உங்கள் வீடு பிள்ளையார் இணக்கமா? (Pillaiyaar Compliant)

image


நீங்கள் உங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு “இன்னும் சாப்பிடுங்கள் இன்னும் சாப்பிடுங்கள்” என்று உபசாரம் செய்வீர்களா?

விருந்தினர்களோ நண்பர்களோ ஒருமுறை  ‘போதும்’  என்று சொன்ன பிறகும் “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் போட்டுக்கொள்ளுங்கள் "என்று கேட்பீர்களா? 

"போதும் வயிறு நிறைந்துவிட்டது” என்று கெஞ்சும்  மனிதர்களிடம்  " எனக்காக ஒண்ணே ஒண்ணு பிளீஸ் “ என்று கேட்கும் வர்க்கமா நீங்கள்? 

"கூச்சப்படாமல் சாப்பிடுங்கள்” என்று சொல்லி அவர்கள் வயிறு முட்ட சாப்பிடச் சொல்லி வற்புறுத்தும்  இனமா நீங்கள்?

குஜராத்தில்  "ஆக்ரா" என்று ஒரு பழக்கம் உண்டு. அதில் விருந்தினர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்வார்களாம். நீங்கள் அந்த வகையா?

“இப்போது தான் வீட்டிலே காப்பி  சாப்பிட்டு விட்டு வந்தேன்” என்று சத்தியம் பண்ணினாலும் , “பரவாயில்லை இன்னும் கொஞ்சம் காபி குடிச்சா ஒண்ணும் பண்ணாது” என்று போட்டுக் கொடுப்பவரா நீங்கள்?

‘அரை டம்ளர் டீ போதும்’ என்று கெஞ்சும் விருந்தாளிகளுக்குச் சின்ன  டம்ளர் தான் என்று சொல்லி அரைச்  சொம்பு காபியை அள்ளிக் கொட்டும் பரோபகாரியா நீங்கள்?

“சுகர் இருக்கு வேண்டாமே  ஸ்வீட்”  என்று பரிதாபமாகக் கெஞ்சும் விருந்தினர்களுக்கு “ பரவாயில்லை மாத்திரை ஒண்ணு சேர்த்துப் போட்டுக்கலாம்”  என்று இலவச மருத்துவம் பார்த்து ஸ்வீட்டை அவர் வாயில் திணிக்கும் கொடுங்கோலரா நீங்கள்?

இந்தக் கேள்விக்கெல்லாம் ‘ஓகே’ ‘ஆமாம்’ ‘அதனாலென்ன தப்பு?“ "இது தான் உபசரிப்பு முறை” என்றெல்லாம் சொல்லும் மனிதர்களுக்கு இப்போது ஆப்பு வந்துவிட்டது. 

பிள்ளையார் உருவில். 

நீங்கள் அனைவரும் பிள்ளையாரின் கடுங்கோபத்துக்கு – ஏன் சாபத்துக்கு உள்ளாவீர்கள்!

வாதாபியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிள்ளையார் புராணத்தில் இதைப்பற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாம்.  ( வாதாபியிலிருந்து தான் பிள்ளையார் தமிழகத்துக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே)

அதன்படி “அதிதியோ பவ”  என்றால் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும். ஆனால் விருந்தினர்கள் வேண்டாம் அல்லது போதும் என்று சொன்ன பிறகும்  தருவது பிள்ளையாருக்குச் செய்யும் துரோகம். ( இதற்கு ஒரு உப  கதை உள்ளது : பிள்ளையார் பசி தாங்காமல் பார்வதியிடம் சாப்பாடு கேட்டபோது பார்வதி எவ்வளவு உணவு கொடுத்தும் அவர் பசி தீரவில்லையாம் . பரமசிவனிடம் பார்வதி கவலையுடன் கேட்ட போது , பூலோகத்தில் விருந்தினர்களுக்குக் கொடுத்தது போக பாக்கி இருக்கும் அனைத்து உணவும் பிள்ளையாருக்குப் போய்ச் சேரக் கடவது என்று அருளினாராம்).

இப்போது சொல்லுங்கள், வேண்டாதவருக்கு அள்ளி அள்ளிப் போடும் நீங்கள் பிள்ளையார் கோபத்துக்கு ஆளாவீர்களா இல்லையா?

தார்மீக முறைப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிச்சம் பிடிக்கும் உணவு ஒரு ஏழையின் பசியைத் தீர்க்கும் அல்லவா? உங்கள் விருந்தினரின் தொப்பையையும் குறைக்கும் அல்லவா? 

ஆகையால் விருந்தினர்களே நீங்கள் வேண்டாம் என்று சொன்ன பிறகும்  உணவை உங்கள் தட்டில் கொட்டும்  அரக்கர்களிடம் “ போதும் ! போடாதீர்கள்!!பிள்ளையார் கோபித்துக்கொள்வார் ” என்று சொல்லுங்கள். நீங்களும் டைஜீன் தேடவேண்டாம்! சோடா குடிக்க வேண்டாம். 

இதற்காகவே   இப்போது கோபப் பிள்ளையார் என்ற ஒரு ஸ்டிக்கர் வருகிறது. உங்கள் வீட்டின் டைனிங் டேபிள் , சென்டர் டேபிள் , சமையலறை ஆகிய இடங்களில் அந்த ஸ்டிக்கரை ஒட்டி எங்கள் வீடு பிள்ளையார் இணக்கம் ( pillaiyaar compliant) என்று விருந்தினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! 

ECO FRIENDLY என்பது போல உங்கள் இல்லத்தைப் பிள்ளையார் friendly ஆக மாற்றுங்கள்!!

image

நாட்டுக்கும் நல்லது!