பிடித்த படைப்பாளிகள் (எஸ் கே என் )

நாஞ்சில் நாடன்


image

நாஞ்சில் வட்டார வழக்கில் உரையாடல்களோடு சமூகப் பார்வையும்
நகைச்சுவையும் சோகமும் ஒரு சேர இழையோடும் படைப்புகளால் நன்கு அறியப்படும்
படைப்பாளி திரு நாஞ்சில் நாடன். 

“சூடிய பூ சூடர்க்க” என்னும் சிறுகதைத்
தொகுப்பிற்காக 2010 ஆம் ஆண்டிற்கான சாகித்ய  அகாதமி விருது பெற்றவர். 

 "தலைகீழ் விகிதங்கள்" தொடங்கி ஆறு
புதினங்களும் பல சிறுகதை, கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. 

மும்பையில்  வாழ்ந்த அனுபவத்திலும் பல
கதைகள் உருவாகியுள்ளன. இவரது “கிழிசல்” என்னும் கதை பல சிறந்த
சிறுகதைகள் பட்டியல்களில் காணப்படுகிறது  

கதை மாந்தர்களை ‘உள்ளது உள்ளபடி’ படைப்பது கவனத்தை ஈர்க்கிறது. ஊர்
ஊராகத் திரிய வேண்டிவரும்   மருந்துக்
கம்பனி  விற்பனைப் பிரதிநிதியைக்
கதாநாயகனாகக் கொண்ட “சதுரங்கக் குதிரைகள்” புதினம் படிக்க நேர்ந்தபிறகு
நான் தேடித் படிக்கும் ஒரு எழுத்தாளர். .

இவரது “ஐந்தில் நான்கு” சிறுகதை இப்படிப் போகிறது:

* * * * * *

மும்பையில் பிழைக்க வேலை தேடிச் சென்று, மூன்றாண்டு கழிந்து சொந்த
ஊருக்கு வரும் “மிஸ்டர். எஸ். கே. முத்து"வின் கதையிது.
பேருந்திலிருந்து ஒரு ஏர் பேக், சஃபாரி சூட்கேஸ் ஆகியவற்றுடன் நாகர்கோவிலில்  இறங்கியவனுக்கு வேறு பஸ் பிடித்து நாலு மைலில்
உள்ள தன் ஊருக்குச்  செல்ல முடியும்.
எனினும் மூன்றாண்டுகள் கழித்து மும்பையிலிருந்து வருபவன் பஸ்ஸில் போவதாவது? அந்த  அதிகாலை வேளையில்   டாக்சியில் சென்றாலும் தெருவில் சாணி
தெளிக்கும் சில பெண்டுகள் தவிர யார் கண்ணிலும் படாமல் இறங்கினால், புதிய ஏர் பேக்,
சஃபாரி, வி.ஐ.பி, டபிள் நிட்டட் பேண்ட், ஷோலே ஷூ, பாம்பே டையிங் ஷர்ட், நூற்று
நாப்பது ரூபாய் கூலிங்கிளாஸ் இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருக்கிறது.  

லாட்ஜில் ரூம் எடுத்து ஷேவ், குளியல் முடித்து கையில் நாஷனல்
பேனோசோனிக் என்ற பெயர் கொண்ட   ஜப்பானில்
தயாராவது என்ற போர்வையில்  வரும் உல்லாச
நகர டிரான்சிஸ்டர் கம் காஸெட் பிளேயர் சகிதம் டாக்ஸி பிடிக்க பஸ் ஸ்டாண்ட்
போகிறான்.  அங்கே சில கிராமத்து ஆட்கள்
"இது என்ன புதுசா மணக்கு?” என்ற கேள்வியுடன் நிறைய இழுத்து
சுவாசித்துவிட்டு எஸ். கே. முத்துவை பயபக்தியுடன் பார்க்கிறார்கள்  

ஊர் நெருங்கியதுமே பரபரப்பும் புளகாங்கிதமும். ஊரின் சாலையில்
ஓட்டுனரை கொஞ்சம் மெதுவாகவும் இரண்டு ஹாரன் கொடுத்தும் போகச் சொல்கிறான். அவன்
வீடு ரோட்டோரத்து வீடல்ல. அவன் தெரு முடுக்கில் கார் நுழைவதோ திரும்ப மேலேறி
வருவதோ நடக்காதது.

