தி ஜ ரங்கநாதன் –  எஸ் கே என்

image

“கதையின் ஒரோர்
அம்சமும், ஆரம்பம், நடு, முடிவு ஒவ்வோர் அமைப்பும், ஒவ்வொரு சொல்லும், கதையின்
சுவாரஸ்யத்திற்கு, திட்டத்திற்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்தபின் ‘பூ!
இவ்வளவுதானா? இதை ஏன் படித்தோம்?’ என்ற உணர்ச்சி படிப்பவருக்கு ஏற்படக் கூடாது.
கதையின் முடிவு ஏமாற்றமாயிருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாயிருக்கவேண்டும்.
இதுதான் முக்கியம்.”

தஞ்சை மாவட்டம் திங்களூரைச்
சேர்ந்த திரு ரங்கநாதன் படித்தது என்னவோ நான்காவது வரை தான். கணிதத்திலும் அறிவியலிலும்
ஏற்பட்ட ஆர்வத்தால் ஆங்கிலம் பயின்றவர். திண்ணைப்பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா
என்று பல பணிகள் செய்தவர்.

ஒரு கட்டுரையாளராகத்
தொடங்கிய தி.ஜ.ர, கவிதைகள் கதைகளும் எழுத ஆரம்பித்தார். ஒரு பத்திரிக்கையாளராக    ‘சமரபோதினி’  யில் தொடங்கி சில பத்திரிக்கைகளில்  பணியாற்றி , ‘மஞ்சரி’ இதழ் ஆரம்பித்ததிலிருந்து
சுமார் நாற்பது ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்தார். மொழிபெயர்ப்புகளும்
செய்துள்ளார். பல சிறந்த சிறுகதைகள் எழுதியிருந்தாலும் இவரது ‘பொழுது போக்கு’, ‘ஆசிய
ஜோதி ஜவஹர்’, ‘இது என்ன உலகம்’, ‘புதுமைக்கவி பாரதியார்’ போன்ற  கட்டுரைத் தொகுதிகள் மிகப் பிரபலமானவை. பிரதமராயிருந்த
ஜவஹர்லால் நேருவிற்கு   ‘ஆசிய ஜோதி
ஜவஹர்’  கட்டுரைத் தொகுப்பைத் தானே
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து. (பிரசுரத்திற்காக  
அல்ல. தமிழ் தெரியாத நேரு படிப்பதற்காக) அனுப்பியிருந்தார்.  

எளிய சம்பவங்களையும் எளிய மனிதர்களையும் நகைச்சுவை
இழையோட எழுதி வந்த இவரது ‘கன்னியின் பிரார்த்தனை ‘கதை இப்படிப் போகிறது.

 

அந்தப் பத்திரிக்கைக்காரருக்கு, ஒரு வியாபார நண்பர் .காக்கையா செட்டியார் மூர்வி மார்கெட் என்னும் கடையின்
சொந்தக்காரர்.

‘அந்த
ஊரில் மனப்பூர்வமாய் நாகரிக வாழ்க்கை நடத்த முயன்று கொண்டிருக்கக் கூடிய எந்த
மனிதனும்  காக்கையா செட்டியாரின் கடைக்கு
வந்துதான் தீரவேண்டும்.’

‘காருக்கு
நல்ல டயர், நவீன பாதரட்சைகள் முதல் மனிதனுடைய நாகரீகத்தை எவ்விதத்திலும்
மலினமடையாமல்
காத்து வரக்கூடிய ரெப்பிரிஜிரேடர் முதல் சேப்டி
பின், சில்க்  ரிப்பன்கள்
வரைக்கும்
சகல சாமான்களும் காக்கையா கடையில் எந்நேரத்திலும் விற்பனைக்குத் தயார்.’

