‘மனிதர்கள் பலவிதம்…….. ஒவ்வொருவர் ஒருவிதம்

image

     “  மாலா .. நான் முடிவா சொல்றேன்…. தியாகு அவன்
ரெண்டாவது பெண் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலே.. அதனாலே நாளைக்கு அந்தக்
கல்யாணத்துக்கு நாம் போகப் போறதில்லே … எனக்கு முக்கியமா ஒரு மீட்டிங்
இருக்கு.  நான் போய் அதை அட்டெண்ட்
பண்ணறேன் ..” என்றான் ரவி தீர்மானமாக.  அரை
மணி நேரமாக அவளிடம் விவாதித்துக் களைத்துப் போயிருந்தான்.

     “ இல்லீங்க.. நான் என்ன சொல்ல வரேன்னா..” என்று இழுத்தவளைத்
தடுத்து நிறுத்தினான்.

     “ ஓகே… ஒண்ணு செய்.. நீ வேணா போய் அட்டெண்ட் பண்ணிட்டு வா ..
நம்ம பேரக் குழந்தை ரித்திக்கையும் கூட்டிட்டுப் போ ‘ என்று சொன்னபடியே
கிளம்பி வெளியே சென்று விட்டான்.

     திருமண மண்டபம்.
நாதஸ்வரம் ஒலிக்க ஜே ஜே என்றிருந்தது.
மாலா ரித்திக்குடன் மண்டப வாசலில் ஆட்டோவில் சென்று இறங்கினாள்.

     மண்டப வாசலில் தியாகு அவன் உறவினர் யாருடனோ பேசிக்
கொண்டிருந்தான்.

     ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து விட்டு ஒரு புன்சிரிப்புடன் மண்டப
வாசலை நோக்கி நடந்தாள்.

     தியாகுவின் அருகில் வந்ததும், ‘ குட்
மார்னிங் ..’ என்றாள்  அவன்
கவனத்தைத் திருப்ப.

     திரும்பிப் பார்த்த தியாகு, “ ஓ.. மாலாவா.. உள்ளே
போம்மா…. முகூர்த்த நேரம் நெருங்கிட்டிருக்கு..’ என்று  கூறியபடியே, அவன் உறவினரிடம்
உரையாடலைத் தொடர்ந்தான்.

     ஒரு நிமிடம் சலனமின்றி நின்றாள் மாலா… தியாகுதானா இது? கல்யாணத்துக்கு
வந்தவளை வாய் நிறைய ‘ வா ‘ வென்று கூப்பிட மாட்டாரா.” ரவி ஏன் வரவில்லை என்று கேட்கக்
கூடவா மாட்டார்? என்ற குழப்பத்துடன் மெதுவாகத் திருமண மண்டபத்துக்குள்
சென்றாள்.

     அவளும் ரித்திக்குடன் ஒரு வரிசையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து
கொண்டாள்.  தியாகுவின் மனைவியும், முதல் பெண்ணும், மாப்பிள்ளையும் பம்பரமாகச்
சுழன்று, அவர்கள் உறவினர்களையும், நண்பர்களையும்
உபசரித்து டிபன் சாப்பிட அழைத்துக் கொண்டு சென்றனர்.  இவளுக்குப் பரிச்சயமான முகம் அந்தக்
கூட்டத்தில் யாரும் இல்லை.  பக்கத்தில்
பேசக் கூட ஆளின்றி ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழிந்தது.

     அடுத்த ஒரு மணி நேரத்தில் முகூர்த்தமும், மற்ற சடங்குகளும்
நல்லபடி நடந்தேறின.  வந்திருந்த
விருந்தினர் அனைவரும் மணமக்களை வாழ்த்தப் பரிசுடன் கியூவில் நின்றனர்.  இவளும் போய் அந்தக் கியூவில் நின்று கொண்டாள்.  மணமக்களை வாழ்த்திப் பரிசையும் கொடுத்து விட்டு
மேடையிலிருந்து கீழே வந்தாள்.

     ‘ அம்மம்மா எனக்கு பாத்ரூம் போகணும் ‘ என்று அடம் பிடிக்க
ஆரம்பித்தான் ரித்திக்.

