ஷாலு மை  வைஃப்

image

“உங்க வைஃப் கார் ஒட்டக் கற்கும் போது நீங்கள் குறுக்கே நிற்காதீர்கள் ”. ஷாலு கார் ஓட்டக் கற்றுக்கொள்ளப் போகிறாள் என்றதும்  எனக்குத் தோன்றிய முதல் எச்சரிக்கை மணி.   

அதே சமயம் என் கார் என்னிடம் கெஞ்சியது –  என்னை ஏன்    கொடுமைப் படுத்தப் போகிறாய் ?  (படிக்காதவன் ரஜினி கார் மாதிரி என் காரும் அப்பப்ப பேசும் )

ஆனால் ஷாலு நினைத்ததை மட்டுமல்ல நினைக்காததையும் முடிப்பவள் என்பது பரத நாட்டிய எபிசோடிலேயே தெரிந்து விட்டது. டிரைவிங் ஸ்கூல் காரில் கற்றுக் கொள்ளலாம் என்ற என் கோரிக்கை வைப்பதற்கு முன்னே தள்ளி விடப்பட்டது – ராஜ்ய சபாவில் வைக்கப் பட்ட பி ஜே  பியின் மசோதா  மாதிரி. .  குருஜினி  சொல்லிவிட்டாராம். சொந்தக் காரில் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று. அப்போது தான்  முழு ஈடுபாடு இருக்கும்  என்று. ‘சரி நம்ம கார் . டிரைவிங் ஸ்கூல் டிரைவர்.  என்றேன். அதற்கும் பெரிய ‘நோ’ . குருஜினி  சீடப் பெண் ஒருத்தி இருக்கிறாளாம்.  அவள் தான் பக்தி சிரத்தையுடன் சொல்லித் தருவாளாம். 

ஒரு மாதத்திற்கு காரை அடமானம் வைக்கலாமா? இல்லை ஒரேயடியா விற்று விடலாமா என்றெல்லாம் கெட்டமனது  நினைக்க ஆரம்பித்தது.  ஆபீஸில் நண்பர்களுடன் இதைப் பற்றிக் கலந்து ஆலோசித்தேன். எல்லாப் பசங்களும் போகாத ஊருக்கு வழி சொன்னார்கள். காரோட நான் ஒரு மாதம் தலை மறைவா ஓடிடணுமாம். ‘போங்கடான்னு’ சொல்லிட்டு விதியை நம்பி என் கார் சாவியை ஷாலுவிடம் கொடுத்தேன். மனசுக்குள் பாசமலர் சீன் ஓடியது. ‘ஷாலு.. என் கண்ணையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தப் பெட்ரோலைத் தான் எதிர்பார்க்கிறேன்’ 

image

அடுத்த நாள் டிரைவிங்  ஆரம்பிக்கப் போகிறது. ஷாலு ஏதோ புத்தகத்தை வைத்து சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தாள். ‘காபி  தாயேன் ஷாலு’  என்றதும் அவள் காபி போடப் போன போது அந்தப் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.  முதல் பக்கத்தில் வடிவாம்பா சாரி குருஜினியோட போட்டோ . அதுக்குப் பிறகு கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் என்று கோனார் நோட்ஸ் மாதிரி போட்டிருந்தது. முதல் கேள்வி காரின் படம் வரைந்து பாகங்களைக் குறி.அதுக்கு மேலே  படிக்குமுன் ஷாலு காபியுடன் வந்துவிட்டாள்.“ நோ! நோ ! இதெல்லாம் எங்க சமாசாரம் . நீங்க படிக்கக் கூடாது.”  

