எளிதில்லை கண்ணா ! — கோவை சங்கர்

    ( 5-9-2015 – கோகுலாஷ்டமி ) 

image
image

எளிதில்லை கண்ணா எளிதில்லை – கலியுகக் 

கள்ளரையே வெல்வது எளிதில்லை !


அழுக்குமனக் கம்சன் ஒருவனே அன்று – இங்கு 

அதட்டிவரும் கம்சர்கள் ஊரெல்லாம் இன்று 

அதர்மத்திலு மோர்தர்மம் இருந்தது அன்று 

அதர்மத்தில் அதர்மமே இருக்கிறது இன்று ! 


நீவென்ற நரகனின் மூச்செல்லாம் நஞ்சு – இங்கு 

உலவிவரும் நரகர்கள் உடம்பெல்லாம் நஞ்சு 

அன்பாலும் பண்பாலும் ஆட்கொண்டாய் அன்று 

அன்பிற்கும் பண்பிற்கும் விலையில்லை இன்று !


அரக்கர்கள் கொட்டத்தை அறவோடு ஒடுக்கிடவே 

ஒர்கண்ணன் அவதரித்தான் தரணியில் அப்போது 

கலியுக வில்லர்களை பூண்டோடு அழித்திடவே 

வீதிக்கொரு கண்ணன் தேவையடா இப்போது !


குழலூதும் கண்ணாநீ யுத்தசங்கு ஊதிடுவாய் 

தேரோட்டும் கண்ணாநீ விமானத்தில் வந்திடுவாய் 

அம்பெய்த கண்ணாநீ ஏவுகணை ஏவிடுவாய் 

வஞ்சகரும் வீழ்ந்திடவே ஹீரோவாய் ஜொலித்திடுவாய் !

பக்கம் ………………………………6