
ராம் – “லாவண்யா, இந்த சுப்புப் பயல் வந்து என்னைக் கேட்டால் நான் இல்லைன்னு சொல்லிடு .”
லாவண்யா – “கல்யாணம் பண்ணி முப்பது வருஷம் ஆகுது, உங்களுக்கு என்னைப் புரிஞ்சுக்க முடியலையா என்ன? . எனக்கு சின்ன பொய், பெரிய பொய் எதுவும் சொல்ல வராது .”
ராம் – “இந்த ஒரு தடவை மட்டும் சொல்லிடு! காபி வேணா எனக்கு ரெண்டு நாள் கட் பண்ணிடு .”
லாவண்யா – “முடியாது ! ஏன் இன்னிக்கு சுப்புவைப் பார்த்து இப்பிடி ஓடறீங்க ?”
ராம் – “யாரோ ‘வாரன் பப்பெட்டாம் (Warren Buffett) , அவரு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். உலகத்திலேயே பெரிய பணக்காரராம். அவர் தாஜ்ல இன்னைக்குப் பேசறாராம். நல்லா இன்வெஸ்ட்மென்ட் செய்வது எப்படி என்ற தலைப்பில் பேசப் போறாராம். அதுக்கு இந்த சுப்பு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டு வந்து என்னையும் கூப்பிடறார்.”

லாவண்யா – “போயிட்டு தான் வாங்க. வீட்டில சும்மா தானே இருக்கீங்க. ”
ராம் – “இல்லை, நான் இன்னைக்கு பேங்க் போகணும் . கொஞ்சம் அங்கே வேலை இருக்கு .”
லாவண்யா – “பேங்கிலிருந்து ரிடையர் ஆகி மூணு வருஷம் ஆனாலும் உங்களுக்கு டெய்லி பேங்க் போகாம இருந்தா தூக்கம் வராது. என்னால பொய் ஒண்ணும் சொல்ல முடியாது. நீங்கள் ஆச்சு உங்க சுப்பு ஆச்சு .”
வாசலில் காலிங் பெல் சத்தம் . திறந்தால் –
“என்ன ராம் கிளம்பலாமா?” – சுப்பு
“ரெண்டே நிமிஷம்” – சிரிப்புடன் ராம்
லாவண்யா – “சுப்பு, நீங்க வரதுக்குத் தான் ராம் இத்தனை நேரம் காத்துக்கிட்டு இருந்தார் !!!"
பொய் சொல்ல வராது! ஆனால் போட்டுக் கொடுக்க வரும்!
“அப்பிடியா? “- சுப்பு
"ஹி ஹி. ஆமாம் ” – ராம்
ராம், சுப்பு இருவரும் தாஜ் ஹோட்டலிற்குக் கிளம்பினர்.
—-

“அப்பப்பா என்ன வெயில் ! என்ன வெயில் ! ”
“காபி கொண்டு வரேன் ! கொஞ்சம் ஏ சி கிட்ட உட்காருங்க. ஆமாம் , மீட்டிங் எப்படி இருந்துது.”
“பர்ஸ்ட் கிளாஸா இருந்துது.”
“மொதல்ல போகப் பிடிக்கலைன்னு சொன்னிங்க. இப்போ சூப்பர்ன்னு சொல்லறீங்க”
“நானும் ஏதோ புதுப் பணக்காரன் பேசறான்னு பிடிக்காமதான் போனேன். ஆனா அந்த வாரன் பப்பெட் எவ்வளவு சிம்பிள் ஆக இருக்கார் தெரியுமா. வயசு எண்பத்தி நாலு ஆனாலும் ஆளு என்னமா கணீர் கணீர்னு பேசறார். ஷேர் மார்கெட்டில் எப்படி இன்வெஸ்ட் பண்ணுவது என்ற தலைப்பில அவ்வளவு அழகாகப் பேசினார். “
“இப்படித்தான் அஞ்சு வருஷம் முன்னாடி உங்க மாமா பையன் வெங்கட் சொல்றான்னு ஷேர்ல ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு நயா பைசா கூட திரும்பி வரலையே. நல்ல வேளை நம்ம பசங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு அபார்ட்மெண்ட் வாங்கினோமோ பொழைச்சோம்!“
"ஆமாம் . அதனால தான் நான் இப்படி இந்த சுப்பு கிட்ட மறைஞ்சிக்கப் பார்த்தேன் . நீ தான் என்னை காலேல எட்டப்பன் மாதிரிக் காட்டிக் குடுத்தே . சரி அதை விடு . வெங்கட் சொன்ன ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் பேரு – டே டிரேடிங் . அது கிட்டத்தட்ட ரேஸ் குதிரை மேலே பணம் கட்டற மாதிரி தான்.”
