தி.ஜா வின் சக்தி வைத்தியம்

ஆறு குழந்தைகள் பெற்ற மாமியிடம் ஒண்ணாங்கிளாஸ் பாடம் எடுக்கும் இங்கிலீஷ்காரி மாதிரி  இருக்கும் தஸ்புஸ் டீச்சர் சொல்லுகிறாள் ‘உங்களுக்குக் குழந்தை வளர்க்கத் தெரியவில்லை’ ‘உங்க பிள்ளை படிப்பில பரவாயில்லை. ஆனால் ரொம்ப குறும்பு பண்ணரான். அவனுடைய  உபரி சக்தியை வேற வழியில் மாத்தணும். இல்லாட்டிக் கெட்டுப் போவான்’

அவளுக்குத் தாங்கல. பதிலுக்குக் கேட்டும் விட்டாள். அடுத்த மாதம் பையனோட ரேங்க் வழக்கமா வர்ற மூணிலிருந்து முப்பத்திரெண்டுக்குச் சரிஞ்சிருக்கு. டீச்சர் வீட்டுக்குப் போனாள். அவள் எங்கேயோ நாடக ஒத்திகைக்குப் போயிருக்கிறாள். 

image

அவள் அம்மா தான் வரவேற்றாள்.அப்புறம் அலுத்துக் கொண்டாள். ’ என்ன டீச்சர் வேலை வேண்டியிருக்கு? முப்பதொரு வயசு வரைக்கும் கல்யாணமே வேண்டாம்னு இருந்தா. பின்னாடி அவளாகவே பண்ணிட்டா. முதல் கொழந்தை தங்கல.இரண்டாவதும் முந்திப்பிறந்து மெஷின்லே வைச்சு இப்பத்தான் மனுஷக் கொழந்தை மாதிரி ஆயிருக்கு. அதெல்லாம் கிடக்கட்டும். முந்தாநாள் உங்க டீச்சரம்மா ஒரு ரசம் வைச்சாளே பாக்கணும். சமுத்ர ராஜாவே வந்து வைச்ச மாதிரி இருந்தது.  புருஷன்  கை நிறைய சம்பாதிக்கரான். இவள் எதுக்கு வேலைக்குப் போகணும். மாப்பிள்ளை  கிளப்புக்குப் போறாரேன்னு அழ மட்டும் தெரியுது. வேற எங்கே போவார்?

‘சரி ஸ்கூலிலேயே பேசிக்கிறேன்’ என்று திருப்தியுடன் மாமி புறப்பட்டாள். தாயே பராசக்தி’ என்று விடை கொடுத்தாள் அம்மாக்காரி.

எல்லாம் பராசக்தி மயந்தான். உபரி சக்தியை நாடக ஒத்திகையில் செலவழித்தால் கூட பராசக்தி கிருபை இல்லாமல் முடியுமோ?