
யார் இந்த இளைஞர்கள் ?
எங்கே செல்கிறார்கள் ?
கட்சிக்கொடி இல்லை
கரை வேட்டிகள் இல்லை
ஒரு வேளை இவர்கள் ,
படித்த இளைஞர்களுக்குக் கணினி வழங்குவதாக அறிவித்திருந்தார்களே , அதைப் பெறுவதற்குச் செல்பவர்களாக இருக்குமோ ?
இல்லை,
வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் 200 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தார்களே , அதைப் பெறுவதற்குச் செல்பவர்களாக இருக்குமோ ?
இல்லை,
100 நாள் வேலையில் கலந்து கொள்ளச் செல்கிறார்களோ ?
இவற்றில் எதுவுமே இல்லை.
இவையெல்லாம் இளைஞர்களைக் கவர அரசியல் கட்சிகள்
செய்யும் மாயைகள்.
இவர்கள் எல்லாம் கலாம் என்ற மந்திரச் சொல்லின் அடிமைகள்..
கலாமின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள்.
அப்துல் கலாம்
“ ஒரு தனி மனிதன் எவ்வாறு இத்தனை இளைஞர்களைக் கவர்ந்தார்’ என்று இந்தியாவின் அத்தனை அரசியல்வாதிகளையும் ஒரே நாளில் சிந்திக்க வைத்த செம்மல்.
தேசத் தந்தை மகாத்மாவுக்கு அடுத்தபடியாகஒவ்வொரு இந்தியனின் மனதிலும் நீங்காது நிலைத்திருக்கப் போகும் மகான்.
உலக அளவில் இந்தியாவைத் தலை நிமிரச் செய்த ஏவுகணை நாயகன்.
வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்லி சோம்பலாய்த் திரிந்த ஒவ்வொரு இளைஞனையும் எழுச்சியுறச் செய்த மாமேதை.
எளிமையின் சிகரமாம் தமிழ் மண்ணின் மைந்தனாம் கர்ம வீரர் காமராஜருக்கு அடுத்தபடியாகத் தமிழ் மண்ணிற்குக் கிடைத்த பொக்கிஷம்.
இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனுக்கும் கனவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை விளங்கச் செய்த ஞானி.
ஆசிரியப் பணியின் உன்னதத்தை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வைத்த நல்லாசிரியர்.
இத்தகைய மகானுக்கு சமர்ப்பணமாக நாம் செய்ய வேண்டியது என்ன ?
ஒன்றே ஒன்று தான்
இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற அவரது லட்சியக் கனவை நனவாக்க இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பாடுபடுவோம் ! உறுதியெடுப்போம் !