2014 தமிழ்த் திரைப்படம் -ஒரு கண்ணோட்டம்                 (Action King )

2014 இல் வழக்கத்துக்கு மாறாக நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன.  எல்லா வருடங்களிலும் ரஜினி அஜீத் சூர்யா தனுஷ் படங்கள் வரும். ஹிட் ஆகும். ஆனால் இந்த வருஷம்  சில நல்ல புதுமையான   படங்கள் வந்துள்ளன .அவை ஹிட்டும்  ஆகியிருக்கின்றன. 

சரி இந்த வருடம் வந்த சிலபடங்களைப் பற்றி   டாப் 10 பாணியில் பேசுவோம் 

லிங்கா 

image

தலைவர் படம் என்ற எதிர்பார்ப்பைக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு போனதினாலே சுமார் ரகத்தில் லிங்காவைச் சேர்க்க முடிந்தது. இல்லைன்னா ????  ரஹ்மான் பாட்டு எதுவும் மனசிலே நிக்கலை. ரஜினியின் பழைய படங்களை மிக்ஸியில் அரைத்து தோசை ஊத்தியிருக்கிறார் கே. எஸ் ரவிகுமார். சாரி தலைவரே. தோசை வேகவில்லை. 

பத்துக்கு நாலு 

அரிமா நம்பி: 

image

நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. வித்தியாசமான  திருப்பங்கள்.செதுக்கியதைப் போன்ற பாத்திரங்களும் வசனங்களும். விக்ரம் பிரபு மற்றும் மற்ற நடிகர்  நடிகைகள் இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்கிருக்கலாம். தொய்வு இல்லாமல் போகிறதுக்காக டைரக்டரைப் பாராட்டலாம்.  டூயட் பாடற   வழக்கத்தை யாராவது மாத்தினால் தேவலை. 

பத்துக்கு ஆறு.   

யாமிருக்க பயமே: 

image

திகிலும் காமெடியும் கலப்பது தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட்.  நிறைய இடங்களில் பயமும் குபீர் சிரிப்பும் வருகின்றன என்றாலும் அவை எதிர்பார்த்த மாதிரி தான் இருக்கின்றன, நிறைய பேரின் நடிப்பு சுமார் ரகத்துக்கு கீழே! நல்ல முயற்சி.

பத்துக்கு ஏழே கால் . 

வாயை மூடிப் பேசவும்: 

image

புதுமையான கனவுக் கதை. சின்னச் சின்னப்   பாத்திரங்களும் நல்லா பண்ணியிருக்காங்க. குறும்படத்தை பெரிய படமா எடுத்திருக்கற சிரமம் பார்க்கும் போது தெரியுது.சுந்தரலிங்கம் சார்! தமிழ் சினிமாவுக்கு செம புதுமையான வரவு. 

பத்துக்கு ஏழு.    

மெட்ராஸ்: 

image

இந்தப் படத்தின் ஹீரோ சுவர் தான். அந்தப் பாணியில் சொன்னால் பழைய சுவத்துக்குப் புதுப் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அங்கே அங்கே கலர் சூப்பரா இருந்தாலும் நிறைய இடங்களில் பெயிண்ட் சாயம் போயிருக்கு. ஏம்ப்பா! இந்த தமிழ் பேசற ஹீரோயின்கள் எல்லாம் எங்கே போயிட்டாங்க? ஒண்ணு ரெண்டு பாட்டு கேட்க நல்லாவே இருக்கு. 

பத்துக்கு ஆறே முக்கால் . 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் 

image

வித்தியாசமா எடுக்கணும்னு முடிவு பண்ணி எடுத்த இந்தப் படத்தை பார்த்திபன் நல்லாவே கொண்டு போயிருக்கிறார்.எல்லாத்தையும் தலை மேல் போட்டுக்கிட்டு  நடிப்பில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார். அருமையான முயற்சி. 

பத்துக்கு ஏழு.

காவியத் தலைவன் 

image

நல்ல தரமான காலப் பின்னணி . நல்ல திறமையான நடிகர்கள்.சூப்பரான ரஹ்மானின் இசை. கண்ணைக் கவரும் உடைகள். அருமையான ஒளிப்பதிவு. இத்தனை ‘நல்ல’ க்கள் நிறைய இருந்தும் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நல்லா  இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏன் ? டைரக்டரைக் கேட்க வேண்டிய கேள்வி.     கதையோட கருவும் 1930 வருட நாடகப் பின்னணியும்  சரியா ஒட்டவில்லை. 

