இந்தியா – அமெரிக்கா

image

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்தோம். அதன் விளைவு :

இந்தியா  பழைய உலகத்தைச் சேர்ந்தது. அமெரிக்கா புது உலகம். 

இந்தியாவில் சாலையில் வண்டிகள் எல்லாம் இடது  சாரி.  அங்கோ வலது சாரி. அதனால் இந்தியாவில் வண்டி ஓட்டுனர்கள் எல்லாம் வலதுபுறம் இருப்பார்கள். அமெரிக்காவில் இடது புறம். 

 இந்தியாவில் எலெக்ட்ரிக் சுவிட்செல்லாம்  மேலிருந்து கீழாகத் தான்  ‘ஆன்’’ செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் கீழேயிருந்து மேலே!

நம்ம ஊரில 240 வோல்ட்.பாத்தாலே ஷாக் அடிக்கும். அங்கே 110 வோல்ட் தான். 

இந்தியாவில் மெட்ரிக் சிஸ்டம் வந்து கிட்டத்தட்ட அரை   நூற்றாண்டு ஆயிற்று. அமெரிக்காவில் இன்னும் எடை பவுண்டில், பெட்ரோல் காலனில் , தூரம் மைலில், உயரம் அடியில்.  

இந்தியா குட்டி நாடு ஆகையால் ஒரே நேரம் தான் கொஹிமா விலிருந்து கட்ச் வரை. அமெரிக்கா அகலத்தில் பெரிசு. அதனால் மூணு நேரம் இருக்கும். 

இந்தியாவில் குளிர் வெயில் காலத்துக்கேற்ப நேரத்தை மாற்றுவதில்லை. அமெரிக்காவில் பகல் நேரம் மிச்சம் பிடித்தல் என்று சொல்லி  வெயில் காலத்தில் வாட்சை ஒரு மணி நேரம் .முன்னாடியும் , குளிர்காலத்தில் ஒரு மணி நேரம் பின்னேயும்  தள்ளி வைப்பார்கள்.

நம்ம ஊரில் எத்தனையோ கட்சிகள். அவர்கள் ஊரில் ரெண்டே ரெண்டு கட்சி. இங்கே பிரதம மந்திரி மற்ற மந்திரிகள் எல்லாம் உண்டு.  அங்கே ஒரே ஒரு பிரசிடெண்ட் தான். 

இந்தியாவில் காதல் கல்யாணம் கம்மி. அங்கே பெற்றோர் தங்கள் பிள்ளைங்களுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கிற வழக்கமே கிடையாது. 

நாம ஹோட்டலில் சாப்பிட்டுட்டு பில் கேப்போம். அவங்க செக் கேப்பாங்க. 

நம்ம காபியில நிறைய பால் கொஞ்சம் டிகாஷன். அவங்க ஊரில நிறைய டிகாஷன் – பால் கொஞ்சம்- இல்லைன்னா இல்லை. 

இங்கே மெடிக்கல் இன்சூரன்ஸ் ஆயிரத்தில ஒருத்தர் கிட்டே இருக்கும் . அங்கே அது இல்லாதவங்களே கிடையாது. 

இங்கே ஆதார் நம்பர் கட்டாயம் இல்லை. அங்கே எல்லாருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் உண்டு. 

நம்ம ஊரில பெரும்பாலும் பஸ் ரயிலில் போவோம். அங்கே கார்.. கார் தான். 

நம்ம ஊரில தண்ணி அடிச்சா தப்பு. அங்கே குடும்பத்தோட தண்ணி அடிப்பாங்க. தப்பே இல்லை. குடிச்சுட்டு வண்டி ஓட்டினா ரெண்டு இடத்திலும் போலீஸ் தான். 

போலீஸ் மாமூல் நம்ம ஊரில மாமூல். அங்கே அது சுத்தமா கிடையாது. 

இங்கே வீடுகள் எல்லாம் செங்கல் சிமெண்ட் தான். அங்கே எல்லாம் மர  வீடு தான்.

இங்கே வீடுகளில் தரை சிமெண்ட் அல்லது டைல்ஸ். அங்கே மரம் -அதுக்கு மேலே கார்பெட். 

