
பத்திரகிரியார் உண்மையில் ஒரு அரசர். பட்டினத்தாரின் பெருமைகளைக் கண்டு உணர்ந்து அவரது சீடராக திருவிடைமருதூர் கோவிலில் பிச்சைஎடுத்தவர். கிடைத்த உணவைக் குருவுக்குக் கொடுத்துத் தானும் உண்டு மீதியை ஒரு நாய்க்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்.
ஒருமுறை பட்டினத்தார் இவரைப் பற்றிச் சொல்லும் போது "சோற்றுக்கட்டியையும் நாயையும் வைத்துக் கொண்டு சம்சாரியாக வாழ்கிறார்’“ என்று சொல்ல, பிச்சை எடுக்கும் திருவோட்டை நாயின் தலையில் அடித்து அதற்கு முக்தி அளித்தார். அந்த நாய் ஒரு அரசகுமாரி வடிவில் வந்து அவரை மணந்து கொள்ள வேண்டியது. ” எனக்கும், என் எச்சிலை உண்ட இவளுக்கும் இந்தப் பிறவி நோய் வரலாமா “ என்று இறைவனை உருகி வேண்ட, ஒரு பெருஞ்சோதி வந்து இருவரையும் தன்னுள் ஒடுக்கி இருவருக்கும் முக்தி அளித்தது.
அவர் குரு பட்டினத்தாருக்கு அதற்குப் பின்னரே முக்தி கிடைத்தது.
இவரது 231 பாடல்கள்கள் அனைத்தும் இரு வரிக் கண்ணிகள். எல்லாக் கண்ணிகளும் ‘எக்காலம்?’ என்ற கேள்வியுடன் முடியும். இந்த உலக மோக வாழ்வைத் துறந்து இறைவன் அடிசேரும் காலம் எக்காலம் என்றும், அந்தக் காலம் விரைவில் வாராதா என்று ஏங்கும் சித்தர் தான் பத்திரகிரியார்.
அவரது நெஞ்சுருக்கும் கண்ணிகள் சிலவற்றைப் பார்போம்!
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
கால் காட்டி கைகாட்டி கண்கள் முகம் காட்டி
மால் காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்?
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும்
எக்காலம்?
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடக்காமல்
தேறாத சிந்தனையைத் தேற்றுவதும் எக்காலம்?
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனில் கண்டு திருக்கறுப்பது
எக்காலம்?
தித்திக்கும் தெள்ளமிதைச் சித்தாந்தத்து உட்பொருளில்
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது
எக்காலம்?
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது
எக்காலம்?
கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது
எக்காலம்?
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரை மறந்து தூங்குவதும்
எக்காலம்?
கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தான் நினைக்க
உருக்கொண்ட வாறது போல் உனை அடைவது
எக்காலம்?
பிறப்பும் இறப்பும் சுற்றுப் பேச்சும் அற்று
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது
எக்காலம்?
சித்தர்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்!!
பக்கம் – 13