இனிதே திறந்தது இலக்கிய வாசல்

18.04.2015 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் இலக்கிய சிந்தனையாளர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில்  குவிகம் இலக்கியவாசல் தொடக்க விழா இனிதே நடைபெற்றது !

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது !

குவிகம் இலக்கிய வாசலை முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் திறந்துவைத்தார் !

‘இலக்கியமும் நகைச்சுவையும்’  என்ற தனது முதல் நிகழ்ச்சியை “குவிகம் இலக்கிய வாசல்” முனைவர்  திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அரங்கேற்றியது !

தனிநபர் புகழ்ச்சியை புறந்தள்ளி தமிழ்இலக்கிய நிகழ்ச்சியை மட்டுமே  முன்னிறுத்தி  குவிகம் இலக்கியவாசல் செயல்படும் என நம்பிக்கைத் தெரிவித்தும் அமைப்பாளர்கள் .சுந்தரராசன், கிருபானந்தன் அவர்களின் முயற்சியை ஊக்குவித்தும்  பேசிய திருப்பூர் கிருஷ்ணன் தமிழ் இலக்கியங்களிலே புதைந்துகிடக்கும் நகைச்சுவை நயங்களைப்   பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் 

image


அடுத்துப் பேசிய முனைவர்  வ வே சு அவர்கள் இலக்கியமும் நகைச்சுவையும் என்ற தலைப்பிலே தான் இயற்றிய கவிதைகளை மன்றத்தில் படித்து அனைவரையும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினார் !

தனது பள்ளிப் பருவத்திலே நடந்த மறக்கவொண்ணா நகைச்சுவை நினைவுகளை அவர் கவிதையில் வடித்துப் படித்தது அரங்கத்தினரின் கரவொலியைப் பெற்றது !

image

மூன்றாவதாய் பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் தனது கவிதைப் படைப்புகளில் இடம்பெற்ற நகைச்சுவைக் கவிதைகளை அரங்கத்தார் ரசிக்கும் வண்ணம் பகிர்ந்துகொண்டார் !

வாழ்வியலை ஒட்டிய அவரது கவிதைகள் அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.


image

சுந்தரராசன் அனைவரையும்வரவேற்றார் !

image

இலக்கிய ஆர்வலர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது

image

நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கவிதைகள் படிக்கப்பெற்றுப்
பாராட்டைப்  பெற்றன !

image
image
image
image

கிருபானந்தன் நன்றி நவில தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது !

பக்கம் – 15 

வாலியின் பாடல்கள்

image

வாலி அவர்களின் நயமான பாடல் வரிகள் இவை. இந்தப் பாடல்களின் முதல் வரியையும் இடம்பெற்ற திரைப் படத்தையும் கண்டுபிடியுங்கள்!!

விடை  25ஆம் பக்கத்தில் 


1) பொன்மேனி  தேரசைய என்மேனி  தாங்கிவர

ஒன்றோடுஒன்றாய்க் கூடும்
காலமல்லவோ

நில்லென்று நாணம் சொல்ல
செல்லென்று ஆசை தள்ள 

நெஞ்சோடு நெஞ்சம் பாடும்
பாடல் சொல்லவோ? 

 

2) பல இடத்தில் பிறந்த நதிகள் 

ஒரு கடலில் வந்து சேரும் 

பல நிறத்தில் பூத்த மலர்கள் 

ஒரு மாலைபோல் உருமாறும் 3) இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
-அதில் 

எத்தனையோ நான் எழுதிவைத்தேன் 

எழுதியதெல்லாம் உன்புகழ்
பாடும் 

எனக்கது போதும் வேறென்ன
வேண்டும் 


4) பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது 

நான் படும்பாட்டை ஒருபிள்ளை
ரசிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
 -இதில் 

யார் கேட்டு என்பாட்டை முடிக்கின்றது? 


