தி ஜா பக்கம்

தீர்மானம்

image


விசாலிக்கு   இப்போ பத்து வயது. போன வருஷம்  ஒரு சுமாரான வரனுக்கு  இளையாளா கல்யாணம் ஆனவள்.அவள் அப்பாவுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை ப் பற்றி எப்பவும் ஒரு இளக்காரம். அதனால் அவளை அவர்கள் வீட்டில் இன்னும் கொண்டு போய் விடவில்லை. விசாலி தோழியுடன் சோழி விளையாடிக் கொண்டு ஜாலியாக இருக்கிறாள்.


திடீரென்று ஒருநாள் அவள் பெரிய மாமனாரும் மச்சினர்மார்களும் வந்து அந்த க்ஷணமே அவளை அழைத்துப் போகவேண்டும் என்று நிற்கிறார்கள். வீட்டில் அப்பா இல்லை. அத்தை ஆன மட்டும் சொல்லிப் பார்க்கிறாள்.  முடியாது என்று மறுக்கிறாள்.
அப்போ விசாலிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒரு பெரிய துணியில் அவளுடை துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு ‘அப்பா வந்ததும் சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு அவர்கள் வண்டியில் ஏறிக் கிளம்பிப் போய்விட்டாள். அவள் அப்பா வந்ததும், சாப்பிடக் கூட விடாமல் அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று தெரிந்ததும் உடனே ஒரு ஜட்கா எடுத்துக்கொண்டு அவர்களைத் துரத்திப் பிடித்தார்.

மாப்பிள்ளை வீட்டுக்காரகளிடம் ஒன்றும் பேசவில்லை. “சாப்பிடாமல் கிளம்பிவிட்டாயே அம்மா! வா சாப்பிடலாம் "என்று அவளை அழைத்து அவளுக்கு  ஊட்டி விட்டார்.   பாக்கி சாதம் அவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். தூக்கி ஆத்தில் போட்டார். ‘எப்பப்பா வருவேள்?’ என்கிறாள் விசாலி. ‘நான் எதுக்கு வரணும்? நீ வந்து போ ! நீ வரவேண்டாம்னு நான் சொல்லலை” என்றார் அவர்.
விசாலி புக்காத்து வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

பெரிய மாமனாரும் மற்ற இரு மச்சினர்களும் பேசவில்லை . உலகத் தாயைக் கண்ட மோனத்தில்   அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன.

சித்தர் – போகர்

image
image


போகர் பதினெட்டு சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதரின் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார். 

பழநி முருகன் சிலை

பழநி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. இச் சிலை நவபாடாணங்களைக் கொண்டு செய்யப்பட்ட நவபாடாணச் சிலை என்று கருதப்படுகிறது. இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதி‌ல்லை. நவ பாசான சிலை சேதமடைய காரணம் சிலையின் பாடாணம் மருத்துவக் குணமுள்ளதால், பூசை செய்பவர்கள் சிலையைச் சுரண்டி சித்த மருத்துவர்களுக்கும் பிறருக்கும் பணத்திற்கு விற்றதாக பரவலாகப் பேசப்படுகிறது.

போகர் நூல்கள்

போகர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

 • போகர் 12000
 • சப்த காண்டம் 7000
 • நிகண்டு 1700
 • வைத்தியம் 1000
 • சரக்குவைப்பு 800
 • செனன சாகரம் 550
 • கற்பம் 360
 • உபதேசம் 150
 • இரணவாகமம் 100
 • ஞானசாராம்சம் 100
 • கற்ப சூத்திரம் 54
 • வைத்திய சூத்திரம் 77
 • முப்பு சூத்திரம் 51
 • ஞான சூத்திரம் 37
 • அட்டாங்க யோகம் 24
 • பூசா விதி 20
 • போகர் 7000


மூலாதாரம் பற்றி சித்தர் போகர்

ஆறு ஆதாரங்களில் ஒன்றான மூலாதாரம் , முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது. அதன் அமைப்பை போகர் சித்தர் தனது போகர் 7000 என்ற நூலில் இப்படி கூறுகிறார்.

image

காணவே மூலம் அஃது அண்டம் போலக்
காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும்
நாணவே நாற்கமலத்து அட்சரங்கள்
நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும்
மூணவே மூக்கோணத்து உள்ஒளி ஓங்கார
முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே – போகர் 7000

மூலாதாரமானது ஒரு வட்டம் போல் இருக்குமாம் அதன் நடுவில் முக்கோணம் ஒன்று இருக்குமாம் அதன் மேலே ஒரு வளையமும், அதனை சுற்றிலும் நான்கு இதழ்களும் இருக்குமாம். அந்த இதழ்களில் வ-ச-ஷ-ஸ என்ற நான்கு எழுத்துக்கள் இருக்குமாம். அதன் ஒரு புறத்தில் ‘உ’ காரமும் மறுபுறத்தில் ‘அ’ காரமும் இருக்குமாம்.

அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பர்
அதிலே ஓர் கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கியதோர் முனை ஒன்றில் கதவிப் பூவாய்ப்
புகாரமாய் முகங்கீழ்க்குண் டலியாம் சக்தி
பெண்பாம்பு போல் சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய் சுழிமுனை ஊடுருவி நிற்பாள்
துரியாதீதம் என்ற அவத்தை தானே. – போகர் 7000

அகாரத்தில் மேலே கணேசர் நிற்பாராம் அதன் மற்றொரு புறமான உகாரத்தின் மேல் வல்லபை என்ற சக்தி நிற்பாளாம் இதில் வாழைப் பூவை போல் கீழ்நோக்கி ஒன்று விரிந்திருக்கும். அதில் பெண் பாம்பு போல் குண்டலினி சக்தி சுருட்டிக் கொண்டு சுழிமுனையில் ஊடுருவி சீறிக் கொண்டு இருப்பாளாம்

அவத்தைதனக் கிருப்பிடம்மும் மூலமாகும்
அழகான கதலிப்பூ எட்டி தழாய் நிற்கும்
நவத்தைக்கு நந்தி அதன் வாயில் நிற்பார்
நற்சிவமரம் சிகார மல்லோ கோடி பானு
அவத்தைக்கு வாய் திறவாள் மலரால் மூடும்
மைந்தனே எட்டு இதழில் எட்டு சத்தி
பவத்தைக்குச் சக்தி எட்டின் பேர் ஏது என்றால்
பாங்கான அணிமவும் லகிமாத் தானே – போகர் 7000

இதுவே மூலதாரத்தின் இருப்பிடமாகுமாம் முக்கோணத்தின் கீழ் முனையில் உள்ள வாழைப் பூ போன்ற அமைப்பு எட்டு இதழ்களை கொண்டது. அந்த எட்டு இதழ்கள் ஒவ்வொன்றிலும்எட்டு விதாமான சக்திகள் அடங்கிஇருக்குமாம் அதன் நடுவே நந்தி நிற்பாராம். நந்திக்கு பிறகு கோடி சூரிய பிரகாசத்துடன் நற்சிவமும் இருக்குமாம்.

தானான மகிவாவும் கரிமா வோடு
தங்கும்ஈ சத்துவமும் வசித்து வமாகும்.
பூனான பிராத்திபிரா காம்யத் தோடு
புகழ்எட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே
ஏனான இதழாலே மூடிக் கொள்வார்
ஏற்றமாம் நந்தியைத் தான் காணொட்டாமல் – போகர் 7000

அந்த எட்டு சக்திகள், அணிமா, லகிமா, மகிமா, கலிமா, ஈசத்துவம்,வசித்துவம்,பிராப்தி மற்றும் பிராகாமியம்மாகும் அந்த அட்டமா சக்திகளுக்கான தேவர்கள் அங்கு நின்று நந்தியை பார்க்க விடாமால் எட்டு இதழ்களால் மூடிக் கொள்வார்களாம். இதுவே மூலாதாரத்தின் அமைப்பாக போகர் சித்தர் கூறுகிறார்

மூலாதாரத்தை எப்படி விழிக்கச்செய்வது என்று போகர் கூறியிருக்கிறார்  இந்த நிலைகளை அடைவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..

வானான வஸ்துவைநீ பானம் பண்ணி
வங்ஙென்று வாங்கியுமே கும்பித்தூதே  ( போகர் 7000 – 14)

பொருள்:

வஸ்துவை பானம் பண்ணி வங்கென்று கும்பித்து மூச்சை மேலும் செலுத்தி ஊது.

ஊதினால்என் வாசத்து இலகி ரியாலே
உலாவுவார் இதழ் எல்லாம் திறந்து விட்டுப்
போதினால் ஆயிசொன்ன ஏவல் கேட்பார்
புகுந்து பார் நந்தி கண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருடத் துக்கும்
வாசலையே திறவாமல் மூடிக் கொள்வார்
ஏதினால் இதற்குள்ளே வாசி மாட்டே

இடத்தோடில் வங்ஙென்ன உள்ளே வாங்கே  ( போகர் 7000 – 15)

பொருள்:

அப்படி ஊதினால் எட்டு சக்திகளும் இதழ்களை திறந்துவிடுமாம். அந்த எட்டு சக்திக்கான தேவர்கள் வெளியே வந்து உலாவுவார்கள் என்கிறார். நம் ஏவல்களையும் செய்வார்கள் என்று சொல்கிறார். எட்டு இதழ்களையும் திறந்தவுடன் நந்தி தெரிவாராம். அவரை கண்டதும் யோகம் வாய்க்கும் என்கிறார். இது நிகழவேண்டும் என்றால் இடைவிடாமல் சாதகம் செய்ய வேண்டும் பத்து வருடங்கள் கூட செய்ய வேண்டியது வருமாம்


வாங்கியே நந்தி தனில் யங்ஙென்று கும்பி
வலத்தோடில் சிங்ஙென்று உள்ளாக வாங்கித்
தாங்கியே யங்ஙென்று இருத்திக் கும்பி
தளமான தெருவாறும் வெளியாய்க் காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
தேங்கியே வல்லபையாம் சத்தி தாணும்
சிறந்திருப்பாள் பச்சைநிற மாகத் தானே – போகர் 7000 – 16

மூச்சை உள்வாங்கி நந்தியை நினைத்து யங் என்று கும்பித்துப்பார் வலுது நாசியில் மூச்சை விடும்போது சிங் என்று மூச்சை உள்ளே வாங்கி யங் என்று மூச்சை கும்பிப்பாயாக (கும்பகம் – சிறிது நேரம் மூச்சை நிறுத்துவது) . இப்படி செய்யும்போது ஆறு ஆதாரங்களுக்கும் வழித்தோன்றுமாம். மாணிக்க ஒளிப்போல் தோன்றுமாம் மூலத்தின் உணமையும் தெரியுமாம். பச்சை நிறமாக வலை தாய் சக்தி காட்சித்தருவாள் என்கிறார்.


