
ஆர் சூடாமணி உளவியல் எழுத்தாளர் என்று அறியப்பட்டவர். ஏராளமான புதினங்களும்
சிறுகதைகளும் எழுதிவந்தவர். எல்லா மாத வார இதழ்களும் இவரது படைப்புகளால்
அலங்கரிக்கப்பட்டன. சூடாமணி ராகவன் என்ற பெயரில் ஆங்கிலத்திலும்
எழுதியிருக்கிறார். சிறந்த நீர்வண்ண ஓவியரும் கூட. இவரது பாட்டி ரங்கநாயகி
அவர்களும், சகோதரி ருக்மணி பார்த்தசாரதி
அவர்களும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள். இவரது இன்னொரு சகோதரி பத்மாசனி
நன்கறியப்பட்ட மொழிபெயர்ப்பாளார். எழுத்தாற்றல் மற்றுமின்றி,
மனத்திண்மை,
தீர்க்கதரிசனம்,
பெருநோக்கு,
சேவை
போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தனது
சொத்துக்களை தர்ம நிறுவனங்களுக்குக் கொடையாக அளித்துள்ளார். கலைமகள் வெள்ளிவிழா
விருது, இலக்கிய சிந்தனை ஆண்டு விருது ஆகியவை இவர் பெற்ற குறிப்பிடத்தக்க
விருதுகள் ஆகும்.
இவரது கதைகள் ஆரவாரமில்லாத
குடும்பப் பின்னணியில் அமைந்தவை. மனிதாபிமானமும், உளவியல் நோக்கும், நேர்மறை
எண்ணங்களும் (possitve thinking) உள்ளடக்கிய சிறந்த கதைகள் இவரது சாதனை.
இவரது வீம்பு என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.

அப்பாவை ரேஷன் கடையில் பார்த்ததுமே பகீரென்றது இளைத்துத் துரும்பாயிருந்தார். நாலே
மாதங்களில் இவ்வளவு வித்தியாசமா?
தந்தையின் எதிர்ப்பை மீறி
வேறு ஜாதிப் பெண்ணை மணமுடிக்க விரும்பியதால், உனக்கு ‘அவள் வேண்டுமா இல்லை நான்
வேண்டுமா?’, ‘இனி நீ எனக்கு மகனுமில்லை. நான் உனக்கு அப்பனுமில்லை’ என்று ‘வெளியே போ’ என்று விரட்டப்பட்ட மகன் சங்கர்.
தந்தை ரேஷன் கடையில் தட்டுத்
தடுமாறி பொருட்கள் வாங்குவதை பார்த்துவிடுகிறான். நான்கு மாதங்களுக்கு
முன்பெல்லாம் ரேஷன் கடை சென்றுவருவது அவன்தான்.
பெற்றோரைப் பிரிந்து,
விரும்பிய பெண்ணை மணந்தாலும் சங்கருக்கு மன அமைதி
இல்லை.
‘உங்களைப்
பார்க்க வேண்டும் என்று எப்படித் துடித்திருக்கிறேன்? பார்த்தால் எங்கே உடைந்து போய்விடுவேனோ என்பதனாலேயே இந்தக்
கீழ்ப்பாக்கம் வட்டாரத்துக்கு வரக்கூடாது, உங்களைப் பார்க்க நேர்ந்துவிடக் கூடாது
என்று எப்படி என்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கிறேன்’
அவன் மனைவியோ ‘இப்படி
வேதனைப்படுகிறீர்களே? அவங்கக்கிட்ட போக விரும்பினா அப்படியே போங்க. நான் தப்பா நினைக்க
மாட்டேன்’ என்கிறாள்.
கடைக்குள் அவர்
தடுமாறுவதையும், யாரோ மோதிவிட்டு ‘என்ன பெருசு, கண் தெரியலே?“ என்று
கேட்பதையும் பார்த்துவிட்டு, வேதனையுடன் அவர் கண்களில் படாமல் அங்கிருந்து
ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு
போய்விடுகிறான்
அப்பாவோ பார்த்து
விடுகிறார். ‘என்ன சௌக்யமாப்பா?’ என்று
ஒரு வார்த்தை கேட்டால் வாய் முத்தா சிந்திவிடும்? என்று எண்ணுகிறார்.
நாலு
மாசமாய் இவனைப் பார்க்காமல் என் கண் எப்படிப் பூத்துப்போய்விட்டது! இவன் அம்மா
தினமும் ராத்திரி அழுது ஓய்ந்து தூங்குகிறாள். சரியாத்தான் சொன்னார்கள், பெத்த
மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று
இவரும் நேரில்
பார்த்துவிட்டால் உடைந்துபோவோமோ என்னும் அச்சத்தில்தான் அவனிருக்கும்
வட்டாரத்திற்குப் போவதில்லையாம்.
கடையிலிருந்து வீட்டுக்கு
ரேஷன் பொருட்களைக் கொண்டுபோக ஒரு பையன் உதவி செய்கிறான்.
இவன் அம்மாவோ பார்த்துவிட்டு
வரச் சொல்லுகிறாள். மகன் ஒரு முறையாவது வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே.
எனக்காக இல்லாவிட்டாலும் அம்மாவிற்காக.
அவன் ஒருமுறை வளைந்து கொடுத்தால், ஒரு நல்ல நாள் பார்த்து மருமகளையும் அழைச்சுக்கிட்டு வீடு வந்து சேர்
என்று சொல்லமாட்டேனா? என்னைக் கண்டு கொள்ளாமலேயே ஸ்கூட்டரில் ஏறிப்
பறந்துவிட்டானே! என்றெல்லாம் எண்ணுகிறார்
தந்தை.
உதவிக்கு வந்த பையன்
சாமான்களை வராந்தாவில் வைக்கிறான். குளிர்ந்த மோர் கொடுக்கிறார். பையன்
கிளம்புகிறான். கொடுக்கின்ற காசை வாங்க மறுக்கிறான்.
"ரேஷன்
கடை வாசல்ல பழுப்புப் பான்ட் மஞ்ச சட்ட போட்ட ஒருத்தர் பஜாஜ் ஸ்கூட்டரிலே
வந்திருந்தார். அவர்தான் எனக்கு உங்களை அடையாளம் சொல்லி இருபது ரூபா பணம் தந்து
உங்க சாமான்களை வீட்டுக்குத் தூக்கிக்கிட்டு வந்து கொடுக்கும் படியாக
சொன்னார்”
பையன்
சொன்னது பிரக்ஞையில் பதியவில்லை. துக்கமும் மகிழ்ச்சியும் கலந்து வீசிய ஒரு திடீர்
சூறாவளியில் நான் அலைப்புண்டு அமிழ்ந்து கொண்டிருந்தேன்.
என்று
கதை முடிகிறது.
சூடாமணி அவர்களின் கதைகளில்
எளிய வார்த்தைகளில் எண்ண ஓட்டங்களும், வாழ்வின் சிக்கல்களும் அவற்றை அணுகும்
முறையும் மிகத் தெளிவாக இருப்பது காணலாம்.
இணையத்தில் கிடைக்கும் இவரது
சிறுகதைகள் :-