மூலை – ஆர். வத்ஸலா

                                        –            

image

குவிகம் இலக்கியவாசல் சிறுகதைச்  சிறுவிழாவில் படிக்கப்பட்ட கதை!

அவள் கணவன் திடீரென மாரடைப்பால்
இறந்துபோனான். அவள் அழவில்லை. உறவு கூடியது. ‘அவளுக்கு அதிர்ச்சி’
என்றது. உடல் எரிந்தது; அஸ்தி கரைந்தது; ‘மனதில் வைத்துக்
கொள்ளாதே, அழுது விடு’ என்றது சுற்றம். அவள் அழவில்லை. ‘அழாதே,
தைரியமாக இரு’ என்று சொல்லிய திருப்தியில்லாமலேயே வந்தவர் கிளம்பினர், ‘சம்பிரதாயத்திற்காகவாவது
அழக்கூடாதோ?’ என்கிற அங்கலாய்ப்புடன். உண்மையைச்
சந்திக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?

மகனும் மகளும் மீண்டும் அலுவலகம் செல்லத்
துவங்கினர். அவள் எப்போதும் போல் சமைத்தாள். மகனுக்கும் மகளுக்கும் உணவு கட்டிக்
கொடுத்தாள். சாப்பிட்டாள், தூங்கியெழுந்து காபி குடித்தாள், பத்திரிகை
படித்தாள், தொலைக்காட்சி பார்த்தாள். பல வருடங்களுக்குப்
பிறகு நிம்மதியாக இருந்தாள்.

ஊருக்காகவாவது ஒரு சில மாதங்கள்
விசேஷங்களில் கலந்து கொள்ளாமலிருக்க வேண்டிய நிர்ப்பந்தம்தான் கொஞ்சம் சிரமமாக
இருந்தது. அவளுக்கு நாலுபேர் கூடுமிடத்திற்குப் போவது பிடிக்கும்.  அவனுக்கு நண்பர்கள் கிடையாது. தவிர, அவளுடன் அவன்
எங்கும் போகமாட்டான். பெண்கள் தம் தோழிகள் வீட்டிற்குத் தனியாகப் போவது என்பது அவள்
குடும்பத்திலில்லாத பழக்கம். ஆகவே நவராத்திரி போன்ற பண்டிகைகளையும் உறவினர்,
குடும்ப சிநேகிதர்கள் வீட்டு விசேஷங்களையும் அவள் ஆவலோடு எதிர்பார்த்திருப்பாள்.
அவள் கலகலப்பான சுபாவமுடையவள். அவள் பேசினால் எல்லோரும் கேட்டுக்
கொண்டிருப்பார்கள்.  திறமைசாலியும்கூட.
விசேஷங்களுக்குத் துணிமணி, பண்டங்கள் வாங்குவது, சமையற்காரருக்கு ‘அவசரநிலை’  ஆலோசனை கூறுவது, வருவோரை உபசரிப்பது, பெண்களுக்கு
அலங்காரம் செய்வது, படிக் கோலமிடுவது, பாடுவது, கொலு வைப்பது – எல்லாவற்றிலும்
அவளுக்கிருந்த திறமையை எல்லோரும் பாராட்டுவார்கள். எல்லாவற்றையும் அக்கறையுடன்
செய்வாள். இப்படித் திறமையுடன் செயல்படுவதும், அதற்கானப் பாராட்டைப் பெறுவதும்
அவளுக்கு மிகுந்த ஆத்மதிருப்தியைக் கொடுத்ததோடு அவளுடைய பிரச்னைகளை மறக்கவும்
உதவியது.