பச்சைநிற வல்லபையைப் பணிந்து போற்று
பாங்கான ஆறுக்கும் பருவம் சொல்வாள்
மொச்சையாம் மூலமது சித்தி ஆனால்
மூவுலகும் சஞ்சரித்துத் திரிய வாகும்
கச்சைநிறக் காயமுமே கனிந்து மின்னும்
கசடு அகன்றே ஆறுதலங்கண்ணில் தோன்றும்
துச்சைநிற வாதம்சொன் னபடி கேட்கும்
துரியததின் சூட்சம் எல்லாம் தோன்றும் பாரே. – போகர் 7000 – 17

பொருள்:

பச்சை நிற வாலை தாயை பணிந்து போற்று, ஆறு ஆதாரங்களையும் கடப்பதற்கு உரிய காலத்தை உனக்கு உணர்த்துவாள் என்கிறார். மூலம் என்ற முதல் படி சித்தியாகி விட்டாலே மூவலகங்களிலும் சென்று திரியலாம் என்கிறார். உடல் கனிந்து மின்னுமாம். உடலில் படிந்துள்ள அனைத்து அழுக்குகளும் அகன்று ஆறு ஆதாரங்களும் கண்களுக்கு காட்சியளிக்கும் என்கிறார். துரியத்தின் சூட்சமம் எல்லாம் தெரியும் எனகிறார். துரியம் என்பது தலை உச்சியில் உள்ள ஓம் சக்கரம்.

மூச்சுபயிற்சி மூலமாக மூலாதாரத்தை விழிக்க செய்யும் முறையை இங்கு போகர் கூறுகிறார். நல்ல குருவை தேர்ந்தெடுத்து அதாவது இந்த மூச்சுபயிற்சியில் நன்கு தேர்ந்தவர்களின் மூலம் கற்று கொள்வதே சிறந்தது. மூச்சுபயிற்சி செய்பவர்கள் அனைவருக்கும் இது வாய்க்கும் என்றும் சொல்லமுடியாது ஆனால் உங்கள் உடல் நல்ல ஆரோக்கியம் அடையும். ஒழுக்கத்துடனும் தன்நலம் இன்றி வாழ்பவர்களுக்கு இது கண்டிப்பாக வாய்க்கும்.

image

நன்றி : தமிழ் கடல் இணையதளம்.தமிழ், விக்கிபீடியா 

பிடித்த படைப்பாளி – S.சங்கர நாராயணன் (எஸ் கே என் )

சங்கர நாராயணன் 

image

இவர் தமிழில் வெளியாகும்
அனைத்து அச்சு இதழ்களிலும் சிறுகதைகள், நாவல்கள்,
குறுநாவல்கள்,
கவிதைகள்
என்று நிறைய எழுதியிருக்கிறார். 

இவர் எழுதிய நூல்களில் “நீர்வலை”
எனும்
நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த
நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இவர் கணையாழியில் எழுதியவை
மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றன.  அவரது
வார்த்தைகளிலேயே

எனக்குப்
பின்னால் இரு ஆச்சர்யமான அடையாளங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டன. ஒன்று கணையாழி
எழுத்தாளன் என்பது. நான் கணையாழியில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். எழுத வந்த
சூட்டோடு பெருஞ்சுற்று இதழ்களில் பவனி வந்து கொண்டிருந்த போதுகளில்
,
நண்பர்களின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளின் பேரில்,
சரியான முடிவுதானா என்ற சம்சயத்துடன்,
எனக்கு ஓர் இலக்கிய முத்திரை கிடைக்க வேண்டும் என அவர்கள்
எதிர்ப்பார்ப்பின்படி
, கணையாழியில்
என் முதல் கதை
மறதி
எழுதினேன். திலீப்குமார் பார்வையில் அது பாராட்டுப்
பெற்றது. இலக்கியச் சிந்தனை அமைப்பின்
சிறந்த
மாதக்கதை
எனப்
பரிசு பெற்றது. அந்தக் கதையைப் படித்து இயக்குநர் பாலசந்தர் என்னிடம் நட்பு
கொண்டார்.
. தான் தயாரித்த ஒரு குமுதம் இதழில்
சிறப்புச் சிறுகதை வாய்ப்பும் தந்தார் சிகரம். சிநேகி தர்கள் வாழ்க. கணையாழிக்கு
நன்றி.

இவரது கதைக்களங்களும் கதை
மாந்தர்களும் நாம் எப்போதோ எங்கேயோ பார்த்தவர்களாகத் தோன்றும். சொல்லாடல்கள்  நறுக்.

உதரணமாக

வெளி
உபயோகத்திற்காக ஒரு சைக்கிள் வாங்கினார். வீடு உபயோகத்திற்காக கல்யாணம்
பண்ணிக்கொண்டார்.

