ஒரு தவறு செய்தால் …

image

அமெரிக்க
சாலையில் அவன் கார் தவழ்ந்து கொண்டிருந்தது. “ குறை ஒன்றும் இல்லை’ பாடல் எம் எஸ்ஸின் குரலில்
இழைந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலின் கருத்து
அவனுக்கு என்றைக்கும் தாரக மந்திரம்.
அந்த உறுதி தான் அவனை இன்று மேகத்தில் பறக்க வைத்திருக்கிறது.  அவனது பதினைந்து வருட கனவு இன்று நனவாகிறது. எந்த
கூகிள் அலுவலகத்தில் ஒரு மென்பொருள் பணியில் அமர்ந்தானோ அந்த நிறுவனம்  இன்று அவனை
முதன்மை அதிகாரியாக  நியமித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல
அவன் மனைவியும் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டே டாக்டரேட்டுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
இன்னும் ஒரு வருடத்தில் அதை முடித்து விடுவாள்..  

பெரியவள்
பள்ளி இறுதி நிலையில். படிப்பில் சுமாராக இருந்தாலும் ‘ஸ்பெல் பி’  தேர்வில் மாகாணத்தில் மூன்றாவதாக
வந்தாள். அடுத்த மாதம் அவள் அதில் முதல் நிலைக்கு வரக் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறாள்.

சின்னவள்
கடைக்குட்டி. ஐந்து வயது தான். அதற்குள் அவளது பேச்சும் துறுதுறுப்பும் அனைவரையும்
வசீகரிக்கும். நண்பர்கள் வட்டாரத்தில் அவளுக்குப் பெயர் ‘டார்லிங்!’ போன வருடம் ஊருக்குப் போன போது அவள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கேட்டாள்
“பாட்டி! உன்கிட்டே ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா?.

‘சொல்லுடி
கண்ணு’

‘ஐ
லவ் யு ஸோ மச்!’ என்று சொல்லி மடியில் தொப்பென்று விழுந்தாள்.
அதே டெக்னிக்கை அவள் மற்றவரிடமும் செய்வாள். சொல்வது மட்டுமல்ல அவள் உண்மையிலேயே அப்படி
நினைக்கிறாள் என்பதை அவளது கண்களும் முகமும் அழகாகச் சொல்லும்.  

அடுத்த பாட்டு
. ‘தந்தை தாய்
இருந்தால்’ பாடல் வசந்தகோகிலத்தின் குரலில் உருக்கமாக இழைந்து
கொண்டிருந்தது. அவனுக்கு அவனுடைய தந்தை தாயின் நினைவு வந்தது. எத்தனை முறை கூப்பிட்டாலும்
‘எனக்கும் உங்க அம்மாவுக்கும் அந்த ஊர் சரிப்படாது!  நீ அடிக்கடி வந்து பாத்துட்டுப் போ! அது போதும்’ என்று சொல்லி அவனை மேலே பேச விடாமல் செய்து விடுவார் அந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர். 

ஆனால் இந்தமுறை
டார்லிங் குட்டி என்ன சொக்குப் பொடி போட்டதோ தெரியவில்லை. இருவரும் ஆறு மாதம் வந்து
இருக்க சம்மதித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்த நேரத்தில் தான் கூகிள்  பணி வந்திருக்கிறது. அவர்களுக்குத் தான் எத்தனை சந்தோஷம்!.

அப்போது
தான் அவனுடைய கைபேசி ஒலித்தது. கூகிள் அலுவலகத்திலிருந்து அவனுடைய பாஸ் – மென்டரின்
குரல்’ உன் வருகைக்காக
நம் நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது’ இன்னும் சற்று நேரத்தில்
அங்கு வருவேன் என்று சொல்லிவிட்டு காரை  மனோ
வேகத்தில் செலுத்தினான்.  

மறுபடியும்
கைபேசி அழைத்தது. அவள் தான். “ ஹாய் சம்சாரம் ! என்ன சமாசாரம்” அவனுடைய வார்க்தைகளில்
துள்ளல் தெரிந்தது. அவள் ஏதும் பதில் சொல்லாமால், ‘அப்பா.. அப்பா .. ‘ என்று கேவினாள்!

‘என்ன
ஆயிற்று அப்பாவுக்கு?