     பாத்ரூமைத் தேடிக் கண்டு பிடித்து அவனை பாத்ரூம் போகவிட்டு , மண்டபத்தை நோக்கித்
திரும்பியவள், தியாகு யாரோ ஒரு உறவினரிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு
ஒரு நிமிடம் நின்றாள்.  தியாகு அவளைக்
கவனிக்கவில்லை.

     “ என்ன.. தியாகு.. நீ உனக்கு ரொம்ப நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் தான்
கூப்பிட்டிருக்கேன்னு சொன்னே.. நீ சொன்ன பேர்கள்ளே ரவியின் பெயர் இருக்கலையே.. ஆனா
அவர் மனைவி வந்திருக்காங்க போல் இருக்கு “ என்றார் அந்த உறவினர்.

     ‘  அட.. ஏன்பா.. கேட்கறே?  இந்த ரவிக்கு ஒரு விவஸ்தையே இல்லே.. நான் அவனை
உண்மையா அழைக்கணும்னு நினைச்சிருந்தா, அவன் இருக்கிற தெருவுக்கு அடுத்த தெருவிலே இருக்கிற நம்ம
சொந்தத்தைக் கூப்பிடப் போனவன் அவனையும் கூப்பிடப் போயிருக்க மாட்டேனா..? இதை ஒரு மனுஷன்
புரிஞ்சிக்க வேண்டாமா.? அவனால் வர முடியலே போலிருக்கு.. அவன் மனைவியை அனுப்பி
இருக்கான். முடிஞ்சிருந்தா, அழைப்பு இருக்கோ இல்லையோ, நட்பு என்ற பெயரில்
ஒரு படையோடு வந்திருப்பான் “ என்று கூறியபடியே அந்த உறவினருடன் மண்டபத்துக்குள்
சென்றான் தியாகு.

     திக்கென்றது மாலாவிற்கு.
கண்களில் ‘களுக்’கென்று நீர் கோர்த்தது.

     ரவி சொன்னது எத்தனை உண்மை? அந்தக்
கண்ணீருக்குள்ளே முன் தினம் அவளுக்கும் ரவிக்கும் நடந்த வாக்குவாதம் திரைப்படம்
போல் ஓடியது.

     “ என்னங்க.. நாளைக்குத் தியாகுவின் ரெண்டாவது பெண் கல்யாணம். எப்போ
போகலாம்.. என்ன செய்யலாம் சொல்லுங்க..’  என்றாள்
மாலா, பேப்பர் படித்துக் கொண்டிருந்த ரவியிடம்.

     “ இல்லே மாலா.. தியாகு நம்மள கல்யாணத்துக்குக் கூப்பிடலே.. அதனாலே
நாம போனா சரியா வராது..’ என்றான் ரவி.

     ‘ என்ன  சொல்றீங்க..? அவர் உங்க
நண்பர்ங்க.. அதுவும் ரொம்ப வருஷமா இருக்கிற நட்பு.. அப்படி இருக்கும்போது அவர்
கூப்பிடலேங்கறதுக்காக நாம போகாம இருக்கலாமா..? ஏதோ கல்யாண வேலைகள்ளே
கூப்பிட மறந்திருக்கலாம்..’

     ‘ இல்லேம்மா.. நமக்குத் தெரிஞ்ச பலபேரைக் கூப்பிட்டவன் நம்மை
மட்டும் கூப்பிடாம இருந்தது, நம்மள கூப்பிடற ஐடியா இல்லேன்னு தான்னே தோணுது’

     ‘ ஆமா.. அப்படிச் சொல்றீங்களே.. உங்க நண்பர் முரளி கூட அவர்
பெண் கல்யாணத்துக்கு நம்மைக் கூப்பிட மறந்து போயிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு
மட்டும் நீங்க எடுத்துக் கட்டிண்டு போகலையா..?’

