நான் ரசித்த படைப்பாளி – சுப்பிரமணிய ராஜு —-(எஸ். கே. என்)

எழுபதுகளின் இளைய தலைமுறை எழுத்தாளரான
இவர் சுஜாதா, சாவி மற்றும்
பலரால் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக இனம் காணப்பட்டவர். சாவி இதழில் தமிழன் என்ற
பெயரில் கேள்வி-பதில் எழுதிக் கொண்டிருந்தவர். சாவி பத்திரிக்கைக்கு இவரும்
மாலனும் சேர்ந்து ஒரு இதழுக்கு ஆசிரியர்களாக  இருந்ததாக நினைவு.

image

இவரது பல கதைகளின் நாயகன், படித்த, பெரும்பாலும் வேலையற்ற அல்லது குறைந்த வரவில் வேலை பார்க்கும்
புத்திசாலியான தர்கரீதியாக அக்கால வாழ்க்கை நடைமுறைகளை எதிர்த்து வாதாடும் – (anti establishment)- இளைஞன் ஆக
இருப்பான். அதனால் அந்த காலகட்ட இளைஞர்கள் மிகவும் கவரப்பட்டார்கள் எனக் கூறலாம்.

இவரது “இன்று போய் ….” கதை
தன் அண்ணனைப்பற்றி தம்பியின் பார்வையில் சொல்லப்படுகிறது.

கல்யாணம் முடிந்து மனைவியுடன் வரும்
அண்ணாவைப் பற்றிய தம்பியின் கருத்தோடு கதை ஆரம்பிக்கிறது.

(வாழ்க்கையில்
எல்லாத்தையும் தோத்துட்டு, மன்னியை
மட்டும் கை பிடிச்சு அழைச்சுண்டு வந்த மாதிரி தோன்றியது)

கல்யாணத்திற்கு முன்பு இருந்த அண்ணா ..
தலை நிறைய முடி சிகரெட், எப்பவும்
ஏதாவதொரு புஸ்தகம்.

(ஆயிரம்
புஸ்தகமாவது படிச்சிருப்பான்)

வெளியில் கினம்பும்போதே தனக்குத் தெரிந்ததையெல்லாம்
இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்ல நினைப்பது போலிருக்கும். மீட்டிங் எல்லாம்
பேசுவான். சமூகம், சினிமா, பத்திரிக்கை, இளைஞர்கள் எல்லாவற்றையும் தாக்குவதாக அவன் பேச்சு இருக்கும். கதையும்
எழுதுவான். இவன் கதையைப்பற்றி அம்மாவுடன் சண்டை. அப்பாவின் பூஜை ஸ்லோகம குறித்து
அவருடன் வாக்குவாதம்.

image

(உனக்குப்
புரியாத ஒரு மந்திரத்தை நீயும் சாமி, பூதம்னு இருபது வருஷமா சொல்லிக்கொண்டிருக்கியே.)

அண்ணா படிப்பை முடித்து இரண்டு வருடம்
ஆகியும் வேலை கிடைக்கவில்லை. அப்பாவும் ரிடையர் ஆகிவிடுகிறார். எல்லோரும் அவனுக்கு
வேலை கிடைப்பதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

(அப்பா ரிடையராகி, சம்பளம் பென்ஷனாகி, ராத்திரியில் தயிர் மோராச்சு)

சகோதரியான சாந்திக்கு பி.யூ.சி. உடன்
படிப்பு நிறுத்தப்படுகிறது. சமயத்தில் சாந்தியின் கல்யாணத்திற்காக வைத்திருந்த
வெள்ளிப் பாத்திரங்களும் தங்க நகைகளும் அடகுக்கோ விலைக்கோ போகிறது.

இந்த சரிவுக்கெல்லாம் முன்பு, அதே தெருவிலிருக்கும் காயத்ரி என்ற
பெண் அண்ணாவால் ஈர்க்கப்படுகிறாள். தம்பி மூலமாக புத்தகம் வாங்குவதும் அதில் காதல்
கடிதம் வைத்து அனுப்புவதுமாக முயற்சி செய்கிறாள். அண்ணா கண்டுகொள்ளவே இல்லை. ஒரு
கடிதத்தையே தம்பி மூலம் கொடுத்து அனுப்புகிறாள்.

படித்துவிட்டு அலட்சியமாகச் சிரித்த
அண்ணா, தம்பியிடமே அவளைப் பார்க்கிற்கு
மாலையில் அழைத்து வரச் சொல்கிறான்.

பார்க்கில், தனக்கு அவளும், அவளுக்குத் தானும் லாயக்கில்லை என்றும், அவள்
எதிர்பார்ப்பது போன்ற கணவனாகத் தானிருக்க முடியாது என்றும் கூறிவிடுகிறான்.

