
“ஷாலு உன்னுடைய தீர்மானத்தில் மாற்றமில்லையா? ”
என் கணவன் என் தோழன் “ சீரியலில் சூர்யா, சந்தியா கிட்டே கெஞ்சுவது போல் கேட்டுக் கொண்டிருந்தேன் .
"குருஜினிக்கு ஆயிரம் சிஷ்ய கேடிகள் சாரி கோடிகள் இருக்கும் போது சிங்கப்பூர் போக உன்னை ஏன் தேர்ந்தெடுக்கணும்? ”
இந்தக் கேள்வியை நான் ஆக்டிவ் வாய்ஸில பாசிவ்
வாய்ஸில மற்றும் பல
வாய்ஸில கேட்டும் ஷாலுவிடமிருந்து சிறு புன்னகைக் கீற்றைத் தவிர எந்த மறுமொழியும் வரவில்லை. நான் நவராத்திரி சிவாஜி மாதிரி நவ ரசத்தையும் பிழிஞ்சது தான் மிச்சம்.
திடீரென்று ஞாபகம் வந்தது. இதுக்கு சரியான ஆள் ஷிவானி தான். அவள் அடம் பிடிச்சா யாரும் அவ கிட்டே குறுக்கப் பேச முடியாது. அவளிடம் நன்றாகப் புரியும்படி பத்து நிமிஷம் சொல்லி அவளை ஷாலுவிடம் அனுப்பி வைத்தேன். ‘அப்பா சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதே !’ என்று நன்றாக எச்சரித்து அனுப்பினேன்.
“கவலைப் படாதே அப்பா ! அம்மா நம்மளை அம்போன்னு விட்டுட்டு சிங்கப்பூர் போக மாட்டா’ என்று துர்கா படத்தில் பேபி ஷாலினி ( அவங்களே தான் ! நாளைய டாப் டக்கர் ஹீரோயின் ! அஜீத் மச்சினி – குமுதம் அட்டைப் படம் பாக்கலையா? ) சட்டை போட்ட குரங்குகிட்டே பேசுவது போல் அபயக் குரல் கொடுத்தாள். அதுக்கு மேல ‘ஷிவானி இருக்க பயமேன்’ என்ற டான்ஸ் போஸ் வேற !
எனக்கு வேணும் என்று நொந்துகொண்டு அவளை பேசச்சொன்னேன் ! அடுத்த அறையில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் இருவரும் பேசுவதை ஒட்டுக் கேட்டேன் ! அவர்கள் நிறைய டெசிபலில் பேசியதால் ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் அதுவாகவே என் செவிப்பறையைத் தாக்கியது!

அம்மா ! நான் உன்கூடக் கொஞ்சம் பேசணும் !
பேசிக்கிட்டுத் தானம்மா இருக்கே !
அதில்லே! நான் கொஞ்சம் சீரியஸா பேசணும் !
உங்க அப்பா உன்கிட்டே இதைச் சொல்லச் சொன்னாரா ?
ஏன் அப்பா சொல்லித் தான் நான் பேசுவேன்னு நீ நினைக்கிறே ?
நீ கேட்க வந்த தோரணையே உன்னைக் காட்டிக் கொடுத்திடுச்சு !
என்னன்னு ?
நீ அப்பாவுக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன்னு புரியுது !
நான் உனக்கு சப்போர்ட்டா பேச வந்திருக்கேன் !
புரியலையே !
உனக்குப் புரியாதுன்னு தான் நான் விளக்கமா சொல்ல வந்திருக்கேன் !
எதைப் பத்தி ?
எதைப் பத்தி நான் பேசப் போகிறேன்னு தெரியாம நீ ஏன் அப்பாவை நம்ம பேச்சில இழுக்கிறே ?
நிச்சயமா இந்த மாதிரி எல்லாம் பேச உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும் !
நான் என்ன பேச வந்திருக்கேன்னு தெரியாம நீ ஏன் விஷயத்தை விட்டு வெளியே போற ?
ஏன்னா நீ விஷயத்தைச் சொல்லாமல் மென்னு முழுங்குரே !
நீ தான் விஷயத்தைச் சொல்ல விடாமல் என்னைத் தடுக்கப் பாக்கிறே !
நீ சொல்ல வேண்டியதை நேரா சொல்ல வேண்டியது தானே ?
நீ சொல்ல விட்டால் தானே ?
நீ இப்பிடித் தப்பா சொல்வேன்னு எனக்குத் தெரியும் !
நீ இப்பிடித் தான் சொல்வேன்கிறது எனக்கும் புரியும்.
அட! அட! ராம் ஜேத்மலானியும் பராசரன் அவர்களும் பேசுவது போல் இருந்தது ! ஒட்டுக் கேட்ட என் காது ஓட்டை ஆயிடும் போல இருந்தது. அம்மாவுக்கு ஏத்த பொண்ணு என்று அவளை மனசில் பாராட்டினேன்.
அம்மா ! நீ குறுக்க குறுக்கப் பேசாதே ! நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வர்றேன் !
அது தான் ..
உஸ்ஸ். நான் சொல்றதைக் கேளு ! நீ சிங்கப்பூர் போறது நம்ம வீட்டில ஒருத்தருக்குப் பிடிக்கலை !
