
அது என்ன பதினாறு?
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென
வாழ்த்திவிட்டுபோனவரே
அது என்ன பதினாறு
அதைச் சொல்ல மாட்டீரோ !!
மணமக்கள் கேள்வியிது
மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல
வேதாந்த மகரிஷியின்
விளக்கமதை தெரிந்து கொள்வோம் !
இறையுணர்வும் ,
அறநெறியும்
கல்வியும்,
செல்வமும்
தானியமும் ,
இளமையும்
வலிமையும்,
துணிவும்,
நன்மக்கட்பேறும்
அறிவில் உயர்ந்தோர் நட்பும்
அன்பும் ,
அகத்தவமும்
அழகும் ,
புகழும்
மனிதமதிப்பு நறுந்தொழுகும் பண்பும்
பொறையுடமை [பொறுமை]யும்
எனும் பதினாறு பேறும் பெற்று
போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி
மறைவிளக்கம் உயர் வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து
மனையறத்தின் ஒளிவிளக்காய் வளம் ஓங்கி வாழ்க
இன்னொருவரின் லிஸ்ட்!!

அகிலமதில் நோயின்மை, கல்வி, தன, தானியம்,
அழகு, புகழ், அறம், வாழ்க்கைத் துணைநலம், இளமை,
அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, ஆண்மை, வெற்றி
ஆகும் நல்லூழ் விளக்கம் பதினாறும் பெறுவீர்.

சரி, அபிராம பட்டர் அபிராமி அந்தாதியில் சொல்லும் பதினாறு பேறுகள் என்னென்ன தெரியுமா?
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
கழுபிணி யிலாத உடலும்,
சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்,
தவறாத சந்தா னமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
துன்ப மில்லாத வாழ்வும்,
துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய் !
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி ! அபிராமியே !
காளமேகப் புலவரின் தொகுப்பு என்னவோ?
துதிவாணி ,வீரம், விசயம், சந்தானம், துணிவு, தன,
மதிதானியம், செளபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம், குலம், நோவகல், பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.
தேவநேயப் பாவாணர் தமிழுக்குக் கிடைத்த பதினாறு பேற்றைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்!
தொன்மை – பழமைச் சிறப்பு
முன்மை – முன்தோன்றிய சிறப்பு
எண்மை – எளிமைச் சிறப்பு
ஒண்மை – ஒளியார்ந்த சிறப்பு
இளமை – மூவாச் சிறப்பு
வளமை – சொல்வளச் சிறப்பு
தாய்மை – சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை – கலப்புறாச் சிறப்பு
செம்மை – செழுமைச் சிறப்பு
மும்மை – முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை – இனிய சொற்களின் சிறப்பு
தனிமை – தனித்தியங்கும் சிறப்பு
பெருமை – பெருமிதச் சிறப்பு
திருமை – செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை – இயற்கைச் சிரிப்பு
வியன்மை – வியப்புச் சிறப்பு

இந்தக் கணினி உலகில் புதிய பதினாறு பேறு !
கலையாத மென்பொருளும், தளராத இணைய தளமும்,
கபடு வாராத கணினியும், உடையாத ஐபேடும்,
காசு தொலையாத கைபேசியும், பகிர்வு கேட்காத முகநூலும்,
சுற்றாமல் தொடரும் யூட்யூபும் ,ஸ்பேம் இல்லாத மின்னஞ்சலும்,
தொடர்ந்து வரும் வைஃபையும்,ப்ரீயாய் வரும் ஆப்ஸும்,
தனியே பேச ஹேன்ஸ்ப்ரீயும், கேட்பதைக் கொடுக்க கூகிலும் ,
சா ட்செய்ய வாட்ஸ்அப்பும், எப்போதும் அனுப்ப எஸ்எம்எஸ்சும்
செல்ஃபி எடுக்க கேர்ள் பிரண்டும்
அனைத்தையும் சார்ஜ் செய்ய மின்சாரமும்
ஆகிய பதினாறும் பெற்று
வாழ்வீர் நீவிர் மின்னணு உலகில்!
பக்கம் – 18