
ஜெயந்தன்
திரு ஜெயந்தன் (இயற்பெயர்: கிருஷ்ணன் (1938-2010). தொடக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் பின்னர் வருவாய் துறையிலும் பணியாற்றிய பிறகு கால்நடைப் பராமரிப்புத்துறையில்பணியாற்றி ஒய்வு பெற்றவர். ‘கோடு’ என்னும் சிற்றிதழ் நடத்தி உள்ளார். கணையாழி, சுபமங்களாதவிர பிற பிரபல பத்திரிக்கைளிலும் பல படைப்புக்கள் வெளியாகி உள்ளன.
இவர் கதைகளில் நிகழ்களங்களும், கதைமாந்தர்களும் நமக்கு எங்கோ பரிச்சயமானவை என்று தோன்றும். அவற்றில் இவர் அளிக்கும்
பார்வையும் கோணங்களும் சுவாரசியம் தருகிறது.
நமக்குப் பழக்கப்பட்ட கதை அமைப்பில் இவரது
பெரும்பாலான சிறுகதைகள் இருந்தாலும், மாறுபட்ட கதை அமைப்பில் – ஞானக்கிறுக்கன் என்கிற ஒரே கதை நாயகன் உடைய
சிறு கதைகள் – ‘இண்ட்டர்வியூ’ (பணிக்கான நேர்முகத்தேர்வின்
உரையாடல் மட்டுமே) – ‘சர்வாதிகாரியும் சன்யாசினியும்’ (முசோலினி,
பி. யூ. சின்னப்பா, கபீர் தாஸ், தெரஸா,
தாகூர், வினோபா பாவே என்று பலரும் புகைப்படத்திலிருந்து இடையிடையே பேசுவது) – ‘ஆகஸ்ட்’ (தனது சக ஆசிரியையைத் தாக்கியதற்காக
சாந்தி டீச்சரை பதிமூன்று நீதிபதிகள் விசாரிப்பது) போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
ஆனந்தவிகடனில் வெளிவந்த “முனியசாமி”
என்கிற கதை வெகு காலமாக எனக்கு நினைவிலிருக்கும் சிறுகதை.

முப்பது வருடங்களாக தாசில்தாராக சுமார்
பதினைந்து அலுவலகங்களில் பணிபுரிந்த குமரய்யா, ஐம்பதிற்கும் மேற்பட்ட கடைநிலை
ஊழியர்களைப் பார்த்திருந்தும், முனியசாமியைப் போன்ற
சேவகனைப் பார்த்ததில்லை.
(எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ‘நான்
என்னமோ செய்து விட்டேனாக்கும்" என்று முகத்தில் துளி ‘நான்’ இன்றி கைகட்டி நிற்பது கீதையறிந்தோர் கண்டு
திளைக்க வேண்டிய அம்சம்)
ஒருவாரம் விடாமல் பெய்த மழையில்
அடுப்புக்கு விறகில்லை என்று குமரய்யாவின் மனைவி சொன்னதற்காக கொட்டும் மழையில்
எங்கெங்கோ திரிந்து விறகு கொண்டு வந்து கொடுக்கிறார் முனியசாமி.
எதை
எதிர்பார்த்து இவன் இப்படி ஊழியம் செய்கிறான் என்று தாசில்தாருக்கு பெரும்
வியப்பு. அலுவலகத்தில் பிறரிடம் சொல்லி மாய்ந்து போகிறார்.
(‘மனுஷனுக்கு ஒரு பிரியம் பாருங்க ……..
நாம என்னா அப்படி அள்ளிக்குடுத்திடறோம்’)
மற்றவர்கள் குமரய்யா சொல்வதை
ஆமோதித்தாலும், துணைத் தாசில்தார் ராகவன் புன்னகை மட்டும் செய்கிறார். ராகவன்
எல்லோருக்கும் ஒரு மாதிரியான ஆசாமிதான். சாதாரணமாக தலையைத் தொங்கப்போட்டுக்
கொண்டிருக்கும் அவர், எப்போதாவது நிமிர்ந்து பார்த்து, தனது பிரசித்தமான
புன்னகையுடன் கண்ணாடியை இடதுகையில் எடுத்தார் என்றால் எதிராளியை வம்புக்கு
இழுக்கிறார் என்று அர்த்தமாம். ஒரு குமாஸ்தா வேலை கிடைத்ததும், தன் சுயப் பிரச்சினை
தீர்ந்துவிட்டதால் ‘சமூகத்தைப் பத்தியெல்லாம் நான் ஏன் சார் அலட்டிக்கணும்’ என்று
கேட்ட பங்கஜத்தையும், ‘உலகப் பிரச்சினை எல்லாம் எனக்கு எதற்கு? ஒரே பையனுக்கு வாரிசு
உரிமைப்படி வேலை கிடைத்துவிடுமே’ என்று சொன்ன உறவுக்கார போஸ்ட் மாஸ்டரையும் ஒரு
பிடி பிடிக்கிறார்.