“ஓஹோ”
இன்னைக்கு இவர் பேசின டாபிக் – “வால்யு இன்வெஸ்டிங்”
“ புதுசா இருக்கே . அப்பிடின்னா என்ன ?”
“நாம தக்காளி கிலோ ரெண்டு ரூபாய்க்கு விக்கும் போது ஒரு நாலு கிலோஎக்ஸ்ட்ரா வாங்கறோம் இல்லையா . அதே மாதிரி , ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணறப்போ கூட, விலை கம்மியாக இருக்கும் போது தான் வாங்கணும்.”
“ரெண்டு ருபாய் கிலோ தக்காளி வந்தா , பத்து கிலோ வாங்குவேன் . எங்க அம்மாவுக்கும் ரெண்டு எக்ஸ்ட்ரா கிலோ வாங்குவேன் “
அது மட்டுமில்லாமல் ஒரு கம்பெனி ஷேர் நாம் வாங்கினால் , நம்ம உண்மையாலுமே அந்த கம்பெனி ஓனர் மாதிரி ஆயிடறோம் ”
“இந்த மாதிரிக் கேள்விப் பட்டதே இல்லையே.”

“ஆமாம் , ஒரு கம்பெனி ஷேர்ல ஒரு பெர்சென்ட் வாங்கினா நாம ஒன் பெர்சென்ட் ஓனர் ஆயிடறோம். அதனால தான் ஒரு கம்பெனி ஷேர் வாங்கும் பொழுது , வீடு , அபார்ட்மெண்ட் , நகை எல்லாம் வாங்கற மாதிரி தீர விசாரிச்சிட்டுத் தான் வாங்கணும் .”
“ஓஹோ . அப்போ ஒரு கம்பெனி ஷேர் வாங்கறோம் என்றால் , அதைப் பத்தி நிறையப் படிக்கணும் போல இருக்கே .கம்பெனி எந்த பிசினஸ்ல இருக்கு, எப்படி லாபம் சம்பாதிக்கிறதுன்னு அதைப் பத்தித் தெரிஞ்சால் தானே ஓனர் ஆக முடியும் .நமக்கோ பிசினஸ் பத்தி ஒண்ணும் தெரியாதே”
“சரியான கேள்வி கேட்டாய். நான் பாங்க்லே லோன் ஆபீசராக இருக்கும் பொழுது லோன் சாங்ஷன் செய்யும் முன்னாடி அந்த கம்பெனியோட முழுக் கணக்கையும் பார்த்துட்டுத் தான் அப்ரூவ் பண்ணுவேன்.”
“ ஆனாலும், நீங்க இருந்ததோ விவசாய லோன் துறைல. உங்களுக்கு TCS, Reliance பத்தி என்ன தெரியும் ?”
இதுக்குத் தான் இன்னைக்கு வாரன் ஒரு பஞ்ச் லைன் அடிச்சார் – ‘work within your circle of competence.’ அதாவது உங்களுக்கு எந்தத் துறையைப் பத்தி நல்லா தெரியுமோ, அதுல மட்டும் தான் இன்வெஸ்ட் பண்ண வேண்டும்ன்னு.
“ஆஹா !! நம்ம முதல் பையனுக்கு வீடு வாங்கும் பொழுது கூட நாம எவ்வளவு ஏமாந்து போனோம். இப்போ தான் அந்த ரியல் எஸ்டேட் பத்தியே கொஞ்சம் புரிஞ்சிருக்கு. ஆனால் உங்களுக்குத் தெரிஞ்சதோ விவசாயத் துறை தான். ”
“இந்தியாவில நிறைய விவசாயக் கம்பெனிகள் இருக்கு. அதே மாதிரி பேங்க் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும்.”