(உன்னுடைய நடை, டிரெஸ் எல்லாமே, உனக்கு ஹெரால்ட் கார்
வெச்சுண்டிருக்கிற, தினம்
ஆபீசிலேந்து வந்த உடனே உன்னை ஷாப்பிங் அழைச்சுண்டுபோற, உன் சிரிப்புக்குத் தவம் கிடக்கிற, தன் கழுத்தில பட்டையைக் கட்டிண்டு உன் கையில் சங்கிலியைக் குடுத்துட்ட
ஒரு ஆம்பிளை தான் வேணும்! நீ அந்த மாதிரி டைப். நான் வேறு. நீ எதிர்பார்க்கிற
ஆளும் இல்லை நான். ஐ’ம்
சிம்பிள்!)

அண்ணாவிற்கு வேலை கிடைக்கவில்லை. இது
குடும்பத்தையே ஆட்டிவைக்கிறது. தெரு பூரா கடன். ஒருநாள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே
இல்லை என்னும் நிலையும் வந்தது.

தானே முன்னுக்கு வந்த ஒரு பணக்காரர், தன் மகளுக்கு கஷ்டப்படுகிற
புத்திசாலியான கணவனைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், வேலையும் வாங்கிக்கொடுத்து தன் பெண்ணையும் தர விரும்புகிறார் என்று
அப்பாவின் நண்பர் கூறுகிறார்.

அண்ணா வழக்கம் போல வள் என்று
விழுகிறான்.

திடீரென்று ஒரு நாள் இரவு வீட்டுக்கு
வந்தவன் “நான் அந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்து
விட்டேன். நாளையிலிருந்து வேலைக்குப் போகிறேன்” என்கிறான்.

image

எல்லோருக்கும் அதிர்ச்சி, ஆனால் நிம்மதி. அண்ணா வேலைக்குப் போக
ஆரம்பிக்கிறான். அந்த பெரிய பணக்காரனின் ஒரே மகளுடன் திருமணமும் ஆகிவிடுகிறது.

அண்ணா மாறிவிடுகிறான். அடிக்கடி
முன்பக்கத்திலே இருக்கும் அறையில் மனைவியுடன் பேச்சு. ஒவ்வொரு நாளும் சாயங்காலம்
வெளியே அழைத்து போகிறான். மாதம் ஒரு புடவை. எல்லா வாரப் பத்திரிக்கைகளும்
வாங்கிப்போடுகிறான். எந்த மாதிரிப் படங்களை பார்க்கக்கூடாது என்று முன்பெல்லாம்
சொல்வானோ, அந்த மாதிரிப் படங்களுக்கு மனைவியோடு
போனான். எல்லோருடனும் அன்பாகப் பேசலானான். அண்ணா மாறிப்போய்விட்டான்.

(இடியட்! எனக்கு
தீடீர்னு அவனைப் பிடிக்காமல் போயிடுத்து. அவனிடம் இருந்த கோபம், கர்வம், அலட்சியம் இதெல்லாம்தான் அவனுக்குப் பொருத்தமா இருந்துதுங்கறது என்
அபிப்பிராயம். அப்போ அவன் முகத்தில ஒரு தேஜஸ் இருந்தது. இப்போ அசட்டுச் சிரிப்பு)

மனைவியின் தந்தை வந்தால் மிகவும்
மரியாதையாய் பேசுவான். அடிக்கடி ஐஸ் வைப்பான்.

(எல்லார்கிட்டேயும்
சண்டை போட்டு ஜெயிச்சவன், இப்ப ஒவ்வொரு ராத்திரியும் தோல்வியடைஞ்சு, காலையில் தலை குனிவாத் திரும்புற மாதிரி, ஒவ்வொரு ராத்திரியும் மன்னி ‘ இன்று போய் நாளை வா’ என்று
சொல்கிறமாதிரி எனக்குப்பட்டது.)

ஒருநாள் சிகரெட்
பிடித்துக்கொண்டிருக்கும் தம்பியின் எதிரில் அண்ணன் வந்து விடுகிறான். கையில்
சிகரெட்டை மறைத்துக்கொண்டு தம்பி சிரிக்கிறான். அண்ணனும் சிரித்துக்கொண்டே கடந்து
போகிறான். அவன் கையில் மல்லிகைப்பூ. குண்டு குண்டா வாழையிலைக்கு வெளியே
எட்டிப்பார்க்கும் மல்லிகை.

‘ நான் மீண்டும்
சிரித்தேன்’ என்று கதை
முடிகிறது.

image

ஆதர்சங்களும்,
தார்மீகக் கோபங்களும்  யதார்த்தத்தில் எப்படி
அடிபட்டுப் போய்விடுகின்றன என்பதைத்  தன் பாணியில் சித்தரிக்கிறார். 

குறிப்பிடும்படியாக எழுதிவந்த இவர் இளம் வயதிலேயே ஒரு விபத்தில் மரணமடைந்தது
சிறுகதை இலக்கியத்திற்கு ஓர் பேரிழப்பு.

இவரது மற்றொரு கதையை இணையத்தில் படிக்க

நாக்கு

பக்கம் – 20