பிறந்தகத்திற்குத் தன் குழந்தை
உழைப்பையும், புகுந்தகத்திற்கு தன் இளமை உழைப்பையும், இளமுதுமை உழைப்பையும் தாரை
வார்த்தவள் அவள். அப்பா கோபக்காரர், பழைய சம்பிரதாயம். அம்மா கோபக்காரரின் மனைவி,
கோபக்கார மகன்களின் தாய். (நாட்டுப்) பெண்களிடம் மட்டும் கோபக்காரி, பழைய
சம்பிரதாயம். மாமனாரும் கணவரும் இவள் அப்பாவைப் போலவே. மாமியார் இவள் அம்மாவைப்
போலவே. நாத்தனார்களின் திருமணம், கணவனின் கோபம். மூத்த மகன் வீட்டை விட்டு ஓடிப்
போதல், கணவனின் கோபம், மாமனார் – மாமியாரின் முதுமை – சாவு, கணவனின் கோபம், மகள் –
இரண்டாவது மகன் இவ்விருவரின் வளர்ப்பு – படிப்பு – வேலை, கணவனின் கோபம், கணவன் ஓய்வு
பெறுதல் – கணவனின் முழுநேர பிடுங்கல் – இப்படியாக அவள் நாற்பத்தைந்து வயதில் முழு
கிழவியாகினாள். இதற்குள் அவள் தன் கணவனிடம் வாங்கியத் திட்டுக்களுக்கும்,
அடிகளுக்கும் அவளால் மனித நேய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிந்திருந்தால்
அவளுக்கு என்ன நஷ்ட ஈடு வழங்குவது என்று நீதிமன்றம் தவித்திருக்கும். கணவனின் அடியில்
அடங்கியிருக்கும் ஆழ்ந்த அவமானத்திற்கு எதைத்தான் ஈடாக்கமுடியும்?

வீட்டு விவகாரத்தில் அவள் கணவன் எடுத்த
முடிவுகள் எல்லாமே தப்பானவை. அதன் விளைவுகளைச் சமாளித்துக் குடும்பத்தைப்
பாதுகாத்தவள் அவள்தான். அவளுடைய நகைகளைச் சீட்டாட்டத்தில் தொலைத்து பெண்ணுக்கு ஒரு
திருகாணியில்லாமல் செய்துவிட்டான் அவன். அஞ்சனப் பெட்டி, சீட்டு, தபால் வங்கியென
சேர்த்து பெண்ணுக்கு சீர் செய்து வைத்தாள் அவள். அப்பாவின் ரௌத்திரத்தையும் அம்மாவின்
அவஸ்தையையும் சகிக்க முடியாமல் மூத்த மகன் வீட்டை விட்டு ஓடிப்போனான். (இது ஒன்று மட்டும்
அவளால் சமாளிக்க முடியாத விளைவு. அவளுக்கு மரத்துப் போகாத வலி.)

முட்டாள்தனமாக வில்லங்கமுள்ள வீட்டு
மனையை வாங்கி, வீடு கட்ட கடனும் வாங்கி, வீட்டையும் கட்ட முடியாமல், மாதாமாதம்
வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி குடும்ப பொருளாதாரத்தை அடியோடு அழிக்க
அடிகோலினான் கணவன். அவள்தான் யார் யாரையோ  பார்த்து வில்லங்கத்தைச் சரி செய்து,
வீட்டைக் கட்டி, வாடகைக்கு விட்டு, நிலைமையைச் சீர் செய்தாள். இரண்டாவது மகனுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காதபோது, அவன் ஒரு வருடம் சும்மாயிருந்துவிட்டு
அடுத்த வருடம் மறுபடியும் முயற்சிக்க வேண்டும் என்று கணவன் தாண்டவமாடியபோது மகன் விரும்பியபடி
ஒரு கல்லூரியில்   கிடைத்த பி.எஸ்.ஸி.
கணித இயலில்    அவனை  சேர்த்துவிட்டு   வீடு திரும்பியதும்
வழக்கம் போல ஓங்கிய கணவனின் கையை பிடித்து
முறிக்க மகன் யத்தனிக்க அடிகள் நிரந்தரமாக நின்றன. மகளை இளநிலை பட்டப்படிப்புடன்  நிறுத்தி வீட்டோடு சிறை வைத்து ’வரன்
பார்க்கிறேன் பேர்வழி’ எனத் தொடங்கி, வந்த வரன்களை ஏதோ சாக்கு சொல்லிக் கணவன் தட்டிக் கழித்ததற்குக் காரணம் கணவனுக்கு மாப்பிள்ளைப் பையன்களிடமோ, அவர்களின் தந்தைகளிடமோ
இருந்த தாழ்வு மனப்பான்மைதான் என அவளுக்குத் தெரிந்தென்ன லாபம்? இதெல்லாம்
போகட்டும். மகளை ”தரித்திரமே, ஒன்னெ எவன் கல்யாணம் பண்ணிப்பான்?” என
நோகடிக்கும்போது அவளுக்குத் தன் கணவனைக் கொன்றுவிடலாமா எனத் தோன்றும். அவன் தடைகளை
மீறி மகனின் ஆதரவோடு மகளை, ப்ரெஞ்சு மொழி, தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிப்பொறி
வகுப்பு என்று மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வகுப்புக்கு அனுப்பியதோடு அஞ்சல் வழி கல்வியில்
முதுநிலை பட்டமும் வாங்க வைத்து, மகளுக்குப் பைத்தியம் பிடிக்காமல் பார்த்துக்
கொண்டதோடு, ஒரு வேலையும் கிடைக்க வழி செய்தாள். கணவனுடன்   போராடி
மகளை வேலைக்கு அனுப்பி வைத்தாள். மகன் அதற்குள் எம்.ஸி.ஏ. முடித்து
நல்ல வேலையில் சேர்ந்து விட்டிருந்தான்.

