கொட்டடி கொட்டடி தாழம்பூ- நாட்டுப் பாடல் (யாரோ)

image

கொட்டடி கொட்டடி தாழம்பூ!

குனிஞ்சு கொட்டடி தாழம்பூ

 பந்தலிலே பாவக்கா

தொங்குதடி ஏலக்கா 

பய்யன் வருவான் பாத்துக்கோ 

பணம் கொடுப்பான் வாங்கிக்கோ 

சுருக்குப் பையில் போட்டுக்கோ 

வீராப் பட்டணம் போகலாம் 

வெள்ள இட்டிலி வாங்கலாம் 

சவுக்குத் தோப்பு போகலாம் 

சமச்சு வைச்சுத் தின்னலாம் 

புளிய மரத்துப் போகலாம் 

புளியங்கொட்டை பொறுக்கலாம் 

பனைமரத்துக்குப் போகலாம் 

பல்லாங்குழி ஆடலாம் 


(எழுதியது  யார் என்பது தெரியவில்லை) 

பக்கம் – 8 

Advertisements

ஜோக்ஸ்

image

டாக்டர் ! என் இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்யும் போது அதிலிருக்கும் என் முதல் காதலை எடுத்துவிடாதீர்கள்!


image

டாக்டர்! நீங்க கொடுத்த சிரப்  சிறப்பு! எப்படி என் ஜோக்?

செருப்பு பிஞ்சிடும்! இது கி.வா .ஜ. அவர்களின் ஜோக்.image

டாக்டர் ! எனக்கு அறிவு சுத்தமா இல்லாத மாதிரி தோணுது!

எப்பொழுதிலிருந்து இப்படி தோணுது?

விஸ்டம் டூத்தை எடுத்ததிலிருந்து!

image

டாக்டர்! என்கால்ல  ஆபரேஷன் பண்ணும் போது கால் வலிச்சா என்ன பண்ணுவீங்க?

சேர்ல உட்கார்ந்துகிட்டு ஆபரேஷன் பண்ணுவோம்!


image

காக்கா முட்டை படத்துக்கு தேசியவிருது வழங்கப்படும் போது கக்கா மூட்டை என்று சொன்னார்களாம்!


பக்கம் –  9 

முடியும் வரை தூங்கிவிடு (கோவை சங்கர்)

image

தொங்குகின்ற தூளியிலே தூங்குகின்ற பாப்பாவே 

தொங்குகின்ற  நிலைதானே யுனையீன்ற பெற்றோர்க்கும் 

மண்ணுலகில் நடக்கின்ற சொல்லவொணா அவலங்கள் 

கண்டுகண்டு வெதும்பியவர்  தூங்கியே நாளாச்சு! 


இவ்வுலகில் நாமெல்லாம் இருப்பதுவோ சிலகாலம் 

இவ்வுண்மை புரிந்திருந்தும் பாரிந்த அலங்கோலம் 

நான்பெரிது நீபெரிதென பணப்பேயு மாட்டிடவே 

சண்டையிலே கழிக்கின்றோம் வாழ்க்கையிலே பெரும்பகுதி


கடவுளெலா   மொன்றெனவே நன்றாகத் தெரிந்தாலும் 

மதச்சண்டை ஜுவாலைகள் குழப்பங்கள் குமுறல்கள் 

ஜாதிபேத மிலையென்று எத்தனைதான் சொன்னாலும் 

ஜாதிகள்  பெயராலே பலப்பல  கட்சியிங்கு   


மக்களா இலையிவ  ரறிவற்ற மாக்களா 

துக்கமான மனதினிலே துளிர்விடும் சந்தேகம் 

இதையெலா முணர்கின்ற பருவம்நீ யடையும்வரை 

மெதுவாக இப்போதே முடியும்வரை தூங்கிவிடு  

image

பக்கம் – 10 

ஏலாலம்பர ஏலு – நாட்டுப் பாடல்

image

ஆறு காசு எண்ணை வாங்கி ஏலாலம்பர ஏலு – நான் 

அதிரசம் சுட்டுவைச்சேன்

ஏலாலம்பர ஏலு 


மாமியாரு தொட்டிருந்தா

ஏலாலம்பர ஏலு 

மயிரப் பிடிச் சண்டை செய்வ

ஏலாலம்பர ஏலு

 

மூத்தாரு தொட்டிருந்தா

ஏலாலம்பர ஏலு 

மூக்கறுத்து நாயங் கேப்ப

ஏலாலம்பர ஏலு 


மச்சினன் தொட்டிருந்தா

ஏலாலம்பர ஏலு 

மண்டை ஓடச்சி சந்தா செய்வ

ஏலாலம்பர ஏலு 


நாத்தனாரு  தொட்டிருந்தா

ஏலாலம்பர ஏலு 

ஓதட்ட அறுத்து நயம் கேட்ப 

ஏலாலம்பர ஏலு


மாமனாரு  தொட்டிருந்தா 

ஏலாலம்பர ஏலு

மண்டை ஓடைச்சி சந்தா செய்வ 

ஏலாலம்பர ஏலு


ஆம்படையான்  தொட்டிருந்தா 

ஏலாலம்பர ஏலு

ஆளும் பொருத்தாச்சே 

ஏலாலம்பர ஏலு


(வல்லியம்மாள் பாடியது )

