மரணத்திற்கு அப்பால் ..


மரணத்திற்கு அப்பால் கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது!

பிரபஞ்ச ரகசியம் என்ன? என்று ஒருவர் கேட்கிறார் !

மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மேனியைக் கொல்வாய் என்ற பகவத் கீதையின் தத்துவத்தை முன் வைக்கிறார் இன்னொரு நண்பர்.  

விஞ்ஞானம் இதற்கு விடை சொல்ல முடியாமல் அம்பேல் ஆகி ஓடிவிடும் என்கிறார் ஒரு  நண்பர். 

முகுந்த முரளி அவர்கள் தான் பதிவுகளில் “மரணமில்லாப்  பெருவாழ்வு”  பற்றிக்  கூறும் போது இப்படிக்  கூறுகிறார்: 

ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது.  உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை. (கீதை 2-20)

பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது. (பகவத் கீதை 2-22)

ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும். (பகவத் கீதை 2-23)

தனி ஆத்மா பிளக்க முடியாதது. கரைக்க முடியாதது. எரிக்கவோ, உலர்த்தவோ முடியாதது. என்றுமிருப்பது, எங்கும் நிறைந்தது, அசையாதது, என்றும் மாறாமலிருப்பது. (பகவத் கீதை 2-24)

ஆத்மா கண்ணுக்கெட்டாததும், சிந்தனைக்கப்பாற்பட்டதும், மாற்ற முடியாததுமாகும். இதை நன்கறிந்த, உடலுக்காக வருந்தாமலிருப்பாயாக. (பகவத் கீதை 2-25)

பிறந்தவன் எவனுக்கும் மரணமும், மரணப்பட்டவனுக்குப் பிறப்பும் நிச்சயமே. தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில் இதற்காகக் கவலைப்படாதே. படைக்கப்பட்டவை எல்லாமே முதலில் தோன்றாதிருந்து,  இடைநிலயில் தோன்றி, இறுதியில் மீண்டும் மறைகின்றன. எனவே, கவலைப்பட என்ன இருக்கிறது? பகவத்கீதை 2 – 26,27,28) 

சரி இஸ்லாம் மதம் இதைப் பற்றி என்ன கூறுகிறது? நமது வக்கீல் விளக்குகிறார்! 

இறப்பு என்பது நம் வாழ்வின் முடிவு மட்டுமல்ல. அல்லாவை அடையத் தயாராகும் அமைதிப் பயணத்தின் துவக்கம். நிறைய இஸ்லாமியர்கள் ’ நல்லவர்கள் இறைவனின் அருளைப் பெறுவார்கள்; கெட்டவர்கள் நரகத்தின் பாதையில் விழுவார்கள்’ என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும்   ஆத்மா என்பது தீர்ப்பு நாள் வரை அமைதித் துயிலில் இருக்கும்.   வாழ்வில் நாம் செய்த நல்லது கெட்டதிற்கு ஏற்பவே தீர்ப்பு நாளில்  நாம் நிச்சயிக்கப் படுகிறோம்

இன்னொரு முஸ்லீம் கோட்பாட்டின் (SUFISM) படி மனிதன் இறந்த பிறகு தனக்குத் தானே தீர்ப்பு அளித்துக் கொள்கிறான். அவனுடைய சொர்க்கத்தையும் நரகத்தையும் அவனே தீர்மானிக்கிறான். இந்தத் தத்துவம்  ‘இதயத்தின் வழி’  அல்லது ‘தூய்மையின் வழி’ என்று உணரப்படுகிறது. இந்த வழி  மனிதனைத்  தனது தாழ்வான நிலையிலிருந்து 

எங்கும் நிறைந்த இறைவனின் தூய ஒளியை நோக்கிச் செல்லும் பாதையாகிறது. இறை  ஒளியை அடைய நிறைய வழிகள் இருந்தாலும் எல்லா வழிகளின் கோட்பாடு ‘உன்னைத் தெரிந்து கொள்; உன் இறைவனைத்  தெரிந்து கொள் “ என்பதேயாகும். 

(இஸ்லாமிய நண்பர்கள் இந்தக் கருத்து சரியா தவறா என்று தெரிவிக்கவும்) 


(மற்றவை பிறகு)