பொதுவாக
அப்பாக்கள்  தங்கள் பிள்ளைகளை மெச்சிக்
கொள்வதில்லை. கணக்கில் 98
வணங்கினால் கூட இன்னும்
இரண்டு மார்க் என்ன ஆச்சு சனியனே
என்று
கத்துகிறார்கள்

வீட்டோடு இருந்து
வேலைசெய்யும் சிறுமி  ‘குட்டி’யின்
பார்வையில் சொல்லப்படும் வம்சம் என்னும் கதை இப்படிப்போகிறது.

image

அவள் வேலைபார்க்கும் வீட்டில்
தேவகி அக்கா, நடராஜன் அண்ணா, அப்பா அம்மா மற்றும் தாத்தா.

தேவகி அக்காவை பெண்பார்க்க
வருகிறார்கள். அதற்காக கேசரி, பஜ்ஜி, காப்பி எல்லாம் தயார் செய்கிறாள். இன்னும் தோய்த்த துணிகளை
காயப்போடவேண்டும். விருந்தினர் வரவிருப்பதால் குட்டியையும் உடை மாற்றிக்கொள்ளச்
சொல்கிறார்கள் போன வருடம் தீபாவளிக்கு இவர்கள்
எடுத்துக் கொடுத்த சின்னாளப்பட்டி பாவாடையும் அதற்கு மாட்சாக பிளவுசும்.

அந்த உடைகளைப் பார்த்து அவள்
தங்கை கோகிலா  

‘ஏய்.  நா ஒரே ஒரு தடவை போட்டுப்..  " என்று கேட்டு முடிவதற்குள்  ‘முடியாது’ என்று பதிலளித்ததும் ’ இந்த
தீபாவளிக்கு எனக்கு ஒன்னுமே எடுக்கலை’ என்று கோகிலா சொன்ன தும்   நினைவுக்கு வருகிறது.

மேலும் ஒவ்வொரு முறையும்
அம்மா வந்தால், இவளது உடைகளை ஊருக்கு கொண்டு போய்விடுவாள். மறுத்துச்  சொல்ல முடியாமல்  வெறுமனே
பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடிகிறது. ஒரு உபாயமும் செய்கிறாள்.

“தேவகி
அக்கா, நீங்க தப்பா நெனச்சிக்காட்டி …’

"என்னடி
சொல்லு”

“இந்த
ட்ரஸ்ஸ ஒங்க பீரோல வெச்சிக்கிங்க நா அப்பறமா வாங்கிக்கிறேன்”

“ஏன்
ஓம்  பெட்டில எடம் இல்லியா?”

“இல்ல..
அம்மா வராங்க இன்னிக்கு..”

பெண்பார்க்க
வருகிறார்கள்  அப்போது தாத்தா எழுந்திருக்க
முயலுகையில் எல்லோரும் ஒரே குரலில் “நீங்க உக்காருங்கோ” என்கிறார்கள்.

அப்போது தாத்தாவிற்கு
மாத்திரை கொடுக்க வேண்டும் என்று நினைவு படுத்துகிறாள் குட்டி.

எல்லாம் அப்பறம்
பாத்துக்கலாம் என்கிறாள் தேவகியின் அம்மா.

“இல்லம்மா..  நேரத்திற்கு…”  என்று சொல்லும் குட்டியை “எல்லாம்
எனக்குத் தெரியும்” என்று அடக்குகிறாள் தேவகியின் அம்மா.

பெண்பார்க்கும் படலம்
நடைபெறுகிறது. பாட்டு .. பேச்சுகள் எல்லாம்.  

காப்பி ட்ரேயுடன் வரும்
தேவகியின் மீது குட்டி மோதிவிட குட்டியின்
உடையெல்லாம் காப்பிக்கரை.  அவளிடம்
இருந்த ஒரே நல்ல உடை.

பின்னாலிருந்து
அம்மாவின் குரல் கோபத்தில் வெடித்தது

“சனியன்னா
இது? காப்பியப் பூரா கொட்டிடுத்து பார் .. ஏண்டி அறிவில்லை உனக்கு என்று விறுவிறு
என்று குட்டி தலையில் குட்டினாள் .

"பரவாயில்ல,
ஐய .. குழந்தையைப் போயி…” என்கிறார் மாப்பிள்ளையின் அப்பா.

“குழந்தையா?
வயசு எட்டாவுது. இங்க வந்து ஒரு வருஷமா இப்படித்தான் வேலை செய்யறா,   கொட்டினேன் கவுத்தினேன்னு ..”

“சனியனத்
தொரத்தி தலை முழுகணும்மா” என்றான்
நடராஜன்.

“விடுங்க
குழந்தயைப் போயி ..” என்றான் மாப்பிள்ளை

குட்டி
துணிகளுடன் மாடிக்குப் போகிறாள்.

மாப்பிள்ளைக்கு ரஸ்னா
கொடுக்க வேண்டும்  தேவகி “ரஸ்னா
எப்படிக் கலக்கணும்”  என்று
ரகசியமாக  அம்மாவிடம் கேட்கிறாள்.

ஏன்..  குட்டி இல்லியா?”

“மாடிக்குப்
போனா”

“இப்ப
எதுக்கு மாடிக்குப் போனா? வரட்டும், அதுக்கு ரொம்பத் திமிராப் போச்சு.. நீ இப்படி
வா, நா  கலக்கிறேன்”

பெண்பார்க்கும் பார்ட்டி விடை
பெறுகிறது. அவர்கள் போனதும் அம்மா ‘குட்டீ’ என்று கத்தினாள். கீழிறங்கி
வருகிறாள்  குட்டி.