கணவனுடன் போராடிக் களைத்திருந்த அவளுக்கு
மகனின், மகளின் அன்பு இதமாக இருந்தது. அவர்கள் இருவருடைய திருமணத்தை அவள் ஆவலாக
எதிர்பார்த்திருந்தாள். கணவனுக்கு வயதாகி உடல் வலு குறைந்ததாலும் குழந்தைகள் அவள்
பக்கம் என்பதாலும் அவனுடையத் திட்டுகள் இப்பொழுது நச்சரிப்பாக க்ஷீணித்திருந்தன. அவன்
ஓய்வு பெற்று விட்டதால் பிடுங்கல் முழு நேரமாகிவிட்டிருந்தது. மகளையோ, மகனையோ
அவர்களில்லாத நேரங்களில் குறை கூறிக்கொண்டேயிருப்பான். அவனால் நேரடியாக இட தைரியமில்லாத
கட்டளைகளை அவளிடம் சொல்லி பிறப்பிக்கச் சொல்வான். மகனை ஏழு மணிக்குள் (மகளை
இருட்டுவதற்குள்) வரச் சொல்ல, மகன் பெண் நண்பர்கள் வீட்டிற்கு (மகள் யார்
வீட்டிற்குமே) போகத் தடை விதிக்க, மகன் தன் ஊதியத்தில் எழுபத்தைந்து சதவிகிதத்தை
(மகள் முழு ஊதியத்தையும்) வீட்டில் கொடுக்க வேண்டுமென்று நிபந்தனை போடச் சொல்லி (”இல்லாட்டா
வெளிலெ போகச் சொல்லு”) அவளை நச்சரிப்பான். அவள் அப்படிச் செய்ய மாட்டாள்.

முடிந்தவரை அவனுடன் ஒரே அறையில் நிற்பதை
அவள் தவிர்ப்பாள். கண்ணையும், வாயையும் மூடிக் கொள்வதைப் போல காதை மூடிக் கொள்ள வழியில்லையே
என அவள் நினைத்துக் கொள்வாள். அந்த நேரத்தில்தான் அவன் கண்ணை மூடிவிட்டான். அவள்
அழவில்லை.

