நான் ரசித்த படைப்பாளி  – ஆ மாதவன்( எஸ். கே.என்)

திருவனந்தபுரத்தில்
வசிக்கும் திரு ஆ.மாதவன், ஐம்பதுகளிலிருந்து சிறுகதைகளும் நாவல்களும் படைத்துவரும்
எழுத்தாளர். இவரது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவல் பெரிதும் பேசப்பட்ட நாவலாகும். இவரது
சிறுகதைகளில் பெரும்பாலும் திருவனந்தபுரம் சாலைத்தெரு என்னும் கடைத்தெருவைக் களமாகக்
கொண்டு இருக்கும். இவரை   ‘கடைத்தெருவின்
கதைசொல்லி’ என்று குறிப்பிடுவார்கள்.

இவரது கதை மாந்தர்கள், ‘எங்கோ
இது போன்ற ஆளைப் பார்த்திருக்கிறோமோ’ என்று தோன்றவைப்பார்கள்.  

இவரது ‘விருந்து’ கதை
தினசரிப்பாடே தகராறில் இருக்கும்போது இலக்கிய நண்பர்களுக்கு விருந்தோம்பல்
செய்யும் ஒருவரின் கதை.

****
**** **** ****

image

குருவிற்கு பட்டணத்திலிருந்து  இலக்கியமேதையும், சிந்தனையாளருமான  திரு ஆனந்தனிடமிருந்து,
திருவனந்தபுரத்திற்கு  வந்து இவருடன்
நான்கைந்து நாட்கள் தங்கவிருப்பதாகக் கடிதம் வருகிறது.

(‘நீங்கள் முன்னைப்போல
பெரிய விவசாயம், அறுவடை  அது இதுன்னு
பிரமாதமாக  இன்னும் இருப்பதாக உங்கள்
இலக்கிய நண்பர் நினைத்துக் கொண்டிருப்பார் . இங்கே, வந்து பார்க்கும் போதல்லவா
தெரியும் அய்யா சண்டை பிரசண்டம்’ – இது குருவின் மனைவி பார்வதி)      

சிநேகிதம், விருந்தாளி,
கதை, கண்ட கண்ட புஸ்தகம்  என்று சரியாகத்
தொழிலைக் கவனிக்காமல், வீட்டைக்
கவனிக்காமல், வெளியூரில் வேலையிலிருக்கும் மகன் அனுப்பும் கொஞ்சம்
பணத்தில்  ஒப்பேற்றிக்கொண்டு
இருக்கிறார்கள். அந்த மகனுக்கு திருமணமானதும் என்னவாகுமோ  என்ற கவலையும் உண்டு.

ஏதோ காலம் ஓடிக்கொண்டு
இருக்கும்போது மிகுந்த தெளிவும் ஞானமும் கொண்ட பல பரிசுகள் பெற்ற அந்த நண்பர்
வருகிறாரே, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் .

வந்தும் விடுகிறார்
அந்த நண்பர். சிறப்பாக  அதையும் இதையும்  செய்து விருந்து உபசாரம் நடக்கிறது. இலக்கிய
கர்த்தாவின்  தத்துவ விசாரங்களும் ,
இலக்கியச் சர்ச்சையும் என்று  ஆனந்தமாக
பொழுது கழிகிறது.

(என்னதான் தங்கரேக்கிலே
முகப்பட்டமும் , முதுகு மேல அம்பாரியும், பரிவட்டமும் வச்சாலும், யானைங்கறது அந்த
அலங்காரங்கள் இல்லையே. அப்போ, உண்மை என்ற அமைப்பின் முன்னால்  தொங்கு தோரணம் எல்லாம் சும்மா)

பேச்சு மும்மரத்தில்
இருக்கும் இருவரையும் உணவு வேளைகளில்
பார்வதி தான் வந்து அழைக்க வேண்டியிருக்கும்.  வழக்கம் போல,
இரவு உணவிற்கு தோசை சாப்பிட
பார்வதி அழைக்கிறாள்.

 

இருவரும்
திருப்தியாகச்  சாப்பிட்டபிறகு
தற்செயலாகத்தான்     மனைவிக்கு சாப்பிட  ஒன்றுமில்லை என்று கவனித்து  திடுக்கிடுறார் குரு.  

வருத்தப்படும் குருவிற்கு
சமாதனம் சொல்கிறாள் பார்வதி.

(நாளைக்கு ஊர்
திரும்புற மனுஷனுக்கு காதிலெ விழப் போவுது, இன்னைக்கு ஒரு நாள் ஏகாதசி விரதம்னு
நினச்சுண்டாப் போச்சு)

பேச்சு, தத்துவ விசாரம், ஆச்சாரக்கலை,
ரியலிசம் அது இது என்று யாருக்கு எடுத்துக்காட்டி என்ன பிரயோசனம் ?  வீட்டு வட்டத்தில் நடக்கும் ரியலிசம் மறந்து
போவது   என்னவொரு மடத்தனம்? என்ன அசகாய
காரியங்கள் செய்து மனைவி இந்த நாலைந்து நாட்களை ஒப்பேற்றினாளோ? இன்று இரவு அவள்
பட்டினி. என்றெல்லாம் யோசிக்கிறார்  குரு.

மறுநாள் காலையில்
ஊருக்குப் புறப்பட்டுப் போகிறார் நண்பர். ஒரு மழை மேக மறைப்பு விலகியது போன்று
தோன்றுகிறது பார்வதிக்கு.

கணவர் திரும்பிவருவதைப்
பார்க்கும் அவளுக்கு ஒரு பேரதிர்ச்சி. கூடவே நண்பரும்.  ரயில் புறப்படும் நேரம் மாறிவிட்டதால் இவர்கள்
போவதற்குள் வண்டி போய்விட்டது மறுநாள் இரவு வண்டிக்குத்தான் போக முடியும்.

சமையற்கட்டில்
நுழைகிறார் குரு.

(சோற்றுப்பானை,
குழம்புப் பாத்திரம், கிண்ணங்கள், கரண்டிகள்..
பாத்திரங்கள் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்த ‘ஆதிதேயன்’ குருவிற்கு உண்மை
பயங்கரமாக உருவெடுத்து – அடிவயிற்றையே ஓங்கி உதைத்தது – அய்யோ!)

எதிரே பார்வதி
முகத்தைமூடி விசும்பிக்கொண்டிருந்தாள்

****
**** **** ****

நண்பர்கள் இருவரின்
உரையாடலில்  இலக்கியச் சர்ச்சைகளும் தத்துவ
விசாரங்கள் ஏராளம். பார்வதியின்  சங்கடமும்
சமாளிப்பும்  படம் பிடித்துக் காட்டப்
படுகிறது. கணவன் மனைவி இருவரின் பாத்திரப்படைப்பும் குறிப்பிடும்படியாக உள்ளது

 

இணையத்தில் கிடைக்கும்
இவரது பிற கதைகள்

சாத்தான்
திருவசனம்

நாயனம்