‘நடிகன்’-                                      ‘ஜி. பி. சதுர்புஜன்’

imageமுதலிலேயே சொல்லி விடுகிறேன்.  திடீர்த் திருப்பம் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.  என் நண்பனின் கதைதான் இது.

வெற்றி டிவி சேனலின் ’வெற்றி அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தன்
பிரத்யேக முழக்கத்துடன் தொடங்கிக் கொண்டிருந்தது.  உலகம் முழுவதும் லட்சோப லட்சம் குடும்பங்கள் அந்த ஞாயிறன்று
காலை கண்கொட்டாமல் தங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியுடன் ஐக்கியம் ஆகியிருந்தார்கள்.

“வருகிறது! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருந்த வெற்றி அவார்ட்ஸ்!  திறமை வாய்ந்த நடுவர்களாலும் உங்கள் தீர்ப்பைச் சொல்லும் வாக்குகளாலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெஸ்ட் ஆக்டர் (மேல்), பெஸ்ட் ஆக்டர் (ஃபீமேல்) , பெஸ்ட் டைரக்டர், பெஸ்ட் கேமராமேன், பெஸ்ட் காமெடியன் என்று திரைத்துறையிலுள்ள நட்சத்திரங்களை அடையாளம்
காட்டும் நிகழ்ச்சி இதோ வந்தே விட்டது!”

நடிக, நடிகையர்களும் மற்ற பிரமுகர்களும் பலவித பளபள கார்களில் விழா
நடக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து இறங்குவதையே பலவித கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு விதமான காஸ்ட்யூமில் ஒய்யாரமாக வந்து
இறங்கினார்.  உடலின் வேறு வேறு பகுதிகளை ஒவ்வொருவரும் அளவாகக் காண்பித்தது ரசிகர்களுக்கு விருந்தாக
அமைந்தது.

வந்த ஒவ்வொருவரிடமும், ’இந்த முறை உங்கள் படம் தேர்ந்தெடுக்கப்படுமா?  உங்களுக்கு அவார்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?  என்று கேட்பதும், அவர்களுடைய ட்ரேட் மார்க் ஸ்டைல்
பதில்களும் ரசிகர்களுக்குத் தீனி போட்டன.

பார்க்கப் பார்க்கப் போதாமலும், கேட்கக் கேட்கக் கிளர்ச்சியாகவும்
ரசிகர்களுக்கு இந்த ஆரம்பமே திகட்டாத விருந்தாக அமைந்தது.  யாருக்கு எந்த அவார்ட் கிடைக்கப் போகிறதோ என்ற பேரெதிர்பார்ப்பைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தன இந்தத் தொடக்க நிகழ்ச்சிகள்.

“வெற்றி டிவி ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! குட்மார்னிங் சென்னை!” என்று கறுப்புக்
கோட்டு ஆஸ்க்கர் கரகோஷமிட்டதும் கூட்டமும் அதை உற்சாக வெறியுடன் எதிரொலித்தது.  

ஒவ்வொரு துறைக்கும், நடுவர்களால் பரிந்துரைக்கப்பட்ட
நாமினீக்கள் யார், யார் என்பது திரையில் ஓடியது.  பின்னணியில் ஒரு அசத்தல் ஆங்கில வர்ணனைக்குரல் இதையே அறிவித்தது.  மாறி, மாறி, பழைய, புதிய நட்சத்திரங்கள் மேடைக்கு வந்து, பரிசு பெற்றவர்களின் பெயர்களை சஸ்பென்ஸ் கொடுத்து அறிவித்துச் சென்றார்கள்.

மேடைக்கு வந்து பரிசினை வாங்கிச் செல்லும்போது வெற்றி வாகை சூடியவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம்
நன்றி கூறிச் சென்றார்கள்.  சில சமயங்களில், முன்னரே பதிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களின்
பேட்டியும் காட்டப்பட்டது.  

எவ்வளவோ பேட்டிகள் இப்படி இடம் பெற்றாலும், எல்லாவற்றையும் மிஞ்சியது இளம்புயல் இனியவேந்தனின் பேட்டி தான்.  அப்படிப்பட்டவன் எனக்கு நண்பன் என்று சொல்வதில் எனக்குப் பிடிபடாத
பெருமைதான்.

ஆமாம்.  இரண்டே படங்களில் எகிறு எகிறென்று எகிறி, தமிழ்த் திரையின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிவிட்ட அதே இனியவேந்தன்தான்.  வெற்றி டிவியில் ஆங்க்கராக வந்து பலரின் இதயத்தைத் தன் புன்சிரிப்பாலும், சாமர்த்தியமான பேச்சாலும், இயல்பான டைமிங் காமெடியினாலும்
கொள்ளை கொண்ட இனிய வேந்தன், தனக்குக் கிடைத்த பட வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, கிடுகிடுவென்று புகழேணியில் ஏறி
உச்சத்தில் உட்கார்ந்து விட்டான்.  

