நவராத்திரி நாயகியர்

image

    வில்லுப்பாட்டு        


 ‘முந்தி முந்தி நாயகனே முக்கண்ணனார் தன் மகனே

  கந்தனுக்கு மூத்தவனே, கணபதியே கணபதியே ‘

 

          ‘தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிலே பாட

           ஆமாம் வில்லிலே பாட (2)  வந்தருள்வாய் கலைமகளே ….

           கணபதிக்கு வந்தனம் சொல்லியே

           ஆமாம்
வந்தனம் சொல்லியே (2)

           வில்லிலே பாட ஆமாம் வில்லிலே பாட (2)

           கணபதிக்கு வந்தனம் சொல்லியே 

   ஆமாம் வந்தனம் சொல்லியே

            பாடுகிறோம் நாங்க வில்லுப்பாட்டு. (2)

 

ராகம்: வாங்க மக்கா வாங்க

 

     ஆனந்த் பிளாட் பெரியோர்களே, தாய்மார்களே

     வாங்க நீங்க வாங்க           வில்லுப் பாட்டு கேக்க வாங்க

     வாங்க நீங்க வாங்க           அம்மன் கதையைக் கேக்க வாங்க

     வாங்க நீங்க வாங்க            அம்மன் அருளைப் பெற வாங்க

     வாங்க நீங்க வாங்க            வில்லுப்
பாட்டு கேக்க வாங்க

     வாங்க நீங்க வாங்க            வில்லுப்
பாட்டு கேக்க வாங்க

image

நம்ம நாடு முழுக்க  நவராத்திரி விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த
நல்ல நாளிலே, நவராத்திரி
நாயகிகளான, முப்பெரும்
தேவியர்களான பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய லோக மாதாக்களின் பெருமையை வில்லுப் பாட்டாகப்
பாட உங்கள் முன் வந்துள்ளோம். இதில் சொற்குற்றம், பொருட்குற்றம். எக்குற்றம்  இருப்பினும் சிறியோரான எங்களை மன்னிக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.

 

ராகம்: பால் வடியும் முகம்

           அம்பிகை கதையினை சொல்பவர் கேட்பவர்  

           செய்திடும் பாவங்கள் மறையுமே –
ஜகதம்பிகை

           கதையினை சொல்பவர் கேட்பவர்

           செய்திடும் பாவங்கள் மறையுமே

 

           தேனினும் பாலிலும் இனியவளே – தேவி

           உள்ளம் குடிகொண்ட தேவி அவதாரம்

           சொல்லச் சொல்ல நம் நெஞ்சம் உருக
உருக  ( அம்பிகை )

 

அவதார நாயகியான
அம்பிகையின் வீரதீர பராக்ரமங்கள் எத்தனை, எத்தனை தெரியுமா? அன்பே உருவான லோக மாதா, அழகே உருவான லலிதாம்பாள், அருளைப் பொழியும் பராசக்தி, அக்கிரமத்தை
அழிக்கும் மாகாளி, துஷ்டர்களை
அழிக்கும் பயங்கரி துர்க்காதேவி. அந்த அகிலாண்ட நாயகியின் வீர தீர
பராக்கிரமங்களைப் பார்ப்போமா?

 

ஓ! பேஷா பாப்போமே!  

 

ஒரு சமயம், மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரங்களால் ஆணவம்  கொண்டு விண்ணையும், மண்ணையும் ஆட்டிப் படைக்க ஆரம்பித்தான். தேவர்கள், ரிஷிகள், மண்ணுலக வாசிகள் எல்லோரும்
அவனுடைய கொடுமை தாங்காமல் மகிஷனை அழிக்க வேண்டி அம்பிகையிடம் வந்து,

 

image

ராகம்: அம்ப பரமேஸ்வரி

 

           அம்ப பரமேஸ்வரி! அகிலாண்டேஸ்வரி!

           மகிஷனைக் கொல்ல வருவாயே !

           ஸ்ரீ புவனேஸ்வரி ! ராஜராஜேஸ்வரி !

           பக்தர்கள் எம்மைக் காப்பாயே !

 

என்று வேண்டிக்
கொள்ள எல்லோர்க்கும் வேண்டிய வரம் தரும் தேவியும் மகிஷனை வதம் செய்யப்
புறப்பட்டாள்.

 

எப்படி?