இந்தியாவில் தேசிய மொழி மொத்தம் பதினாலு. அமெரிக்காவில் தேசிய  மொழி ஒன்றே ஒன்று – இங்கிலீஷ். 

இங்கே மொழிவாரி ராஜ்யங்கள் உண்டு. அங்கே கோலம் போடறமாதிரி நேர்கோடு போட்டு 50 ராஜ்யங்களா பிரிச்சிருக்காங்க!

இங்கே பெட்ரோல்,அதையே அங்கே கேஸ். ஆனால் நம்ம ஊர் கேஸை (சமையல்) அவங்களும் கேஸ் என்று தான் சொல்வாங்க. 

 நம்ம ஊரில மிலிட்டரி ஹோட்டலுக்குத் தான் மதிப்பு. மிலிட்டரி ஆட்கள் பென்ஷன் வாங்கக் கூட அலையணும். அங்கே மிலிட்டரி ஆட்களை ஏர்போர்ட் மற்ற பொது இடத்தில் பார்த்தால் கை தட்டி வரவேற்று மரியாதை செய்வார்கள். 

நம்ம ஊரில கு.கழுவ தண்ணி . அங்கே பேப்பர்தான். 

கை துடைக்க கர்சீஃப் நம்ம ஊரில . அங்கே டிஷ்யு .

நாம கிரிக்கெட் பைத்தியம். அவங்க பேஸ்பால்.

நாம நிறைய தண்ணி குடிப்போம். அவங்க பீர் கோக் தான். 

இங்கே ரோட்டில கிஸ் அடிச்சா பட்டையைக் கிளப்பிடுவாங்க. அங்கே அது மரியாதை. 

நம்ம ஊரில டைவர்ஸ் கம்மி. அங்கே அது அதிகம். 

கல்யாணத்துக்கு முன் உறவு இங்கே தப்பு. அங்கே அது சகஜம். 

நம்ம கால்பந்து விளையாட்டை அவங்க சாக்கர் என்று சொல்வாங்க. அவங்க அமெரிக்கன் கால் பந்து ஆட்டம் வித்தியாசமா இருக்கும் .

சாப்பாடு நாம் எப்பவும் கை தான். அவங்க ஸ்பூன் தான். 

இங்கே பெரும்பாலும் மனித உழைப்பையே நம்பித் தான் இருக்கிறது. அவர்கள் மெஷின், சிஸ்டம் எல்லாவற்றிற்கும்.

பக்கத்து வீடு தான் நம்ம குப்பைத் தொட்டி. அவங்க குப்பையைக் குப்பைத் தொட்டியில் தான் போடுவார்கள். 

மனித உரிமை என்றால் என்ன என்று கேட்போம் நாம். அவர்கள் அதுக்குத் தரும் மரியாதையே தனி. 

கோர்ட் கேஸ் எல்லாம் நமக்கு ரொம்ப கஷ்டமான வேலை. அவங்க தும்மினாக் கூட கேஸ் போடுவாங்க. 

இன்னும் நம்ம ஊரில குடும்பத்தில் சேர்ந்து வாழ்கிறோம். அங்கே பிரிந்து வாழ்வது தான் வாழ்க்கை என்று வாழ்பவர்கள். 

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவது நமக்குப் பிடித்த வேலை. அது அவர்களுக்குப் பிடிக்காத வேலை. 

நாம தான் இன்னும் எவர்சில்வர், பித்தளை பாத்திரங்கள் . அவர்கள் பீங்கான், கண்ணாடி தான். 

சொல்லாம கொள்ளாம யார் வீட்டுக் கதவை வேணுமுன்னாலும் நாம தட்டுவோம். அவங்க சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் சொல்லிக்காம வந்தா கதவைத் திறக்க மாட்டாங்க. 

 இவ்வளவு வேறுபாடு இருந்தாலும் நமக்கு அமெரிக்கா ரொம்பப் பிடிச்சிருக்கு. அவங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்து வியாபாரம் செய்ய ரொம்பப் பிடிச்சிருக்கு. 

இது தான் ஜெய்-ஜெய் (win -win ) தத்துவம்.

பக்கம் ………………………………14