பட்டி தொட்டியெல்லாம் இனியவேந்தன் ஹீரோவாக
நடித்து வெற்றி பெற்ற பாடல்கள்தான் முழங்கிக் கொண்டிருந்தன. ”தலப்பாக் கட்டு பிரியாணி! தரயா எனக்கு உன்ன நீ!”  என்ற குத்துப் பாட்டும், ”டாப்பு டாப்பு டக்கரு! நீ சூப்பரான ஃபிகரு! என்ற கேலிப் பாட்டும் ரசிகர்களின்
ரிங்டோனாக அலறியது.  தொலைக்காட்சிப் பெட்டியில் எந்தச்
சேனலைத் திருப்பினாலும், இனியவேந்தனும் அந்த பத்தாவது படிக்கும் மலையாள
நடிகையும் மலைமேடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு புகழ் துரத்தித் துரத்தி வந்தாலும்
இனியவேந்தன் பந்தா சிறிதுமின்றி, அதே பக்கத்து வீட்டுப் பையனைப்போல் பேசிக்
கொண்டும் பழகிக் கொண்டும் பவனி வந்தது, அவனது புகழை இன்னும் இன்னும் என்று பலமடங்கு
பெருக்கிப் பரப்பி விட்டது.

அந்த இனியவேந்தன் ஒரு லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற்று, நடுவர்களின் ஏகோபித்த பேராதரவையும் பெற்று, ’பெஸ்ட் ஆக்டர்’ விருதைப் பெற்றதில் ஆச்சரியம் ஏது?

ஆனாலும், அவனுடைய வீட்டிலேயே, முன்னரே பதிவு செய்திருந்த அந்த பேட்டி அவனுடைய ரசிகர்கள் அனைவரையும் உலுக்கி விட்டது.

“நான் விழுப்புரம்
பக்கம் இருக்கிற வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தவன்.  எங்கப்பா ஏழை விவசாயி.  எங்க அக்கா, அண்ணன், தங்கை, நான் – நாலு பேரு பசங்க.  ஒரு வேளை சாப்பாட்டுக்கே நாதியில்லாம கஷ்டப்பட்டோம்.

ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டமுடியாம டென்த்துல நின்னுட்டேன்…  எப்பிடியாவது பொழைக்கணும், தலை நிமிர்ந்து நிக்கணும்… குடும்பத்தைக் காப்பாத்தணும்னு
வேலை தேடி இந்த சென்னைக்கு வந்தேன்…

மொதல்ல ஒரு ஹீரோயின் வீட்டு வாசல்ல, கூர்க்காவா இருந்தேன்.  அப்புறம் டீ வாங்கிக் குடுக்கறது, போஸ்டர் ஒட்டறதுன்னு பல எடுபிடி
வேலைன்னு செஞ்சேன்…!

ஷூட்டிங்குக்கு வர்ரவங்க மிச்சம் வெச்சுட்டுப்
போன பிரியாணிக்காக நான் ஏங்கின காலம்கூட இருந்தது.  இதே சென்னைல  மவுண்ட் ரோடுல ராத்திரி சாப்பிடாம கூட படுத்து
இருந்திருக்கேன்!”

கல்லையும் கரைய வைத்திருக்கும் இனியவேந்தனின்
வேதனை நிறைந்த கடந்தகால வாழ்க்கை.
அவன் கண்களில் நீர் வழிந்து ஓடிய போது பார்வையாளர்களும் அழுதார்கள்.  இனியவேந்தன் பட்ட கஷ்டங்கள் அவர்கள் இதயங்களில்
முள்ளாகத் தைத்தது.

அடுத்த நாள் காலையில் நான் ’கிட்டா பாஸ்’ என்ற புதிய படத்தின் முதல்நாள்
ஷூட்டிங்கில் சாலிக்கிராமத்தில் ஒரு ஸ்பாட்டில் இருந்த இனியவேந்தனை சந்தித்து வாழ்த்துக்கள்
சொன்னேன்.  என்னுடைய நெடுநாளைய பள்ளி நண்பனாயிற்றே
அவன்!

’’ஏண்டா, இப்பிடி என்னென்னமோ கஷ்டமெல்லாம்
பட்டேன்னு புளுகின அந்த வெற்றி அவார்ட்ஸ் ரெக்கார்டிங்கில? நீ ஓரளவு வசதியான வீட்டுப் புள்ளதானடா?’’ என்றதற்கு, “டே! அதெல்லாம் ஒரு சென்ட்டிமெண்ட்
மச்சி! இப்பிடியெல்லாம் டூப் விட்டு பில்ட் அப் பண்ணாத்தான்
நம்ப மேல மக்களுக்கு கூட கொஞ்சம் பாசம் வரும்!  இதெல்லாம் ஹீரோ சீக்ரெட் மச்சி – ஒனக்கெங்க புரியப்போவுது?”, என்றானே பார்க்கலாம்.

நடிகன்டா!

பக்கம் ……………………………..13