சித்தர்- சிவவாக்கியர்

image

இந்த மாத சித்தர் சிவவாக்கியர்!

இவர் ஒரு புரட்சி சித்தர்!

இவருக்குப் பிடிக்காதது! – உருவ வழிபாடு, தல  யாத்திரை, மத வாதம், சாதிகள், வேதம் ஓதல் 

இவரது கோட்பாடு –

ஒன்றே குலம் – ஒருவனே தேவன் – உள்ளமே கோவில் 

ஐநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்! 


அவரது சில பாடல்கள்


என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே 

 என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து  கொண்டபின் 

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ 

என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே !


அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் 

சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் 

சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 

எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே!


சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே

 வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?

மாத்திரைப்போ  தும்முளே மறிந்து தொக்க வல்லலிரேல்

சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா 

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 

கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே  

ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே! 


நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா!

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?  

image

ஆத்திச்சூடி

த..தா..தி ..


55. தக்கோன் எனத் திரி /  Be trustworthy.
56. தானமது விரும்பு /  Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /  Serve the protector.
58. தீவினை அகற்று /  Don’t sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /  Don’t attract suffering.
60. தூக்கி வினை செய் /  Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /  Don’t defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /  Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /  Don’t listen to the designing.
64. தொன்மை மறவேல் /  Don’t forget your past glory.
65. தோற்பன தொடரேல் /  Don’t compete if sure of defeat.

கவிஞர்  வாலி!

imageவாலி அவர்களின் நயமான பாடல் வரிகள் இவை. 


இந்தப் பாடல்களின் முதல் வரியையும் இடம்பெற்ற திரைப் படத்தையும் கண்டுபிடியுங்கள்!!
1) இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார் 

மடி நிறையப்  பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும் 

எதுவந்த போதும் பொதுவென்று
வைத்து 

வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் 


2 ) எந்த நாடு என்ற கேள்வியில்லை 

எந்த ஜாதிஎன்ற பேதமில்லை 

மனிதர்கள் அன்பின் வழிதேடி
-இங்கு 

இயற்கையை வணங்குகிறார்
– மலை 

 உயர்ந்தது போல் 

மனம் உயர்ந்ததென்று -இவர்

வாழ்வில் விளங்குகிறார் 


3 ) நாதத்தோடு கீதம் உண்டாக 

தாளத்தோடு பாதம் தள்ளாட 

வந்தால் பாடும் என் தமிழுக்குப்
பெருமை 

வாராதிருந்தாலோ தனிமை 

நிழல் போலும் குழலாட 

தளிர்மேனி எழுந்தாட 

அழகே உன் பின்னால்  அன்னம் வரும் 


4 ) செம்மாங்கனி -புன்னகை நல்லோவியம் 

செவ்விதழ் – தேன்மாதுளை 

பொன்மொழி – சொல்லோவியம் 

சிந்துநடை போடும் பாற்குடம்

சின்னவிழிப் பார்வை பூச்சரம் 

என்ன மேனியோ இன்னும் பாடவோ 


5) பதவி வரும்போது பணிவு வரவேண்டும் 

துணிவும் வரவேண்டும் தோழா

பாதை தவறாமல் பண்பு குறையாமல் 

பழகி வரவேண்டும் தோழா விடை:

1) கொடுத்ததெல்லாம்  கொடுத்தான் ………………. படகோட்டி

2) புதிய வானம் புதிய பூமி ………………………………… அன்பே வா 

3) நான் பாடும் பாடல்  ………………………….கண்ணன் என் காதலன் 

4) மெல்லப்போ மெல்லப்போ ………………………….. காவல்காரன் 

5) மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் …………….. தெய்வத்தாய் 

டப்ஸ்மாஷ்  செய்யுங்கள்!(முக நூலில் சுட்டது)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


image

“ உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? ”

“ கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!

” வெள்ளைக்கு..!“

” புல்லு..“

” அப்ப கருப்புக்கு..?“

"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..”!

“ இதை எங்க கட்டி போடறீங்க..”

“ எதை கருப்பையா.? வெள்ளையையா..?!!”

“ வெள்ளையை..”

“ வெளிய இருக்குற ரூம்ல..”

“ அப்ப கருப்பு ஆட்டை..?”

“ அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..”

“ எப்படி குளிப்பாட்டுவீங்க..?”

“ எதை கருப்பையா..? வெள்ளையையா..?”

“ கருப்பு ஆட்டை..?”

“ தண்ணில தான்”

“ அப்ப வெள்ளையை..?”

“ அதுவும் தண்ணில தான்”

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிறார். 

“ லூசாய்யா நீ,? ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற ! அப்பறம் எதுக்கு திரும்பத் திரும்ப கருப்பா வெள்ளயான்னு கேட்டுட்டே இருக்க ”

“ ஏன்னா வெள்ளை ஆடு என்னுது”

“ அப்ப கருப்பு ஆடு..?”

