
பண்பட்ட பாரினிலே மக்கட்கும் மாக்கட்கும்
பேதமொன் றுண்டென்பார் பகுத்தறிவே யதுவென்பார்
நுண்ணறிவின் பயன்தன்னை முழுமையொடு பெறுதற்கு
நினைக்கின்ற நினைப்பிற்கு சுதந்திரமும் வேண்டும்
எண்ணமதை யெளிதாகத் தெளிவோடு சொல்லிடவே
எஞ்ஞான்றும் நாவிற்கு விடுதலையும் வேண்டும்
திண்ணமொடு கூறியதைச் செம்மையுற செய்திடவே
செயலுக்கு சுதந்திரமும் கிடைத்திடவே வேண்டும்!
மக்கள்தம் எண்ணமதை சொற்களோடு செய்கைதனை
அடக்கியே வேலைகள் வாங்கிடவே நினைத்தாலே
சக்கரம்போல் சுழன்றிடலாம் அடக்குமுறை தாங்காது
சுழற்சியின் வேகமோ ஒர்சில நாட்கள்தாம்
நோக்கமிலை வாழ்வினிலே வாழ்க்கையோ யந்திரமே
ஆர்வமிலை கருத்தினிலே வேலையிலை யறிவிற்கு
நீக்கமற நிறைவதுவோ விரக்தியெனும் பேயதுவே
விரைவினில் பலியாகும் நாட்டினது நலனதுவும்!
அஞ்சாத நெஞ்சமதும் அடங்காத ஆர்வமதும்
தளராத நோக்கமதும் குறையாத ஊக்கமதும்
வெஞ்சமராம் குருதியில்லா விடுதலைப் போரிற்கு
வெருட்டுகின்ற ஆயுதமாய் மருட்டுகின்ற கணையதுவாய்
துஞ்சலையு மஞ்சாது உயிரையும் உடலையும்
தியாகிகள் கொடுத்துமிக இடர்ப்பாடு கொண்டதெலாம்
நெஞ்சமதை நிமிர்த்திடும் விடுதலையின் மகிமைதனை
நெறியோடு ஆராய்ந்து அறிந்தநல் லுணர்வோடு!
மகிழ்வோடு கொண்டாடும் சுதந்திரத் திருநாளில்
பாரதமாம் அன்னைதனை கலங்காது காத்திடவே
அகத்தினிலே யுவப்போடு உயிர்நீத்த உத்தமரை
கண்பனிக்க பெருமையொடு கருத்தோடு நினைக்கின்றோம்
செக்கிழுத்து கல்லுடைத்து தன்னலங்கள் துறந்திட்டு
அந்நியரின் சிறையினிலே அடிபட்டு உதைபட்டு
முகச்சோர் வின்றியே விடுதலை வாங்கவே
உழைத்தநல் மாந்தர்க்கு அஞ்சலியும் செய்கின்றோம்!