முதல் நாள் குருஜினியின் சீடப் பெண் வந்தாள். காருக்கு கற்பூரம் காட்டி ஷாலுக்கு நெற்றியில் வீரத் திலகம் இட்டு ஏதோ போருக்குப் போகும் ஜான்சி  கி ராணி ஸ்டைலிலே தயார் செய்தாள். இரண்டு பேரும்  காரைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். அப்படி வரும் போது காருக்கு சந்தனப்  பொட்டு 18 இடத்தில் வைத்தார். நாலு டயரிலும் ஸ்டெப்னி  டயரிலும் ஒரு எலுமிச்சம் பழத்தை அழுத்தினார்கள். கற்பூர ஆரத்தியும் நடைபெற்றது. நல்லவேளை செந்தில் ஸ்டைலில் எரியும் கற்பூரத்தை பெட்ரோல் டாங்கில் போடவில்லை. எல்லா கதவையும் நன்றாகச் சாத்திவிட்டு  டிரைவர் சீட்டில் சீடரும் பக்கத்து சீட்டில் ஷாலுவும் உட்கார்ந்தார்கள்.பிறகு 11 தடவை இருவரும் பிராணாயாமம் செய்தார்கள்.   சீடர் ஸ்டார்ட் செய்தார்.முடியவில்லை  நான் ஏதோ  சதி செய்வதாக எண்ணி இருவரும்  ஆப்கானிஸ்தான் உளவாளி மாதிரி  என்னைப் பார்த்தார்கள். வண்டி கியரில் இருக்கிறது என்று கண்ணாடிக்கு வெளியில் கரடியாய் கத்தினேன். 

image

சீடர் புரிந்துகொண்டு கியரை சரிசெய்து வண்டியைக்  கிளப்பினார். சந்திராயானம் ராக்கெட் மாதிரி வண்டி பறந்தது. நல்ல வேளை காம்பவுண்ட் கதவைத் திறந்து வைத்திருந்தேன். இல்லையென்றால்  காரும் கதவும் அப்பளமாயிருக்கும். ‘தெருமுனையில் ஒரு ஸ்பீட் பிரேக்கர் இருக்கு’  என்று  நான் கத்தியதை இருவரும் காதில் வாங்கினமாதிரி தெரியவில்லை. ஈஸ்வரோ ரட்சது  என்று சொல்லிக் கொண்டே இன்ஸ்யூரன்ஸ் பேப்பர் சரியாயிருக்கா என்று பார்க்கப் போனேன். பத்தாவது நிமிடம் இருவரும் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்கள். 

என்னாச்சு?

“ இப்படியா ஒரு ஸ்பீடு பிரேக்கர் வைச்சிருப்பான்!திருப்பதி மலை மாதிரி? ”

“ஏன் காருக்கு அடிபட்டுடிச்சா? ”

“காரைப் பத்தியே கவலைப் படறீங்களே! சிஸ்டர் மாமி அதைப் பாக்காம கொஞ்சம் பாஸ்ட்டா போனதினாலே அவங்களுக்கு முதுகு வலி வந்திடுச்சாம்." 

இன்னிக்கு இது போதும் என்று சொல்லிவிட்டு  நான் போய் காரை எடுத்து வந்து அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு சிஸ்டர் மாமியை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம். அன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை. அதனால் ஆபீஸ் கவலை இல்லை. 

அன்னிக்கு  ராத்திரி முழுதும் அவள் தூங்கவேயில்லை. என்னையும் தூங்க  விடலை!

 ‘உங்ககிட்டே ஒண்ணு கேக்கணுமே! 

"இந்த காரிலே கியர் எதுக்கு? தேவையேயில்லை! அதை எடுத்துட்டா கார் நல்லா பாஸ்ட்டா ஓடுமில்லே! ”  

“அப்பறம் ரியர் வியூ மிர்ரரில் நம்ம மூஞ்சிக்குப் பதிலா பின்னாடி இருப்பவர் மூஞ்சி தான் தெரியுது. நம்ம மூஞ்சி தெரிஞ்சா மேக்கப் சரி பண்ணிக்கலாம். ”

“நாலு டயர்  எதுக்கு . ஆட்டோ மாதிரி மூணு போதாதா? ”

“காரிலே எப்படி எட்டு போடறது? ”