பக்கம் – 11 

தி.ஜானகிராமன் கதைச் சுருக்கம்

கங்கா ஸ்நானம் 

image

சின்னசாமியின் அக்கா சாகும்போது தான்  வாங்கின கடனை அடைக்கச் சொல்லி புருஷனின் நிலத்தை வித்து நாலாயிரம் ரூபாயை  அவனிடம் கொடுக்கிறாள். மூவாயிரத்து சொச்சம் கடன். பாக்கியை அவன் காசிக்குப் போக உபயோகித்துக்கோ என்ற கட்டளை வேற. 

சின்னசாமியும் பணத்தை  எடுத்துக்கிட்டு துரையப்பாவின் வீட்டுக்குப் போகிறான். ராத்திரி ஆனதால் காலையில் வரவு வச்சுக்கலாம் என்று சொல்கிறார். பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு அவரின் உபசரிப்பில் நிம்மதியாகத் தூங்கினான். காலையில் வரவு வைக்கும் போது ‘அவர் பணத்தை எடு ’ என்றதும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. முதல் நாள் வாங்கி வைத்ததை மறந்துவிட்டாரா அல்லது விளையாடுகிறாரா? கடைசியில் அவர் வாங்கவே இல்லை என்று சாதித்துவிட்டார். பஞ்சாயத்து கோர்ட்டு என்று பலவாறு முயற்சித்தான் சின்னசாமி. ஊர்ப் பெரியவர் துரையப்பவாவை ஒண்ணும் செய்ய முடியவில்லை. கடைசியில் கடனோ கிடனோ வாங்கி அந்தக் கடனை மறுபடியும் அடைத்தான். 

அக்கா ஆசைப்படி சின்னசாமியும் அவன் மனைவியும் காசிக்குப்  போகிறார்கள். ஒரு வாத்தியார் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள்  கங்கையில் குளிக்கும் போது கேள்விப்படுகிறார்கள் அந்த துரையப்பாவும் காசிக்கு வந்து அவர்கள் தங்கியிருக்கும் அதே வாத்தியார் வீட்டில் தங்கியிருக்கிறார் என்று. 

திரும்ப அவன் முகத்தில் முழிப்பதா? அவன் பாவத்துக்கும் சேர்த்து கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு அவன் அங்கே இருந்தால் வேறு ஜாகைக்குப் போக வேண்டும் என்று முடிவு கட்டுகிறார்கள்.

பக்கம் – 12 

சித்தர் பத்திரகிரியார்

image

பத்திரகிரியார் உண்மையில் ஒரு அரசர். பட்டினத்தாரின் பெருமைகளைக் கண்டு உணர்ந்து அவரது சீடராக திருவிடைமருதூர் கோவிலில் பிச்சைஎடுத்தவர். கிடைத்த உணவைக் குருவுக்குக் கொடுத்துத் தானும் உண்டு மீதியை ஒரு நாய்க்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர். 

ஒருமுறை பட்டினத்தார் இவரைப் பற்றிச் சொல்லும் போது  "சோற்றுக்கட்டியையும் நாயையும் வைத்துக் கொண்டு சம்சாரியாக வாழ்கிறார்’“ என்று சொல்ல, பிச்சை எடுக்கும் திருவோட்டை நாயின்  தலையில் அடித்து அதற்கு முக்தி அளித்தார். அந்த நாய் ஒரு அரசகுமாரி வடிவில் வந்து அவரை மணந்து கொள்ள வேண்டியது.    ” எனக்கும்,  என் எச்சிலை உண்ட இவளுக்கும்  இந்தப் பிறவி நோய் வரலாமா “ என்று இறைவனை உருகி வேண்ட, ஒரு பெருஞ்சோதி வந்து இருவரையும் தன்னுள் ஒடுக்கி இருவருக்கும் முக்தி அளித்தது. 

அவர் குரு பட்டினத்தாருக்கு அதற்குப் பின்னரே முக்தி கிடைத்தது. 

இவரது  231 பாடல்கள்கள் அனைத்தும்  இரு வரிக் கண்ணிகள்.  எல்லாக் கண்ணிகளும் ‘எக்காலம்?’ என்ற கேள்வியுடன் முடியும். இந்த உலக மோக வாழ்வைத் துறந்து இறைவன் அடிசேரும் காலம் எக்காலம் என்றும், அந்தக் காலம்  விரைவில் வாராதா என்று ஏங்கும் சித்தர் தான் பத்திரகிரியார்.  

அவரது நெஞ்சுருக்கும்  கண்ணிகள் சிலவற்றைப் பார்போம்!


ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?


கால் காட்டி கைகாட்டி கண்கள் முகம் காட்டி 

மால் காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்?


வெட்டுண்ட  புண்போல்  விரிந்த அல்குல் பைதனிலே 

தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் 

எக்காலம்?