தீபாவளி இனாம் வசூல் செய்து பகிர்ந்து
கொள்ளும் கடைநிலை ஊழியர்களிடம், இருபது ரூபாய் பணத்தைத் தருவதில் எந்த வருத்தமும்
இல்லை. ஆனால் வசூல் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் தலா ஐம்பது ரூபாய்க்காக அறுபது
பேரிடம் குழைந்து, அரை மனதுடன் தான் அவர்கள் கொடுக்கிறர்கள் என்பது தெரிந்தும்,
அவர்களை ஏன் வள்ளல் ஆக்குகிறீர்கள்? பியூன் என்பது கடைகெட்ட ஜென்மம் என்கிற
அவர்களின் நினைப்பை இந்த வசூல் நியாயப் படுத்துவது ஆகாதா? என்றெல்லாம் கேட்கிறார்.
அதற்கு கடைநிலை ஊழியர்கள் சார்பில்
முனியசாமி பதில் சொல்கிறார்.
‘இப்பிடி ஒவ்வொண்ணுக்கும் அர்த்தம்
பிரிச்சுப் பாக்க முடியுமா? ஓலகத்தில உள்ள அத்தனை பியூனும் பாட்டன் பூட்டன்
காலத்திலேர்ந்து வரதுதான? நிறுத்தினா யாருக்கு நஷ்டம்?’
பணத்தைக் கொடுத்துவிடுகிறார் ராகவன்.
மழையில் நனைந்ததில் ஒரு வாரம் காய்ச்சல்
என்று தெரிந்து போய்ப் பார்த்துவிட்டு வரும்போது ராகவன் கவனித்த ஒருவிஷயம்.
முனியசாமியின் இளைய சம்சாரம் கை முறிந்து கட்டுபோட்டுக் கொண்டிருக்கிறாள்.
மேற்கொண்டு கிடைத்த தகவல். முனியசாமி அலுவலகத்தில் தான் அவ்வளவு பவ்யம். இரண்டு மனைவியரும், முனியசாமி முறைத்துப் பார்த்தாலே அடங்கிவிடுவார்களாம்.
இல்லாவிட்டால். வீட்டில் நெருதுளி தான்.
மனைவியின் கை முறிந்தது முனியசாமி கட்டையால் அடித்ததால்தான்.

இதை குமரய்யாவால் நம்ப முடியவில்லை.
ராகவனோ, இப்படி இருப்பது உலகத்தில் சகஜம் என்கிறார்.
(‘ஊருக்குப் பயப்படுபவன் பெஞ்சாதியை அதிகாரம்
செய்வான்–பெஞ்சாதிக்கு பயப்படுபவன் ஊரை மிரட்டுவான்’)
குழந்தைகளின் படிப்பிற்காகக் குடும்பம் சொந்த ஊருக்குப்போய்விட, மாற்றல் கிடைக்கும்வரை
அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் தனியாகத் தங்கிவிடுகிறார் குமரய்யா. அந்தச்
சமயத்தில் முனியசாமியின் ‘கடமைகள்’ அதிகரித்துவிடுகிறது.
(பனிரெண்டு மணிநேர ‘எஜமான்’ இருபத்தி
நான்கு மணிநேர ‘எஜமான்’ ஆகிவிட்டார்.)
அந்த நாளும் வந்தது. மற்றலாகிப் போகும் குமரய்யாவின்
பிரிவு உபசார பாராட்டு விழா.
(பெயரே பாராட்டுக் கூட்டம் என்று
வைத்துவிட்ட பிறகு வேறென்ன… நீ கடி, நான் கடி என்று இருப்பவர்களே, மனுஷன் தொலைகிறான்
என்ற சந்தோஷத்தில் ‘இவர் கீழே வேலைசெய்கிற பாக்கியம்’ என்றுதான் பேசுவார்கள்.)