அப்பா..
காலையில் தனியா வாக்கிங் போகும் போது மூணு போலீஸ்காரர்கள் அவரைச் சந்தேகித்து ஏதோ விசாரித்திருக்கிறார்கள்.
அவர் பதில் சொல்லுவதற்கு  முன்னாடியே அவரை கையை
முறுக்கிக் கீழே தள்ளிக்  காயப் படுத்தியிருக்கிறார்கள்!
அவருக்குத் தலையிலே பெரிய காயமாம். லிங்கன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம்.
எனக்கு இப்போது தான் நியூஸ் வந்தது. நானும் எங்க டீனும் இப்போ ஆஸ்பத்திரிக்குப் போய்க்
கொண்டிருக்கிறோம். நீங்க எங்க இருக்கீங்க? ‘

“கடவுளே!
இது என்ன சோதனை! அவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாது!  இதோ நான் வர்றேன். நல்லா பாத்துக்கோ. ஆஸ்பத்திரி
போய் எனக்குப் போன்பண்ணு !”

கூகிள் அலுவலகத்திற்கு
தகவல் அனுப்பிவிட்டு காரைத் திருப்பி விரைவாக செலுத்தினான்.

“அப்பா!
உங்கள் ஊர் எனக்கு ஒத்துக்காதுன்னு அடிக்கடி சொல்வீங்க! அதையும் மீறி உங்களைக் கொண்டு
வந்ததுக்கா இவ்வளவு பெரிய அடி? கடவுளே அவருக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது”

லிங்கன்
ஆஸ்பத்திரியில் நேராக தலைமை மருத்துவரிடம் சென்றான்.

“தலையில்
பலமாக அடி பட்டிருக்கிறது. ஸ்கேன் எடுத்தோம் ஒரு சின்ன ஹெமரேஜ் இருக்கிறது. அதனால்
அவர் மயக்க நிலையில் இருக்கிறார். அவரது வலது கையிலும் காலிலும் பாதிப்பு தெரிகிறது.
நீங்கள் போய்ப்   பார்க்கலாம்’ என்றார்.

ஓடினான்.

அவன் மனைவியும்
காலேஜ் டீனும் அங்கே இருந்தனர். “‘அப்பா.. அப்பா”.. அவன் கண்களில் கண்ணீர் பெருகியது

“ஒரு சின்ன
ஆபரேஷன் செய்து அவரது கிளாட்டை சரி செய்ய வேண்டும். சற்று வெளியில் அமருங்கள். சர்ஜரி முடிந்ததும் அழைக்கிறோம்.’ என்றார் டாக்டர்.

வெளியே வந்ததும்
அவன் நண்பர்கள் எல்லாரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ‘அப்பா! தாத்தாவிற்கு என்ன ஆயிற்று? என்று கேட்டுக் கொண்டே பெரியவளும் சின்னவளும் அழுது  கொண்டே வந்தனர்

‘.உங்களுக்கு
எப்படித் தெரிந்தது?  

“அப்பா!
தாத்தாவைப் போலீஸ் தள்ளிவிட்டதை வீடியோவாய் என் வகுப்புத் தோழன் எடுத்திருந்தான். என்னிடம்
காட்டும் முன்பே அவன்  அதை       யூடியூபில்
போட்டுவிட்டான். அது இப்போது வைரலா உலகம் பூரா
பரவியிருக்கு”.

அவன் நண்பர்களும்
அதை ஆமோதித்தனர். ‘ஆமா! நாங்களும் அதைப் பார்த்துவிட்டுத் தான் இங்கே வந்தோம்!’ அவனும் தன் கைபேசியில் அந்தக் காட்சியைப் பார்த்தான்.

‘அவரது
ஒரே குற்றம் கறுப்புத் தோல் தான்’ ஒரு நண்பர் உறுமினார்.

‘இது
மனித உரிமை மீறல்’

‘அமெரிக்க
போலீசின் நிறவெறி’

அவனுக்கு
தொடர்ந்து போன் வந்துகொண்டே இருந்தன .யாரிடமும் பேசும் மனநிலையில் அவன் இல்லை. கூகிளிலிருந்து
அவனுடைய மென்டரும் பேசினார்.

