
இன்னெழில் கொண்டுள்ள சிற்பங்கள் தனையாக்கி
இசைவோடு ஆலயமாம் ஆசனத்தில் அமர்த்திவிட்டு
பொன்போல்
போற்றுதலின் காரணந் தெளியாமல்
புவிகாக்குங் கடவுளென்று அவரடி பணிகின்றார்!
அன்னநடை பெண்டிரவர்
அறுசுவையும் படைத்துவிட
அன்புசால் சுற்றமுடன் அமுதுண்டு களித்திருந்து
மென்னகையும்
ஆடைகளும் மேனிக்கு எழில்கூட்ட
ஏனென்று கேளாமல் விழாக்கோலம் பூணுகிறார்!
ஆலயத்தி லுறைகின்ற
தெய்வத்தைப் பணிவதுவே
அடங்காது செல்கின்ற மனக்குரங்கை யடக்கிவிட்டு
உலகத்து மக்கட்கும்
மேலான சக்திதனை
உளமிருத்தி பணிதற்கே யென்றவ ருணர்வாரோ!
குலவுகின்ற
சுற்றத்தை யழைத்து விருந்தோம்பி
களிப்புடனே சிறப்பாக விழாக்கோலம் பூணுதலும்
மலிகின்ற விழாக்க
ளுருவான நோக்கத்தை
மனதிருத்தி செயலாக்க வென்றவ ரறிவாரோ!
மறமே யுரமாக
கொடுமையே வாளாக
மனமே கல்லாக கொண்டவன் னரக்கர்கீழ்
திறனின்றி மெய்சோர
வருந்திநின்ற மக்களெல்லாம்
தங்கட்கும் மேலான சக்திதனை யேத்திநிற்க
அறம்வாழ நிற்கின்ற
ஆண்டவனு மருள்சொரிய
அம்புவியி லவதரித்து அரக்கர்தமை யழித்துவிட
திறங்கொண்ட
வன்னவனின் திறமையினை நினைவிற்கொள
தீபாவளி விழாதனையே சிறப்பாக செய்கின்றோம்!
வைகறைத்
துயிலெழுந்து களிப்புற்ற மனதுடனே
விளக்கமுற மேனியதில் எண்ணெய் தேய்த்து
அகத்தில் வாழ்கின்ற
மக்களெலா மொருமுகமாய்
ஆவலொடு வெந்நீரில் குளியலை முடித்ததுமே
திகழ்கின்ற புத்தாடை
மெய்யினையே யெழிலாக்க
தித்திக்கும் உண்டிகளும் மனதினையே களிப்பாக்க
துகள்துகளாய்
வெடித்துவிழும் வாணங்கள் தனைப்பார்த்து
மனமுவந்து மகிழ்கின்றோம் தீபாவளித் திருநாளில்!
துள்ளுகின்ற
வுள்ளத்தை மகிழ்ச்சிக் கடலாக்கி
துன்பங்கள் நீங்கிமிக வின்பங்கள் கொள்தலொடு
உள்ளத்தைத்
தெளிவாக்கி உணர்வின் விளிம்பாக்கி
உயரிய நோக்கமதை கருத்தில் வைப்பாரா!
வெள்ளம்போல்
வருகின்ற அரக்கரைத் தனியாக
வெஞ்சமரில் வென்றிட்ட அன்னவனின் திண்மையொடு
கள்ளமற்ற பகைவரை
விரட்டித் துரத்திடவே
கடவுள்தன் னாசிதனை யிறைஞ்சல் வேண்டும்!
தெய்வத்
தாய்நாட்டில் அன்னியர் புகுந்திடாது
தீதுகண் டஞ்சுதலும் நன்மைக்கு இறைஞ்சுதலும்
தாய்க்குத்
தீதிழைக்க எண்ணித் துணிபவரின்
தலையைக் கொய்திடவே பொங்கி யெழுவதுடன்
பேய்போன்ற
விச்சையினால் அரக்கரு மழிந்ததையே
பாங்குறவே மனதிருத்தி பேராசை தனைப்போக்கி
தூயதா முளமுடனே
மக்கள் மகிழ்ச்சியுற
தாரணியி லின்பங்கள் செழித்தல் வேண்டும்!
