையில் சறுக்கி விழுந்தாள். எழுந்திருக்க முடியவில்லை. பாட்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஷாலுவால் ஆட முடியவில்லை.நான் மேடை ஏறி ஷாலுவைக் கைத்தாங்கலாகப் பிடித்தேன். சீரியசாக ஒன்றும் இல்லை!

image

பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம் ஷிவானியை மேடையில் ஏத்திவிட்டான். எந்த வித மேக்கப்பும்  இல்லாமல் ஷிவானி அம்மாவின் ஆட்டத்தைத் தொடர்ந்தாள். நலந்தானா என்று அம்மாவைக் கண்ணால் கேட்டு ஷிவானி ஆடியதும் பயங்கர கைதட்டல். ஷிவானிக் குட்டி பார்த்த ஞானத்திலேயே பிரமாதமாக ஆடினாள். எல்லோரும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கத்த மீண்டும் முதலிலிருந்து பாட்டு துவங்கியது. ‘கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ’என்ற இடம் வரும் போது ஷாலுவிற்கு எல்லாம் சரியாகிவிட்டது .அவளும்  .ஷிவானியுடன் தொடர்ந்து ஆடினாள். 

image

அன்னிக்கு ஷாலு தான் சூப்பர் ஸ்டார். அவளைப் பேசச் சொல்லி மேடைக்கு அழைத்தார்கள். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவி மாதிரி நல்லா பேசினாள். இருபத்தைந்து நாளில் இருபது வருடத்துக்கு முன் கத்துக் கொண்டநாட்டியத்தைத் தனக்கு திரும்பக் கொண்டு வந்ததற்காக தனது ஸ்வாமினிக்கு நன்றி சொன்னாள். இனிமேல் தான் ஆடப்போவதில்லை என்றும் இனி ஷிவானியை பரதம் கற்றுக் கொள்ள வைப்பது தான் தனது முதல் வேலை என்றும் சொன்னாள். அரங்கமே கை தட்டியது. 

கடைசியாக அவள் சொன்னது  என்னை ஆச்சரியத்தில் மிதக்க வைத்தது.

” நான் இந்த மாதிரி நாட்டியத்திற்கு மீண்டும் வர முக்கிய காரணம் என் கணவர் சேகர்  தான்!  அவர் தான் ‘என் கணவன்  என் தோழன்’ சீரியலில் வரும் சூர்யா மாதிரி என்னை உற்சாகப் படுத்தினார் “ என்று சொன்னது தான். 

அன்றைக்கு இரவு அவளிடம் கேட்டேன். ‘ஏன் இப்படி மேடையில் ஒரு மாபெரும் பொய்யைச் சொன்னாய்? 

"அப்பொழுது தான் நீங்கள் எனது அடுத்த மாத முயற்சியான  கார் ஓட்டும் படலத்துக்கு உங்கள்   காரைக் கொடுப்பீர்கள் ”  என்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். 

எனக்குத் தலை சுற்றியது!