டாக்ஸி நின்றது. இரண்டு மூன்று ஹாரன் கொடுத்தது. முத்துவின்
ஆசைப்படியே பொது இடங்களில் இருந்தவர்கள் கவனம் திரும்பியது. முதலில் இது யார்
என்று திகைத்தாலும் இவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

கதாசிரியரின் வார்த்தைகளில்

“ அட இது நம்ம காத்தமுத்துல்ல…” திடீரென அவனை அடையாளம்
கண்டுகொண்ட ஒரு அவயம்.

 

“ஆமா.. அவன்தான். அட செறுக்கி. விள்ள ஆளு அடையாளமே
தெரியல்லியேடே! என்னண்ணு மாறிப்போனான். ஊள மூக்கும் பறட்டத் தலயுமா திரிஞ்ச
பயலா?”

 

அவன்
முகம் கோணல் ஆகியதை கண்டு அபசாரம் செய்துவிட்ட குற்ற உணர்வுடன், யார் யாரோ
பெட்டிகளைத் தூக்கிக் கொள்கிறார்கள்.

பேச்சின்
தொனியே மாறுகிறது. “பய ஆளாயிட்டான்” , “இங்க கிடந்தா எருமை
மேய்ச்சுகிட்டு தால கிடக்கணும். எங்கியாச்சும் போய் நாலு காசு பாக்கணும்”
“மாசம் சொளையா நூறு ரூவா அனுப்புறானம் பாத்துக்க”

 

ஊர்
திரும்பும்  ஞாயிற்றுக்கிழமை அன்று பஸ்
நிறுத்தத்தில் பம்பாயில் கிடைக்காத அரும்பொருட்கள் கொண்ட பனையோலைக் கடவு,
திருநெல்வேலியிலிருந்து பம்பாய் வரை சாப்பிட பொட்டலங்கள்.

“பத்திரமா
போயிட்டு வா என்கிறார் அப்பா.

 

கதாசிரியர்
சொற்களில்

 

"ஏ.
காத்தமுத்து.. என்ன பொறப்பிட்டாச்சா? இல்லாட்டாலும் இங்கிண கிடந்து என்னாத்துக்கு?
நம்ம பயலுக்கும் என்னமாச்சும் ஒரு சான்ஸ் உண்டுபண்ணப் பாருடே! சிஸ்த் பாசாயிருக்கான்”
என்று ஒரு தகப்பனார் பரிந்துரை செய்தார்  

 

“அப்பம்
போயி வீடெல்லாம் ஏற்பாடு செய்துகிட்டு எளுத்து போடு. உனக்க அத்தானும் எப்படியும்
வாற ஆவணியில கலியாணத்தை முடிச்சுப் போடணும்ணு சொல்லுகா.. கண்டமானம் செய்யாட்டலும்
உள்ளத்துக்குள்ள செய்வா. மெத்தனமா இருந்திராதே” என்று அம்மா பதினெட்டாம்
முறையாக ஞாபகப்படுத்தினாள்.

 

பஸ்
வந்ததும் அடிச்சுப் பிடிச்சு ஏறிய பிறகு இன்னும் மூன்றாண்டுகளுக்கு ஊருக்கு
வரக்கூடாது என்று எண்ணிக்கொள்கிறான். கொண்டு வந்திருந்த பனிரெண்டு நூறு ரூபாய்
நோட்டுக்களும் வெங்காயம் உறித்ததைப் போல் ஒன்றுமில்லாமல் போய், டிக்கட்டிற்கே
யாருக்கும் தெரியாமல் நூறு ரூபாய் கடன்.    
 

கையில் கட்டியிருந்த கடிகாரம் அத்தான் எடுத்துகொண்டுவிட்டார். தவணை
பாக்கி கட்டவேண்டும். கூட வசிக்கும் குத்தாலத்திடமிருந்து இரவல் வாங்கி வந்திருந்த
டிரான்சிஸ்டர் கம் காசெட் பிளேயர் தங்கை புருஷனுக்குப் போய்விட்டது. ஊருக்கு
வருவதற்கான ஏற்பாட்டில் மாதச் சீட்டில் மாதம் ஐம்பது ரூபாய் இன்னும் இருபத்தெட்டு
மாதம் கட்டவேண்டும்.