லாபியிலிருந்த
டிவியிலும் அந்தக் காட்சி செய்தியாக வந்தது. போலீஸ்காரர்களின் அத்து மீறிய தாக்குதல்
மிகவும் கொடுமையாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சின்னவள்  திடீரென்று “ ஐ ஹேட் தெம்! ஐ ஹேட் தெம்!  “
என்று ஹிஸ்டீரியா வந்தது போல திரும்பத் திரும்பக்  கத்தினாள். மகளை இறுக்க அணைத்து  ஆறுதல் கூற முயற்சித்தான். பெரியவளும் மெல்ல வந்து, ‘அப்பா நாம நம்ம ஊருக்கே போயிடலாம்’ என்று அழுது கொண்டே சொன்னாள். அம்மாவும் மனைவியும் திக்பிரமையில் பேசமுடியாமல்
நின்றனர்.

தந்தைக்கு
நேர்ந்த கதியை நினைத்து நினைத்துக் கலங்கினான். ‘அவருக்கு ஏன் இந்தக் கொடுமை?  என்று மனதுக்குள் புழுங்கினான். அந்த
வீடியோ காட்சியை பலமுறை பார்த்துக்  கண்ணீர்
விட்டான்.

சர்ஜரி நல்ல
படியாக முடிந்து. ஒரு வாரம் கழித்து  ஆஸ்பத்திரியிலிருந்து
வீடு வந்து சேர்ந்தார். ஆனால் அவரால் முன்புபோல்
சரியாகப் பேச முடியவில்லை. பயிற்சி செய்தால் சரியாகிவிடும் என்பது டாக்டரின் கணிப்பு.

அவர் ஆஸ்பத்திரியில்
இருந்த அந்த ஒரு வாரமும் அவனது குடும்பத்தினர்  அனைவரும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர். அவனுடைய
கூகிள் தலைமைப்பதவி, அவளுடைய டாக்டரேட், பெரியவளுடைய ‘ஸ்பெல் பி’ , சின்னவளுடைய ‘ஐ லவ் யு ஆல்’ எல்லாம் இரண்டாம் பட்சமாகத்   தோன்றியது.
இந்தியாவிற்குத் திரும்பப் போய் விடலாம் என்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். நண்பர்கள்
எத்தனை முறை கூறியும் அவர்கள் அனைவரும் தங்கள் கொள்கையில் தீர்மானமாக இருந்தனர்.

அதற்குள்
இந்த செய்தி ஒரு உலகச் செய்தியாக மாறிவிட்டது. பாரதப்  பிரதமர் அமெரிக்க அதிபருக்கு இது பற்றி விசாரிக்கக்
கேட்டுக் கொண்டார். இந்திய தூதராலயத்தின் அதிகாரியும் வந்தார். இந்தியாவில் எல்லா ஊடகங்களிலும்
இந்த செய்தி அடிபட்டது. அமெரிக்காவிலும் நிறைய வெள்ளையர் அமைப்புக்கள் இதைக் கண்டித்தன.
போலீஸ் தலைமை அதிகாரி வருத்தச்  செய்தியைக்
கூறிவிட்டு ‘அந்த
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அறிக்கை
விட்டார்.

அமெரிக்கப்
பத்திரிகைகளும் ‘வொய் திஸ் கொலைவெறி?’ என்று எழுதின.   உலகின்
எல்லா நாடுகளிருந்தும் பேஸ்புக், ட்விட்டரில் அவர்களுக்கு ஆதரவாக
எண்ணற்றவர் எழுதினர்.. இந்த இழப்பிற்குப் பத்து மில்லியன் டாலர் இழப்பீடு கேட்கவேண்டும்
என்று நண்பர்களும் மனித உரிமை அமைப்புகளும் கூறினர். கூகிளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்
போவதில்லை என்றும், குடும்பத்துடன் இந்தியா திரும்பப் போகிறோம்
என்ற அவனது செய்தி அனைவரையும் ஆச்சரியப் பட வைத்தது.

 

நண்பர்கள், உறவினர்கள், கூகிள் நிறுவன அதிகாரிகள் அனைவரும் அந்த முடிவிலிருந்து மாற்றிக்கொள்ளும்படி
வேண்டினர். ஆனால் அவர்கள் ஒரே தீர்மானத்திலிருந்தார்கள்.

அந்தத் தந்தையின்
நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. தன்னால் தன் மகனுக்கும், மருமகளுக்கும், பேத்திகளுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறதே என்று அவர் கவலைப்பட ஆரம்பித்தார்.
‘ இல்லை அப்பா! அவர்கள் செய்த தவறுக்கு இது தான் தண்டனை! நான்
என்னுடைய உழைப்பை இனிமேல் அமெரிக்காவிற்கு விற்கப் போவதில்லை. வாருங்கள், நாம் எல்லோரும் நம் ஊருக்குப் போவோம். அங்கே கஷ்டமோ நஷ்டமோ ஒன்றாக இருந்து
சந்தோஷமாக இருப்போம். இது போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் நடக்கலாம். ஆனாலும் அது
நமது தேசம். அங்கேயே போவோம். எங்களுக்கு இதில் எந்த விதக் கஷ்டமும் இல்லை உங்கள்  உடம்பு சரியானவுடன் நாம் புறப்படுவோம்’ உறுதியாகக் கூறினான்.

