ஷாலு மை வைஃப்

image

ஷாலுவை ஸ்வாமினியுடன் சிங்கப்பூருக்கு பிளைட் ஏற்றிவிட்டு வந்த
எனக்கு “ஏர்போர்ட்டில் பரபரப்பு என்ற செய்தியைக் கேட்டதும் டென்ஷன்
ஆகிவிட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்ளுமுன் கரெண்ட் கட்டாகி டிவி , இன்டெர்நெட் எல்லாம் ஆப் ஆகிவிட்டது. 

மறுபடி ஷாலுவின் அப்பாவிடமிருந்து போன்.” மாப்பிள்ளை !
ஷாலுவைப் பாத்தேளா? “ அதற்குள் போன் கட்டாகி என்
டென்ஷனை ஏற்றிக் கொண்டிருந்தது. இன்வர்ட்டரும் ஓடவில்லை. ஓர் நிமிடம் தலையைச்
சுற்றியது. 

ஷாலு  பிளைட் பிடித்திருக்க மாட்டாள்.  இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. டிங். ஷாலுவிடமிருந்து
.மெஸேஜ் வந்தது. ‘டி வி பாருங்கோ ’ என்ற
சிம்பிள் வார்த்தை. முடியாதைத் தான் எப்பவும் ஷாலு சொல்வாள். 

இன்னிக்கு ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்துடுங்கோ’ என்பாள். அன்றைக்குன்னு பார்த்து ஒரு மீட்டிங்
இருக்கும். சாயங்காலம் வரும்போது கொத்தமல்லி கருவேப்பிலை வாங்கிட்டு வாங்கோ ன்னு
சொல்லுவாள். சரி, வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற கடையில
வாங்கிக்கலாம்னு வருவேன். அன்னிக்குன்னு பார்த்து ‘ரெண்டும்
பழசாயிடுச்சு சார்! நாளைக்கு தர்ரேனே’ என்று பாசத்தோடு
சொல்லுவான் கடைக்காரன். திரும்ப ஆபீஸ் பக்கத்தில இருக்கற கடைக்குப் போக
சோம்பேறித்தனம். சரி பார்த்துக்கலாம்னு வீட்டுக்கு போனா கருவேப்பிலை கூட வாங்கத்
தெரியாதவன்னு ஒரு லுக் விடுவாள் ஷாலு. அது போதும் நாலைந்து நாளைக்கு எதையும்
மறக்கத் தோணாது. 

மெஸேஜ் வந்ததினாலே ஒரு திருப்தி. மேஜர் பிராப்ளம் ஏதும் இல்லை.
மொபைலில் 3ஜி இருக்கான்னு பார்த்தா நெட்வொர்க்கே
இல்லை. மாசத்தில மூணு நாளைக்கு  எங்க காலனி மொபைல் எல்லாம் அஞ்ஞான வனவாசம் போயிடும். வீட்டுக்குள்ளே நெட்வொர்க் வராது. போன் லேசா அடிச்சா அவனவன் அவசர அவசரமா போனை எடுத்திக்கிட்டு வாசலுக்கு ஓடுவாங்க. டமால் டுமீல் என்று கதவு திறந்து மூடும் சத்தம் கேட்கும். அந்த சமயத்தில எங்க காலனியில
எந்தவித ரகசியமும் இருக்காது. 

மாடி வீட்டு சேஷனோட  மாட்டுப்பொண் குளிக்காம இருக்கறதிலிருந்து, 

கீழ் வீட்டு சரோஜா மாமியின் ஓர்ப்படி கஜானாவில வளையல் வாங்கின
சேதியும், 

பக்கத்து வீட்டு லைலா அவ  பிரண்டு
( பாயோ கர்லோ ) கூட ஓகே கண்மணி படத்துக்குப் போற சேதியும்  

லக்ஷ்மி மாமி நாராயணீயம் கிளாசுக்குப் போறாள் என்ற சேதியும் 

எங்க ஆபீஸ் எம்‌டி வத்தக்கொழம்பும் சுட்ட அப்பளாமும் சாப்பிட
வீட்டுக்கு வர்ரார் என்ற சேதியும் 

நரசிம்மன் பென்ஷனுக்கு லைவ் சர்டிபிகேட் கொடுக்க மறந்துட்டார்
என்பதுவும் 

காலனி முழுதும் எல்லாருக்கும் தெரிஞ்சுடும். 

