சரித்திரம் பேசுகிறது (யாரோ)

image


இந்தியாவின் சரித்திரம்  சரியான ஆதாரப் பூர்வமான விவரங்கள் கிடைக்கப்படாத காரணத்தால் மிகவும் தடுமாற்றத்துடனேயே எழுதப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னால் எழுத்து வடிவான சரித்திர ஆதாரங்கள் எதுவும் அகப்பட்டதாகத் தெரியவில்லை.   இஸ்லாமிய ஆதிக்கத்துக்குப் பின்னால் பாரசீக எழுத்தாளர்கள் எழுதியவை  இந்திய வரலாற்றை ஓரளவு நேர்த்தியாகக் கோர்க்க உதவியுள்ளன. 

இருப்பினும் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற  சரித்திர ஆய்வுகள் பெரும் தகவல்களைத் தந்துள்ளன. நாணயங்கள், பிரகடனங்கள், கல்வெட்டுகள், காப்பியங்கள், மத நூல்கள் என்று பல்வித சான்றுகள் கிடைத்துள்ளன. 

மன்னர்கள் எழூப்பிய அரண்மனைகள், கட்டிடங்கள், கோவில்கள், பல சரித்திரக் குவியல்களாகும். பதினொன்றாம் நூற்றாண்டில் சோழமன்னன் ராஜராஜன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோயில் ஒரு மாபெரும் சரித்திரச் சுரங்கம். அந்தக் காலத்து வாழ்வுமுறை, மன்னர்களின் படையெடுப்பு, அரசுமுறை  போன்றவை அதன் மூலம் அறியமுடிகிறது. 

மௌர்யர், குப்தர், ஹர்ஷவர்த்னர் என்று பெரும் வம்சாவளிகள் இந்தியாவில் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி ஆண்டு வந்தனர். இவர்கள் ஆண்ட காலத்தில் பெரும் நகரங்களாகத் திகழ்ந்தவை பாடலிபுத்ரம் மற்றும் கன்னோசி. இவற்றைப் பற்றிய முழு ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு படையெடுப்பினாலும், குறிப்பாக இஸ்லாமியப்  படையெடுப்பினால், பல நகரங்கள், ஆலயங்கள் , கோட்டைகள் ,கட்டடங்கள் அழிந்தன என்றாலும் இன்றும் அழியாமல் எத்தனையோ சின்னங்கள்  இருக்கின்றன. எனினும் அவைகள் அந்த சாம்ராஜ்யங்களைப் பற்றிய தகவல்கள் எவற்றையும் தரவில்லை.  

இவற்றைக் கூறுவதின் நோக்கம்  இந்த இந்திய சரித்திரச் சித்திரம் கிடைத்த ஆதாரங்களை வைத்தே சில ஊகங்களுடன் வரையப் பட்டுள்ளது. எதிகாலத்தில் வேறு பல ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். அவை வரலாற்றின் போக்கையே மாற்றவும் கூடும்.  

இந்தத் தொடர் கட்டுரைகள் இணைய தளம் , சரித்திர ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் இந்திய வரலாற்றின் ஒரு காலப் பகுதியை விளக்கும். சிந்து  சமவெளிமுதல் நேற்றைய இருபதாம் நூற்றாண்டு வரை நிகழ்வுகள் தொகுக்கப்படும்.  


இந்த வரலாற்றுப் பதிகத்தின் முக்கியக் குறிக்கோள்கள்: 


காலக்கிரமமாக நடந்தவற்றைச்  சுருக்கமாகக்  கூறுவது

சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் தருவது 

சொந்த சரக்கைச் சேர்க்காமல் சரித்திர அறிஞர்கள்  கூற்றை அப்படியே பிரதிபலிப்பது 


(சரித்திரம் பேசுவோம் )