அப்போது
அவர்கள் வீட்டு அழைப்பு மணி அடித்தது. வாசலில் ஒரு பெரிய கார். அதில் அவனது மென்டர்
– கூகில் நிறுவனத்தின் தலைவர் தனியாக வந்தார். அவரது அழைப்புகளைப் பலமுறை நிராகரித்திருந்தும்
அவர் இப்படி அதிரடியாக – அறிவிப்பு எதுவும் இல்லாமல் வருவார் என்று அவன் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை.

‘நீ
தான் என்னைப் பார்க்க விரும்பவில்லை நான் உன் தந்தையைப் பார்க்க வரலாமல்லவா? எங்கே உன் தந்தை?
என்று வினவினார்.

“மன்னிக்கவும்.!
நான் கோபத்திலும் ஆத்திரத்திலும், வேதனையிலும் எடுத்த முடிவு அல்ல அது. அனைவரும் தீவிரமாக ஆலோசித்து எடுத்த
முடிவு அது. கூகிளுக்கு நிறைய தலைவர்கள் கிடைப்பார்கள் .ஆனால்
எங்களுக்கு நாங்கள் வேண்டும்.”

“இதையெல்லாம்
கேட்க நான் வரவில்லை உன் தந்தையைப் பார்க்கவேண்டும். அதுவும் தனியாக.! அதற்கு உன் அனுமதி
எனக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்’’

தந்தையை
விட ஆயிரம் மடங்கு மதிப்பு வைத்திருந்த அவரிடம்  என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எவ்வளவு  பெரிய மனிதர். ஆரம்பத்திலிருந்தே அவனுடைய வளர்ச்சிக்கு
அடிகோலினவர். அவனுடைய ஆதர்ச குரு. அவன் இந்த அளவு வளர்ந்ததற்கு அவரது பணி மகத்தானது.
அவரது வார்த்தைகளை மீறுவது கடினம் என்பதை உணர்ந்திருந்தான். அதனால் தான் அவரைச் சந்திக்கவும்
தயங்கினான்.

“மன்னிக்கவும்.
அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அவருக்கு பேச உதவவாவது நான் வரட்டுமா?”    

“நீ வேண்டாம்.
எனக்குத் துணையாக இவளை அழைத்துச் செல்கிறேன்’ என்று சொல்லி அவனுடைய  சின்ன மகளைத்
தூக்கிக் கொண்டு ’உன் தாத்தா இருக்கும் இடத்திற்கு இந்தக் கிழவனை
அழைத்துப் போ’  என்று
உத்தரவிட்டார். அங்கு சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டார்.

image

‘இது
என்ன விபரீத விளையாட்டு’ என்று அவன் குடும்பத்தினர் அனைவரும்
நினைத்தனர். அரை மணி நேரம் அனைவரும் கையைப் பிசைந்து கொண்டு    உட்கார்ந்திருந்தனர்.
கதவு திறக்கும்  சத்தம் கேட்டது. சின்னவள் தான்  முதலில் ஓட்டமும் நடையுமாக வந்தாள் . அவளைத் தொடந்து
அந்த பெரிய மனிதர். ‘அப்பா! அப்பா..! ஐ லவ் ஹிம் ஸோ மச்’ என்று சொல்லி அந்தப்
பெரியவரின் காலைக் கட்டிக் கொண்டாள்.அவரும் அவளைத் தூக்கி  முத்தமிட்டுவிட்டு ‘ யங்மேன்!
நான் உன்னை பிறகு சந்திக்கிறேன் உனக்கு விருப்பமிருந்தால்.- .அதுவரையில் குட்பை’ என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலைக் கூட
எதிர் பார்க்காமல் கிளம்பிவிட்டார். கார் கிளம்பும் சத்தம் கேட்டது.