இது தான் ஊர் அறிஞ்ச விஷயம் ஆச்சே! உங்க அப்பா மட்டும் தான் ஆரம்பத்திலேர்ந்து இதுக்கு முட்டுக் கட்டை போடறார்.
அம்மா ! மறுபடியும் நீ தப்பா பேசறே !
முதல்லே நான் என்ன தப்பா சொன்னேன் ?
நான் தப்பா சொல்வேன்னு நீ சொன்னியே அது தான் உன் முதல் தப்பு !
ரெண்டாவது தப்பு ?
அப்பா மட்டும் தான் இதை எதிர்க்கிறார்னு நீ சொன்னது !
வேற யாருக்குப் பிடிக்கலை? உனக்கா?
இல்லை ! நான் உன் கட்சி !
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது ! பப்ளிக் பிராசிக்யூட்டர் சேம் சைட் கோல் போடற மாதிரி இல்ல இருக்கு !
ஷாலுவும் கொஞ்சம் ஆடிப் போய்விட்டாள் என்று தான் தோன்றியது !
வேற யாருடி இதை வேண்டாங்கிறது ?
ஷ்யாம் அண்ணா !
‘இதென்ன புது குண்டா இருக்கு’ என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
சும்மா உளறாதேடி!அவன் அன்னிக்கே ஒத்துக்கிட்டான்.
அது அன்னிக்கு!
இன்னிக்கு மாறிடுச்சா?
ஆமாம்!
எப்படி?
அன்னிக்கு அவன் கிட்டே ஐ பேட் வாங்கித் தர்ரேன்னு சொன்னே ! அதனால ஒத்துக்கிட்டான்.
ஆமாம். அதுக்கென்ன?
இன்னிக்கு அவன் மைண்ட் மாறிடுச்சு ! கிரிக்கெட் பேட் தான் வேணுமாம் !
அதனால என்ன ! கிரிக்கெட் பேட் வாங்கித் தர்றேன் !
சாரி ஷாலும்மா ! நீ லேட்! அப்பா அவனுக்கு நேத்திக்கே பேட் வாங்கிக் கொடுத்திட்டார் !
அதனால கட்சி மாறிட்டானா?
அதுமட்டுமல்ல.
வேற என்னவாம்?
நீ சிங்கப்பூரில் இருக்கப்போற பத்து நாளைக்கு அப்பா தான் சமைக்கப் போறேன்னு வேற சொல்லி அவனைப் பயமுறுத்தியிருக்கிறார் !
அதுமட்டுமல்ல !
எல்லாத்தையும் சேத்துச் சொல்லுடி!
அப்பா அவனுக்கு டெய்லி ஹிந்தி சொல்லித் தரப் போறாராம். கிரிக்கெட் கோச்சிங் வேற கட்டாம். இன்னும் ஒண்ணும் சொன்னாரே!
யார் ?
அதைச் சொல்ல மாட்டேன் ! ம். ஞாபகம் வந்திடிச்சு! “ All is fair in love and war” லவ்வுன்னா என்னாம்மா?
செவுள்ளே அறைஞ்சா காது ஜிவ்வுன்னு கேக்கும்! லவ்வாம் லவ்வு. எங்கேடி உங்க அப்பா ?
ஐயோ ! அம்மா அப்பாவை அறையப் போரான்னு கத்திக் கொண்டே ஓடிப் போய் விட்டாள் ஷிவானி.
ஷாலு நேரா நான் இருக்கிற ரூமுக்கு வந்தாள்.
” என்ன இது! குழந்தையை இப்படிப் பேசப் பழக்கியிருக்கேள்? “
வேணுமுன்னா பாரேன் ! ஷிவானியை வக்கீலுக்குத் தான் படிக்க வைக்கப் போகிறேன் ! என்னமா ஆர்கியு பண்றா?
எனக்கும் ஷிவானிக்கும் நடந்தது ஆர்கியுமெண்ட் இல்லே ! சும்மா டிஸ்கஷன் தான் !
ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
யார் கரெக்ட்டுன்னு பாக்கிறது
ஆர்கியுமெண்ட், எது
கரெக்ட்டுன்னு பாக்கிறது டிஸ்கஷன் !
எங்கே
கரெக்ட்டுன்னு பார்க்கிறது தான் அறிவு !
விளையாடாதீங்க ! உண்மையா சொல்லுங்க ! நான் சிங்கப்பூர் போறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் குருஜினி கிட்டே சொல்லி கேன்சல் பண்ணிடறேன் !
ஷாலு ! இந்தா ! உனக்கும் உங்க குருஜினிக்கும் சிங்கப்பூர் விசா ! எங்க சிங்கப்பூர் ஆபிசில சொல்லி உடனே வாங்கிட்டு வந்தேன் !
ஷாலுவுக்குக் குஷி தாங்கல ! அப்படியே என்னைக் கட்டிப் பிடிச்சிட்டு ஒரு கிஸ் கொடுத்தாள்.
பின்னே ஏன்
ஆர்கியுமெண்ட், டிஸ்கஷன் எல்லாம் !
இதுக்குத் தான்!

அம்மா ! அப்பா ! ஷ்யாம் அண்ணாவைக் கன்வின்ஸ் பண்ணிட்டேன் ! அவனுக்கு இப்போ ஓகேயாம். ஷிவானி வர இருவரும் பிரிந்தோம் !
இது நீ பண்ணின மூணாவது தப்பு ! – ஷாலினி குரலில் சொன்னேன்!