      “
நாம முரளி கல்யாணத்துக்குப் போனோம்.  ஆனா
நாம அங்கே போனதும் அவன் ரியாக்ஷன் எப்படி இருந்தது கவனிச்சியா.. அவன் ஓடி வந்து
என்னைக் கட்டிப் பிடித்து ‘ டேய் ஸாரிடா .. கல்யாண வேலைகள்ளே உன்னை வந்து கூப்பிட
மறந்துட்டேன்.  அப்படி செய்திருந்தாலும்
மனசுலே வெச்சுக்காம குடும்பத்தோடு வந்திருக்கியே.. எனக்கு ரொம்ப சந்தோஷம்டா..
ரொம்ப சந்தோஷம்டா.. என்று சொன்னானே ஞாபகம் இருக்கா.. கல்யாணம் முடிஞ்சு நாம்
கிளம்பும் வரை எத்தனை தடவை வந்து வருந்தி மன்னிப்புக் கேட்டிருப்பான்.. ஞாபகம்
இருக்கா..?

 “ அது வாஸ்தவம் தான்… ஆனா முரளியை விட, தியாகு நம்ம
குடும்பத்துக்கு இன்னும் க்ளோஸ் இல்லீங்களா? எத்தனை நாள் வந்து ‘ இதைச் செய்து
கொடுங்க.. அதைச் செய்து கொடுங்க’ என்று உரிமையோடு கேட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்.  அவருக்கும் மறந்து போயிருக்கலாம் அல்லவா..?”

     ‘ இல்லம்மா மாலா… உயிருள்ள இனங்களை அதுவும் மனிதர்களை ஒரே
அளவு கோலால் அளக்கக் கூடாது.  மனுஷங்க, உணர்வுகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு, கட்டாயத்துக்கு
அடிமைங்க.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா இருப்பாங்க.. குணாதிசயங்கள், பேட்டேர்ன் ஆஃப்
பிஹேவியர் வேற வேற விதமா இருக்கும்.
அன்னிக்கு முரளி கூப்பிட மறந்தாலும் அவன் பெண் கல்யாணத்துக்குப்
போனோம்.  ஆனா தியாகு கேஸ் வேறே.  அவன் ஒவ்வொண்ணும் ஒரு கணக்கோடு செய்யறவன்.  அதனாலே, அவன் கூப்பிடலேன்னா, ஏதோ ஒரு கணக்குலே
அவன் நமக்கு அழைப்புக் கொடுக்கலே.. அவ்வளவுதான்… ஸோ இட் ஈஸ் பெட்டர் டு ஸ்டே எவே…  ’ என்றான் ரவி.

     “ இல்லீங்க.. நாளைக்கு தியாகு வந்து.. ‘ நான் ஏதோ வேலைகள்
பிஸியிலே மறந்துட்டேன் . ஆனா, ஆஸ் எ ஃப்ரெண்ட், நீ வந்திருக்க வேண்டாமா..? என்று கேட்டால் நாம
என்ன பதில் சொல்வோம்?”

     ‘ அந்தப் பிரச்சினையே வராது.  அப்படி வந்தாலும் நான் பார்த்துக்கறேன்.”

     “ இல்லீங்க..”

     விவாதித்து, விவாதித்து, இதோ இங்கு வந்து
மூக்குடைபட்டு நிற்கிறாள் மாலா.

     “ என்ன.. ஆன்டி.. இங்கேயே நின்னுட்டீங்க..
இப்போதுதான் முதல் பந்தி ஆரம்பிச்சிருக்காங்க.. டைனிங் ஹாலுக்குப் போங்க.. என்ற
குரல் கேட்டு இவ்வுலகிற்கு வந்தாள்.

     தியாகுவின் முதல் பெண் புன்முறுவலுடன்
அவளிடம் கூறியபடியே மண்டபத்துக்குள் சென்றாள்.
அவள் புன்முறுவலில் சிறிது நக்கலும் சேர்ந்திருந்ததோ?

     மாலா சுற்றுமுற்றும் பார்த்தாள்.  எல்லோரும் அவசர அவசரமாகச் சாப்பிட இடம் பிடிக்க
டைனிங் ஹாலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.
மாலா ரித்திக்கையும் கூட்டிக் கொண்டு மண்டபத்துக்கு வெளியே வந்து
வீட்டிற்குச் செல்ல ஆட்டோ பிடித்தாள்.