5) பாசமென்றும் நேசமென்றும்
 வீடு என்றும் மனைவி என்றும் 

நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே 


6) ஆசையில் விளைந்த மாதுளங்
கனியோ

கனியிதழ் தேடும் காதலன்
கிளியோ  

உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை
மறந்தேன் 

உறவினில் வளர்ந்தேன் (இன்னும் வரும் )

பக்கம் – 16 

ஔவையார் – ஆத்திசூடி

image

ச..சா.சி..


44. சக்கர நெறி நில் /  Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /  Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /  Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /  Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /  Don’t hurt others feelings.
49. சூது விரும்பேல் /  Don’t gamble.
50. செய்வன திருந்தச் செய் /  Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /  Seek out good friends.
52. சையெனத் திரியேல் /  Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /  Don’t show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /  Don’t be a lazybones.

image

பக்கம் –  17 

16   – தரும . இராசேந்திரன் & சுசு

image

அது என்ன பதினாறு?


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென 

வாழ்த்திவிட்டுபோனவரே 

அது என்ன பதினாறு

அதைச்  சொல்ல மாட்டீரோ !!

மணமக்கள் கேள்வியிது 

மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல

வேதாந்த மகரிஷியின் 

விளக்கமதை தெரிந்து கொள்வோம் !

இறையுணர்வும் , 

                அறநெறியும் 

                           கல்வியும்,

                                  செல்வமும்

                                         தானியமும் , 

                                               இளமையும் 

                                                   வலிமையும்,

                                                         துணிவும்,  

                                                        நன்மக்கட்பேறும்     

                                            அறிவில் உயர்ந்தோர் நட்பும் 

                                      அன்பும் , 

                             அகத்தவமும்

                         அழகும் , 

                   புகழும் 

            மனிதமதிப்பு நறுந்தொழுகும் பண்பும் 

  பொறையுடமை [பொறுமை]யும் 

                 எனும் பதினாறு பேறும் பெற்று 

போற்றலுக்கும் தூற்றலுக்கும் வாழ்த்துக்களே கூறி

மறைவிளக்கம் உயர் வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து      

 மனையறத்தின் ஒளிவிளக்காய் வளம் ஓங்கி வாழ்க

இன்னொருவரின்  லிஸ்ட்!! 

image

அகிலமதில் நோயின்மை, கல்வி, தன, தானியம்,    

     அழகு, புகழ், அறம், வாழ்க்கைத் துணைநலம், இளமை,

அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, ஆண்மை, வெற்றி     

    ஆகும் நல்லூழ் விளக்கம் பதினாறும் பெறுவீர்.

image

சரி, அபிராம பட்டர்  அபிராமி அந்தாதியில் சொல்லும் பதினாறு பேறுகள்  என்னென்ன  தெரியுமா?

கலையாத  கல்வியும்,  குறையாத  வயதும், ஓர்
   கபடு  வாராத  நட்பும், 
கன்றாத  வளமையும்,  குன்றாத  இளமையும், 
    கழுபிணி யிலாத  உடலும், 
சலியாத  மனமும்,  அன்பகலாத  மனைவியும், 
     தவறாத  சந்தா  னமும், 
தாழாத  கீர்த்தியும்,  மாறாத   வார்த்தையும், 
       தடைகள்  வாராத   கொடையும், 
தொலையாத  நிதியமும்,  கோணாத  கோலும்,  ஒரு
        துன்ப   மில்லாத   வாழ்வும், 
துய்ய  நின்  பாதத்தில்  அன்பும்,  உதவிப்பெரிய
      தொண்டரொடு  கூட்டு  கண்டாய் !
அலையாழி  அறிதுயிலும் மாயனது  தங்கையே !
        ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
       அருள்வாமி !   அபிராமியே !  

காளமேகப் புலவரின் தொகுப்பு என்னவோ?


துதிவாணி ,வீரம், விசயம், சந்தானம், துணிவு, தன,

மதிதானியம், செளபாக்கியம், போகம், அறிவு, அழகு

புதிதாம்பெருமை, அறம், குலம், நோவகல், பூண்வயது

பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.  