“அதுவும் என்னுதுதான்”

“ டேய்ய்ய்ய்………!!!!”

இந்த காமெடி டயலாக் யாருக்குப் பொருத்தமாயிருக்கும்?

வடிவேலு ?

விவேக் ?

கவுண்டமணி ?

சூரி?

வாசிப்பு எதுவரை ? (ஸ்ரீதர்)

image


கற்க கரையில, கற்பவர் நாள் சில என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்நாள்முழுவதும்
படித்தாலும் எல்லாவற்றையும் ஒருவரால் படிக்க முடியாது. படிப்பதற்கு
ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. வாழ்நாள்
முழுவதும் ஒருவர் கற்றுக் கொண்டே இருப்பது
அவசியம். வாசிப்பு அதற்குத் துணை புரிகிறது.  

வாசிப்பது ஒரு சுவையான அனுபவம். சிலருக்கு வாசிப்பே சுவாசிப்பாக
இருக்கும் . 

நமக்கு இறைவன் கண்களைக் கொடுத்திருப்பது பார்ப்பதற்கு மட்டுமல்ல.
படிப்பதற்கும் கூடத்தான். சிலருக்கு வாசிப்பு பள்ளி யோடு முடிந்து விடுகிறது.
சிலருக்கு கல்லூரிவரைதான்  வாசிப்பு. சிலருக்கு
வேலை கிடைக்கும் வரை வாசிப்பு இருக்கிறது. சில பெண்களுக்குக் கல்யாணம்வரை தான் வாசிக்க முடிகிறது. குடும்பம், குழந்தை, வாழ்விட சூழல் , சினிமா, டிவி தாக்கம்,
கிரிக்கெட் உள்ளிட்ட காரணங்களால் பலரது
வாசிப்புத்  திறன் பாதிக்கப்படுகிறது.

வாசிக்க சிலருக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் மனைவிக்கு இருக்காது. வார
இதழை வாங்கிக் கொண்டு போனால் ”ஏன் காசை
கரியாக்குகிறீங்க ?”என்று அன்பு
மனைவியின் அதட்டல் கேட்கும். புத்தகங்கள்  படித்துக்கொண்டிருந்தால்  ”வெட்டியாய்
ஏன் பொழுதைக்  கழிக்கிறீங்க” என்று கூறுவாள்.  சில குடும்பங்களில்  மனைவிகளுக்கு படிப்பதில்
ஆர்வம் இருந்தால் கணவனுடைய ரசனை வேறே எதிலாவது இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும்
வாசிக்கும் பழக்கம் இருப்பது  சில
குடும்பங்களில் பார்க்கலாம். அவர்கள் கொடுத்து வைத்த தம்பதிகள்.

வாசிக்கும் பழக்கம் சிலருக்கு இரத்தத்தோடு ஊறி விடுகிறது. யார்
தடுத்தாலும் பொருட்படுத்தாமல் அல்லது யாரும் சொல்லாமலே படிக்கிறார்கள். விமானத்தில்
போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று
வினவியபோது பத்துப்புத்தகங்கள் படிக்கவேண்டி இருந்தது என பதிலளித்தார் அறிஞர்
அண்ணா.

image

வாசிப்பில் ஒவ்வொருக்கு ஒரு விருப்பம் . சிலர் இலக்கியக் கதைகளை
விரும்பிப் படிப்பார்கள். சிலர் ஜனரஞ்சகக் கதைகளை விரும்பிப் படிப்பார்கள்.சிலர் பக்தி
இலக்கியம், ஆங்கில நாவல்கள் போன்றவற்றையும் விரும்பிப் படிப்பார்கள். ஒரு நாள் ஒரு
அறுபது வயது பெண் லெண்டிங் லைப்ரரியில் ஐந்து புத்தகங்கள் எடுப்பதைப் பார்த்து
வியந்தேன்.  இப்போதெல்லாம் புத்தகம் வாங்கித்தான்
படிக்க வேண்டும் என்பதில்லை. ஆன்லைனிலும் படிக்கலாம்.

ஓரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது  படிக்க வேண்டும் என்ற
உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.   நாம்
படிக்கும் புத்தகஙகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொண்டால் எவ்வளவு புத்தகங்கள்
படித்திருக்கிறோம் என்ற கணக்கு இருக்கும். நல்ல கதையாக மனதிற்குப் பட்டால் நாட்குறிப்பில்
சிறுகுறிப்பு எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு ஜானகிராமனின் “ பாயசம்” என்ற சிறுகதை.