“ஏண்டி அழுதியா?” என்கிறார் தாத்தா.

“இருந்தாலும்
எல்லார் மின்னாடியும் இப்டி அவள திட்டலாமா?” என்றார் அப்பா அம்மாவிடம்.

குப்பென்று
பொங்கிய அழுகையை  உதட்டைக் கடித்துக்கொண்டு
அடக்கி “நா கொட்டலம்மா” என்றாள் குட்டி.

“தெரியும்..
” என்றாள் அம்மா.

வரன் கூடி வருவதில்
எல்லோருக்கும் மகிழ்ச்சி. கேஸரியையும் பஜ்ஜியையும் பங்கிட்டு சாப்பிடுகிறார்கள்.

“பெண்ணே
நம்ம வீட்ல சமையலுக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாம வண்டிய ஓட்டிப் பிட்டே . இனி
சமையல் கத்துக்கணும்”

“போம்மா,
நா சமையல்லா பண்ணமாட்டேன்..”

“அப்ப
பூவாக்கு என்ன பண்றது பெண்ணே?”

“எதாவது
வேலைக்காரிய அமத்திக்க வேண்டிதான்”

“க்கும்,
நீ நெனச்ச ஒடனே அமஞ்சிருவாளா?  சின்ன
வயசுப் பெண்ணா, சுறுசுறுப்பா, திருட்டுப் புத்தி இல்லாத பொண்ணாக் கெடைக்கணும்..
கிடைக்குமா?”

“எந்தங்கச்சி
கோகிலா
இருக்கா!” என்றாள் குட்டி
எதிர்பார்ப்புடன்.

அந்தக் கடைசி வாக்கியம் தான் கதைத் தலைப்பை
உணர்த்துகிறது.

இவரது கதைகள், கவிதைகள்
மற்றும் கட்டுரைகள் ஞானக்கோமாளி
வலைப்பூவில் படிக்கலாம்.

இணைய தளம் – பிராஜக்ட்மதுரை .ஆர்க்

image


பழந்தமிழ் நூல்களை மின் எழுத்தில் மாற்றும் முயற்சிகளில் ஒன்றே பிராஜக்ட் மதுரை. புத்தகங்களைத் தட்டச்சு செய்தோ அல்லது அதன் பக்கங்களை பிம்பமாக அமைத்துப் பாதுகாப்பதே இதன் முக்கிய பணியாகும்.

500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் PDF முறையிலும் , யுனிகோட் வடிவிலும் , கிண்டில் வடிவிலும் இருக்கின்றன.

இதில் பிரசுரிக்கப்பட்ட  புத்தகங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகத்  தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்; தங்கள் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.

இது முழுக்க முழுக்க ஆர்வலர்களின் துணையோடு நடத்தப் படுகிறது.

நீங்களும் விரும்பினால் இதில் பங்கேற்கலாம்.

இணையதளம்: http://www.projectmadurai.org/

பிள்ளைத் தமிழ்

image

பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பாடல்
தலைவன் அல்லது தலைவியை முதலாக வைத்துப் பத்து பருவங்களை உருவாக்கி நூறு ஆசிரிய
விருத்தங்களால் பாடப்படுவது பிள்ளைத் தமிழ்.

இதில் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இரண்டு
வகையில் பாடுவார்கள்.


பெண்பால் பிள்ளைத் தமிழில் காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என பத்து பருவங்களை வைத்துப் பாடுவார்கள். 

1) காப்புப் பருவம்: இது இரண்டு மாதக் குழந்தையைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது.

2) செங்கீரை: ஐந்தாம் மாதம் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கரங்களால் நிலத்தில் ஊன்றி தலை நிமிர்ந்து முகம் அசைய ஆடுதல்.

3) தாலப் பருவம்: எட்டாம் மாதம் ‘தாலேலோ’ என்று நாவசைத்துப் பாடுதல்.

4) சப்பாணி: ஒன்பதாம் மாதம் இரு கரங்களையும் சேர்த்து கைதட்டும் பருவத்தைப் பாடுதல்.

5) முத்தப் பருவம்: பதினொன்றாம் மாதம், குழந்தையை முத்தம் தர வேண்டிப் பாடுதல்.

6) வருகைப் பருவம்: ஓராண்டு ஆகும்போது குழந்தை தளிர்நடை பயிலும்போது பாடுதல்.

7) அம்புலிப் பருவம்: ஒன்றேகால் ஆண்டு ஆகும்போது குழந்தைக்கு நிலவைக் காட்டிப் பாடுதல்.

பெண் குழந்தைகளுக்கான மற்ற மூன்று பருவப் பாடல்கள்: 

8) அம்மானை: குழந்தையை அம்மானை ஆடும்படியாகப் பாடுதல்

9) நீராடற் பருவம்: ஆற்று ஓடையில் நீராடும்படி பாடுதல்

10) ஊசல் பருவம்: ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டிப் பாடுதல்

ஆண் குழந்தைகளுக்கான மற்ற மூன்று பருவப் பாடல்கள்:

 

8. சிற்றில் இழைத்தல் :  அம்புலியை விளையாட அழைத்து அது வாராத போது கோபம் கொண்ட குழந்தை பெண்குழந்தைகள் கட்டிய சிற்றிலை சிதைக்கிறது. அப்போது அவற்றை அழிக்க வேண்டாம் என்று பெண் குழந்தைகள் பாடும் பாடல்கள் இவை.