தேவநேயப் பாவாணர்  தமிழுக்குக் கிடைத்த பதினாறு பேற்றைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்!                                                              

தொன்மை – பழமைச் சிறப்பு
முன்மை – முன்தோன்றிய சிறப்பு
எண்மை – எளிமைச் சிறப்பு
ஒண்மை – ஒளியார்ந்த சிறப்பு
இளமை – மூவாச் சிறப்பு
வளமை – சொல்வளச் சிறப்பு
தாய்மை – சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை – கலப்புறாச் சிறப்பு
செம்மை – செழுமைச் சிறப்பு
மும்மை – முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை – இனிய சொற்களின் சிறப்பு
தனிமை – தனித்தியங்கும் சிறப்பு
பெருமை – பெருமிதச் சிறப்பு
திருமை – செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை – இயற்கைச் சிரிப்பு
வியன்மை – வியப்புச் சிறப்பு

image

இந்தக் கணினி உலகில் புதிய பதினாறு பேறு !


கலையாத மென்பொருளும், தளராத இணைய தளமும்,

கபடு வாராத கணினியும், உடையாத ஐபேடும்,

காசு தொலையாத கைபேசியும், பகிர்வு கேட்காத முகநூலும்,

சுற்றாமல் தொடரும் யூட்யூபும் ,ஸ்பேம் இல்லாத மின்னஞ்சலும்,

தொடர்ந்து வரும்  வைஃபையும்,ப்ரீயாய் வரும் ஆப்ஸும்,

 தனியே பேச ஹேன்ஸ்ப்ரீயும், கேட்பதைக் கொடுக்க  கூகிலும் , 

சா ட்செய்ய வாட்ஸ்அப்பும், எப்போதும் அனுப்ப  எஸ்‌எம்‌எஸ்சும் 

செல்ஃபி  எடுக்க  கேர்ள் பிரண்டும் 

அனைத்தையும் சார்ஜ் செய்ய மின்சாரமும் 

ஆகிய பதினாறும் பெற்று 

வாழ்வீர் நீவிர் மின்னணு உலகில்! 

பக்கம் – 18 

இந்த மாத சிற்றிதழ்- சொல்வனம்

சொல்வனம் . ஓர் q அழகிய சிற்றிதழ் ! மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் !

இதுவரை 127 இதழ்கள் வந்துள்ளன. 

அவர்கள் குறிக்கோள்: 

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!

படிக்க ருசிக்க இந்த இணைய தளத்துக்குச் செல்லவும் 

 http://solvanam.com/


image

சொல்வனத்தின் ஆசிரியர்களில் ஒருவரான ரவிசங்கர் அவர்களை ‘விருட்சம்’ இலக்கியக் கூட்டத்தில் உரையாடக் கேட்டோம். அவர் நடத்திய ‘பிரக்ஞை’ என்ற பத்திரிகையைப் பற்றி விவரமாகக் கூறினார். சொல்வனத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது உலகின் பல இடங்களிலிருந்து பலதரப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு மாத இருமுறை இதழாக வெளியிடுகிறோம் என்றார்.   

அரசியல் என்ற தலைப்பில் ஈராக்கில் ஜனநாயகம், பங்களாதேஷ் பயணம் ,  சிங்கப்பூர் லீ குவான் இயூ , குகை ஓவியங்கள், ஜப்பானில் இந்திய வணிகம் உலக வர்த்தக மாநாடு என்று எழுதுகிறார்கள்.

அறிவியல் என்ற தலைப்பில் மாயத் தோற்ற ஊக்கிகள், நோலாவின் இண்டர்ஸ்டெல்லார், இரு சுருள் வளைய சர்ச்சை,    இயற்கை விவசாயம், தூரயியங்கி,(டிரோன்கள் ),வீடியோ விளையாட்டுக்கள், ஆதி மானுட யோக முறைகள், எபோலா,  ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ்வது எப்படி என்று பல கோணத்தில் எழுதுகிறார்கள்.

