
அவள்
கருவறை முதல் கல்லறை வரை
சிலுவைகளை மட்டுமே சுமப்பாள்.
சில சமயம்
கருவறையே கல்லறையாகவும்
மாறிவிடும்
அவள் என்று தெரிந்தவுடன்
கள்ளிப்பாலே தாய்ப்பாலாகவும்
மாறுவதுண்டு
அவள் என்று தெரிந்தவுடன்
“நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட
புழுதியில் எறிவதுண்டோ “
என்று இதற்குத்தான் எழுதினானோ பாரதி.
இறைவா நீ படைத்தவற்றுள்
வாழத்தகுதியற்றவை எத்தனை எத்தனையோ
ஆனால்
இவ்வுலகில் பிறப்பதற்கே உனக்குத்
தகுதியில்லை
என்று அவளை அழிக்க நினைத்தார்களே!
ஏன்? இது மட்டுமா
பாலியல் கொடுமை
வரதட்சணைக் கொடுமை
வன்முறைக் கொடுமை
என்று அவளைச் சுற்றிலும்
எத்தனை நிகழ்வுகள்.
இன்னும் எத்தனை தடைகள் வந்தாலும்
வீறுநடை போட்டு
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
அஞ்சாத மன உறுதி
கொண்ட புதுமைப் பெண்கள்
உருவாகிக் கொண்டு தான் இருப்பார்கள்
ஆனாலும் ஒரு உண்மையை ஆண்கள்
ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி கற்கும்
உங்களை விட
இருநூறு ஆண்டுகளாகக் கல்வி கற்கும்
அவளின் பெயர் மதிப்பெண் பட்டியலில்
உங்களுக்கு முன்னே தான் நிற்கிறது.
அவளுக்காக நீங்கள் விதித்த விதிகள்
அத்தனையும் இன்று சுக்கு நூறாக்கிப் போனதே
இன்னும் எத்தனையோ துறைகளில்
ஆணுக்குச் சமமான இடத்தில்
தன்னை நிலை நிறுத்திக் கொண்டு தான்
இருக்கிறாள்
இது எப்படிச் சாத்தியம்? என்று
சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
அதன் ரகசியத்தை
இப்போது நான் சொல்லப் போகிறேன்
கவனமாகக் கேளுங்கள்
ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு நாளும்
தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும்
சிற்பிகளாக மாறுவது தான்
ஆம்!
சிற்பியும் அவளே! சிற்பமும் அவளே!