 

கைகள் பதினெட்டிலும்
ஆயுதம் எடுத்து, சிம்ம வாகனத்தில்
ஏறி, அலங்கார ஸ்வரூபியாய் புறப்பட்டாள்
அன்னை பராசக்தி. பல வரங்கள் பெற்ற மகிஷனும் மாயையால் பல ரூபமெடுத்தான். தேவி அன்னை
பராசக்தி காளி ரூபம் எடுத்துக் கொண்டு, கையில் சக்ராயுதம் கொண்டு மகிஷ ரூபம் எடுத்த மகிஷாசுரனை, வெட்டிச் சாய்த்தாள். மகிஷன் அழிந்தான்.

 

தேவர்கள், ரிஷிகள், மக்கள் எல்லோரும்
சந்தோஷப்பட்டிருப்பார்களே!  

 

நிச்சயமாக!
எல்லோரும் மகிழ்ச்சியுடன் பூமாரி பொழிந்தனர். அன்னையைப் பாடலால் துதித்தனர்.
எப்படித் தெரியுமா?

 

எப்படி?

 

ராகம்: அயிகிரி நந்தினி

 

           மங்கள ரூபிணி, சிங்கள வாஹினி, மன்மத பாணியளே !

           சங்கடம் தீர்த்திட, தேவரைக் காத்திட, காளிதேவியாய் வந்தவளே !

           மகிஷ உருவெடுத்த அசுரனைக் கொன்று, தருமத்தைக் காத்தவளே !

           அகிலத்தைக் காத்திடும், தேவி உன்னை தினம் தினம் போற்றி                                                                 வணங்கிடுவோம் !

 

மகிஷனுக்குப் பிறகு
சும்பன், நிசும்பன்னு ரெண்டு
அசுரர்கள் தேவாதி தேவர்களை எல்லாம்  கலங்க
அடிக்க வந்தார்கள்.

 

அய்யய்யோ !
மறுபடியும் அசுரர்களா?

அதுவும் ஒருத்தர்
கூட அல்ல, இரண்டு பேர்.

 

அப்புறம் என்ன ஆச்சு?

 

சும்பனும், நிசும்பனும் சின்ன வயசிலேயே கோர தவம் புரிந்து ஏராளமான
வரம் பெற்றார்கள்.. வரம் கெடச்சா  அசுரர்கள் சும்மா இருப்பார்களா?

 

என்ன செய்தார்கள்?

 

இந்திரன் முதலான
பிரம்மாதி தேவர்களை எல்லாம்  சிறையில்
அடைத்தார்கள்.. வானுலகமே தவித்தது. கஷ்டத்தில் இருக்கிற  எல்லாரும் யாரைக் கூப்பிடுவா? தாயைத்தானே? நம்ம  உடம்பில  திடீர்னு ஏதாவது அடிபட்டால் ‘ அம்மா!’ ன்னு  தானே கூப்பிடறோம்? அதுபோல கலங்கித் தவிக்கும் தேவர்கள் அன்னை மகாசக்தியிடம்
போய் முறையிட்டார்கள்.

 

எப்படி
வேண்டினார்கள்?

 

ராகம்: கூடை மேல கூடை
வெச்சு

 

     அடி மேல அடி வாங்கி அவதியும் படுகிறோமே

     எம் அபயக்
குரல் கேட்டு நீ வந்திடவும் வேணும் தாயே (2)

 

     வாராமலே நீ
இருந்தா அது நியாயமா?

     உன்னைத்தானே
நம்புகிறோம் வெகு காலமா

     நீ வந்தெம்மைக்
காத்தாலே வாழ்வோமே சந்தோஷமா

     நீ இல்லாமல்
எங்கட்கு துணை யாரம்மா?
(2)

 

என்று ஒரு சாரார் வேண்ட, இன்னொரு சாரார்,

 

ராகம்: அலை பாயுதே

 

           தருவாய் நீயே தாயே தரிசனம் தருவாய்
நீயே

           உன் மைந்தர்கள் படுகிற துயரினை
நீக்கிட

           வருவாய் நீயே தாயே தரிசனம் தருவாய்
நீயே ! (2)

 

என்று மனம் உருகி
வேண்டினார்கள்.. பிள்ளை அழும் குரல் கேட்டு வராத தாய் உண்டோ? அன்னை பராசக்தி நேரில வந்து அவர்கள் துயரினைத் தீர்க்க
உறுதி கூறிப் புறப்பட்டாள்.!

