லாரா – ஜெயராமன் ரகுநாதன்

(குவிகம் இலக்கியவாசல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை). 

image

( மேலே சொடுக்கினால் லாரா கதையை ஆசிரியரின் குரலிலேயே கேட்கலாம்) 

அந்தப்பெரியவரின் கை நடுங்கிக்கொண்டிருந்தது.
முதலில் பஸ்சின் வேகத்திலோ என்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சீக்கிரமே நீங்கியது.
இன்னொரு கையில் குடை வைத்துக்கொண்டிருந்தார். அதுவும் ஆடிக்கொண்டே இருந்தது
கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.

என் மகன் வீட்டிலிருந்து Marine Platz என்னும் இடத்திற்கு ஒரு Dinnerக்காகத் தனியாகப் போய்க்கொண்டிருந்தேன்.

“உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே?”

என் பக்கம் திரும்பினார். ஆனால் பதில் இல்லை.

நடுங்கும் கைகளுடன் ஜன்னல் வழியே பார்க்க
ஆரம்பித்துவிட்டார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சட்டென்று என் பக்கம் திரும்பி
துல்லியமான ஆங்கிலத்தில் “ நீ இந்தியாவா அல்லது பாகிஸ்தானா?” என்று கேட்டார்.

“ இந்தியாதான்”. தென் இந்தியா"

“ நினைத்தேன். You have Dravidian Features” என்று ஆச்சரியப்பட வைத்தார். “
என்னுடைய பள்ளிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்திருக்கிறேன். ஓடகமண்ட்
வெல்லிங்டன்”. என் அப்பா அங்குதான் C in C ஆக இருந்தார். எனக்கு வயது பன்னிரண்டு
அப்போது"

“அப்படியா”

“ இரண்டு வருடங்கள்தான். பிறகு
திரும்பிவிட்டேன்”

உங்களின் ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது என்றேன்.

“I am English ”

மறுபடி ஜன்னல் வெளியே பார்வை. சில பிரயாண
நிமிஷங்கள்.

“ உங்களின் அரசாங்கத்துக்குத் திராணியே
இல்லை”

 "ஏன்"

அதான் உங்கள் காஷ்மீரில் நடக்கிறதே".
நாங்களாக இருந்தால் அடித்துத் தீர்த்திருப்போம் இத்தனை நாட்களில். சும்மா
பேசிக்கொண்டு அதிகம் இழக்கிறீர்கள். எத்தனை பேர் இதுவரைக்கும். நாந்தான் விடாமல் BBCயில் பார்க்கிறேனே"

நான் மெளனமாக இருந்தேன்.

You know I am a second world war
veteran".
இதே ஜெர்மனியில் Hawker Demon ப்ளேன் ஓட்டி வந்து குண்டு வீசி
குப்பல் குப்பலாக மக்களைக் கொன்றிருக்கிறேன்".

இப்போது அவர் குரல் கொஞ்சம் வெறி ஏறினாற்போல
மாறியது.

“நானே பார்த்தேன். எவ்வளவு பெண்கள், குழந்தைகள். என் கை விரல் பட்டனில் பல
உயிர்கள் ஊசலாடியிருக்கின்றன. அப்படியே ஒரு கழுகின் பார்வையில் டைவ்.
"விஷ்” என்னும் அந்த ஒரு மாயக்கணத்தில் தெறிக்கும் குண்டுகள். நான்
விமானத்தை மேலே எழுப்பிப் பின்னால் பார்ப்பேன். அந்தக்காட்சி…..வார்த்தைகளில்
சொல்ல முடியாது. பளிச்சென்ற ஒளி உமிழப்பட்டு அந்த இன்ப சப்தத்தில் உயிர்கள்
அழியும் அந்த கடவுள் கணங்கள்".

மறுபடியும் மௌனம். தான் பேசியதை அவரே
ரசிக்கிறார் போல கண்கள் இடுங்க ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

எனக்கும் ஒன்றும் சொல்லத் தோணவில்லை.

“ ராணுவம் என்றால் நாங்கள்தான். அந்த discipline. ”

மறுபடி ஜன்னலுக்கு வெளிய பார்வை போய்விட்டது.

