குறைவே நிறைவு!

image

மினிமலிசம் அல்லது குறைவே நிறைவு என்ற கருத்து இப்போது வெகுவாகப் பாராட்டப்படும் அம்சமாக இருக்கிறது. ஏழை இந்தியன் இடுப்பில் கோவணத்தை மட்டும் கட்டிக்கொண்டு இருப்பவன் அதைவிட என்ன மினிமலிசம் செய்யமுடியும் என்று கேட்கலாம். 

ஆனால் இங்கே தான் நகைக்கடையில் முழி பிதுங்கும் அளவுக்குக் கூட்டம். மக்களுக்கு நாலைந்து வீடு, காலி மனைகள், வில்லாக்கள், ஆடி-டெஸ்லா கார்கள், 100 பவுன் நகை, 100 புடவைகள், டி.வி, விதவிதமான கம்ப்யூட்டர், செல் போன்கள்,காலணிகள்,  மற்றும் பணம், பதவி, அதிகாரம், புகழ், ஷேர் ,செக்ஸ், குடி ,  போதை  எல்லாவற்றிலும் ஆசை அதிகமாக இருக்கிறது.  

இவற்றில் ஏதாவது உங்களுக்குத் தேவையானதாக இருந்தால் அவற்றைப் பெறுவதில் தவறில்லை. அவை தேவை இல்லாமலிருக்கும் போதே அவற்றைப் பெற ஆசைப்படுகிறோமே அது தான் மினிமலிசத்திற்கு எதிரி. 

அப்படியென்றால் மினிமலிசம் என்றால் என்ன? 

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘மினிமலிசம் என்பது உங்கள் வாழ்வில் அதிகமாக இருப்பவற்றைக் குறைத்து  வாழ்வின் முக்கியமானவற்றைப் பெற உதவும்  ஒரு கருவி.’ 

அதிகத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்காமல் முக்கியமானவற்றிற்கு  முக்கியம் கொடுப்பதே மினிமலிசம் ஆகும். 

எது முக்கியமானது? 

நமக்கு சந்தோஷமும், திருப்தியும் , எல்லாவற்றிக்கும் மேலாக சுதந்திரமும் தரும் பொருள் ,செயலே நமக்கு முக்கியமானவை. 

இந்தக் குறைவே நிறைவு என்ற எண்ணம்  நமக்கு என்னென்னவெல்லாம் தருகிறது தெரியுமா? ? 

– அதிருப்தியை விரட்டுகிறது. 

– நேரத்தை மீட்டுத் தருகிறது 

– நிகழ்காலத்தில் நம்மை நிறுத்துகிறது. 

– நமது விருப்பங்களை நிறைவேற்றுகிறது 

– நமது கடமையை  உணர்த்துகிறது 

– உற்பத்தியைப் பெருக்கி உபயோகத்தைக் குறைக்கிறது 

– சுதந்திரத்தை உணர வைக்கிறது. 

– மன – உடல் நலத்தைப் பாதுகாக்கிறது 

– தேவையில்லாதவற்றை அப்புறப்படுத்துகிறது 

– வாழ்வின் குறிக்கோளைக்  கண்டுபிடிக்கிறது 


மொத்தத்தில் மினிமலிசம் நமக்கு  வாழ்வின் இனிமையை பொருள்களின் மூலம் இல்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கிடைக்க வழி செய்கிறது.  


நமது மகாத்மா காந்தி அவர்களைப் போல குறைவில் நிறைவு கண்டவர் யாருமில்லை. அவருக்கென்று சொந்த வீடு கிடையாது. அவரிடம் இருந்த பொருள்கள் பத்துக்கு மேல் அதிகமில்லை. கொஞ்சம் துணி, கொஞ்சம் பாத்திரங்கள், தடி, கண்ணாடி,செருப்பு , பாக்கெட் கடிகாரம் இவையே அவரின் சொத்து. 

image


அவர் தேவைக்கு அதிகமாக எதையும் வைத்துக் கொள்வதில்லை. அவர் குறைவான உணவை உண்டதால் என்றும் ஆரோக்கியமாகத் திகழ்ந்தார். குறைந்த தேவையான உடையையே அணிந்தார். எளிய வாழ்க்கைமுறையை அனுசரித்தார். எப்போதும் மகிழ்ச்சியுடன் மன அழுத்தம் இன்றி இருந்தார். நல்ல பேச்சாளர்-எழுத்தாளராக இருந்தாலும் சுருக்கமாகப் பேசுவது – எழுதுவதே அவரது வழக்கம். 

இவரை விட மினிமலிசத்திற்கு நல்ல உதாரணம் கிடைப்பது அரிது.

small is beautiful என்று  சொல்வதைப் போல  நாமும் நமது தேவையில்லா ஊளைச் சதையைக் குறைப்போம்!

முதலில் நமது  உடமைகளைப்  பட்டியல் போடுவோம். அவற்றில் முக்கியமில்லாதவற்றை விலக்கி எறிவோம். 

கொஞ்சம் கொஞ்சமாக இனிமையான வாழ்க்கை வாழ ஆரம்பிப்போம்! செய்வீங்களா என்று கேட்கவில்லை, செய்வோமா?

page