இசை என்ற பகுதியில் இளையராஜாவின் ஷாமிதாப், டிசம்பர் சீசன் , ரஹ்மானின் திறமை, மன்னா டே,மாண்டலின் ஸ்ரீநிவாஸ்,  எஸ்.ஜானகியின் பத்மபூஷண் , இசை இல்லா இசை , கர்ணன் திரைப்படம், திமிறி நாயனம், காருக்குறிச்சி என்றெல்லாம் இசை மழை பொழிகிறார்கள். 

இலக்கியம் பகுதியில் அருமையான சிறுகதைகள்,கவிதைகள்  கிடாவெட்டு, ஸ்வப்னா வாசவத்தம், ஜெயகாந்தனுக்கு அஞ்சலி, காகங்கள் சுட்ட வடைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கம்ப ராமாயணம் சித்திரங்கள்,  எஸ்.பொ , நாஞ்சில் நாதன் கவிதைகள், என்று எண்ணற்றவை

சமூகம் என்ற வலையில் புத்தக விமர்சனம், ஆண்-பெண் சிக்னல், பொறியியல் கல்விக்கு அப்பால், தஞ்சை விவசாயிகளின் சோகம், கூவம்- தாது வருஷப் பஞ்சத்தைப் போக்க வெட்டிய ஆறு, ஆபாச  விளையாட்டு, செயற்கைக் கருவூட்டல் ,ஊழல் ஒழிப்பு என்று பல முகங்கள். 

சுருக்கமாகச் சொன்னால்  

சொல்வனம் ஒரு  – விளம்பரப் பத்திரிகை அல்ல.விவரப் பத்திரிகை அல்ல. 

விளக்கப் பத்திரிகை ! .  

கருத்துப் பெட்டகம். !!

பக்கம் – 19 

நான் ரசித்த படைப்பாளி – சுப்பிரமணிய ராஜு —-(எஸ். கே. என்)

எழுபதுகளின் இளைய தலைமுறை எழுத்தாளரான
இவர் சுஜாதா, சாவி மற்றும்
பலரால் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக இனம் காணப்பட்டவர். சாவி இதழில் தமிழன் என்ற
பெயரில் கேள்வி-பதில் எழுதிக் கொண்டிருந்தவர். சாவி பத்திரிக்கைக்கு இவரும்
மாலனும் சேர்ந்து ஒரு இதழுக்கு ஆசிரியர்களாக  இருந்ததாக நினைவு.

image

இவரது பல கதைகளின் நாயகன், படித்த, பெரும்பாலும் வேலையற்ற அல்லது குறைந்த வரவில் வேலை பார்க்கும்
புத்திசாலியான தர்கரீதியாக அக்கால வாழ்க்கை நடைமுறைகளை எதிர்த்து வாதாடும் – (anti establishment)- இளைஞன் ஆக
இருப்பான். அதனால் அந்த காலகட்ட இளைஞர்கள் மிகவும் கவரப்பட்டார்கள் எனக் கூறலாம்.

இவரது “இன்று போய் ….” கதை
தன் அண்ணனைப்பற்றி தம்பியின் பார்வையில் சொல்லப்படுகிறது.

கல்யாணம் முடிந்து மனைவியுடன் வரும்
அண்ணாவைப் பற்றிய தம்பியின் கருத்தோடு கதை ஆரம்பிக்கிறது.

(வாழ்க்கையில்
எல்லாத்தையும் தோத்துட்டு, மன்னியை
மட்டும் கை பிடிச்சு அழைச்சுண்டு வந்த மாதிரி தோன்றியது)

கல்யாணத்திற்கு முன்பு இருந்த அண்ணா ..
தலை நிறைய முடி சிகரெட், எப்பவும்
ஏதாவதொரு புஸ்தகம்.