மாமனார் எப்படி பேசினார் என்று யோசித்தால் அவர் லேண்ட் லைனில்
பேசியிருக்கிறார். 

மறுபடி ஷாலு கிட்டேயிருந்து  மெஸேஜ் ” பாத்தீங்களா?“  என்று. 

மூன்று மெஸேஜுக்குப் பதில் போடவில்லை என்றால் ஷாலு அவள் அவளாகவே
இருக்க மாட்டாள். அந்தக் கோபத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். விளைவுகளுக்கு
அவள் ஜவாப்தாரி ஆக மாட்டாள். இப்படித்தான் போன மாதம் நான் ஆபீஸில் கொஞ்சம் பிஸியாக
இருந்த போது மூணு தடவை அவளோட போனை எடுக்கலை. நேரா எங்க மேனேஜருக்கே போன்
செஞ்சுட்டாள். அவ்ர் கிட்டே என்ன சொன்னாளோ தெரியலை அவர் அஞ்சாவது நிமிஷத்தில ஆபீஸ்
காரைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிச்சு வைச்சார்னா பாத்துக்கங்களேன். 

பிராப்ளம் ஒண்ணும் இல்லையே என்று திருப்பி மெஸேஜ் அனுப்பினேன்.
பதில் ஒன்றும் இல்லை. வராது என்பதுவும் எனக்குத் தெரியும். 

டிவி பார்க்க என்ன வழி என்று தீவிரமா யோசிக்கும் போது கரண்ட்
வந்தது. ஆஹா என்று சுடச்சுட செய்திகளை சன் டிவி தானே தரும் என்று அதைப் போட்டேன்.
தமிழ் நாட்டில் எந்த மூலையில் கொலை கொள்ளை கற்பழிப்பு என்று விளக்கமாகச்
சொன்னார்களே தவிர ஏர்போர்ட் சமாசாரம் ஒண்ணும் வரவில்லை. .சானலைத் திருப்பிக்
கொண்டே வந்தேன்.பொதிகை வந்ததும் இன்று சென்னை ஏர்போர்ட்டில் நடைபெற்ற பரபரப்பான
சம்பவத்தை விளம்பர இடைவேளைக்குப் பிறகு காணலாம் என்று சொன்னார்கள். நானும்
நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். 

image

விளம்பரம் முடிந்தது. ஆஹா ! என்ன இது ? ஷாலு டிவியில் வருகிறாளே ! மெயின் போகஸ் குருஜினி
தான். இன்று உலக யோகா தினம். ராத்திரி பன்னிரண்டுக்கு மேல் ஆரம்பமாகி விட்டது. அதைக் கொண்டாடும் வகையில் குருஜினி யோகா பயிற்சியை  ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருக்கும் பயணிகள் அனைவரையும் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார். எப்படி சரியாகச்
செய்யவேண்டும் என்பதற்கு ஷாலு தான்   டெமோ கொடுத்து வந்தாள். இதெல்லாம் அன்று சென்னையிலிருந்து துபாய் செல்ல வந்த பி ஜே பி எம்.பி ஒருவர் மற்றும் அவரது பரிவாரங்கள் எல்லாம் பார்த்தன.  அவரை பேட்டி காண வந்த பிரஸ் மக்களை உள்ளே அழைத்து அவர்கள் முன்னிலையில் அவரும் அந்த யோகா உத்சவத்தில் கலந்து கொண்டு ’ மோடி ஜிந்தாபாத்! யோகா ஜிந்தாபாத்’ என்று குரல் எழுப்பிக் கொண்டு இருந்தார். குருஜினிக்கு அவர் முன்பே
தெரிந்தவராக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