சமைத்தாள். குழந்தைகளுக்குக்
கொடுத்தாள். சாப்பிட்டாள். பத்திரிகையைப் படித்தாள். தொலைக்காட்சி பார்த்தாள்.
மூன்று மாதங்கள் கழிந்தன. உறவினர் வீட்டுத் திருமணம். வந்து அழைத்தனர். “நீங்க
பாட்டுக்கு வாங்கோ, மன்னி, யாரு வேணா என்ன வேணா நெனெக்கட்டும்” (யார் என்ன
நெனெப்பா? ஏன் நெனெக்கணும் – அவளுக்குக் கேட்கத் தோன்றியது) மகனுக்கும் மகளுக்கும்
விடுப்பு இல்லை. தனியே போகவேண்டும். தயக்கத்துடன் ஒரு பட்டுப் புடவையை எடுத்தாள்.
(தலைப்பில் சரிகை அதிகமாக இருக்குமோ?) தலைப்பை உள்ளே வைத்துக் கட்டினாள். (மடிசஞ்சி
மாதிரி இருக்காதேம்மா.  எல்லாரும்
இப்ப ஸ்டிக்கர் பொட்டு வச்சுக்கறா) கறுப்பா, சிவப்பா? சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு
வைத்துக் கொண்டாள். திருமாங்கல்யம் எடுத்த கொடியா? வேண்டாம் சாதாரண சங்கிலி ஒன்றை
அணிந்து கொண்டாள். மெல்லியதுதான். பரவாயில்லை. சிறிது பௌடர் போட்டுக் கொண்டாள். பஸ்ஸில் போக
ஒரு மாதிரி இருந்தது. ஆட்டோவில் கிளம்பினாள்.

வாசலில் நின்ற சின்னப் பெண் ரோஜாவை
நீட்டியது. கவனிக்காததுபோல் உள்ளே சென்றாள். சற்றுத் தயங்கித் தெரிந்த முகங்கள்
இருக்குமிடத்தில் போய் உட்கார்ந்தாள். அதற்குள் பெண்ணைப் பெற்றவள் வந்து
வரவேற்றாள். டிபன் உபசாரம் மறுத்து அருகிலிருந்தவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
கல்யாணப் பெண்ணுக்கு என்னென்னப் புடவைகள் எந்தெந்த கடைகளில் எடுத்தார்கள், எந்தெந்த நிறத்தில்
எடுத்தார்கள் என விவரித்துக் கொண்டிருந்தனர். ‘அந்தக் கடையில்
விலை அதிகமாயிற்றே! முகூர்த்தத்திற்கு ஊதா நிறமா? கறுப்பு கலந்திருக்குமே!’ (எல்லாம்
மனதில்தான்.) இந்தப் மணப்பெண்ணின் அக்காவின் திருமணத்திற்கு அவள்
தேர்ந்தெடுத்த புடவைகளை எல்லோரும் எவ்வளவு பாராட்டினார்கள்?

‘ஊஞ்சல்’  பார்க்க மற்றவருடன் இவள் கிளம்புவதற்குள்  முன் வரிசை குங்கும முகங்களால் தன்னம்பிக்கையுடன்
ஆக்ரமிக்கப்பட்டுவிட்டிருந்தது. யார் யாரோ பாடினார்கள். பின்னால் நின்றதால் இவள்
காதில் கேலிப் பேச்சுகள் விழவில்லை. அது கிளப்பிய சிரிப்பலைகள் மட்டும் கேட்டது. ஆயாசம்
தோன்ற மறுபடியும் பழைய இடத்தில் வந்தமர்ந்தாள். அங்கு அமர்ந்திருந்த பெண்களில்
பெரும்பான்மையோருக்கு வெற்று அல்லது ஸ்டிக்கர் பொட்டு நெற்றி போலத் தோன்றியது, இவள்
பிரமையோ?

“என்ன மன்னி? இங்க
ஒக்காண்டு இருக்கங்கோ?” கேள்வி கேட்டவளுக்கு பதிலுக்குக் காக்க அவகாசமில்லை.
சாப்பாட்டிற்கு அழைத்தனர். சாப்பிட்டாள். கிளம்பியவளை உள்ளே
அழைத்துப் போய் ஒரு பாலிதீன் கவரைக் கொடுத்தனுப்பினாள் ஒருத்தி.

