
நாடகத்தைப் பற்றிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் முன் :-
‘கிடுக்கிப்பிடி எழுத்தாளர்’ என்றும்
அறியப்பட்ட கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்திராத ஒருசிலரில் நானும் ஒருவன்.
சுத்தமாக கதையும் தெரியாது. ஆகவே கல்கியின் படைப்பு ஏற்படுத்திய தாக்கத்தையும்,
நாடகத்தில் சொல்லப்படும் முறையையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டிய சிரமம்
இல்லை. கதை புரியவேண்டும் நல்லமுறையில் சொல்லப்படவேண்டும் அவ்வளவுதான்.
பிரபலமாகிவிட்ட நாவல்களை நாடகம் அல்லது
சினிமாவிற்கு கொண்டுவரும்போது வேறொரு சிக்கலும் உள்ளது. சில பாத்திரங்களை வாசகர்கள் மனதில் உருவகப்படுத்தி
இருப்பார்கள். நடிப்பவர்கள் அந்தக் கற்பனைக்குச் சமீபமாக இல்லாவிட்டால் அந்த
சினிமாவோ நாடகமோ அவர்களைக் கவராது.
அதிலும் கல்கிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் லட்சக்கணக்கில் அபிமானிகளும்,
ஆயிரக்கணக்கில் உபாசகர்களும் உண்டாயிற்றே..
‘மோகமுள்’ ஜமுனாவாக அர்ச்சனா ஜோக்லேகர்,
‘தில்லானா மோகனம்பாள்’ வைத்தியாக நாகேஷ், பாரதியாக சயாஜி ஷிண்டே. என்று மிகப்
பொருத்தமான நடிகர்கள் அப்படத்தின் வெற்றிக்கு ஓரளவிற்குக் காரணமாகிறார்கள்
பொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்
படுத்திய அளவில் ஆடுதுறை எஸ்.எஸ்.என் சபாவின் நாடகத்தைப்
பற்றி எனது கருத்துக்கள்.
ஐந்து பாகங்கள், ஏகப்பட்ட கதை மாந்தர்கள்,
அதிகமான நிலை களங்கள், மூன்று
க்ளைமாக்ஸ்கள், இரண்டு சஸ்பென்ஸ்கள், என்று பல சவால்களைக் கொண்ட இந்த பெரும்
படைப்பை மூன்றரை மணிநேர நாடகமாக்கிய
முயற்சி பாராட்டத்தகுந்ததே..
ரசித்தவை:
- சிக்கலான இந்தக் கதை புரியும் வகையில் விறுவிறுப்பாகவே சொல்லப்பட்டு இருக்கிறது
- சரித்திர நாடகமாகையால் வசனங்கள் இலக்கணத் தமிழில் நெருடல் இல்லாமல்
எழுதப்பட்டுள்ளன. உச்சரிப்பு (இது தற்காலப் பெரிய பிரச்சினை) மிகவும் சிறப்பு.
(‘ழகரம்’ நன்றாகவே அனைவரும் உச்சரிக்கிறார்கள். ‘லகரமும்’ ‘ளகரமும்’ சிலர்
திண்டாடுகிறார்கள்) - காட்சி அமைப்புகளும் அருமை. ‘மூடு பல்லக்கு’ , கடலில் ‘படகு’, ‘யானை’,
‘கப்பல் விபத்து’ ஆகியவை சிறப்பாகவே மேடையில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. - இரண்டு “FLASH BACK”
மட்டுமே. நன்றாகவும் வந்திருக்கிறது - எல்லா நடிகர்களுமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதிலும் ‘ஆழ்வார்க்கடியான்’, ‘நந்தினி’ இரு சவாலான
பாத்திரங்களை இயக்குனரும் அந்த நடிகர்களும் நன்றாகவே கொண்டு வந்திருக்கிறார்கள். கடம்பூர் அரண்மனையில் ஆதித்ய கரிகாலன் நடிப்பும்
வசனங்களும் மிகச் சிறப்பு. - எல்லாவற்றிற்கும்
மேலாக பார்வையாளர்கள் நிறைந்த அரங்கம்
கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை.
சில நெருடல்கள்.
- நாடகத்தின் இறுதி அரைமணிநேரத்தில் நாடகம் இரண்டு மூன்று முறை முடிவடைந்து மீண்டும்
தொடங்குவதுபோல் இருக்கிறது. - கதையை நகர்த்திச் செல்ல வரும் வசனங்களில் ரவிதாசன் என்னும் பாத்திரம்
மூலமாக வரும் இடங்கள் சற்று குழப்பம். “Dialogue Delivery” பிரச்சினையாக
இருக்கலாம். - ஒரு சில இடங்களில் “எடிட்டிங்” தேவைப்படலாம். ஆதித்ய
கரிகாலனின் மறைவின் சோகம், யாருக்கு மகுடம் ஆகிய இடங்களில் அவரவர் கருத்துக்கள்
என்பவை நாடக பாணியில் ஒருவர் ஒருவராக அனைவரும் பேசுகிறார்கள். மதுராந்தக சோழன்
மனமாற்றம் சற்று நீளம். - “Loose Ends” ஒரு
சில உள்ளன. இவை நாடக வடிவத்திற்கு மாற்றியதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்த அளவில் நாடகம்
ரசிக்கும்படியாக சிறப்பாகவே இருந்தது.