
கோவையின் விடியல் பொழுது மிகவும் இனிமையானது .எதிரில் வரும் நபர்களைக் காண்பதற்குப் பனித்திரை சற்றே விலகவேண்டும் .அந்த அதிகாலைப் பொழுதில்,அந்த ரேஸ் கோர்ஸ் ரோடில்,நடந்து கொண்டே படிப்பது பாடங்கள் பசுமரத்தாணிபோல் மனதில்பதிந்து நிற்க துணைசெய்யும். நேரம் ஆக ஆக கதிரவனின் முகம் கண்ட பனித்துளிகள் விலகி பசும்புல்லும் பளிச்சிட்டன.மெல்ல காலை வெய்யில் கண்களை கூசவைத்தது. சரி இனி கல்லூரி விடுதிக்குச் சென்று குளித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான் அண்ணாமலை .
அரவங்காடு, கோவையிலிருந்து உதகமண்டலம் செல்லும் பாதையில் உள்ள அழகிய சிற்றூர் . சூரியவொளியைப் பார்த்தால் அவ்வளவு ஆனந்தமாயிருக்கும். காரணம் என்னேரமும் கடுங்குளிர் உள்ளதால் வெய்யில் மிகவும் இதமாக இருக்கும் . சாலையோர தேநீர் கடையில் நண்பருடன் தேநீர் அருந்திவிட்டு வேலைக்குப் போகத் தயாராகிக்கொண்டிருந்தான் கோபாலன் .
கோவை கல்லூரியில் வகுப்புமுடிந்து விடுதிக்கு வந்தவுடன்’ தன் பெயருக்கு ஒரு தபால் வந்திருந்ததைப் பார்த்த அண்ணாமலை அனுப்பியது யார் என்று பார்த்தான் . அட நம்ம சந்துரு !
அரவங்காடு அலுவலகத்துக்கு போன கோபாலனுக்கு தபால்காரர் ஒரு தபால் கொடுத்துவிட்டுச் சென்றார் . அனுப்பியது யார் என்று பார்த்தான் கோபால் . அட நம்ம சந்துரு !
அண்ணாமலை , கோபாலன், சந்துரு மூவரும் இணைபிரியா பள்ளித் தோழர்கள் . அண்ணாமலை, இளங்கலை பட்டப்படிப்பு முடித்து முதுகலைப் பட்ட படிப்புக்காகக் கோவை கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான் .கோபாலன் இளங்கலை பட்டம் முடித்து அரசாங்க வேலை கிடைத்து அரவங்காட்டில் வேலை பார்த்து வருகிறான் . சந்துருவின் தபால் பார்த்த இருவருமே மிகவும் மகிழ்ந்து போனர்கள்.
சமீபத்தில்தான் அண்ணாமலை அரவங்காட்டுக்கு வந்து கோபாலன் ரூமில் தங்கி குன்னூர் , உதகமண்டலம் எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு சென்றான்.கோபாலனின் அறை நண்பர் அமல்ராஜ் ஒரு மாற்றுதிறனாளி .இருகண் பார்வையும் இல்லாதவர் . அவருக்கு கண்ணாக இருந்து பார்த்துக்கொண்டான் கோபாலன் . அண்ணாமலையையும் அமல்ராசுக்கு மிகவும் பிடித்துபோய் விட்டது.
அப்படி சந்துரு தன் தபாலில் என்னதான் எழுதி இருந்தான் ?அண்ணாமலை, கோபாலன் இருவருக்குமே தான் விரைவில் மதுரையிலிருந்து கோவைக்கும், அரவங்காட்டுக்கும் வருவதாக எழுதி இருந்தான் .

சந்துருவின் தபாலை படித்ததிலிருந்தே அண்ணாமலையும் கோபாலனும் தங்களது பள்ளிபருவ நாட்களை எண்ணியும் அப்போது நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளையும் எண்ணிப்பார்த்து மகிழ்ந்தனர். பாபநாசம் பள்ளி ஆண்டு மலரை சிறப்பாக தயாரிக்க வேண்டுமென்று தமிழாசிரியர் சொன்னதை சிரமேற்கொண்டு பள்ளி இறுதி வகுப்பு மாணவர்கள் தங்கள் கதை கவிதை,கட்டுரை ஓவியம் எல்லாம் சேர்த்து சிறப்பான கையெழுத்து மலராக தயாரித்து பள்ளிஆண்டுவிழாவில் வெளியிட்டார்கள்.. அண்ணாமலை ,கோபாலன் , சந்துரு அதிலே முக்கிய பங்காற்றியதற்காக பாராட்டப் பெற்றார்கள் . அவ்விழாவில் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று கோபாலன் பரிசு பெற்றதும் , அப்போது நடந்த மாறுவேடப் போட்டியில் மதுவின் தீமையை விளக்கி நண்பர்கள் மூவரும் போட்ட குறு நாடகத்தையும் நினைத்து மகிழ்ந்தார்கள் .பள்ளி இறுதிவகுப்பு முடிந்ததும் எல்லோரும் மேல் படிப்புக்காக வெவ்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டாலும் இன்லண்ட் தபால் மூலமாக நலம் விசாரித்து மகிழ்வார்கள் .
கோவை கல்லூரி விடுதிக்கு ஒரு நாள் காலை சந்துரு வந்தான் .அவனை இன்முகத்துடன் கட்டிப்பிடித்து வரவேற்றான் அண்ணாமலை .விடுதி அறை நண்பர்களை அறிமுகம் செய்து அவர்களுடன் கோவை பூங்காவிற்கு அழைத்து சென்று சுற்றிபார்த்து மகிழ்ந்தார்கள் . நண்பர்களின் அனுபவங்களைநகைச்சுவையுடன் பரிமாறிக்கொள்ள அன்று இரவு விடுதி உணவகத்தில் அறுசுவை உணவு சந்துருவுடன் உண்டுமகிழ்ந்தனர் இரவு அண்ணாமலைஅறையில் தங்கியிருந்தசந்துரு, காலை எழுந்தவுடன் நான் மதுரை செல்லவேண்டும் என்றான். என்ன அவசரம் , கோவையில் தங்கிவிட்டுப் பிறகு அரவங்காடு சென்று கோபாலனையும் சந்தித்துச் செல்லலாமென்று அண்ணாமலை சொல்ல , இப்போது மதுரையில் ஒரு அவசர ஆடிட்டிங் வேலை இருக்கிறது . அடுத்த வாரம் அரவங்காடு சென்று கோபாலனை அவசியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு சந்துரு கிளம்பிவிட்டான் . சந்துருவை வழியனுப்பிவிட்டு விடுதி அறைக்குத் திரும்பிவந்து குளித்துவிட்டு, கல்லூரி கிளம்பும்போது கைகடிகாரத்தை கட்டுவதற்காக கடிகாரம் எப்போதும் வைக்கும் இடத்தை பார்த்த அண்ணாமலைக்கு அதிர்ச்சி . அங்கே அவனது கைக்கடிகாரம் இல்லை . அறையின் எல்லா இடங்களிலும் தேடினான் .கிடைக்கவில்லை. விடுதி அறை நண்பர்களும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை . இப்போது சந்துரு எல்லோருக்கும் முன்னால்எழுந்துஅதிகாலையில்அவசரஅவசரமாகக் கிளம்பியது அனைவருக்கும் சந்துருமேல்தான் சந்தேகம் உண்டாக்கியது . அண்ணாமலையும் அதை நம்பவேண்டிய நிலை . அத்தான் அன்பாக வாங்கிகொடுத்த விலைஉயர்ந்த கைகடிகாரம் இப்படி காணமல் போனது அண்ணாமலைக்குப் பெரிய அதிர்ச்சி.
ஒருவழியாக மனதைத் தேற்றிக் கொண்ட அண்ணாமலை , உடனடியாக அரவங்காட்டிலுள்ள நண்பன் கோபாலனுக்கு ஒரு கடிதம் எழுதினான் . அதில் சந்துரு கோவை வந்து தன்னைப் பார்த்துச் சென்ற விபரங்களையும் , கைகடிகாரம் காணாமல் போன விபரத்தையும் எழுதி ,அரவங்காட்டுக்கும் அவன் விரைவில் வருவான் , எனவே மிகவும் கவனம் என்று எழுதி உடனே தபாலை அனுப்பிவைத்தான் .மறுநாளைக்குமறுநாள் அரவங்காடு நண்பர் கோபாலனிடமிருந்து தபால் வந்தது . அண்ணாமலை தபாலை வாங்கி பிரித்துப் படித்தான் . “ அன்புள்ள நண்பர் அண்ணாமலைக்கு நண்பர் கோபாலன் எழுதியது . தாங்கள் நேற்று எழுதிய கடிதம் இன்று கிடைத்து விபரம் அறிந்தேன் . சந்துரு நேற்றே இங்கு வந்து இங்கு தங்கியிருந்து இன்று அதிகாலை மதுரை கிளம்பி சென்றுவிட்டான் . கோவையில் தங்கள் கைகடிகாரத்தை எடுத்துசென்றதுபோல் இங்கு எனது அறை நண்பர் அமல்ராஜ், தனது தம்பிக்காக வாங்கி வைத்திருந்த புத்தம் புதியகைக் கடிகாரத்தையும் எடுத்துச் சென்றுவிட்டான் .அறை நண்பருக்கு நான் வேறு கைகடிகாரம் வாங்கித்தருவதாகச் சொல்லியிருக்கிறேன் . சந்துரு இப்படி செய்வான் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. இப்படிக்கு உனது அன்பு நண்பன் கோபாலன்.”
பக்கம் ……………………………..7