இப்போது ஜன்னலில் அந்தப்பெரியவர் ஏதோ மாதிரி
கையை மெதுவாக தடவிக்கொண்டிருந்தார். ஆர்வத்துடன் பார்த்தேன். ஒரு சின்ன பூச்சி
கண்ணாடி மேல் நகர்ந்து கொண்டிருந்தது. பெரியவர் அந்த பூச்சிக்கு அருகில் தன
கையை வைத்து அது தன் கை மேல் ஏற வழிபண்ணிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் தவித்த
பின் அந்தப்பூச்சி அவர் கை மேல் மெதுவாக ஏறியது. நடுங்கிக்கொண்டிருந்த கையை
ரொம்பவுமே ஜாக்கிரதையாக நகர்த்தி தன் மற்றொரு கைக்கு அருகின் கொணர்ந்து இன்னொரு
கையால் “பட்டென்று” அடித்து நசுக்கினார்.

கையைத் துடைத்துக்கொண்டு" ப்ளடி ஜெர்மன்
இன்செக்ட்" என்றார். .

ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்தேன்.

“என்ன பார்க்கிறாய்? இன்றும் என்னிடம் ஒரு Hawker Demon தந்து பார். உங்கள் காஷ்மீரையே ஒரு
கலக்குக் கலக்கி அந்த பாகிஸ்தானியர்களை ஓட ஓட விரட்டிவிடுவேன்"


image

“நீங்கள் எங்கே இங்கே
ம்யுனிக்கில்” என்று பேச்சை மாற்றினேன்.

“போன வாரம் வந்தேன். என் மகள்
விஷயமாக”

“அப்படியா? உங்கள் மகள் இங்கேதான் இருக்கிறாரா?”

அவர் கண்ணில் பெருமை தெரிந்ததா என்று என்னால்
சொல்ல இயலவில்லை. மெளனமாக இருந்தார். அவரின் இந்த மௌன நிமிடங்கள் எனக்கு அதற்குள்
பழகி விட்டது.

“லாரா. அவள் ஒரு பச்சைக்கண் அழகி.
என்னைப்போல!”

இடுங்கின கண்களும் கோணின வாயும் அவர்
சிரித்தாற் போலப் பட்டது.

“இங்கிலாந்தில் பிரபுக்கள் அவளுக்காய்
காத்துக்கொண்டிருக்க, இந்த
ஊர் ஜெர்மன் பையனைக் கல்யாணம் செய்துகொண்டாள். காதலாம்! ஹக்”.

“ஏன் அவனை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

“அவன் ஒரு சாதாரண ஆர்கிடெக்ட். ஏதோ
கனவுகளை அவளிடம் விற்பனை செய்து அவளையே வாங்கி விட்டான். முட்டாள் பெண்”.
அவனுக்கு என் சொத்தின் மேல் ஒரு கண் இருந்திருக்கும்.
இவளுக்குப் புரியவில்லை.“

"இப்போது அவளைப் பார்க்க
வந்திருக்கிறீர்களா?”

“இல்லை. பார்க்க
முடியவில்லை”

‘ஏன்?“

"நான் வருவதற்குள் புதைத்து
விட்டார்கள்”

உறைந்தேன்.

“சால்ஸ்பர்கிலிருந்து காரில்
ஆட்டோபானில் வரும்போது விபத்து. ஸ்தலத்திலேயே மரணம் இருவரும்.”

“வருந்துகிறேன்”. தங்களின் சோகம்
மகத்தானது.“

வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"ஜெர்மானிய …………” என்று
ஒரு கீழ்த்தரமான ஆங்கில வசவைப் ப்ரயோகித்தார்

“அவளுக்கு 50,000 யூரோக்கள்தானாம் இன்ஷுரன்ஸ். அவள்
கணவனின் தம்பி சுளையாக ரெண்டு லட்சம் யூரோக்களை பெற்றுக் கொண்டு விட்டான். என்ன
அபத்தமான விதிகள்  இந்த பாழாய்ப் போன நாட்டில்”..

நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டிருக்க,
நான்   எழுந்து இறங்கிவிட்டேன்.  அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
சொல்லிக்கொள்ளவும் இல்லை.

டின்னரின் போது என் பிசினஸ் சகா படு உற்சாகமாக
இருந்தார்.

“ரகு! தெரியுமா, நமக்கு எண்பதாயிரம் யூரோ காண்ட்ராக்ட்!”

“ஓ! சூப்பர்! எங்கிருந்து?”

“லண்டன், இங்கிலாந்து! வாவ்! On the banks of Thames!”
என் சகா பாடினார்.

“வேண்டாம்" என்றேன் ஸ்பஷ்டமாக.