“அது சரி !. பேங்க் பத்தி தான் உங்களுக்கு எல்லாமே தெரியுமே , அந்த வாட்ச்மேன் வீடு விலாசம் வரை !!!”
“ சரி சரி . இந்த ரெண்டு துறைல நிறைய நல்ல கம்பெனிக்கு நானே லோன் குடுத்திருக்கேன். இப்போ அந்த கம்பெனி எல்லாம் பெரிய பெரிய கம்பெனி ஆயிடுத்து.”
“நம்ம வெங்கட் வேற மாதிரி சொன்னானே . ஒரு லட்சம் போட்டால் ரெண்டு மாசத்தில ரெண்டு லக்ஷம் ஆயிடும்னு.”
“அது திவால் கம்பெனியில் போட்டாத்தான் அப்படி வரும்! இந்த வால்யு இன்வெஸ்டிங்ல எல்லாமே லாங் டெர்ம் தான் . நாம வீடு வாங்கினோமே , அந்த வீடு எந்த விலைக்கு போகும்னு தினமும் ரேட் பார்த்து விற்கிறோமா என்ன? இல்லையே . அதே மாதிரி, ஒரு கம்பெனில ஷேர் வாங்கும் பொழுது , ஒரு மூணு இல்லை அஞ்சு வருஷம் ஆனால் தான் அதோட மதிப்பு அதிகம் ஆகும்.”
“இந்த மாதிரி இன்வெஸ்ட் பண்ணுவது ரொம்ப நல்லா இருக்கே . நமக்குத் தெரிஞ்ச கம்பெனி , நல்ல கம்பெனியாகப் பார்த்து , ரெண்டு ரூபாய் கிலோ தக்காளி மாதிரி விலையில வாங்கினால் நல்ல இன்வெஸ்ட்மென்ட் தான்.”
“சுப்பு இன்னைக்குத் தான் இந்தக் கதையைச் சொன்னான் . அவன் ரெண்டு பொண்ணுக்கும் ஒரு பதினைஞ்சு வருஷம் முன்னாடி ஆளுக்கு ரெண்டு லக்ஷம் போட்டு ஒரு நல்ல கம்பெனில ஷேர் வாங்கினானாம் . இப்போ அதோட மதிப்பு ரெண்டு கோடிக்கு மேல . அதிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து தான் அவங்களுக்குக் கல்யாணமும் பண்ணினானாம்.”
“அப்படியா !!!”
“ஆனால் சுப்பு இன்னொன்னும் சொன்னான் . சரியாக ஒரு கம்பெனியைப் பத்தி தெரிஞ்சுக்காம இன்வெஸ்ட் பண்ணினால், பணம் விரயம் ஆகும் வாய்ப்பு நிறைய இருக்குன்னு”
“இதைப் பத்தி நிறைய கத்துக்க வேணும் போல இருக்கே .”
“கண்டிப்பா . . சுப்பு சொன்னான்
இன்னைக்கு வாரன் பப்பெட் பேச்சைக் கேட்டது ஒரு பிள்ளையார் சுழி மாதிரி தான் . வாரத்திற்கு ஒரு ரெண்டு மூணு மணி நேரம் வந்து வால்யு இன்வெஸ்டிங் பத்திச் சொல்லித் தரேன்னு சொல்லிருக்கான்.”
“ஆமாம் . நீங்க ரொம்ப வருஷம் முன்னாடி ஏதோ ஒரு விவசாயக் கம்பெனிக்கு லோன் குடுத்தீங்கன்னு சொன்னிங்களே.”
“ஆமாம். நாங்க லோன் குடுத்த கம்பெனி பெயர் – ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட். அப்போ அந்தக் கம்பனியோட முழு மதிப்பே இருபது கோடி ரூபாய் தான் . அதாவது இருபது கோடி 2001ல இருந்தால் அந்த முழுக் கம்பெனியை விலைக்கு வாங்கியிருக்கலாம்.”
இப்போ அதோட மதிப்பு என்ன ??
“பதினெட்டு ஆயிரம் கோடி.”
“நல்லது . சுப்பு கிட்டே நீங்க இன்னைக்கு மாட்டிக்கிட்டதே ஒரு லாங் டெர்ம் இன்வெஸ்டிங்னு சொல்லுங்க.”
“ஹா ஹா . ஆமாம்”
(தொடரும்)