வாசிப்பு எதுவரை ? (ஸ்ரீதர்)

image


கற்க கரையில, கற்பவர் நாள் சில என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்நாள்முழுவதும்
படித்தாலும் எல்லாவற்றையும் ஒருவரால் படிக்க முடியாது. படிப்பதற்கு
ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. வாழ்நாள்
முழுவதும் ஒருவர் கற்றுக் கொண்டே இருப்பது
அவசியம். வாசிப்பு அதற்குத் துணை புரிகிறது.  

வாசிப்பது ஒரு சுவையான அனுபவம். சிலருக்கு வாசிப்பே சுவாசிப்பாக
இருக்கும் . 

நமக்கு இறைவன் கண்களைக் கொடுத்திருப்பது பார்ப்பதற்கு மட்டுமல்ல.
படிப்பதற்கும் கூடத்தான். சிலருக்கு வாசிப்பு பள்ளி யோடு முடிந்து விடுகிறது.
சிலருக்கு கல்லூரிவரைதான்  வாசிப்பு. சிலருக்கு
வேலை கிடைக்கும் வரை வாசிப்பு இருக்கிறது. சில பெண்களுக்குக் கல்யாணம்வரை தான் வாசிக்க முடிகிறது. குடும்பம், குழந்தை, வாழ்விட சூழல் , சினிமா, டிவி தாக்கம்,
கிரிக்கெட் உள்ளிட்ட காரணங்களால் பலரது
வாசிப்புத்  திறன் பாதிக்கப்படுகிறது.

வாசிக்க சிலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் மனைவிக்கு இருக்காது. வார
இதழை வாங்கிக் கொண்டு போனால் ”ஏன் காசை
கரியாக்குகிறீங்க ?”என்று அன்பு
மனைவியின் அதட்டல் கேட்கும். புத்தகங்கள்  படித்துக்கொண்டிருந்தால்  ”வெட்டியாய்
ஏன் பொழுதைக்  கழிக்கிறீங்க” என்று கூறுவாள்.  சில குடும்பங்களில்  மனைவிகளுக்கு படிப்பதில்
ஆர்வம் இருந்தால் கணவனுடைய ரசனை வேறே எதிலாவது இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும்
வாசிக்கும் பழக்கம் இருப்பது  சில
குடும்பங்களில் பார்க்கலாம். அவர்கள் கொடுத்து வைத்த தம்பதிகள்.

வாசிக்கும் பழக்கம் சிலருக்கு இரத்தத்தோடு ஊறி விடுகிறது. யார்
தடுத்தாலும் பொருட்படுத்தாமல் அல்லது யாரும் சொல்லாமலே படிக்கிறார்கள். விமானத்தில்
போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று
வினவியபோது பத்துப்புத்தகங்கள் படிக்கவேண்டி இருந்தது என பதிலளித்தார் அறிஞர்
அண்ணா.

image

வாசிப்பில் ஒவ்வொருக்கு ஒரு விருப்பம் . சிலர் இலக்கியக் கதைகளை
விரும்பிப் படிப்பார்கள். சிலர் ஜனரஞ்சகக் கதைகளை விரும்பிப் படிப்பார்கள்.சிலர் பக்தி
இலக்கியம், ஆங்கில நாவல்கள் போன்றவற்றையும் விரும்பிப் படிப்பார்கள். ஒரு நாள் ஒரு
அறுபது வயது பெண் லெண்டிங் லைப்ரரியில் ஐந்து புத்தகங்கள் எடுப்பதைப் பார்த்து
வியந்தேன்.  இப்போதெல்லாம் புத்தகம் வாங்கித்தான்
படிக்க வேண்டும் என்பதில்லை. ஆன்லைனிலும் படிக்கலாம்.

ஓரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது  படிக்க வேண்டும் என்ற
உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.   நாம்
படிக்கும் புத்தகஙகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொண்டால் எவ்வளவு புத்தகங்கள்
படித்திருக்கிறோம் என்ற கணக்கு இருக்கும். நல்ல கதையாக மனதிற்குப் பட்டால் நாட்குறிப்பில்
சிறுகுறிப்பு எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு ஜானகிராமனின் “ பாயசம்” என்ற சிறுகதை.

வாசிப்பு எதுவரை என்று கேட்டால் நிறைய பேர்கள் சொல்லும் பதில் ”முடிந்தவரை
வாசிப்பு “. நண்பர் ஒருவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை. கையை
நீட்டுவது அல்லது கையில் புத்தகத்தைப் பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் அவருக்குப்
படிப்பதில் அதிக ஆர்வம். அவர் மனைவி அவருக்காக  தினமும் வாசிக்கிறாள். வாசிப்பை விரும்புகிறவர்கள்
முடியாதபோதும் வாசிக்க முயற்சி செய்வார்கள்.

.தான் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்
கொண்டே இருந்தாராம் பகத்சிங். 

 எனவே வாசிப்பு என்பது
சுவாசமிருக்கும்வரை என்பதைச்   சொல்லவும்  வேண்டுமா ?

புது வருடம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்! இப்போதே தீர்மானம் எடுப்போம்! 

 இன்றிலிருந்து தினம் ஒரு புத்தகம் படிப்போம்! 

அது பேப்பர் புத்தகமாக இருந்தாலும் சரி மின்-புத்தகங்களாக இருந்தாலும் சரி!