அனுபவம் – சுபா சுரேஷ்

image


கல்லூரி வாழ்க்கை தந்த அனுபவங்களையும் ,
நண்பர்களுடன்
சேர்ந்து அடித்த லூட்டிகளையும், அசைபோட்டுக்
கொண்டே சூரியன் உதித்து பல மணி நேரமாகியும் படுக்கையை விட்டு எழுந்திருக்க
மனமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள் கண்மணி. அப்பொழுது அவளுக்கு,வாசலில்
அம்மா கீரைக்காரரிடம் பேரம் பேசும்; சத்தம்
கேட்டது.

”இந்த அம்மாவுக்கு வேற வேலையே
கிடையாது. எப்போ பார்த்தாலும் 50 பைசா குறை,1ரூபாய்
குறைன்னு காய்க்காரன் கீரைக்காரன் கூட சண்டை போடுறதே வேலை” என்று
மனதில் நினைத்துக் கொண்டே புரண்டு கொண்டிருந்தாள் கண்மணி.

”எப்படியோ பேரம் பேசி 1ரூபாய்
குறைச்சிட்டோம். கண்மணி மணி 9 ஆகுது,இன்னும்
எழுந்திரிக்க மனசில்லயா,படிக்கிறேன்
படிக்கிறேன்னு 21 வருஷமா வீட்டுல ஒரு வேலை செய்யாம
சுத்திட்டு இருந்த,சரி படிக்கிற புள்ளனு விட்டேன்.
இப்ப படிப்ப முடிச்சாச்சு,சீக்கிரம்
எழுந்திரிச்சு அம்மாவுக்குக் கூட மாட ஒத்தாசையா இருப்போம்ன்னு புத்தியிருக்கா. இந்த
லட்சணத்துல நாளைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்க ” என்று  கண்மணியின் தாய் புலம்பினாள்.

உடனே எழுந்த கண்மணி ”ஏம்மா
இப்ப கத்துற? அதான் நீ காய்க்காரன் கீரைக்காரன்
கூட பேசுற சுப்ரபாதத்த கேட்டுதான நான் தினமும் எழுந்திரிக்கிறேன். எந்த பொருள்
வாங்கினாலும் கஞ்சத்தனம் பண்ணிட்டு,எப்ப தான் நீ
இந்த பழக்கத்த விடப் போறியோ? ” என்று
சலித்துக் கொண்டாள்.  

”ஆமான்டீ,உங்கப்பா
வாங்குற சம்பளத்துல ஒவ்வொரு பொருள் வாங்கும் போதும் இப்பிடி பார்த்து பார்த்து
வாங்கி மிச்சப்படுத்தி தான் உன் கல்யாணத்துக்கு நகை சேர்த்துட்டு வர்றேன்.
குடும்பத் தலைவி பொறுப்பா இருந்தா தான் குடும்பம் உருப்படும். கல்யாணம்
பண்ணப்புறம் பாரு அப்ப தான் என் கஷ்டம் உனக்குப் புரியும். போற இடத்துல நீ எப்படித் தான் பொழைக்கப்போறியோ?”  என்ற
தாயிடம் , ”ஐயோ அம்மா காலங்காத்தால
ஆரம்பிச்சுடாத” என்று அந்த உரையாடலுக்கு
முற்றுப்புள்ளி வைத்தாள் கண்மணி.

காலங்கள் சென்றது. குடும்பம் ,கணவன்,குழந்தைகள்
என கண்மணியின் வாழ்க்கை மாறியிருந்தது. கண்மணியின் தாய்; அவளைப் பார்ப்பதற்காக ரயிலில் இருந்து இறங்கி  வீட்டுக்கு
ரிக்ஷாவில் வந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது வீட்டு வாசலில்,கண்மணி
காய்காரனிடம் ”என்ன பகல் கொள்ளையா இருக்கு?
½ கிலோ கத்திரிக்காய் 10 ரூபாயா?
அதெல்லாம்
முடியாது நான் 8ரூபாய் தான் குடுப்பேன்…….
” ,என்று பேரம் பேசிக்கொண்டிருந்தாள். இந்தக் காட்சியைக் கண்ட
கண்மணியின் தாய்,மகளது மாற்றத்தை எண்ணித் தன்னையும்
மறந்து வியந்து நின்றாள்.  

எப்பேர்ப்பட்ட ஆசானும் கற்றுத் தர முடியாத பாடத்தை
எல்லாம் அனுபவம் கற்றுத் தரும் என்பது உண்மை தான் .

image

பக்கம் ………………………………9