(ஆயிரம்
புஸ்தகமாவது படிச்சிருப்பான்)

வெளியில் கினம்பும்போதே தனக்குத் தெரிந்ததையெல்லாம்
இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்ல நினைப்பது போலிருக்கும். மீட்டிங் எல்லாம்
பேசுவான். சமூகம், சினிமா, பத்திரிக்கை, இளைஞர்கள் எல்லாவற்றையும் தாக்குவதாக அவன் பேச்சு இருக்கும். கதையும்
எழுதுவான். இவன் கதையைப்பற்றி அம்மாவுடன் சண்டை. அப்பாவின் பூஜை ஸ்லோகம குறித்து
அவருடன் வாக்குவாதம்.

image

(உனக்குப்
புரியாத ஒரு மந்திரத்தை நீயும் சாமி, பூதம்னு இருபது வருஷமா சொல்லிக்கொண்டிருக்கியே.)

அண்ணா படிப்பை முடித்து இரண்டு வருடம்
ஆகியும் வேலை கிடைக்கவில்லை. அப்பாவும் ரிடையர் ஆகிவிடுகிறார். எல்லோரும் அவனுக்கு
வேலை கிடைப்பதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

(அப்பா ரிடையராகி, சம்பளம் பென்ஷனாகி, ராத்திரியில் தயிர் மோராச்சு)

சகோதரியான சாந்திக்கு பி.யூ.சி. உடன்
படிப்பு நிறுத்தப்படுகிறது. சமயத்தில் சாந்தியின் கல்யாணத்திற்காக வைத்திருந்த
வெள்ளிப் பாத்திரங்களும் தங்க நகைகளும் அடகுக்கோ விலைக்கோ போகிறது.

இந்த சரிவுக்கெல்லாம் முன்பு, அதே தெருவிலிருக்கும் காயத்ரி என்ற
பெண் அண்ணாவால் ஈர்க்கப்படுகிறாள். தம்பி மூலமாக புத்தகம் வாங்குவதும் அதில் காதல்
கடிதம் வைத்து அனுப்புவதுமாக முயற்சி செய்கிறாள். அண்ணா கண்டுகொள்ளவே இல்லை. ஒரு
கடிதத்தையே தம்பி மூலம் கொடுத்து அனுப்புகிறாள்.

படித்துவிட்டு அலட்சியமாகச் சிரித்த
அண்ணா, தம்பியிடமே அவளைப் பார்க்கிற்கு
மாலையில் அழைத்து வரச் சொல்கிறான்.

பார்க்கில், தனக்கு அவளும், அவளுக்குத் தானும் லாயக்கில்லை என்றும், அவள்
எதிர்பார்ப்பது போன்ற கணவனாகத் தானிருக்க முடியாது என்றும் கூறிவிடுகிறான்.

(உன்னுடைய நடை, டிரெஸ் எல்லாமே, உனக்கு ஹெரால்ட் கார்
வெச்சுண்டிருக்கிற, தினம்
ஆபீசிலேந்து வந்த உடனே உன்னை ஷாப்பிங் அழைச்சுண்டுபோற, உன் சிரிப்புக்குத் தவம் கிடக்கிற, தன் கழுத்தில பட்டையைக் கட்டிண்டு உன் கையில் சங்கிலியைக் குடுத்துட்ட
ஒரு ஆம்பிளை தான் வேணும்! நீ அந்த மாதிரி டைப். நான் வேறு. நீ எதிர்பார்க்கிற
ஆளும் இல்லை நான். ஐ’ம்
சிம்பிள்!)

அண்ணாவிற்கு வேலை கிடைக்கவில்லை. இது
குடும்பத்தையே ஆட்டிவைக்கிறது. தெரு பூரா கடன். ஒருநாள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே
இல்லை என்னும் நிலையும் வந்தது.