தவிர காக்கையாவும் ஒரு
வியாபார நிபுணர். அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டுப் போன ஒரு துரை அவருக்குச்
சொல்லிக்கொடுத்த ரகசியம். ஒரு பிச்சைக்காரனிடம் நாற்பது ரூபாய்ச் சாமான் விற்கும்
சாமர்த்தியம். (அது ஒரு ஆர்மோனியப் பெட்டி என்றும் அதை வாங்கியதன் மூலம் அந்தப்
பிச்சைக்காரனின் வருமானம் பெருகியது என்றும் சொல்கிறார்)

ஒருநாள், காமிரா என்று
சொல்லப்படும் ஒரு ’ ஒற்றைக்கண்’ சாமான்கள் பல கண்சிமிட்டிக்கொண்டு இருந்தன. ‘பம்பாயிலிருந்து
பிளேனில்  வந்தது’, ‘இந்தப்படம் இந்தக்
காமிராவினால் என் எட்டு வயது பையன் எடுத்தது’ என்றெல்லாம் கூறுகிறார் காக்கையா.
“வியாபாரம் என்றாலே புளுகு தான்’ என்று அவரே கூறுவாராம்.    

மிகவும் உபயோகமாயிருக்கும்,
வெள்ளைக்காரன் தேசத்திலெல்லாம் போட்டோ எடுக்கத் தெரியாதவன் பத்திரிக்கைத்
தொழிலுக்கே லாயக்கில்லாதவன் என்றெல்லாம் சொல்லி, தன் பத்திரிக்கைக்கார
நண்பரிடமே  ஒரு காமிராவை விற்றுவிடுகிறார்.

‘காமிராவின்
விலை இருபத்து நாலே மூணுவீச அரை வீசமாய்
திகைந்தது. அதோடு போயிற்றா பிளேட் , தட்டு, தங்க மருந்து, பிம்பம் திரட்டும்
திரவகம் என்று வேறு என்ன என்னவோ சாமான்களையும் சுமத்திவிட்டார்’

குழந்தை கோகிலத்திற்குக் காப்பு வாங்க வைத்திருந்த பணம்
அம்பேல்.

தொடர்ச்சியாகப்
பத்திரிகைகளில் வெளியாகும் புகைப்படப் போட்டிகளில் கலந்துகொண்டு போட்ட பணத்தை
எடுத்துவிட முடிவு செய்துகொள்கிறார்.

இவரது போட்டோ பிடிக்கும்
திறனை வளர்த்துக்கொள்ள இவரது குடும்பத்தினரைப் படம் பிடிக்கிறார். இருட்டறை தயார்
செய்து கொள்கிறார். காமிராப் புத்தகத்தின் படம் அலம்பும் அத்தியாயத்தை பல முறை
படித்து செல்லுலாயிட் மருந்துத் தண்ணீரில் பிளேட்டை வைத்து, ஊஞ்சலாட்டுவது போல்
அசைத்து .. கடைசியில் படம் இரண்டும் ஒரே சூன்யம்.

தவறு இவருடையதல்ல. அந்தப்
புத்தகத்தில் வீட்டுக்குள் எடுக்கலாகாது என்று எங்கும் காணோம். ‘வெளியில் வைத்து
எடுக்க வேண்டும் என்ற வாக்கியம் எங்கோ ஒரு மூலையில்  ஒளிந்து கிடந்தது. காக்கையாவின் அறிவுரையின்
பேரில் ஒரு நல்ல போட்டோக்காரனை வைத்து பிளேட்டுகளை அலம்பித்தர வைக்கிறார்.

மல்லிகைப் புதர் அருகே
வைத்து எடுத்த குழந்தை கோகிலத்தின் படத்தை கழுவிக் கொடுக்க போட்டோக்காரரிடம்
கொடுக்கிறார்.  

‘குழந்தையை
நீங்கள் கரையான் புற்றருகில் நிறுத்தியிருக்கலாகாது சார். குழந்தை பயந்துகொண்டு
ஒரே ஆட்டமாய் ஆடியிருக்கிறது’ என்றார் அந்த கைதேர்ந்த போட்டோக்காரர்.

அது தூர நிர்ணயத்தின் விஷயம்
என்று புரிகிறது இவருக்கு.

தீபாவளி வந்துவிடுகிறது.
குழந்தைக்கு வாங்க வேண்டிய காப்புக்கான பணம் தான் காமிரா ஆகிவிட்டதே. வருவது
வரட்டும் என்று இரண்டு ரூபாய்க்கு அருமையான கில்ட் காப்பு வாங்கி
வைத்துவிடுகிறார்.