வாசிப்பு எதுவரை என்று கேட்டால் நிறைய பேர்கள் சொல்லும் பதில் ”முடிந்தவரை
வாசிப்பு “. நண்பர் ஒருவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை. கையை
நீட்டுவது அல்லது கையில் புத்தகத்தைப் பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் அவருக்குப்
படிப்பதில் அதிக ஆர்வம். அவர் மனைவி அவருக்காக  தினமும் வாசிக்கிறாள். வாசிப்பை விரும்புகிறவர்கள்
முடியாதபோதும் வாசிக்க முயற்சி செய்வார்கள்.

.தான் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்
கொண்டே இருந்தாராம் பகத்சிங். 

 எனவே வாசிப்பு என்பது
சுவாசமிருக்கும்வரை என்பதைச்   சொல்லவும்  வேண்டுமா ?

புது வருடம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்! இப்போதே தீர்மானம் எடுப்போம்! 

 இன்றிலிருந்து தினம் ஒரு புத்தகம் படிப்போம்! 

அது பேப்பர் புத்தகமாக இருந்தாலும் சரி மின்-புத்தகங்களாக இருந்தாலும் சரி! 

சூரிய ஒளியில் மின்சாரம்

image

சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றிச் சில குறிப்புகள்:

சூரிய ஒளியில் குளிக்க வெந்நீர் தயாரிக்கலாம் என்பது நிறைய பேருக்குத் தெரிந்தது. மொட்டை மாடியில் தகடுகளைப் பொருத்தி அதிலிருந்து  மின்சாரம் தயாரித்து வீட்டின் தேவைக்கு உபயோகப் படுத்தலாம் என்பதும் அனைவரும் அறிந்ததே. 

ஆனால் அதற்கான செலவு அதிகம்,  மற்றும் அரசாங்கம்  தரும்  உதவித் தொகையைப் பெறுவது மிகக் கடினம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். 

மின்வெட்டு தீவிரமாக இருந்த காலத்தில் இதைப் பற்றி அதிகம் பேசினோம். தற்போது நிலைமை சற்று முன்னேறியவுடன் அதை மறந்துவிட்டோம். 

 அந்தந்த வீடுகளில் கிடைக்கும் DC சூரிய ஒளி மின்சக்தியை அங்கேயே பயன்படுத்துவதால் ஆற்றல் இழப்பு மிக மிகக் குறைவே.  ஆகவே சூரிய ஒளி மின் அமைப்புகளில் DC மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் (LED Bulbs) . மின் விசிறிகள் (DC FAN) மற்றும DC  ஏர் கூலர்கள் (AIR COOLER WITH DC MOTOR) முதலியவறறைப் பயன்படுத்தலாம். 

 வணிக ரீதியாக DC யில் இயங்கும் மின் விசிறிகள்  LED விளக்குகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன, 

இவற்றைத்  தவிர வீடுகளில் கிடைக்கும் அதிகப் படியான சூரிய மின்சாரத்தை அரசாங்கத்துக்கு அளித்து நிகர மின் செலவைக் குறைக்க முடியும் என்பது இதன் மிகப் பெரிய விஷயம்.

 

சூரிய ஒளியைக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும்  சிறு மின்னகம் அமைக்க முடியும் என்பது சமீபத்தில் செயலாற்றப்படும் முயற்சி. அந்தக் கிராமங்களில் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து  மின்னகத்தின் அளவை நிர்மாணிக்க வேண்டும்.

image


சாதாரணமாக ஒரு கிராம வீட்டுக்கு  2 யூனிட் மின்சாரம் தேவைப்படும். 100 வீடுகள் கொண்ட கிராமத்திற்கு 4 கிலோ வாட் சக்தி கொண்ட மின்னகம் தேவைப்படும். இது ஆண்டுக்கு சுமார் 33000 ரூபாய் பெறுமான மின்சாரத்தைத் தயாரிக்க உதவும். 


இது எப்படி செயல் படுகிறது என்று பார்ப்போம். சூரிய ஒளி குறிப்பிட்ட தகடுகளில் பிரதிபலிக்கும் போது மின்சாரம் தயாராகிறது. அந்த மின்சாரத்தை  நமது இன்வர்டர்  போன்ற மின் சமன் அமைப்பில் ( Power Controlling Unit ) இணைத்து அதை பேட்டரிக்கும் டிஸ்ட்ரிப்யூஷன் பெட்டிக்கும் (DB ) அனுப்ப வேண்டும். அந்த மின் சமன் அமைப்பு நமது டிரான்ஸ்பார்மர் போல செயலாற்றி வீடுகளுக்கும், கடைகளுக்கும், தெரு விளக்குகளுக்கும் மின்சாரம் வழங்கும். 

தேவையை விட அதிக மின்சாரம் கிடைத்தால்  அதை பேட்டரிகளில் சேமித்து வைத்து இரவில் பயன் படுத்தலாம். 