வீட்டிற்கு வந்து பூட்டைத் திறக்கக் குனியும்போது அவள் தலையிலிருந்து ஒரு அட்சதை விழுந்தது. முகூர்த்தத்தின் போது
பின்னலாலிருப்பவர்கள் கடமைக்காக மேடை நோக்கி வீசியெறிந்தது போலும், ‘குறைபட்டவள்”
தலையில் ‘முழுமையானது’! பாலிதீன் கவரைத் திறந்தாள். வெற்றிலை பாக்குக் கூட இல்லாமல்
ஒற்றையாக ஒரு ரவிக்கைத் துண்டு! ’இதென்ன பிச்சையா?’ மனம் வெதும்பியது.

கணவன் இறந்தபோதே அவளுக்குத் தெரியும்தான்,
சமுதாயத்தில் தன் நிலை மாறுமென்று. ஆனால் வேதனை தரக்கூடிய நடப்புகளுக்கு நாம்
என்னதான் நம் மனதை தயார் செய்து வைத்திருந்தாலும் அவை நடக்கும் பொழுது    வேதனை ஏற்படத்தான் செய்கிறது. நெருப்பு பட்டுவிட்டால்
சுடத்தான் செய்கிறது, சுடுமென்று தெரிந்திருந்தாலும்.

“அத்தெ நீங்கதான் மொதல்ல ‘பிடி’
சுத்தணும். மன்னி ஒங்க கையால கொடுங்கோ. டேய், மொதல்ல சித்திகிட்ட ஆசீர்வாதம்
வாங்குடா”.  இதெல்லாம் இனி இருக்காது எனத்
தெரியும். நம் சம்பிரதாயத்தில் எல்லாமே மங்கலம் – அமங்கலமாக
(வெள்ளை – கறுப்பாக) பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், மூடநம்பிக்கைகளைத்
தர்க்கரீதியாக ஒதுக்கும் மனிதர்கள்கூட தன் மகனுக்கோ மகளுக்கோ கெடுதி நேருமோ என்கிற
அர்த்தமற்ற பயம் வரும்போது சிந்தனையை மூட்டை கட்டி வைத்து விடுகின்றார்கள்.
அரைகுறையாக தெரிந்த சாத்திரம், குரல் ஓங்கியவர் கூறும் சம்பிரதாயம், ஒவ்வொருவர்
மனதிலும் ஒளிந்திருக்கும் சுயபச்சாதாபத்தின் விளைவாக துன்புறுத்தி திருப்தியுறும்
மனோபாவம். இவையெல்லாம் மனித நேயத்தைக் கொன்றுவிடுகின்றன. வரிசையாக
குங்குமம் நீட்டிக் கொண்டு வந்து இவள் பக்கம் நீண்டு மடங்கும் கை, முக்கிய
நேரத்தில் முன்னணியில் நின்றால்   குற்றம் சாட்டும் கண்கள், கலகலப்பாக பேசினால் சிலர்
முகத்தில் தெரியும் யந்திர புன்னகைகள். அவளுக்குக் கோபம் வந்தது. யாரை கோபிக்க?
சுயபச்சாதாபம் சூழ்ந்தது. விசேஷங்களைத் தவிர்க்கத் தொடங்கினாள்.

     ஒரு
நாள் அவளுடைய மூத்த சகோதரனும் அவன் மனைவியும் வந்தார்கள். மகளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கிறதாம்.
அது சரிப்பட்டு வந்தால் மகனுக்கும் வரன் பார்த்து இருவர் மணத்தையும் அவர்களே
முன்னின்று முடித்துவிடுவார்களாம். அவள் கவலைப்பட வேண்டாமாம். அவள் கற்பனையில்
இருவர் திருமணங்களையும் பார்த்தாள் – மூலையில் நின்று கொண்டு. அவர்கள் போனபின்
வெகு நேரம் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென ஓலமிட்டாள்.
“என்னெ இப்பிடி மூலேலெ வெச்சுட்டு செத்துத் தொலெச்செயேடா பாவி மனுஷா!”

உடலே சவப்பெட்டியாகசிறுகதை தொகுப்பு,  ‘நிகழ்வெளியீடு,
1999

  (ராஜேச்வரி பாலசுப்ரமண்யம் சிறுகதை போட்டியில்  தேர்ந்தெடுக்கப்பட்டது)

page