9. சிறுபறை முழக்கல் : . இப்பருவத்தில் குழந்தை சிறு பறை முதலியவற்றைக் கொட்டிக்கொண்டு விளையாடும். அவ்வாறான கருவிகளைக் கொடுத்து  மகிழ்விப்பதே இப் பருவமாகும்.

10 சிறு தேர்ப்பருவம் : மரத்தாலான சிறிய தேரினை உருட்டி மகிழும்படி குழந்தையை வேண்டிப் பாடுவது இப் பருவமாகும். 

image

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப்  பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு குமரகுருபரர் என்ற புலவரால் பாடப்பட்டது. காலம் 17 ஆம் நூற்றாண்டு

இதன் கடைசிப் பாடலில்  ஊஞ்சலாடும் மீனாட்சியின்  அழகைச் சிறப்பிக்கிறார்.

 மீனாட்சி ஊஞ்சலின் வேகம்!
அதைவிட, மீனாட்சி காதில் இருந்த தோட்டின்  வேகம்!
அதைவிட, மீனாட்சியின்  கண்களின்  வேகம்!

அதைவிட, எங்கள் மனது வேகம் அம்மா!…..உன்னிடம் பறி கொடுத்த  மனது வேகமோ வேகம்!

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் அருமையான பாடல் இது!

குமரகுருபரர் பாடி முடிக்கவும், எங்கிருந்தோ ஓடியே வருகிறாள் ஒரு சுட்டிப் பெண்! திருமலை
நாயக்கர் மடி மேலே பிஞ்சுப் பாதங்களால் ஏறுகிறாள்! மன்னன் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பிஞ்சுக் கரங்களால் பறிக்கிறாள்! இறங்கி
வந்து, குமரகுருபரர் கழுத்தில் போட்டு விட்டு…..ஓடியே போகிறாள்!

ஆஹா ! என்ன இன்பம்! என்ன இன்பம்!! 

முடிந்தால் படியுங்கள் மீனாட்சியம்மன்  பிள்ளைத்தமிழ்!

projectmadurai.org யில்  43வது புத்தகம் இந்த பிள்ளைத்தமிழ். 

ஃபா – வியட்நாம் உணவு

image

CNN நடத்திய எது மிகவும் சுவையான உணவு ? என்ற வரிசையில் வியட்நாமின் ஃபா (PHO ) 2011 ல் 28 வது இடத்தில் இருந்தது.  ( நம்ம மசாலா தோசைக்கு 49 வது இடம் . முதல் இடம் தாய்லாந்தின் கறி )

ஃபா மிகவும் ஹெல்த்தியான உணவு!  மேலே சொன்னது              நான்-வெஜிடேரியன் 

ஃபா.

சரி! வெஜிட்டேரியன் ஃபா செய்வது எப்படி?

முதல்ல ‘பிராத்’ செய்யணும் !. அது என்னன்னு கேக்குறீங்களா?  Too many cooks spoil the broth என்று சொல்வார்களே அது தான். 

பிராத்  செய்ய ஒரு வாணலியில் பாதியா வெட்டின பெரிய வெங்காயம் 1-2,, இஞ்சி இரண்டையும்  நல்லா கரிய ர வரைக்கும் சூடு பண்ணுங்க .  அதை  எடுத்து அலம்பி  வைச்சுக்கங்க. பிறகு  பட்டை, பூண்டு , கொத்தமல்லி விதை , லவங்கம், ஸ்டார் அனைஸ் ( என்னன்னு யாருக்குத் தெரியும்?) எல்லாத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு போட்டுட்டு   வதக்கி நல்லா சூடு பண்ணுங்க ! பிறகு இஞ்சி வெங்காயம் கலவையை  ஸோய்  சாஸோடு  அந்தப் பெரிய பாத்திரத்தில் சேர்த்து நல்லா  கொதிக்க வையுங்க ! அப்பறம் 25 நிமிஷம் மிதமான சூட்டிலே சூடு பண்ணுங்க ! அதிலிருக்கிறதை புளி வடிகட்டற மாதிரி வடிகட்டி தெளிவை   ஒரு பாத்திரத்தில கொட்டி லேசான சூட்டில எப்பவும் சூடா இருக்கற மாதிரி வையுங்க! 

அத்தோட 

4/5  கேரட்டை கொஞ்சம் பெரிசா வெட்டி நல்லா வேகவைச்சு அந்த வடிகட்டின பிராத்தில  சேருங்க  !


பிராத் கொதிக்கும் அதே நேரத்தில் , அரிசி நூடுல்ஸை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கொதிக்கிற தண்ணியை அதில் முழுகும் அளவுக்கு  விடுங்கள். பிறகு அதை 20 நிமிஷம் ஊற விடுங்கள் !

பாட்சா அப்படிங்கர முட்டைகோஸ் மாதிரி இருக்கிற காயைக் கூட வேகவைச்சு வெச்சுக்கங்க !