 

எங்கே?

 

சும்ப நிசும்பனை
வதம் செய்ய !

 

எப்படி தெரியுமா?

 

எப்படி?

 

பட்டமும் சுட்டியும்
நெற்றியில் மின்ன, பதக்கம் மார்பில்
அசைய, தண்டை சிலம்பு காலில்
துள்ள, அழகெல்லாம் கொஞ்ச, கன்னிகா ரூபத்தில் தேவி ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, அம்பிகையின் அழகைக் கண்டு அகிலமே ஊஞ்சலாட ஆரம்பித்தது.
சும்பனும் , நிசும்பனும்  அம்பிகையின் அழகைக் கேள்விப்பட்டு, அவளைத் தூக்கி வர, தூம்ப்ரலோசனன், சண்டமுண்டன், ரத்த பீஜன் போன்ற பல அசுரர்களை அனுப்பி வைத்தார்கள்.

 

அச்சச்சோ ! தேவியைத்
தூக்கிண்டு  போய்ட்டாங்களா?

 

தேவி என்ன செய்தாள்?

 

நமது அன்னை- திவ்ய
ரூபிணி – காளி ரூபம் – சாமுண்டி ரூபம் எடுத்து, வந்திருந்த அரக்கர்கள்  அனைவரையும் சம்ஹரித்தாள். கடைசியாக வந்த
சும்பனையும், நிசும்பனையும்  துர்க்கா தேவியாகி வதம் செய்தாள். ஈரேழு பதினாலு
லோகத்தவரும் அன்னையின் பெருமையைப் பாடி மகிழ்ந்தனர்.

 

ராகம்: அயிகிரி நந்தினி

 சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய்
வந்த உமையவளே !

 வந்தனை செய்திடும் அந்தகர் தம்மை சொந்தமாய்
நின்று காப்பவளே !

 வந்தெதிர் நின்ற சும்ப நிசும்பனை மாய்ந்து
மடிந்திடச் செய்தவளே !

 மைந்தரைக் காத்திடும் தாயே உன்னை தினம்
தினம் போற்றி                                                                    வணங்கிடுவோம் !

 

இன்னொரு சமயம், பரமசிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த நெருப்பு, மன்மதனை எரித்தது.  அவன் சாம்பலை, விஸ்வகர்மா உயிர்ப்பிக்க பண்டாசுரன் என்னும் மாபெரும் அசுரன்
உண்டானான்..  பரமசிவனின் கோப அக்கினியில்
வந்தவனல்லவா? தவம் செய்து ஏராளமான வரங்களைப்
பெற்றான். பிறகு  தன் அரக்கக் குணத்தைக்
காட்டி எல்லா தேவர்களையும்  சிறையில் அடைத்தான்..  விண்ணுலக வாசிகளெல்லாம் என்ன செய்யரதுன்னு
தெரியாம கலங்கித் தவித்தார்கள். அப்போ நாரதர் வந்து தேவர்களிடம் , தேவி
லலிதாம்பாளின் பெருமையைக் கூறி , அவளிடம் சரணடைந்து துதித்தால் உங்கள்
கஷ்டங்களெல்லாம் தீரும்னு சொல்ல ,எல்லோரும் தேவியிடம்  சென்று,

 

ராகம்: ராதே ! ராதே !

 

     அம்பா தாயே ! லோக மாதா லலிதாம்பிகையே !
லலிதாம்பிகையே !

     வம்பன் பண்டனை வதைத்து எம்மைக்
காத்தருள்வாயே ! காத்தருள்வாயே !

 

என்று வேண்ட, லலிதாம்பிகை வந்தாள். அந்த  அழகான தேவி எப்படி இருந்தாள்  தெரியுமா?

image

 

ராகம்: அழகே, அழகே

 

     ஸா……………………………….

     அழகே அழகே அம்பாள் அழகே

     அன்பின் வடிவம் அம்பாள் அழகே

     முகம் மட்டுமா அழகு?    மீன் கண்கள் கூட
ஒரு அழகு !

     இதழ் மட்டுமா அழகு ?   வெண் பற்கள் கூட ஒரு அழகு.!  

 

     தலையில் ரத்தினக் கிரீடம் அழகு !

     இடையில் தங்க ஒட்யாணம் அழகு !

     கையில் வைர வளையல் அழகு !