தானே முன்னுக்கு வந்த ஒரு பணக்காரர், தன் மகளுக்கு கஷ்டப்படுகிற
புத்திசாலியான கணவனைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், வேலையும் வாங்கிக்கொடுத்து தன் பெண்ணையும் தர விரும்புகிறார் என்று
அப்பாவின் நண்பர் கூறுகிறார்.

அண்ணா வழக்கம் போல வள் என்று
விழுகிறான்.

திடீரென்று ஒரு நாள் இரவு வீட்டுக்கு
வந்தவன் “நான் அந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்து
விட்டேன். நாளையிலிருந்து வேலைக்குப் போகிறேன்” என்கிறான்.

image

எல்லோருக்கும் அதிர்ச்சி, ஆனால் நிம்மதி. அண்ணா வேலைக்குப் போக
ஆரம்பிக்கிறான். அந்த பெரிய பணக்காரனின் ஒரே மகளுடன் திருமணமும் ஆகிவிடுகிறது.

அண்ணா மாறிவிடுகிறான். அடிக்கடி
முன்பக்கத்திலே இருக்கும் அறையில் மனைவியுடன் பேச்சு. ஒவ்வொரு நாளும் சாயங்காலம்
வெளியே அழைத்து போகிறான். மாதம் ஒரு புடவை. எல்லா வாரப் பத்திரிக்கைகளும்
வாங்கிப்போடுகிறான். எந்த மாதிரிப் படங்களை பார்க்கக்கூடாது என்று முன்பெல்லாம்
சொல்வானோ, அந்த மாதிரிப் படங்களுக்கு மனைவியோடு
போனான். எல்லோருடனும் அன்பாகப் பேசலானான். அண்ணா மாறிப்போய்விட்டான்.

(இடியட்! எனக்கு
தீடீர்னு அவனைப் பிடிக்காமல் போயிடுத்து. அவனிடம் இருந்த கோபம், கர்வம், அலட்சியம் இதெல்லாம்தான் அவனுக்குப் பொருத்தமா இருந்துதுங்கறது என்
அபிப்பிராயம். அப்போ அவன் முகத்தில ஒரு தேஜஸ் இருந்தது. இப்போ அசட்டுச் சிரிப்பு)

மனைவியின் தந்தை வந்தால் மிகவும்
மரியாதையாய் பேசுவான். அடிக்கடி ஐஸ் வைப்பான்.

(எல்லார்கிட்டேயும்
சண்டை போட்டு ஜெயிச்சவன், இப்ப ஒவ்வொரு ராத்திரியும் தோல்வியடைஞ்சு, காலையில் தலை குனிவாத் திரும்புற மாதிரி, ஒவ்வொரு ராத்திரியும் மன்னி ‘ இன்று போய் நாளை வா’ என்று
சொல்கிறமாதிரி எனக்குப்பட்டது.)

ஒருநாள் சிகரெட்
பிடித்துக்கொண்டிருக்கும் தம்பியின் எதிரில் அண்ணன் வந்து விடுகிறான். கையில்
சிகரெட்டை மறைத்துக்கொண்டு தம்பி சிரிக்கிறான். அண்ணனும் சிரித்துக்கொண்டே கடந்து
போகிறான். அவன் கையில் மல்லிகைப்பூ. குண்டு குண்டா வாழையிலைக்கு வெளியே
எட்டிப்பார்க்கும் மல்லிகை.

‘ நான் மீண்டும்
சிரித்தேன்’ என்று கதை
முடிகிறது.

image

ஆதர்சங்களும்,
தார்மீகக் கோபங்களும்  யதார்த்தத்தில் எப்படி
அடிபட்டுப் போய்விடுகின்றன என்பதைத்  தன் பாணியில் சித்தரிக்கிறார். 

குறிப்பிடும்படியாக எழுதிவந்த இவர் இளம் வயதிலேயே ஒரு விபத்தில் மரணமடைந்தது
சிறுகதை இலக்கியத்திற்கு ஓர் பேரிழப்பு.

இவரது மற்றொரு கதையை இணையத்தில் படிக்க

நாக்கு

பக்கம் – 20