மேலே உள்ள படம் இந்த அமைப்பை நன்றாக விளக்கும்! 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரும்மாண்ட அளவில் சூரிய ஒளி மின்னகங்களை அமைக்க அரசாங்கமும் டாடா, ரிலையன்ஸ் போன்ற பெரிய கம்பெனிகளும் முனைந்துள்ளன.  

கிராமம்  – அன்றும் இன்றும் (கோவை சங்கர்)

image

கிராமத்தான் யானையைப் பார்த்தாற்போலே 

  என்றெல்லாம் சொல்லிவந்த காலமே போச்சு

ஏருழவன் கைநாட்டு வைக்கின்ற காலம் போய் 

  ஏர் பிடிக்கும் பட்டதாரி கிராமத்தில் மலிஞ்சாச்சு 

‘யாரடா’ என்று சொல்ல பண்ணையில்லை யின்று 

  கூட்டவுப் பணைகள் பெருமளவில் வந்தாச்சு 

சீராகக் கல்விதனைக் கற்றுவரும் கிராமத்தார் 

  ஊரார்க்கு உபதேசம் சொல்லும் வகை வளர்ந்தாச்சு


image

காதிலே பூ வைத்த ஏமாந்த சோணகிரி 

  கேலிக்கு உள்ளான கிராமத்தான் இன்றில்லை 

எத்தொழிலும் யாம் செய்வோம் நாட்டுவளம் பெருகிடவே 

   முரசுகொட்டி நிற்கின்றார் மாண்பு மிகு கிராமத்தார் 

பத்தாண்டு முன்பிருந்த கிராமமில்லை யிப்போது 

  கைத்தொழிலும் முன்னேற வருவாயும் பெருக்கிடவே 

 காந்தி கண்ட சமுதாயம் இனிதாக வருகிறது 


image

நாட்டுவளம் பெருகிடவே கிராமமே ஆதாரம் 

  புத்தம் பிட்டு அரசுக்கு தெளிவாகப் புரிஞ்சச்சு 

திட்டங்கள் பலதீட்டி பழுதரவே செயலாக்கி 

  எண்ணை விளக்குதனை மின்விளக்கால் எழிலாக்கி 

பொட்டைவெளி நிலந்தன்னை பொன்விளையும் பூமியாக்கி 

  கிராமத்து நாகரீகம் நகரத்தை மிஞ்சிடவே

சிட்டாக கிராமங்கள் பீடுநடை போட்டிடவே  

  மட்டற்ற மகிழ்வோடு உறைகின்றார் கிராமத்தார். 

இந்த வார தமிழ் இணைய தளம்

image

சிறுகதைகள் என்ற இணைய தளம் 2011 முதல் செயல்பட்டுக் கொண்டு வருகிறது! 

இதில்,

சிறுகதைகள் படிக்க /படைக்க  ஒரு பகுதி !

290 எழுத்தாளர்கள் இதில் தங்கள் சிறுகதைகளைப் பதிவு செய்துள்ளனர். 

அனைவரும் அவற்றைப் படித்து மகிழலாம். 

கதை கேளுங்கள் என்ற பகுதி ! 

வாசகர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குப் பிடித்தமான சிறுகதை அல்லது தாங்களே இயற்றிய சிறுகதையை தங்கள் சொந்தக் குரலில் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. 

அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 

support@sirukathaigal.com .

குவிகம் வாசகர்கள் இந்தத் தளத்திலும் பங்கு பெறலாம்! 

image

இந்த மேமில் உள்ள வரிகளுக்கு கவித்துவமாக வாலி  அவர்கள் படகோட்டியில் எழுதிய ‘என்னை எடுத்து ’ என்ற பாடலைக் கேளுங்கள். காதலின் ஆழம் புரியும். 

தலையங்கம்

image

அம்மா மீண்டும் முதல்வராகி விட்டார் !

நான்கு ஆண்டு சிறை – 100 கோடி அபராதம் என்ற குன்ஹாவின்   தீர்ப்பை அப்படியே மாற்றி விட்டார் குமாரஸ்வாமி. எந்தக் குற்றமும் நடைபெறவில்லை. முழு விடுதலை அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும். 

எதிர்க்கட்சிகளுக்கு எட்டிக்காய்.

அம்மா தி மு கா வினருக்கு அல்வா மற்றும் அறுசுவை விருந்து !  

வட சென்னையில் மீண்டும் தேர்தல். அம்மா அவர்கள் போட்டியிடுகிறார் ! அவருடன் போட்டியிட எந்த ஆஸ்தான பாகவதரும்  வரவில்லை !

கொஞ்ச நாள் இப்படி அப்படி என்று பாவ்லா காட்டிக் கொண்டிருந்த கர்நாடக அரசு கடைசியில் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது ! 

இதன் தீர்ப்பு  எப்போது வரும்?  தெரியவில்லை !

image

ஆண்டு : 2                                                                   மாதம் : 6 

image

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா