தவிப்பு – சேது கோபிநாத்

image

குவிகம் இலக்கியவாசல் சிறுகதைச்  சிறுவிழாவில் படிக்கப்பட்ட கதை!

ரங்கசாமி
அன்று காலையிலிருந்து கடுமையான மன இறுக்கத்துடன் காணப்பட்டார். மூலை, முடுக்கு,
பீரோ, பெட்டி, பரண், படுக்கை, புத்தக அலமாரி … எல்லாவற்றையும் குடைந்து குடைந்து
எதையோ தேடிக் கொண்டிருந்தார். ஏன், குப்பைக்கூடை, செருப்பு அடுக்கும் பெட்டி
ஆகிய   எதையும் விட்டு வைக்கவில்லை! அதை
எங்கே வைத்தோமென்று நினைவிற்கு வரவில்லை. எங்கே தேடுவது என்றும் புரியவில்லை!  தன் நினைவாற்றல் குறைவைத் தானே நொந்து
கொண்டார். 

எழுபது வயதான அவருக்கு இரத்தக்கொதிப்பு, சக்கரை வியாதி, மூட்டு வலி,
பார்வைப்பிரச்சினை, வழுக்கை … எதுவும் இல்லை! சற்று நரைத்த தலை மட்டும் உண்டு.
ஆனால், அவ்வப்போது வீட்டுச்சாவி, பேனா, செல்போன் போன்றவற்றை எங்காவது மறந்து
வைத்துவிட்டுத் தேடுவதுண்டு. பிறகு கிடைத்துவிடும். 

இம்முறை அவர் எங்கோ மறைத்து
வைத்தது ஒரு புத்தகம்! தினமும் பூங்காவில் அவர் சந்திக்கும், அரசு பணியிலிருந்து
ஓய்வுபெற்ற நண்பர், உலகநாதன் சில நாட்களுக்கு முன் படிப்பதற்காகத் தந்த புத்தகம்.  எப்படிக்  காணாமல் போயிருக்கும்? தன்னைத்தானே திட்டிக் கொள்வதைத் தவிர வேறு என்ன
செய்ய?

அவருடைய மகனும்
மருமகளும் ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் அலுவலர்கள். வீட்டுக்குச் சற்றுத்
தாமதமாகத்தான் திரும்பி வருவார்கள். ஐந்து வயதுப் பேரன் ஸ்கூல் வேன் மூலம் மாலை
நான்கு மணிக்கே வந்து விடுவான். பிறகு அவன் பெற்றோர் வரும்  வரை, தாத்தாவும் பாட்டியும்தான்
கவனித்துக்கொள்வர். அவரது மனைவி சில நாட்கள் முன்பு ஊருக்குப் போயிருந்தாள்.
எப்போது வருவாளோ..? பயணத்தின் போது படிப்பதற்காக சில பத்திரிக்கைகளை
எடுத்துக்கொண்டு போனாள். உலகநாதன் தந்ததையும் எடுத்துச் சென்றுவிட்டாளோ..?  

இருக்காது! மேசையை ஒட்டித் தரையில் இருந்த
குப்பைக் கூடையில் அது விழுந்து, நேற்று வேலைக்காரி அதையும் குப்பையோடு எடுத்துச்
சென்றாளோ…? கடவுளே! உலகநாதன் ஜாலியான ஆள்தான். ஆனால், வேறு நண்பர் அவரிடமிருந்து
வாங்கிச் சென்ற புத்தகத்தைத் திருப்பித்தர தாமதமாயிற்று என்று, உலகநாதன் சென்னைத்
தமிழில் ‘ஓங்காரமாக’த் திட்டியது, ரங்கசாமியின் நினைவிற்கு வந்து பயமுறுத்தியது.
இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!

வேலைக்காரி
வந்தாள். பாய்ந்து சென்று அவளிடம், “செல்வி, நேத்து சாயங்காலம் என் ரூமில
இருக்கிற குப்பைக்கூடையைக் கிளியர்
பண்ணினியே, அதுலே புஸ்தகம் ஏதாவது இருந்ததா?” என்று கேட்டார்.
அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும், ஒரு புத்தகம்  குப்பைக்கூடையில் கிடந்தால் அதன் மதிப்புத்
தெரியாமலா இருக்கும்? அவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டு “சாமி, உங்களுக்கு
வயசாயிடுச்சு, மறதியும் சாஸ்தியாயிடுச்சு.
எங்கேயோ வச்சிட்டு எங்கேயோ தேடுறீங்க!” என்று கேலியாகச் சொல்லிவிட்டு
மும்மரமாகப் பாத்திரம் தேய்க்கத் தொடங்கினாள்.

 ரங்கசாமியின் கோபம்
மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை ஏறிவிட்டது. மறதியைப் பற்றிச் சொன்னால் பரவாயில்லை,
வயதாயிற்று என்று கேலி செய்கிறாளே?

ஆங்!
இப்போதுதான் நினைவிற்கு வருகிறது. பழைய பத்திரிக்கைகள், பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் எல்லாவற்றையும் எல்லா அறைகளிலிருந்தும் சேகரித்து, மருமகள் நேற்று எடைக்குப்
போட்டாளே! அந்தக் குவியலோடு போயிருந்தால் ….? செல்வியிடம் வீட்டைப்
பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு, தெருக்கொடியிலுள்ள பாண்டியன் கடைக்கு ஓடினார்.
ரங்கசாமியின் பதற்றதைப் பார்த்து, அவர் தேடி வந்தது ஒரு புத்தகம் என்றறிந்தவுடன்,
“ஐயா, நீங்களே தேடிப் பாருங்க, எனக்கு இங்கிலீசு வராது!” என்று
கூறினான். ஊஹூம்! வெறுங்கையுடனும், பெருந்தும்மல்களுடனும் வீடு திரும்பியதுதான்
மிச்சம்!

இரண்டு
நாட்களுக்கு முன்பு, பக்கத்திலிருந்த
“லெண்டிங் லைப்ரரி” லெட்சுமனனுக்கு பல ஆங்கில மாத ஏடுகளின்
பிரதிகளை நன்கொடையாகத் தந்தோமே! ஆம்… அவற்றோடு இதுவும் போயிருக்க வேண்டும். மதிய
உணவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த லெட்சுமனனைச் சரியான தருணத்தில் பிடித்துக்
கொண்டார். “ சார், கவலைப்படாதீங்க, நீங்க குடுத்த பதினெட்டுப்
புத்தகக்களையும் இன்னும் கட்டுப் பிரிக்காமல் வச்சிருக்கேன்!” என்று கூறி
அவர் வயிற்றில் குளிர்ச்சியான ஆவின் பால் வார்த்தான். ஆனால் ரங்கசாமி தேடியது
கிடைக்கவில்லை!

அன்று மாலை
மகனும் மருமகளும்  சற்று சீக்கிரமே வீடு
திரும்பிவிட்டார்கள். ஒரு பார்டிக்குப் போகவேண்டுமாம்.  பேரனும் பள்ளி வேனில் திரும்பி வந்து விட்டான்.
வழக்கம் போல் பூங்காவிற்குச் செல்லாமல் எதையோ தேடிக் கொண்டிருக்கும் ரங்கசாமியைப்
பார்த்து, அவர் மகன், “அப்பா! அவ்வளவு சீரியஸா என்னதான் தேடுறீங்க? நான்
தேடித் தரவா?” என்று கேட்டவுடன் பதறிப்போய், “வேண்டாம் ராஜா! நானே
தேடிக்கறேன் ஆபீஸிலேருந்து களைச்சுப்போய் வந்திருக்கீங்க, பாவம்!” என்று
கூறிவிட்டுத் தேடுதலைத் தொடர்ந்தார். 

பள்ளியிலிருந்து வந்தவுடன், தன்னை
அள்ளியணைத்துக் கொஞ்சி, ‘நேர் காணல்’ தொடங்கும் தாத்தாவிற்கு இன்று என்ன ஆயிற்று?
பேரன் பிரபு திகைத்து நின்றான். ராஜா பாத்ரூமிற்கும், அவன் மனைவி ராதா
அடுக்களைக்கும் சென்றுவிட்டனர்.

“தாத்தா!
என்ன தேடுறீங்க?” பிரபு கேட்டான்.

“பிரபுக்
கண்ணா! ஒரு புஸ்தகத்தை எங்கேயோ வச்சிட்டு மறந்து போயிட்டேம்ப்பா. அந்த மீசைக்காரத்
தாத்தா உலகநாதன் என்னைப் பார்க்க வருவாரே, அவருக்குத் திருப்பிக் கொடுக்கணும்!”
அழாத குறையாகப் பேரனிடம் முறையிட்டார். பிரபுவும் தாத்தாவிற்கு உதவியாகத் தேடித்
பார்த்துவிட்டு, எந்தெந்தப் புத்தகங்களையோ கொண்டுவந்து தந்தான்.

வழக்கமாகத்
தன்னை மாலை ஐந்து மணிக்கு விளையாடுவதற்காக பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் தாத்தா
இன்று ஏதோ தேடிக் கொண்டிருக்கிறாரே!  பூங்காவிலுள்ள
‘கிழவர் கிளப்’ தினமும் மரத்தடியில் கூடும். கிழவர்கள் வம்பு பேசிக் கொண்டிருக்க,
தான் மட்டும் சற்று நேரம் அங்கு விளையாடிவிட்டு வீட்டுக்கு வருவதுண்டு. பாட்டி
ஹார்லிக்ஸ் கலந்து கொடுப்பார். குடித்துவிட்டு ‘டி.வி’யில் ‘சோட்டா பீம்’
பார்பதுண்டு. இன்று யாருக்குமே ‘மூடு’ சரியில்லையே! பாட்டியும் ஊரிலில்லை.

இடிந்துபோய்ப் படுக்கையில் சாய்ந்துகொண்டு, மூளையைச் சொறிந்து கொண்டிருந்த ரங்கசாமியிடம்,
“தாத்தா! இன்னிக்காவது அலிபாபா கதையை முழுசாப் படிச்சுச் சொல்லுங்க!”
வாழையிலை போன்ற ஒரு புத்தகத்தை நீட்டினான். வேண்டா வெறுப்புடன் அதை வாங்கி, “பிரபு,
நீ கிச்சனுக்குப் போயி, அம்மா போட்டுத் தர்ற ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வா!”
என்று அவனை அனுப்பிவிட்டு, அலிபாபா படக்கதைப் புத்தகத்தை மேஜை மீது
விட்டெறிந்தார். அதற்குள்ளிருந்து ‘தொப்’பென்று அவர்  தேடிக்கொண்டிருந்த புத்தகம் விழுந்தது.

யாருக்கும்
தெரிந்துவிடக் கூடாதென்று, மனைவி ஊரிலில்லாதபோது, பேரனுடைய புத்தகத்துக்குள் ஒளித்து
வைத்துப் படித்துக் கொண்டிருந்த அந்த ஆங்கில மாத ஏடு- ஹ்யூ ஹெஃப்னர் வெளியிடும்
‘அடல்ஸ் ஒன்லி’ பத்திரிக்கையான ‘ப்ளே பாய்’ !

திருடனுக்குத்
தேள் கொட்டினால் கத்தவா முடியம்… ?

page