பாராட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கும்போது
குமரய்யா அலுவலக சரித்திரத்தில் இல்லாத வகையில் கடைநிலை ஊழியரின் ஒத்துழைப்பையும்
சேர்த்துக்கொள்கிறார்.
(‘உண்மையில் சொல்கிறேன். இன்னொரு முனியசாமிய
இனி நான் சொச்ச காலத்திற்கும் பார்க்கப் போறதில்ல")
வழியனுப்புகையில், புதிதாக வந்த தாசில்தார்
நிலைப்படியிலேயே கைகுலுக்கிவிட்டு உள்ளே போக, ராகவன், ஹெட்கிளார்க், ரெவின்யூ
இன்ஸ்பெக்டர், கடைசியில் பெட்டி படுக்கையுடன் முனியசாமி வெளியே
வரத்தொடங்கினார்கள்.
ஏதோ பியூன் தேவைப்பட்டு புது தாசில்தார்
மணியடிகிறார்.
அனிச்சையாக, ‘எஜமான்’ என்று கையிலிருந்த பொருட்களை கீழே வைத்துவிட்டு விரைந்து உள்ளே
போய்விடுகிறார் முனியசாமி.
எல்லோரும்
குண்டு விழுந்தது போல திகைத்துப் போய்விடுகிறார்கள்.
குமரய்யாவிற்கு
இந்த ஊரில் அவரது மொத்த ஊழியமும் பங்கப்பட்டுவிட்ட அவமானம்.
(“என்ன இப்படிப் பண்ணிப்பிட்டான்.
சிங்காரிச்சு மூக்கறுத்த மாதிரி.”)
ரெவின்யு
இன்ஸ்பெக்டருக்கு ‘அவனை’ அதிர அடிக்க என்னசெய்யலாம் என்ற ஆவேசமான யோசனை.
ராகவனின் கருத்தோ
வேறு
(‘இதுவரை
முனியசாமி செய்து வந்த பூஜையெல்லாம் தாசில்தார் என்கிற பீடத்திற்குத் தான். மேஜை
மணி அடிக்கப்பட்டதும் ‘ஐயா, ஆஜர்’ என்று சர்வங்கமும் பணிய கைகட்டி நிற்கவேண்டும், கட்டளையை நிறைவேற்ற வேண்டும்.
தாமதிக்கக் கூடாது என்றே அவர்களை உருவாக்குகிறோம். நமக்குத் தேவைப்பட்டபோது வேறு
விதமாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா ?
நாம
நம்ம சௌகரியத்துக்கு ஒரு நோயாளியை உண்டாகிட்டு, அப்புறம் அவன் ஆரோக்யமாவும் நடந்துக்கலேன்னு வருத்தப்பட்டா எப்படி?)
எனினும்.
ராகவனுக்கு குமாரய்யாவின் கோபத்தை தணிப்பதுதான் முதல்கடமை.
(கருத்துக்கள் மட்டுமே வெற்றியாகிவிட முடியாது. இடனரிதல், அவையறிதல் காலமறிதல் என்பதெல்லாம்
எதற்காக இருக்கிறது)
அவன் செய்தது
அயோக்யத்தனம்தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அவன் புத்தியெல்லாம் ஏன் இப்படிப் போகிறதென்று நினைத்துக்
கொண்டிருந்ததாகக் கூறுகிறார். ராகவன் இப்படிச் சொன்னதும் அதுவும் முனியசாமியை
ஒருமையில் குறிப்பிட்டதும் அவமானத்தில் முக்கால் பங்கு துடை பட்டது போல்
உணர்கிறார் குமரய்யா.
* * * * * * * * * *
* *
தொகுப்பின் முன்னுரையில் அசோகமித்திரன் குறிப்பிட்டது
போல, இவரது கதைகள் அதில் எழுதப்பட்டிருப்பதோடு
முடிந்துவிடாது. அவற்றில் உள்ள அந்தரங்கமான கோபமும், அந்தக் கோபத்தின் அடிப்படை
நியாய உணர்வும் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்.
இவரது மற்ற கதைகளில்
என்னை பாதித்தவை, ‘மொட்டை’ , ‘இவன்’ ‘பஸ்’, ‘பைத்தியம்’ என்று பல. இணையத்தில் படிக்கக் கிடைக்கும் இவர் கதைகள்:
பக்கம் – 15
பக்கம் 16க்கு மேல் படிக்க" older entries" கிளிக் செய்யவும்