அந்த தீபாவளிக்குக்
காரியங்கள் செய்வதற்கு, மனைவியின் பிடிவாதத்தின் பேரில்,  உதவிக்கு ஒரு பாட்டியை ஏற்பாடு செய்து
கொள்கிறார்கள்.

அந்தப் பாட்டியை ஒரு படம்
எடுக்கலாமே என்கிறாள் மனைவி.

இந்தக்
குறும்பு வார்த்தையைக் கேட்டு வருத்தப்படவேண்டியவன் நானா, அந்தப் பாட்டியா?
நான்தானே. ஆனால் அதற்கு நேர்மாறாகப் பாட்டிக்குக் கோபமுண்டாகி அவளை சமாதானப்
படுத்துவது பிரம்மப் பிரயத்தினமாகி விட்டது.

படமெடுத்தால் ஆயுசு குறைந்து
போகுமாம். கண்டிப்பாக படமெடுக்கப் போவதில்லை என்ற உறுதியின் பிறகுதான், பாட்டி
மேலே வேலை செய்யச் சம்மதிக்கிறாள்.

களேபரத்தில், காமிராவை
மூடிவைக்க மறந்து போகிறது. இரவு இருட்டு தானே அறையில் என்று சும்மா இருந்து
விடுகிறார். காலையில் பாட்டியைக் காணவில்லை. காமிர வெறும் பிளேட்டில், பாட்டி அந்த
காப்பை கையில் மறைத்துக் கிளப்பிக்கொண்டு போவது அவளது கை மத்தாப்பு வெளிச்சத்தில்
படமாகியிருந்தது. பேசிய சம்பளமும் இரண்டு ரூபாய். காப்பும் இரண்டு ரூபாய். அதனால்
நஷ்டமொன்றும் இல்லை.

image

ஒரு தமாஷுக்காக அந்தப்
படத்தைப் போட்டிக்கு அனுப்பிவைக்க அது நூறு ரூபாய் முதல் பரிசு பெறுகிறது.

மேலும்
அந்தப் படத்தைக் குறித்து அந்த போட்டோ நிபுணர் எழுதியிருந்த மதிப்புரையின்
சுருக்கமாவது: இதற்கு முதற் பரிசு ரூபாய் நூறையும் அப்படியே கொடுத்து விடுவதெனத்
தீர்மானித்திருக்கிறோம். இவ்விஷயம் ஏழு ஜட்ஜுகளால் ஏக மனதாய் முடிவு
செய்யப்பட்டது. படத்தில் ஒளியும் நிழலும் அற்புதமானதோர் இசைவுடன்
விழுந்திருக்கின்றன. ஒரு வாலிபப் பெண்ணின் எந்த நிலை மிக நேர்த்தியாயிருக்குமோ
அந்த நிலையில் எடுக்கப்பட்டிருக்கிறது. கன்னியின் ஹஸ்த மறைவு அவள் காதலின்
எல்லையில்லாத் தன்மை வாய்ந்தது என்பதைச் சுட்டிக் கட்டுகிறது. மொத்தத்தில் இது நமக்குச்
சில முதல்தர வங்காளி ஒவியங்களை ஞாபகமூட்டூகிறது. இதற்கு ஏற்ற தலைப்பு
"கன்னியின் பிரார்த்தனை” என்பதேயாகும்.

அந்தப்
பரிசுத்தொகை, இவருடையதா,  பாட்டியுடையதா?
சர்ச்சைக்குப் பிறகு, மனைவி சொல்லியபடி,
அது  கோகிலத்தின் காப்புப்பணம்
என்று முடிவாகிறது என்று கதை முடிகிறது

இவரது இழையோடும் நகைச்சுவையை இவரது கதைகளில்
மட்டுமல்ல, கட்டுரைகளிலும் காணலாம்.

பலராலும் பெரிதும் மதிக்கப்படும் தி ஜ ரங்கநாதன்
அவர்களின் கதையினை இணையத்தில் படிக்க :    மூட்டைப்பூச்சியும்
கடவுளும்:

page