 இது திடீரென்று நடந்ததா
அல்லது திட்டமிடப் பட்டதா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஷாலுவுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மத்தியானம் கூட குழந்தைகளுக்கெல்லாம் யோகா சொல்லிக்
கொடுக்கணும் என்று சொன்னாள். அப்பாவையும் சிரசாசனம் – யோகா எல்லாம்  பண்ணச்
சொல்லணும். அவரோட முழங்கால் வலி குறையும்  என்று சொன்னாள். அவருடைய மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
ஏன்  முடிச்சு போடுகிறாய் என்று நான்
ஜோக்காய்க் கேட்டேன். (அவள் அதை ரசிக்கவில்லை என்பது, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு  பாத்திரம்
தேய்க்கிற ஸ்டைலிலேயே தெரிந்தது.).   அதற்குப் பிறகு யோகாவைப் பற்றிப்
பேசவில்லை. அதனால தான் அவளுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கும்னு
எனக்குத் தோன்றியது.

குழந்தைகளை எழுப்பி அம்மா டி வி யில வந்திருக்கான்னு சொல்லலாம்னு
நினைச்சேன். இப்ப தான் ரெண்டும் தூங்கப்போச்சு. இப்ப எழுப்பினா அம்மா திரும்பி
வந்துட்டாளான்னு நினைச்சு ஏடா கூடாமா ரியாக்ட் செய்யுங்கள். சரி, நாளைக்கு
இதை மறுபடியும் மறு ஓளிபரப்பு வைப்பாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஷாலுவை டிவியில் பாத்தா ரெண்டு குழந்தைக்கு அம்மா மாதிரி தோணலை. கொஞ்ச  நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே
இருந்துவிட்டேன். இந்த களேபரத்தில ஷாலுவுக்கு மெஸேஜ் கொடுக்க மறந்து விட்டேன். லேண்ட்
லைனையும் சரியாக வைக்காததால் அதுவும் ஆஃப் ஆகிக் கிடந்தது. அவளிடமிருந்து மூணாவது மெஸேஜ் வந்து நான்கு நிமிஷம் ஆகிவிட்டது. நான் பரபரப்போடு அவளைப் போனில் பிடிக்க
முயற்சி செய்யும் போது பார்த்தால் என் போனில் சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. அதைச்
சார்ஜில்  போட்டு விட்டு ஷாலுவின்
நம்பருக்கு போன் செய்ய முயலும் போது என் வீட்டு காலிங் பெல் அடித்தது. ஷாலு தான்
வந்துவிட்டாளோ  என்று பார்த்தால் பக்கத்து
வீட்டு சில்க் ஸ்மிதாவின் கணவன் நிற்கிறான். அவன் தெலுங்கையும் தமிழையும்
இங்கிலீஷையும் கலந்த ஒரு திராவிட பாஷையில ஏதோ சொன்னான். எனக்குப் புரிஞ்சுடிச்சு.
ஷாலு தான் சில்க்குக்கு போன் பண்ணியிருக்கணும். “ரொம்ப தேங்க்ஸ், நானே பாத்துக்கிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பி
வைத்தேன்.

அதற்குள் ஷாலுவிடமிருந்து எனக்கே நேரடியாக லேண்ட் லைனில் போன்
வந்தது.

“ஹாய் ஷாலு கங்கிராட்ஸ்”

“கங்கிராட்ஸ் எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். என்னாச்சு உங்க
போனுக்கு?

“ வழக்கம் போல சார்ஜ் இல்லே. அத்தே விடு.  சூப்பரா இருந்தது யோகா எல்லாம். நீயும் உங்க குருஜினியும்
கலக்கிட்டீங்க” என்றேன்.

