எழுத்தாளர் பிரபஞ்சனுடன் நேர்காணல்

image

திரு பிரபஞ்சன் நேர்காணல் – ஒரு பதிவு 

குவிகம் இலக்கிய வாசலின் மூன்றாவது நிகழ்வாக கடந்த 20-06-2015 சனிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் நடைபெற்றது.

திரு சுந்தரராஜன் அவர்களின் வரவேற்புரைக்குப்பின்

திரு பிரபஞ்சன் அவர்கள்  உரையாற்றினார்

அதில் தெறித்த முத்துக்களில் மாதிரிக்கு இதோ: 

  • இலக்கியம் என்பது எழுத்தாளர் ஒருவரால் முழுக்க முழுக்க செய்யப்படுவது அல்ல. எழுத்தாளரும் வாசகர்களும்  சேர்ந்து உருவாக்குவது தான் இலக்கியம். 
  • தி ஜானகிராமன் தன் அப்பா காலத்துக் காவேரியைப் பற்றி எழுதினார். அவ்ர் காலக் காவேரி வறண்ட காவேரியாம். வறட்சி என்பது தண்ணீர் நீரோட்டத்தைப்  பொறுத்து இல்லை. வாழ்க்கை நீரோட்டத்தைப் பொறுத்தது.
  • மோகமுள்ளில் வரும் யமுனாவின் வீட்டைத் தான் தஞ்சாவூரில் கண்டுபிடித்ததாகக் கூறினார். அதாவது அந்த வீட்டைப் பார்த்த பிறகு தான்  ஜானகிராமன் எழுதியிருக்க முடியும். 
  • தன்னை மிகவும் கவந்த எழுத்தாளர்கள்  அண்டன் செக்காவ்., மாப்பாசான், ஓ.ஹென்றி. 
  • செக்காவின் “ The Death of a Government Clerk” ( அது ‘தும்மல்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது)  என்ற கதையை அழகாக விவரித்தார். 

ஒரு மிலிட்டரி கிளார்க் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை அறியாமல் தும்மல் வருகிறது. தும்முகிறான். தும்மும் போது தனது எச்சில் தவறி  யார் மீதாவது பட்டிருக்குமோ என்று பார்க்கிறான்.  அவ்னது பாஸ் – நாட்டின் மிக உயர்ந்த மிலிட்டரி அதிகாரி-  முன்னால்  உட்காந்து தன் தலையைத் தடவிக் கொள்வதைப் பார்க்கிறான்.  அவர் அவனது நேரடி பாஸ் இல்லை என்றாலும் தும்மியதற்காக அவரிடம் மன்னிப்பைக் கோருகிறான். அவர் ‘பரவாயில்லை’ என்றார்.  அவனுக்கு அவர் மன்னித்ததாகத் தெரியவில்லை.  மறுநாள் அவரிடம்  சென்று ‘தும்மல் என்பது இயற்கையாக வரும் விஷயம்’ அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்று  வேண்டினான். அவர் அவனை சட்டை செய்யவில்லை.  அதற்காக மிகவும் சோகப்படுவது போல முகத்தை வைத்துக் கொண்டு ஜாடையாலே அவனை வெளியே துரத்துகிறார். தான் அவரைக் கிண்டல் செய்வதாக எண்ணி விட்டார் என்று எண்ணி அதற்காகவும் அவரிடம்  மன்னிப்பைப் பெற வேண்டும் என்று எண்ணினான். அடுத்த நாள் அவனது மிலிட்டரி யூனிபாரம் போட்டுக் கொண்டு  அவரிடம் போய் நடந்த விஷயங்களைச் சொல்லி அவரிடம்  மன்னிப்பை  வேண்டினான். அதிகாரிக்கு முகம் சிவந்தது. கோபத்தில் உடல் ஆடியது. “வெளியே போ ” என்று கத்தினார்.  அவன் மிகவும் பயந்து போய் தன் வீட்டுக்குப் போய்  தன் யூனிபாரத்தைக்  கூடக் கழட்டாமல் அப்படியே சோபாவில் சாய்ந்து செத்துப் போனான். 

அடுத்து ரோமேய்ன் ரோலண்ட் என்ற பிரெஞ்ச் எழுத்தாளர் பற்றிக் குறிப்பிட்டார் . அவர் நோபல் பரிசு பெற்றவர். அவர் தான் 1924 இல் மகாத்மா காந்தியை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர். 

சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும் போது சொன்னார். ’ சிறுகதை என்பது  மாட்டை மூக்கணாம் கயிற்றைப்  பற்றி இழுப்பது போல. நீங்களாக எவ்வளவு முயற்சித்தாலும் மாடு நகராது.அதுக்கே நடக்க வேண்டும் என்று தோன்றினால் தான் அது உங்களுடன் வரும்" 

இன்னொரு

மகாபாரத கிளைக்கதை

சம்பவம் திரு பிரபஞ்சன் சொன்னது  :

உத்தரைக்குக்   கரிக்கட்டையாகக்  குழந்தை பிறக்கிறது.   அதற்கு  உயிர் இல்லை.  அஸ்வத்தாமனின் பிரும்மாஸ்திரத்தின் வேலை.

உயிர் வரவேண்டும்  என்றால்  நெஞ்சில்   காமம் இல்லாதவர் தொட்டு வருட வேண்டும்  என்று விதுரர் சொல்கிறார்

காமத்தை அடக்கிய ரிஷிகள் தொடுகிறார்கள்.  உயிர் வரவில்லை 

கிருஷ்ணர் நான் தொடவா என்று கேட்கிறார்
எல்லோரும் சிரிக்கின்றனர் எப்போதும் கோபிகளுடன் கூடி இருக்கும் கிருஷ்ணனா என்று தயங்குகிறார்கள். 

ஆனால் கிருஷ்ணர் தொடுகிறார்.  குழந்தை உயிர் பெற்று எழுகிறது. 
கோபிகைகள் மனதில் ஆசை காமம் எல்லாம் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணன் மனதில்  இருப்பது அன்பு மட்டும் தான். அதில் துளி அளவு கூட  காமம் இல்லை. 

நேர்காணலில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர்கள்:

அமைப்பின் சார்பிலும் கலந்துகொண்டோர் சார்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு பிரபஞ்சன் விரிவாக பதிலளித்தார்.

:-

Advertisements