
தொங்குகின்ற தூளியிலே தூங்குகின்ற பாப்பாவே
தொங்குகின்ற நிலைதானே யுனையீன்ற பெற்றோர்க்கும்
மண்ணுலகில் நடக்கின்ற சொல்லவொணா அவலங்கள்
கண்டுகண்டு வெதும்பியவர் தூங்கியே நாளாச்சு!
இவ்வுலகில் நாமெல்லாம் இருப்பதுவோ சிலகாலம்
இவ்வுண்மை புரிந்திருந்தும் பாரிந்த அலங்கோலம்
நான்பெரிது நீபெரிதென பணப்பேயு மாட்டிடவே
சண்டையிலே கழிக்கின்றோம் வாழ்க்கையிலே பெரும்பகுதி
கடவுளெலா மொன்றெனவே நன்றாகத் தெரிந்தாலும்
மதச்சண்டை ஜுவாலைகள் குழப்பங்கள் குமுறல்கள்
ஜாதிபேத மிலையென்று எத்தனைதான் சொன்னாலும்
ஜாதிகள் பெயராலே பலப்பல கட்சியிங்கு
மக்களா இலையிவ ரறிவற்ற மாக்களா
துக்கமான மனதினிலே துளிர்விடும் சந்தேகம்
இதையெலா முணர்கின்ற பருவம்நீ யடையும்வரை
மெதுவாக இப்போதே முடியும்வரை தூங்கிவிடு

பக்கம் – 10