“சாதா பெட்ரோலுக்குப் பதிலா மூலிகை  பெட்ரோல் போட்டா சீப்பா முடியுமில்லே? ”

“பின்னாடி ஒரு ஸ்டியரிங்க் வைச்சா   திரும்பி உட்கார்ந்து சவுகரியமா ரிவர்ஸ் எடுக்கலாமே! ”

காலையில் எழுந்ததும் ஷாலு சொன்னாள். ’ நேத்து ராத்திரி முழுதும் யோசிச்சேன். அந்த சிஸ்டர் மாமி வேண்டவே வேண்டாம்! அவளே ஒரு அரைகுறை.’ 

இதைக் கண்டுபிடிக்க ஒரு ராத்திரி தேவையேயில்லை. அரை நிமிஷம் போதும். 

“அப்போ கார் திட்டம்  கேன்ஸெலா?”

“இல்லே அதுக்கு வேற ஒரு திட்டம் வைச்சிருக்கேன் "என்று சுஷ்மா சுவராஜ் பாணியில் பேசினாள்.

"யாரு உங்க குருஜினியே சொல்லித் தரப் போறாங்களா? ”

“இல்லே நான் உங்க கிட்டேயே கத்துக்கறேன்!”

அது தான் எனக்கும் சரியா பட்டது. ஆனாலும் கொஞ்சம் பிகு பண்ணிக்கிட்டு ஏதோ அவளுக்காகப் பெரிய தியாகம் செய்யற மாதிரி ஒத்துக் கொண்டேன். ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டேன்.  கார் கற்றுக்கொள்ளும் போதாவது நான் சொல்றதைக் கேட்கணும். அவள் தன்மான உணர்ச்சி அதற்கு முதலில் இடம் கொடுக்கவில்லை  இருந்தாலும் ‘நல்ல முயற்சிக்கு நாமும் கொஞ்சம் தியாகம் பண்ணுவோமே’ என்று ஒத்துக் கொண்டாள். 

அதற்குப் பிறகு தினமும் காலை ஆறு மணிக்கு கார் டிரைவிங்கிற்கு இருவரும் கிளம்பிடுவோம். இருபது நாட்கள்.இருபதே நாட்கள்!

பரவாயில்லை. நான் நினைத்ததைவிட நன்றாகவே கற்றுக் கொண்டாள். எவனாவது பின்னால் ஹாரன் அடிக்கும் போது தான் அவளுக்கு கெட்ட கோபம் வரும்.  ‘நாசமா போறவன் ஏன் இப்படி அலறறான்? ‘ 

கார் ஒட்டறதைப்  பத்தி நான் ஏதாவது மொக்கை . ஜோக் சொன்னாலும் பிடிக்காது. ஒரு நாளைக்கு என் நாக்கில சனி! ‘நீ அமெரிக்காவில பிரமாதமா ஒட்டுவே! ஏன்னா இந்த ஊரில எப்பவும் ராங்க் சைடிலேயே ஒட்டறேன்னு’ சும்மா ஜோக்குக்காக   சொன்னேன். அதற்கு தண்டனையா அன்றைக்கு முழுதும் ‘இந்தக் குத்தலா பேசற குணம் உங்க ஜீன்ஸ்லேயே இருக்கு ‘என்று அவள் மாமியார் நாத்தனார் கொழுந்தன் அவர்களுடன் என்னைக்  கம்பேர் பண்ணி மாடுலேஷனோட ஒரு ஒலிச்சித்திரம் மாதிரி சொன்னாள். 

image

இருபது நாளில்  அவள் சூப்பரா கார் ஒட்டக் கற்றுக் கொண்டாள். டிராஃபிக்கில் எல்லாம் சர்வ அலட்சியமா போறாள். பெரிய ரோட்டில பாஸ்ட் லைனில போகணும்னு துடிப்பா. நான் தான் அப்பப்ப அவள் இன்னும் எல் போர்டு என்பதை  ஞாபகப்  படுத்தணும். 