     காலில் சலங்கை அழகோ அழகு !

     ஸா ………………………..

     அழகு முகம் நோக்கியே

     முழு நிலவும் நாணுதே

     இனிய குரல் கேட்டுமே

     குயிலும் ஊமை ஆனதே ( 2 )

 

     அன்னையருள் இருந்தால்

     உலகம் முழுதும் அழகு

     எம்மை அவள் காத்தால்

     வாழ்க்கை முழுதும் அழகு !

     ஸா ………………………….

 

இப்படிப்பட்ட அழகான
தேவி எப்படி வந்தாள் தெரியுமா?

 

ராகம்: அச்சுதம் கேசவம்

 

     ரத்தினக் கிரீடமும், சுட்டி ராக்கோடியும்

     சித்திரத் தேரினில் சக்கரக் குடையுடன்

     சிங்கார ரூபமாய் ஓங்கார நாதமாய்

     பைங்கிளி லலிதா தேவியும் வந்தனள் !

 

பண்டனின்
கொடுமைகளைக் கேட்டதும் லலிதாம்பாளின் கண்கள் சிவந்தன.  பண்டாசுரனை வதைக்க
அகிலாண்ட லோக மாதா லலிதாம்பிகா தேவி  சினங்கொண்டு சீற்றங் கொண்டு புறப்பட்டாள்.

எப்படி?

 

ராகம்: ஜெய ஜெய தேவி

 

பண்டனைக் கொல்ல சண்ட
மாருதமாய் லலிதா தேவியும் வந்தாள் !

கண்டவர் கலங்கிட
துஷ்டர்கள் நடுங்கிட துர்க்கா தேவியும் வந்தாள் !

ரதகஜ  துரக பதாதி  களுடனே காளிகா  தேவியும்  வந்தாள் !

வாராகி வைஷ்ணவி
சாமுண்டி எனும் ஏழு தோழி யருடனே வந்தாள் !

           சண்ட முண்டரை வென்றாள் !

           பண்டா சுரனைக் கொன்றாள் !!

 

இப்படிப் பல அவதாரம்
எடுத்து, பல ரூபம் எடுத்து
துஷ்டர்களை அழித்துப்  பக்தர்களுக்கு அபயம்
அளித்துக் காத்து வரும் தேவி ராஜராஜேஸ்வரியை போற்றிப் பணிந்து புகழ்ந்து பாடுவோமா?

 

ராகம்: ரார வேணுகோபா பாலா

 

ராஜராஜேஸ்வரியே
சரணம் ! அகிலத்தை ஆள்பவளே சரணம் !

பராசக்தி தேவி சரணம்
! பரமனின் சரிபாதியே சரணம் !

 

கண்ணில் இமையவளே !
பாடும் பண்ணில் இசையவளே !

சொல்லும் சொல்லின்
பொருளவளே !

 

ஏட்டினில் எழுதிடும்
பாட்டினில் உறைந்திடும்

கவிதைப் பொருள் அவளே
!

 

வா ! காத்திட வா !
வாழ்த்திட வா ! அருளிட வா வா வா !

தா ! தீரத்தை தா
!  வீரத்தை தா ! தைர்யத்தை தா தா தா !

 

பகைமையைத் தீர்த்து
விடு ! அன்பினைப் பெருக்கி விடு !

பண்பினை வளர்த்து
விடு ! முரடனையும் திருடனையும்

மன்னித்து மனிதனாய்
மாற்றி விடு !!                          ( ராஜ )

 

இத்தனை நேரம் அம்பிகையின்
கதையை விரிவாய்ப் பார்த்தோம்.  வில்லுப்
பாட்டை முடிக்கறதுக்கு முன்னால  லக்ஷ்மி
தேவி, சரஸ்வதி தேவியையும் போற்றிப்
பாடி  முப்பெரும் தேவியரின் அருளையும்
பெறுவோமா?

ஓ பேஷா செய்யலாமே !

 

image

ராகம்: கும்மியடி பெண்ணே
கும்மியடி

 

           பாடிடுவோம்
நாமும் பாடிடுவோம்

           திருமகள்
புகழினைப் பாடிடுவோம்

           பாடிடுவோம்
நாமும் பாடிடுவோம்

           லக்ஷ்மிதேவியின்
பெருமையைப்  பாடிடுவோம்.