பத்துக்கு ஏழேகால்    

தெகிடி:

image

புதுமைச் சரக்குடன் விறுவிறுப்பையும் சரியா கலந்து கொடுத்திருக்கிறார்கள். முக்கியக் கதா பாத்திரங்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ‘விண்மீன் விழியில்’ பாட்டும் எடுத்த விதமும் ரொம்ப நாளைக்குப் பிறகு திரும்பிப்  பார்க்க வைக்கின்றன. எடிட்டர் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் 

பத்துக்கு ஏழே முக்கால்.   

சதுரங்க வேட்டை: 

image

எடிட்டிங் என்றால் இந்தப் படத்தைப் பார்த்துத் தான் கத்துக்கணும் . திரைக்கதையும் வசனமும் காமெடியை அல்லாக்க  தூக்கிவிடுது. ஊ ழலைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு வரணும் என்பதற்காக எடுத்த படம் இல்லை. ஆனால் அது இயல்பா மக்களுக்குப் போய்ச் சேர்வது தான் இதன் பெரிய வெற்றி. நடிப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்து க்ளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தா படம் எங்கேயோ போயிருக்கும். 

பத்துக்கு எட்டு.  

ஜிகிர்தண்டா: 

image

2014இல் டாப் படம் இது. இதுவரைக்கும் நாம் பாக்காத கதை /திரைக்கதை . டைரக்டர் கார்த்தி சுப்பராஜ்  சூப்பரா கலக்கிட்டீங்க! ஒரு ரவுடி படம் ‘மாஸ்’ படமாக மட்டுமில்லே ‘கிளாஸ்’ படமாகவும் இருக்க முடியும்னு நிரூபித்த படம்.அதே மாதிரி படத்தை சீரியஸா எடுத்து போகாம காமெடியில் காவடி கட்டினது ரொம்ப ரொம்ப சூப்பர். சாதாரண ரவுடியை  சினிமா களத்தைப் பார்த்து மியூசிக், லைட்டிங்க், ஒலிப்பதிவு எல்லாம் பிச்சு ஒதரவிட்டு பின்னாடி அவனோட தனி ஸ்டைலைக் கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர். அசால்ட்டா  திரிந்த ரவுடி சேதுவை ஒரு  முத்திரை ஹீரோவா மாத்தின விதம் இன்னும் பல வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் தமிழ்ப் படத்தின் திருப்புமுனையா  நிலைச்சு நிக்கும் .    

பத்துக்கு ஒன்பது.

பார்க்காமல் கேள்வி ஞானத்தை  மட்டும் வைத்து சொல்ல அனுமதித்தால், 


கோச்சடையான்  – பத்துக்கு மூணு. 
ரம்மி                        – பத்துக்கு நாலு 
முண்டாசுப்பட்டி  – பத்துக்கு  ஐந்து 
கப்பல்                      – பத்துக்கு ஐந்து 
பிசாசு:                     – பத்துக்கு ஆறு 
கயல்                      – பத்துக்கு ஆறரை  

 
மற்ற மாஸ் படங்கள் – ஜில்லா, வீரம், அஞ்சான் ,மான் கராத்தே, கத்தி இதுக்கெல்லாம் என்ன மார்க் போட்டாலும் ரசிகர்கள் மாலை போட்டு அபிஷேகம் செய்து பார்க்கத் தான் போறாங்க! 

2015இல் படம் எடுக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 

– வித்தியாசமா எடுங்க!

– புத்திசாலி மக்களை ( அவர்கள் தான் மெஜாரிட்டி) கவர ரூம் போட்டு யோசிச்சுக் கதை எழுதுங்க!

– ஃபார்முலா 44 கதை வேணாமே!

– தமிழ்ப்  படத்தின் தரத்தைக் கொஞ்சம் முன்னுக்குக் கொண்டு வாங்க!

– பாத்திரங்களைப்   புதுப் பாணியில் செதுக்குங்க!

– பாலச்சந்தருக்கு அப்புறம் ஹீரோயின் படங்களையே காணோம். நல்ல தமிழ் பேசத்தெரிந்த ஹீரோயின்களை வைத்து ஹீரோயினை மையமாகக் கொண்ட படமும் எடுங்கள்! 

– விறுவிறுப்பா எடிட்டிங் பண்ணுங்க. 

–  ஒண்ணரை மணி நேரத்தில் படத்தை முடிங்க! 

– தேவையில்லாத  பாட்டு பைட் எல்லாம் வேணாங்க!

இதெல்லாம் சொல்லறது ஈஸி கண்ணா!  செஞ்சு பார்டா என்று சொல்றீங்களா! 

எங்க  ஆசையைச் சொல்லிப்புட்டோம். அப்பறம் உங்க விருப்பம்!!