லைசன்ஸ் வாங்கப் போகும் போது சின்ன வயசிலேந்து நேற்றைக்கு வரை அவள் போன அத்தனை கோவிலுக்கும் தனித் தனியா வேண்டிக்கொண்டாள்.  ‘ஏன் டென்ஷன் ஆகிறே . ‘நீ நல்லாத்  தான் ஒட்டறே. தேவையானா ஒரு ஏஜெண்டு மூலமா போகலாம்’ என்றேன்.   “அதெல்லாம் முடியாது! லஞ்சம் கொடுத்து லைசன்ஸ் வாங்கக் கூடாது என்பது எங்க குருஜினியோட உத்தரவு’ என்றாள். 

குருஜினி படத்தை காரில் வைத்து லைசன்ஸ் வாங்கப் போனோம். ஆர்.டி.ஓ. இன்ஸ்பெக்டர் வரும் போதே கடு கடுன்னு ’ இவனுகளுக்கெல்லாம் கார் ஓட்ட லைசன்ஸ் கொடுக்கக்  கூடாது லைசன்ஸ் டு கில்’ தான் கொடுக்கணும். என்று சொல்லிக் கொண்டே வந்தான். ‘மிஸ்டர் நீங்க பின்னாடி உட்காருங்க என்று என்கிட்டே கறாரா சொன்னான்.  நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க என்று அவள் கிட்டே சொன்னான்.  ஸ்டைலா அவள் காரை எடுக்கும் விதத்திலேயே அவள் ஒரு டாப் டிரைவர் என்பது தெரியவந்தது. நூறு மீட்டர் போகும்போது தான்  அவன் அந்தப் படத்தைப் பார்த்தான். காரை ஓரமா நிறுத்தி  ஐடிலிங்க்போடுங்க என்று உத்தரவு போட்டான். பிறகு ஷாலுவிடம் ’ இந்த குருஜினியை உங்களுக்குத் தெரியுமா? ’ என்று கேட்டான். 

‘உங்களுக்கும் தெரியுமா ’ என்று அவள் கேட்டாள். . 

‘தெரியுமாவா? என் வைஃபோட   குருஜினியும் அவர்கள் தான். இந்த மாதம் அவள் பரத நாட்டியம் கற்றுக் கொள்கிறாள்.’  என்று பெருமையா சொன்னான்.  ஷாலுக்கு குஷி தாளவில்லை. சந்தோஷம்  பிடிபடவில்லை. அந்தப் பெருமையில் வண்டி நின்று விட்டது.  அவனை பயந்து கொண்டு பார்த்தாள். 

‘கவலைப் படாதீங்க ! நல்ல டிரைவர் கிட்டே கத்துக்கிட்டீங்கன்னா இந்த மாதிரி வண்டி ஸ்டாப் ஆகாது.! நீங்க பாஸ் !  மூணு நாள் கழித்து லைசன்ஸ் வாங்கிக்கங்க என்று சொல்லிவிட்டு இறங்கினான்.

ஷாலுக்குத் தெரியாமல் மெல்ல என்னைப் பார்த்து   கைகாட்டிவிட்டுப் போனான் அந்த ஆர் டி ஓ ஆபிசர்.  அவன் என் ஸ்கூல்மேட்!   

லைசன்ஸ் வாங்கின பிறகு தான் சொல்றாள் – என் கிட்டே கார் கத்துக்கணும் என்கிறது தான் குருஜினியின் ஆணையாம். நான் மாட்டேன்னு சொல்வேன் என்று பயந்து சீடப் பெண் மாமி செட் அப் செய்தாளாம்.   

இன்னொண்ணு சொல்ல மறந்திட்டேனே! ‘கார் ஒட்டக் கற்றுக் கொள்ளும் போது கேட்கக்கூடாத ஆயிரம் கேள்விகள்’ என்று ஒரு புத்தகத்தை அமேசானில் போட்டேன். அது இப்ப சூப்பர் ஹிட். 

பக்கம் – 4