சாப்பிடத் தயாரான போது ‘டோஃபூ’ என்று நம்ம ஊரு பன்னீர் மாதிரி இருப்பதை சின்ன சின்னதா  1" சைசுக்கு வெட்டி லேசா அதன் நிறம் மஞ்சளாகும் வரை  வதக்கி எடுத்து வைச்சுக்கங்க ! 

பிறகு நாலைஞ்சு கிண்ணத்தில (BOWLS) நூடுல்ஸை தண்ணீர் இல்லாமப்   போட்டு ,  டோஃபுவையும் தனித்தனியா போட்டு ரெடி பண்ணுங்க! இதிலே சூடா இருக்கிற பிராத்தைச் சேர்த்தால் ஃபா என்கிற சூப் ரெடி ! 

மிளகாய் சாஸ் , பாக்சாய் , பீன்ஸ் ஸ்ப்ரவுட் , எலுமிச்சம் பழம் ஹோய்ஸின் சாஸ் , பச்சிலை  போன்றவைகளை சீசனிங் மாதிரி சேர்த்துக் கொள்ளலாம்! 

நல்லா தெரிஞ்சுக்கங்க ! இது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடற சூப் இல்லே ! சாப்பாட்டுக்குப் பதிலா சாப்பிடற சூப்! 

அதனால தான் இது ஹெல்த்தி !

சும்மா சொல்லக்கூடாது! டேஸ்டாகவும் இருக்கும் . வயிறும் நிறைஞ்ச  மாதிரி இருக்கும் ! 

இங்கிலீஷில் ரெசிபி  வேண்டுமென்றால்  கீழே படிக்கவும்: 


 • To make the broth, heat a pan over high heat – add  halved onions ( 1- 2) and ginger (2" long) and dry roast it until the onions begin to char. Remove from heat and wash and keep aside.  Heat a large pot over medium-high heat. Add  cinnamon sticks, star anise, 1 tsp coriander seeds and cloves and dry-roast until there is aroma from the spices. Add the onions, ginger, stock and soy sauce and bring to a boil over high heat. Turn the heat down to medium-low, cover, and simmer for about 25 minutes. Strain into a clean pot and discard the solids. Taste the broth and add salt if necessary. Keep warm over low heat.  Boil 4 chopped carrots and add to the filtered broth.

 • While the broth is simmering, prepare the rice noodles. Place the noodles in a large bowl. Pour boiling water over the noodles to cover and soak for 20 minutes.

 • Cut Tofu into small pieces and saute in a pan until the outer layer turns brown.
 • When you are ready to assemble the soup, drain the soaked rice noodles and divide evenly among 4 to 6 large bowls. Distribute tofu among the bowls. Ladle the hot broth over the noodles. Serve the bowls of pho with the bok choy, scallions, bean sprouts, herbs, lime wedges, hoisin sauce and chili sauce on a separate platter so that everyone can season their own soup as they wish.
 • வால்யூ இன்வெஸ்டிங் – மதிப்பு முதலீடு – சீனு

  image


  வா சுப்பு !

  என்ன நீ மாசத்துக்கு அஞ்சாறு நாள் வீட்டிலேயே இருக்கிறதில்லை?

  ஆமாம். ஜூலை- ஆகஸ்ட் மாசத்தில ஷேர்கோல்டர்ஸ்  மீட்டிங் கொஞ்சம் நிறைய இருக்கும். அதனால வெளியூர் போயிட்டு வர்றேன் !

  நெட்-நெட் முதலீடு பத்தி நல்லா சொன்னாய். அது சம்பந்தமா படிக்கறதுக்கு ஏதாவது புத்தகம் இருக்கா? 

  கண்டிப்பா ! பெஞ்சமின் கிரஹாமோட ரெண்டு புத்தகம் இருக்கு.  .“The Intelligent Investor” மற்றும் “Security Analysis”. முதல் புத்தகம் வெளிவந்தது 1949ல. ரெண்டாவது புத்தகம் வெளிவந்தது அதுக்கு முன்னாடி. 1939ல. 

  அடேங்கப்பா !  இவ்வளவு வருஷமா ஆச்சு? இத்தனை நாள் யாரும் வேல்யூ இன்வெஸ்டிங்கை பயன் படுத்தலையா ? 

  உண்மையா சொல்லணும்னா இந்த 

  வேல்யூ இன்வெஸ்டிங் கொஞ்சம் ‘கடி’ சமாசாரம். போர் அடிக்கற  வேலை. தினமும் ஷேர் மார்க்கெட்டைப்  பாக்க வேண்டாம். ஆனால் நிறையப் படிக்கணும். சொந்தமா யோசிச்சு முடிவு எடுக்கணும்.  ஷேர் வாங்கினப்பறம் நாம எதிர்பார்த்த மதிப்பு வர வரைக்கும் சும்மா உக்காந்திருக்கணும். 

  சும்மா உட்கார்ந்து இருக்கறதுன்னா எனக்கும்பிடிக்கும். 

  ஆனா நிறையப் படிக்கணுமே ! சொல்லப்போனா அந்த 

  The Intelligent Investor ரொம்ப சின்ன புத்தகம் தான். ஆனா அதைப் படிக்க எனக்கு ரெண்டு மாசம் ஆச்சு. 

  “Security Analysis” ரொம்பப்  பெரிய புத்தகம். ரெஃபரென்ஸ் புத்தகம் மாதிரி. 