நேரே தந்தையிடம்
ஓடினான். கூடவே அவன் மனைவியும் குழந்தைகளும் அம்மாவும் அவன் பின்னால் சென்றனர். அங்கே
அவன் தந்தையின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

‘அப்பா’ என்று அலறிக் கொண்டு அவர் அருகில் போனவனை, ‘ நோ டாடி.. தாத்தா அழவில்லை. அவர் ரொம்ப ஹேப்பியாயிருக்கார்!’ என்று சின்னவள் குதித்துக் கொண்டே கூறினாள்.

“என்ன ஆயிற்று
அப்பா? அவர் என்ன
சொன்னார்?

எல்லோரும்
அவருடன் கட்டிலில் அமர்ந்து கொண்டார்கள்.

“என்னால
இப்போ ஓரளவு நல்ல படியா பேச முடியுது! அதுக்குக் காரணம் அந்த வெள்ளைக்காரர் தான்.
அவர் என்ன செஞ்சார் தெரியுமா? ‘உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதுக்காக அமெரிக்காவில
இருக்கிற மக்கள் சார்பில் உங்க கிட்டே மன்னிப்புக் கேட்கிறேன்! அதுவும் உங்க ஊர் வழக்கப்படி’ என்று சொல்லி என் காலடியில் பிரார்த்தனை செய்வது போல மண்டியிட்டு மன்னிப்புக்
கேட்டார். அவர் கண்களில் கண்ணீர் இருந்தது. நான் பதறிப்போய் “வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லும் போது தான் எனக்கு முழு ஸ்மரணையும் வந்தது.

அதற்கு அவர்’ “தயவு செய்து என்னைப் பேச
விடுங்கள்! உங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்காக நீங்கள் அனைவரும் அமெரிக்காவை விட்டு இந்தியா
செல்ல முடிவு எடுத்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பிறகு கூகிளுக்கு
தலைவனாக வரும் தகுதி உங்கள் மகனுக்கு இருக்கிறது. அவன் இந்தப் பிரச்சனையால் அதை உதறிவிட்டு
இந்தியா செல்லப் போகிறான். அவன் என்னுடன் பணி புரிந்தபோதே அவனுடைய கொள்கைப் பிடிப்பையும்
பாசத்தையும் நான் அறிந்திருக்கிறேன். நான் உங்களிடம் வேண்டுவது என்னவென்றால் நீங்கள்
எங்களை மன்னிக்கவேண்டும் ! உங்களுக்குப் பிடித்த உங்கள் மொழியிலேயே சொல்லுகிறேன் என்று
‘எழுதிவைத்ததைத் தப்பின்றி
சொன்னார். ‘ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம்
செய்துவிடல்’ என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறார்கள். எங்கள்
அனைவரை விட உங்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகப் புரியும். தயவு செய்து எங்களையும்    எங்கள் நாட்டையும்  மன்னித்துவிடுங்கள்! இப்போது நீங்கள் போனால் நாங்கள்
எப்போதும்  குற்ற உணர்ச்சியிலேயே இருப்போம்”
என்று சொல்லிவிட்டு ‘டார்லிங்கை’ அவர் சொன்னதை
விளக்கச் சொன்னார். அதற்குப் பிறகு எனக்கு நன்றி சொல்லிவிட்டு என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல்
சென்று விட்டார்!

அதனால் இப்போ
என் முடிவைச் சொல்லுகிறேன். திருக்குறளை அவர் வாயில் கேட்டபிறகு நான் பதில் மரியாதை
செய்யவில்லை என்றால் நான் மனிதனே அல்ல! நாம் அனைவரும் இந்தியா செல்லப் போவதில்லை. இங்கு
தான் இருக்கப் போகிறோம். நீ அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கொள். அது தான் நீ அவர்களை
மன்னித்ததின் அடையாளம்! நானும் என் பங்கிற்கு
அந்தப் போலீஸ்காரர்களை மன்னித்து அவர்கள் மீது  நண்பர்கள் போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்
போகிறேன். எவ்வளவு கோர்வையாக பழைய மாதிரி பேசுகிறேன் பார்த்தாயா? திருக்குறள் என்னை முழுதும்
குணப் படுத்திவிட்டது.’

அடுத்த நாள்  கூகிள் அலுவலகத்தில் …

“வெல்கம்
யங்மேன்! நீ கட்டாயம் வருவாய் என்று எனக்குத் தெரியும்”

“அது சரி
திருக்குறளை எங்கே பிடித்தீர்கள்?”

“கூகிள்
சர்ச்சில் தான்..”.

இருவரும்
சிரித்தார்கள்! !