தமிழ் சினிமாவில் திகில் படங்கள்  – பேய்ப்படங்கள் அல்ல !!

image

எஸ் பாலச்சந்தரின் அந்த நாள்

எடுத்த எடுப்பிலேயே சிவாஜி கணேசன் சுடப்பட்டு சாகிறார். ஜாவ்ர் அந்தக் கொலையைத் துப்பறிகிறார். கொலைக்குக் காரணம் என்று ஒவ்வொருவருவரும் பிளாஷ் பேக்கில் சொல்வது கதை. முடிவு அமர்க்களம்.

பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள்

‘BITCH’ என்று திட்டிக் கொண்டே கமல் ஸ்ரீதேவியைக் கொல்ல ஓடும் முதல் தரமான திகில் சித்திரம். “குத்துங்க எஜமான் குத்துங்க ; இந்தப் பொம்பளைகளே இப்படித்தான்”  என்ற பாக்யராஜின் வசனம் தூள் !

பாக்யராஜின் விடியும் வரை காத்திரு

ரயிலைத் தவறவிட்டு அதனால் போலீஸிடம் மாட்டிக் கொள்ளும் நிலையிலிருந்த பாக்யராஜ் வெடிகுண்டு புரளியைக் கிளப்பி ரயிலை நிறுத்தி  ஓடிப் போய் அதில் ஏறி  தப்பிக்கும் காட்சியில் தான் “ கதை வசனம் இயக்கம் – பாக்யராஜ் ” என்று டைட்டில் போடுவார்.

கமலின் குருதிப்புனல்

“தைரியம்னா என்னன்னு தெரியுமா ? பயம் இல்லாதது மாதிரி  நடிக்கிறது ”  என்று கமல் பயத்துக்குப் புதிய பரிமாணம் கொடுப்பார். நாசரின் தீவிரவாதத்துக்கு எதிரா போராடி அதில் சாவதில் வெற்றி காணும் மனிதர்.  

சத்யராஜின் நூறாவது நாள்

சத்யராஜின் மொட்டைத் தலை வில்லத்தனம் இந்தப் படத்தை சிறந்த திகில் படங்களில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறது.

பாலு மகேந்த்ராவின் மூடுபனி

ஹிட்ச்காக்கின் சைக்கோ படத்தின் நிழல் இது என்றாலும் பாலு மகேந்த்ராவின் காமிராவில் ஊட்டி பின்னணியில் செம படம்.

.

ஏவிஎம்மின்  அதே கண்கள்

முடிவைச் சொல்லிவிடாதீர்கள் என்று ஏவிஎம், பத்திரிகைகளையும் பார்த்த மக்களையும் கேட்டுக்கொண்ட படம்.  

மாடர்ன் தியேட்டர்சின் வல்லவனுக்கு வல்லவன்

சி ஐ டி என்று நினைத்துக் கொண்டிருந்த ஜெமினி வில்லன். கொலைகாரன் என்று நினைத்த மனோகர் இன்ஸ்பெக்டர். கடைசியில் ஜெமினி நடுங்கிய விரலில் சிகரெட் பிடித்துக்கொண்டே வெடிக்கும் படகில் சாவது சிறப்பம்சம்.

கமலின் தூங்காவனம்

பையனைக் காப்பாற்ற நார்கோடிக்ஸ் போலீஸ் ஓரிரவுக்குள் நடத்தும் சாகசம்.

சிவாஜியின் புதியபறவை

இறந்து போன தன் மனைவி மீண்டும் வந்திருப்பபதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் சிவாஜி கடைசியில்  தான் தான் மனைவியைக் கொன்றேன் என்று காதலி சரோஜாதேவியிடம் அவர் போலீஸ் என்று அறியாமல் சொல்வது படத்தின் கிளைமேக்ஸ்.

தெகிடி

டிடெக்டிவ் ஆபீஸில் வேலையில் சேரும் கிரிமினாலஜி மாணவன் அவன் துப்பறியும் மனிதர்கள் எல்லாரும் இறப்பதைக் கண்டு துப்புத் துலக்கியதில் அவனுடைய  புரபசரே கொலை செய்தார் என்று கண்டு பிடிக்கும் புதுமையான கதை.

ஜெயம் ரவியின் தனி ஒருவன்

ஐ‌பி‌எஸ் ஆபிசர் ரவி கொலை கொள்ளை செய்யும் அரவிந்த்சாமியைப் பிடிக்க நடத்தும் தனி ஒரு மனிதப் போராட்டம்.

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

கொலையாளி துரத்திக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் திரும்பி கொலையாளியைத் தாக்க முயற்சிக்கும் கதை.

அமீரின் ராம்

தாயைக் கொலை செய்துவிட்டதாக மகன் ராமைப் பிடித்துப் பழி வாங்க நினைக்கும் போலீஸ் அதிகாரியின் கதை.

ஜீவாவின் கோ

அரசியல்வாதி பத்திரிகை நண்பனை வைத்து ஒரு அரசியல் சூதாட்டம் ஆடி முடிவில் மாட்டிக்கொள்ளும் கதை.

எஸ் பாலச்சந்தரின் நடு இரவில்

ஒரு வீட்டில் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்பட யார் கொன்றது என்பது கடைசி வரைக்கும் தெரியாத திகில் படம்.

விஜயகாந்தின் ஊமைவிழிகள்

ஒரு பிக்னிக் கிராமத்திற்கு வரும் பெண்கள் எல்லாரும் காணாமல் போக அதைக் கண்டு பிடிக்கும்  துப்பறியும் கதை.

(விட்டுப்போன படங்களைப் பற்றி  மற்றவர்கள் எழுதலாம். )