ஆறாத புண்ணில் அழுந்திக் கிடக்காமல் 

தேறாத சிந்தனையைத்  தேற்றுவதும் எக்காலம்? 


தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே

சிந்தை தனில் கண்டு திருக்கறுப்பது

எக்காலம்? 


தித்திக்கும் தெள்ளமிதைச் சித்தாந்தத்து உட்பொருளில் 

முத்திக்கு வித்தை முதல் நினைப்பது

எக்காலம்? 


மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில் 

பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது

எக்காலம்? 


கல்லாய் மரமாய்க் கயலாய்ப்  பறவைகளாய்ப்

புல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது

எக்காலம்? 

     

அல்லும்  பகலும் என்றன் அறிவை அறிவால்  அறிந்து 

சொல்லும் உரை மறந்து தூங்குவதும் 

எக்காலம்?


கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தான் நினைக்க 

உருக்கொண்ட வாறது போல் உனை அடைவது 

எக்காலம்?


பிறப்பும் இறப்பும் சுற்றுப் பேச்சும் அற்று 

மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது 

எக்காலம்?


சித்தர்கள்  நம் நாட்டின் பொக்கிஷங்கள்!!

பக்கம் – 13 

தாட்பூட் தஞ்சாவூர்னு தேட்டை போட வந்தான் !-சுரா

image

வீட்டு மேல யாருன்னு கேட்டுக்கிட்டு வந்தான் 

கோட்டு சூட்டு போடாமலே  ஊட்டுக்குள்ளே வந்தான் 

தாட்பூட் தஞ்சாவூர்னு தேட்டை போட வந்தான் 

இடுப்பு மேல கையைவைச்சுத்  துடுக்குத் தனமா கேட்டான் 

காட்டாமணி செடி ஓடச்சி தோட்டத்துக்கு வந்தான் 

பட்டனைப்  போடாமலே சட்டை போட்டு வந்தான் 

வெட்டுக் கத்தி எடுத்துக்கிட்டுத்   துட்டுப் பறிக்க வந்தான் 

வேட்டுச்  சத்தம் போட்டுக்கிட்டு ரோட்டுமேலே வந்தான் 

பாட்டு ஒண்ணு பாடிக்கிட்டு ரூட்டுப் போட வந்தான் 

ஆட்டுக்குட்டி  கத்தும் போது முட்டுக்குத்தி நின்னான் 

சட்டிப் பானை தயிரையும் சப்புக் கொட்டித் தின்னான் 

இட்டுக் கட்ன பாட்டையெல்லாம் கட்டக்  குரலில் சொன்னான் 

 கட்டி வைச்ச  சோத்தை எல்லாம்  வெட்டி வெட்டித் தின்னான் 

 ஈட்டிக்காரன் போலவந்து  வட்டி போட்டுத் தின்னான் 

 எட்டி எட்டி பாத்துக்கிட்டு வெட்டித்தனமா நின்னான் 

ஏட்டிக்குமேல் போட்டியாக பாட்டு படிச்சு நின்னான் 

ஓட்டிவிட்ட மாட்டைப் போல சீட்டி அடிச்சு வந்தான் 

கட்டை வண்டி ஓட்டிக்கிட்டு நெட்டப் பயலா  வந்தான் 

கூட்டுக்குள்ளே குடியிருக்க  சேட்டை பண்ண  வந்தான்

மேட்டுக் குடி பாட்டன் போல கிட்டக் கிட்ட வந்தான் 

கிட்டக்கிட்ட வந்து என்னைத் தொட்டுகிட்டு நின்னான் 

ஒட்டி ஒட்டி வந்து அவனும் கட்டிப்   பிடிக்க வந்தான்

பொட்டப் பய போல அவனும் வெக்கம் கெட்டு நின்னான் 

 அட்டை போல ஒட்டிக்கிட்டு லூட்டியடிக்க வந்தான் 

கோட்டை செவரைத்  தாண்டி அவன்   ஆட்டைப் போட வந்தான் 

வேட்டு வைச்சப்  பாறைபோல மாட்டிக்கிட்டுத்  துடிச்சான் 

சாட்டை ஒண்ணை வச்சுக்கிட்டு மாட்டை ஓட்ட வந்தான்

பட்டா சிட்டா இல்லாமலே வீட்டைக் கட்ட வந்தான் 

சீட்டுக்கட்டு ராசா போல  ஆட்டிக்கிட்டு வந்தான் 

சிட்டுக்குருவி லேகியத்தைத்  தொட்டு நக்கி வந்தான் 

சுட்டுப்போட்ட மீனைப் போல சூட்டைக் கிளப்ப வந்தான் 

திட்டம் போட்ட பயபுள்ளே ஆட்டம் ஆட  வந்தான் 

சேட்டையெல்லாம் காட்டிவிட்டு மூட்டைகட்டிப் போனான்

பொட்டப் புள்ளை என்மனசைத் துடிக்க விட்டுப்   போனான்!  

பக்கம் – 14