         

  திருமாலின்
திருமார்பில் வசிப்பவளாம் – அவள்

           அருள்மாரி
பொழிந்திடும் அம்பிகையாம்!

           தாமரை
மலரினில் இருப்பவளாம் – அவள்

           தாமதம்
செய்யாமல் அருள்பவளாம்!

 

           பொங்கும்
தனம் தரும் தனலக்ஷ்மி – அவள்

           மங்காத
புகழ் தரும் மஹாலக்ஷ்மி !

           சந்தானம்
அருளிடும் சந்தானலக்ஷ்மி – தேடி

           வந்தோர்க்கு
வரம் தரும் வரலக்ஷ்மி !

 

           வித்தைகள்
தந்திடும் வித்யாலக்ஷ்மி – தீரா  

           வினைகளைத்
தீர்த்திடும் விஜயலக்ஷ்மி !

           பயங்களைப்
போக்கிடும் தைர்யலக்ஷ்மி – வாழ்வில்

           ஜெயங்களைத்
தந்திடும் ஜெயலக்ஷ்மி !

சரஸ்வதி தேவி மேலே
புதியதாக ஒரு பாட்டு பாடுவோமா?

image

 

ராகம்: வர வீணா

           கலைவாணி அருள்வேணி

           சகலரும்
பூஜிக்கும் ராணி

           கற்றவர் போற்றும் தேவி

           மற்றவர் ஏற்றும் செல்வி

           வீணையைக் கையில் உடையவளே !

           வெண் பட்டாடை உடுத்தவளே !

           வரம் யாவையும் தரும் தேவி நீ !

           வாழ்த்திட வருவாய் அருள் நாயகி !

           வருவாய் தருவாய் கலைகளையே !

           அனுதினம் எமக்கே !

இப்படிப்பட்ட லக்ஷ்மி
தேவி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி ஆகிய முப்பெரும் தேவியரின் அருளைப் பெறத்
தான் நாம் பொம்மைக் கொலு வைத்து நவராத்திரியாகக் கொண்டாடி வருகிறோம். இப்போது இந்த
பொம்மைகளைப் பற்றி ஒரு பாட்டு பாடுவோமா?

 

image

ஓ ! நல்லா பாடுவோமே
!

 

ராகம்: சின்ன சின்ன ஆசை

 

                 சின்ன சின்ன பொம்மை

                 சிறகு வைத்த பொம்மை

                 வண்ண வண்ண பொம்மை

                 வட்ட மிடும் பொம்மை

 

     எங்கள்
வீட்டுக் கொலுவில் தொடர்ந்து வரும் பொம்மை !

     தங்க மாடிப் படியில் அடுக்கி வைத்த பொம்மை !

 

     சின்னத் தொப்பை போட்ட செட்டியாரு பொம்மை !

     வீணை கையில் ஏந்தும் வாணியவள் பொம்மை !

     சிட்டுப் போல ஓடும் சுட்டிப் பையன் பொம்மை !

     பட்டுக் கவுன் போட்ட குட்டிப் பெண்ணின்
பொம்மை !

     குட்டைச் சட்டை போட்ட சட்டைக்காரன் பொம்மை !

 

     குழலூதும் கண்ணன் நீல நிற பொம்மை !

     கோபியர் ஆடும் நாட்டியப் பொம்மை !

     ஏராளமான சாமிகளின் பொம்மை !

     தாராளமான தலைவர்களின் பொம்மை !

     கேட்டுத் தலை ஆட்டும் மக்களது பொம்மை ! !

 

இத்தனை நேரம்
பொறுமையாக இருந்து வில்லுப் பாட்டு கேட்ட உங்களுக்கு நன்றி கூறி எங்கள் வில்லுப்
பாட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொள்கிறோம்.!

 

     கல்வியும், கலைகளும் தந்திடும் கலைமகள் சரஸ்வதிதேவிக்கு,

     பொன்னும் பொருளும் தந்திடும் அலைமகள்
லக்ஷ்மிதேவிக்கு

     வீரமும் தீரமும் தந்திடும்  மலைமகள் பார்வதி தேவிக்கு

     சந்ததம் மங்களம் மங்களம் –  தேவியர்க்கு

     இசைந்ததே மங்களம் மங்களம் !

     வந்தவர்க்கும்
, கேட்டவர்க்கும், சொன்னவர்க்கும்

     மங்களம் மங்களம் மங்களம் !

page