  நீ ரொம்ப தான் பயமுறுத்தறே ! சிம்பிளா படிக்க ஏதாவது புத்தகம் இருந்தா சொல்லேன் !

  உன்னை மாதிரி ஆட்களுக்காகவே ஒரு சிம்பிள் புத்தகம் இருக்கு.. படிக்கறவங்களுக்கு நல்லாவே புரியற மாதிரி இருக்கும். "தாந்தோ * இன்வெஸ்டர்” என்று அந்தப் புத்தகக்தின் பெயர். மோக்னிஷ் பாப்ராய் அப்படின்னு ஒரு இந்திய-அமெரிக்க ஆளு எழுதின புத்தகம். இந்த பாப்ராயைப் பத்திச் சுருக்கமா சொல்லணும்னா -வாரன் பஃப்ஃபேட் டோட சிஷ்யர்னு சொல்லலாம் !

  image

  வெரி  குட் ! இன்னொரு கேள்வி. எல்லோரும் இப்ப பிரபலமான கம்பெனியின் ஷேரை வாங்கறாங்களே ! இன்போஸிஸ், விப்ரோ , ஸ்டேட் பேங்க் இந்த மாதிரி கம்பெனி ஷேரை வாங்கினா பின்னாடி அதெல்லாம்  நல்லா விலை ஏறுமாமே ?

  நீ பேங்கில லோன் ஆபிசரா எத்தனை வருஷம் வேலை பாத்திருக்கே ? லோன் டார்கெட்டை அடையறது எவ்வளவு கஷ்டமுன்னு உனக்குத் தெரியுமில்லே ? 

  ஆமாம் 

  அதே மாதிரி எந்த ஷேர் எவ்வளவு விலைக்குப் போகும்னு .  யாராலும் சொல்ல முடியாது.  அது பின்னாடி போகாமலிருந்தா   சரி .வளர்ச்சி முதலீடு (growth investing ) அப்படின்னு ஒரு ம்யூச்சுவல் பண்ட் கூட இருக்கு. ஆனா அவங்க கிட்டே முதலீடு பண்ணினாலும் நம்ம பணம் வளராம அப்படியே இருக்கும். சமயத்தில குறையவும் செய்யும். 

  இப்போ நான் என்ன பண்ணணும்? 

  சும்மா தானே வீட்டிலே உட்கார்ந்துக்கிட்டு இருக்கே ! 

  “தாந்தோ இன்வெஸ்டர்” புத்தகத்தைப் படி. அடுத்த வாரம் வா. இன்னொரு புத்தகம் தர்றேன்.

  அதோட பேர் என்ன?

  நீங்களும் பங்குச் சந்தையில் ஜீனியஸ் ஆகலாம்!

  என்னைச் சொல்றியா?  தேங்க் யு .

  புத்தகத்தின் பேரைச் சொன்னேன். “ 

  நீங்களும் பங்குச் சந்தையில் ஜீனியஸ் ஆகலாம்!”

  அப்படியா? சூப்பர்!


  *  Dhandho (pronounced dhun-doe) is a Gujarati word. Dhan comes from the Sanskrit root word Dhana meaning wealth. Dhan-dho, literally translated, means “endeavors that create wealth.” The street translation of Dhandho is simply “business.” 

  கவியரசு வைரமுத்துவின் மிக அருமையான ஒரு பாடல் 


  கோவை  மாவட்டத்தில் உள்ள மின் மயானங்களில் எரியூட்டப்பட்ட பின்பு இந்தப்  பாடல் ஒலி  பரப்பபடுகின்றது .

   இந்தப் பாடலை இரு பாடகர்கள் மிக அருமையான நயத்துடன் பாடி இருக்கின்றார்கள் .

  இந்தப் பாடலைக் கேட்டபின்பு  பாடல் எழுதிய வைரமுத்துவுக்கோ அல்லது பாடிய விஜய்ஏசுதாஸ்  மற்றும் சுதாவுக்கோ நன்றி தெரிவியுங்கள்.

  image

  நண்பர்கள்,  மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்கள் மறைந்தபோது இந்தப் பாடலை அவருக்கு அஞ்சலியாக இசைத்தார்கள். அவரை நினைத்துக் கொண்டு மேலே உள்ள லிங்க்கில் இந்தப் பாடலைக் கேளுங்கள். உங்கள் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டும். 

  ஆங்கிலத்தில் தமிழ்ப் பாடல்

  image

  இவை என்னென்ன பாடல்களின் ஆங்கில வடிவம்  என்று கண்டுபிடிக்க முடியுமா? 

  1.  let it go –  let it go 

  2. aggressive man – brother  in law 

  brother in law hi brother in-law 

  3. she is the spring among the season

  4. wedding between one fish and another fish 

  5. i will protect you in my eyes come little krishna

  ..

  ..

  ..

  ..

  ..

  ..

  ..


  விடை:

  1. போனால் போகட்டும் போடா – பாலு ம் பழமும் 

  2. அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே  – சிவாஜி 

  3. காலங்களில் அவள் வசந்தம் – பாவ மன்னிப்பு 

  4. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் – சித்திரம் பேசுதடி 

  5. கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் சின்னக் கண்ணனை – திருமணம் என்கிற நிக்காஹ் 


  image

  எம்‌எஸ்‌வி யைப் பற்றிய ஒரு குட்டி ஆராய்ச்சி அடுத்த இதழில் வரும்!