இப்படி முடிகிறது கதை

இந்தக் கடன்கள் எல்லாம் கழிக்க, எத்தனை ஆண்டுகள் இனிமேல், “தோ
மசால் தோசா, ஊத்தப்பா ஏக் பிளேட், வடா சாம்பர் தீன்’ என்று எண்ணுகையில் அவன்
கண்கள் கலங்கிக் கசிந்தன.

‘அருமாந்த பிள்ளை .. தூர தொலைக்குப் போறமேண்ணு வருத்தப்படுகு’ என்று
பக்கத்து இருக்கைப் பெரியவர் மனதுக்குள் அனுதாபம் சிந்தினார்  

**** **** **** ****

 

 

நாஞ்சில் வட்டார மொழி வளத்துடன் சில கதைகள்

·       
சுடலை மாடன் கொடை காணப்போகும் ஒரு வளர்ந்த சிறுவனின் பார்வையில்
பன்றி பலி உள்ளிட்ட அந்த விழா நடவடிக்கைகளும் வெளியூரிலிருந்து எப்போதாவது வரும்
கணவன் கொண்ட ‘மதனி’ என்ற மாதுவும் – ("பேய்க்கொட்டு”)

·       
போகும் வழியில் ஒரு தோப்பில் இளைப்பாற இருந்த தம்பதியரை ஊரில் உள்ள
சிலர் அங்கிருந்து போகக் கட்டாயப்படுத்த அவர் மறுக்க ஏற்படும் பிரச்சினையை
தீர்க்கும்  நல்ல ‘சுதி’யிலிருக்கும்   ஈஸ்வரமூர்த்தி பட்டா – (“பாலம்”)

·       
திருவிழாவில் அப்பாவுடன் கச்சேரிக்கு அடம் பிடித்துக் கூடப்போகும் சிறுவன், கச்சேரி முடிந்து காப்பிக்கடையில்
சுமார் மூன்று ரூபாய்க்கு உணவருந்திவிட்டு, சந்தடி சாக்கில் இரண்டு தேயிலை என்று
சொல்லி காசு கொடுத்துவிடுகிறார் அப்பா. இதற்காகத்தான் வருடா வருடம் அப்பா
கச்சேரிக்கு வருகிறாரோ என்று எண்ணமிடும்
சிறுவன்,
இனி அப்பாவுடன் திருவிழாவிற்கு
வருவதில்லை என்று முடிவெடுக்கிறான்.  (“கிழிசல்”)

பம்பாய் அனுபவத்தில் படைத்த கதைகள்.

·       
பிரபலமான ஒருவரின் முக்கியஸ்தருக்கான மும்பை ஷன்முகானந்தா அரங்கின்
முன்வரிசை  ‘காம்ப்ளிமென்டரி" டிக்கெட்டில்
நாடகம் பார்க்கப்போகும் அவரது காரோட்டி, இருக்கையிலிருந்து எழுப்பிவிடப்பட, நாடகம் பார்க்காமலேயே வீடு திரும்பும்
சம்பவம். –( “அம்பாரி
மீது ஒரு ஆடு”)

·       
சோமசுந்தரத்திற்கு இன்றைக்குள் மிஷினை ஏற்றிவிட வேண்டிய
கட்டாயம்.  ட்ரக் வராமல் ட்ரான்ஸ்போர்ட்
கம்பனிக்காரர்களை விரட்டி போன் செய்தும் நம்பிக்கையில்லை. மேலதிகாரியோ எப்படியாவது
இன்றே ஏற்றிவிடவேண்டும் என்றும் ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கடிந்துகொள்கிறார்.
விரட்டி விரட்டி மிஷினை ஏற்றிவிட்டு காரியம் சாதித்த பெருமையோடு  மேலதிகாரிக்குப் போன் செய்தால் அவர் எங்கோ
டின்னருக்குப் போயிருக்கிறார் என்பது தெரிந்ததும் உற்சாகம் வடிந்து போகிறது- (“வைக்கோல்”).

எல்லாக் கதைகளிலும் இவரது பார்வையும் கதை சொல்லும் சரளமும்
வியக்கத்தக்கது.

இணையத்தில் படிக்கக் கிடைக்கும் கதைகள்

மனகாவலப்பெருமாள்-பிள்ளை

இடலாக்குடி ராசா

எஸ். கே. என்