“ நான் போன் பண்ணினது எதுக்குத் தெரியுமா? கிளம்பற அவசரத்தில பாலை உரைகுத்த மறந்துட்டேன்.
மறக்காம பண்ணிடுங்கோ. இல்லேன்னா நாளைக்கு குழந்தைகளுக்குத் தயிர் சாதம் இல்லாம
போயிடும்”

காரில் வரும் போதே “அப்பா
நாளைக்கு தயிர் சாதம் வேண்டாம். பேசாம சரவண பவனிலிருந்து வெஜ் பிரியாணியும்
பன்னீர் பட்டர் மசாலாவும் வாங்கித் தாப்பா” என்று கெஞ்சினார்கள். நானும் உசேன்
பாய் மாதிரி வாக்குக் கொடுத்திட்டேன்.  

“டோன்ட் வொரி ஷாலும்மா! இப்பவே உரை குத்திடறேன். வேற ஏதாவது
மறந்திட்டியா “ என்று சாதாரணமாகத் தான் கேட்டேன்.

“ ஏன் நீங்க இப்படி குத்திக் காட்டிப் பேசறீங்க” என்று ஷாலு
பிடிச்சுட்டா.

“ பிளைட் என்னாச்சு ஷாலும்மா? டிலேயா
என்று கேட்டேன்.

“ யோகா டெமோவெல்லாம் முடிச்சுட்டுத் தான் நாங்க செக்யூரிட்டி
செக்குக்கே போகப்போகிறோம்” என்றாள்.

என் நாக்கில் சனி.

“அது சரி. இது நீங்க முதலிலேயே பிளான் பண்ணினது தானே “ என்று
கேட்டுவிட்டேன்.

“நீங்களும் அந்தப் பத்திரிகை நிருபர்களும் ஒரே மாதிரி தான்
கேட்கறீங்க. குருஜினிக்கு மோடி கிட்டேருந்து நேரடியா மெஸேஜ் வந்தது. ‘உலக யோகா தினத்தைச் சிறப்பா கொண்டாடுங்கோ’ என்று. அதனால தான்  ஏர்போர்ட்டில்
12 மணியிலிருந்து 12.15  வரை யோகா டெமோ பண்ணினோம்.

பிரைம் மினிஸ்டர் ஆபீசிலிருந்து இந்த மாதிரி மெஸேஜ்
எல்லாருக்கும் வரும் என்பது  அவளுக்குத்
தெரியவில்லை. எனக்கும் வந்திருந்தது.

“என்ன பேச்சே இல்லை! தூக்கம் வருதா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாளைக்கு நீங்கள் சிங்கப்பூர் போய் எப்படி
கலக்கப் போறீங்கன்னு நினைச்சுப் பார்த்தேன். அது சரி ஷாலு! சிங்கப்பூரில் உங்க
புரோகிராம் என்ன? ”

“அதெல்லாம் அங்கே போய் சொல்லறேன். இப்போ போர்டிங் கால்
கொடுத்துட்டாங்க! குழந்தைகளை ஜாக்கிரதையாய்ப் பாத்துக்கங்க! நீங்களும் கண்ட கண்ட
இடத்தில சாப்பிடாதீங்க! பன்னீர் பட்டர் மசாலா பக்கமே போகாதீங்க. வயத்துக்கு ரொம்ப
கெடுதலாம் குருஜினி சொல்லியிருக்கார் ” என்று சொல்லி போனை வைத்தாள்.

image

ஷாலு! உன்னோட பொஸ்ஸஸிவ்
இண்டெல்லிஜன்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று மனதுக்குள் சொல்லிக்
கொண்டே படுக்கப்போனேன். ஏனோ அந்த சமயம் ஃபர்ஸ்ட் நைட்டில அவள் பேசின பேச்சு ஞாபகம்
வந்தது. “ ஐ லவ் யு ஷாலு’ என்று சொல்லிக் கொண்டே தூங்கிப்
போனேன்.