
“ டாக்டர்..
என்ன சொல்றீங்க..?
என்று கேட்டான் நாவரசு பதற்றத்துடன். அவன்
மனைவி மேகலை கவலையோடு அருகில் நின்றிருந்தாள்.
அந்த ஐந்து
மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது டாக்டர் செல்வராகவனின் கிளினிக்.
“ ஐ ஆம் ஸாரி..
மிஸ்டர் நாவரசு.. காயம் என்னவோ சின்னக் காயம்தான். பட்.. ஓபன் வூண்ட்.. உங்க வைஃப் நன்றாகக் கழுவி
ரெண்டு நாளா காயத்தை டிரஸ் செய்து கொண்டிருந்தது வாஸ்தவம்தான். ஆனா காயம் இன்ஃபெக்ட் ஆயிருக்கு. அது எத்தனை தூரம் புரையோடி இருக்குன்னு பார்க்கறதுக்கு
சில டெஸ்டுகளுக்கு எழுதித் தரேன். செக் பண்ணி ரிப்போர்ட் கொண்டு வாங்க.. அப்புறம்
அதன்படி மருந்து கொடுக்கலாம். இப்போ பெயின் கில்லரும் ஜெனரல் ஆன்டிபயாடிக்கும்
எழுதித் தரேன். இட் வில் டேக் கேர் ஃபார்
தி டைம் பீயிங்..” என்று கூறியபடியே ஒரு பேப்பரில் அரைப் பக்கத்துக்கு டெஸ்டுகளும், இன்னொரு பேப்பரில் சில மருந்துகளும் எழுதிக் கொடுத்தார்
டாக்டர்.
“ ஆனால் எப்படி
டாக்டர்… இதோ பாருங்க இந்த பஞ்சாலதான் அவனுடைய காயத்தைக் க்ளீன் பண்னினேன்”
என்று ஒரு பஞ்சு ரோலை எடுத்து நீட்டினாள் மேகலை.
அதைப் பார்த்த
டாக்டரின் கண்களில் ஒரு மின்னல்.
“ ஒரு
நிமிடம்.. இங்கே வாருங்க நாவரசு..” என்று அழைத்தபடியே அந்த கிளினிக்கின் ஒரு
மூலைக்குச் சென்றார் டாக்டர். அங்கு ஒரு
மேஜையில் ஒரு மைக்ரோஸ்கோப்பும்,
டேபிள் லாம்பும் இருந்தன.

அந்த டேபிள்
லாம்ப் ஸ்விட்ச்சை ஆன் பண்ணிய டாக்டர், அந்த பஞ்சு ரோலின் ஒரு பகுதியைப் பிய்த்து அந்த விளக்கு வெளிச்சத்தில் காட்டியபடி
உன்னிப்பாகப் பார்த்தார்.
அதைப்
பார்த்துக் கொண்டிருந்த நாவரசு, “
பாருங்க டாக்டர்.. இட் ஈஸ் வெரி க்ளீன்.. பாக்டீரியா ஒன்றும் தென்படவில்லையே.”
என்றான்.
“ ஒன் மினிட்..”
என்றவர் அந்த பஞ்சை மைக்ரோஸ்கோப் லென்ஸின் அடியில் வைத்துப் பார்த்தார்.
சாதாரணக் கண்
பார்வைக்குத் தெரியாத பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன.
“ கம் ஆன்..
இப்பப் பாருங்க” என்று நாவரசையும் அழைத்துக் காட்டினார்.
மைக்ராஸ்கோப்
வழியாகப் பார்த்தவன் திடுக்கிட்டுப்போய் நின்றான். “ எப்படி.. டாக்டர்.. இந்தக் கம்பெனி, நல்ல கம்பெனி
ஆச்சே.. இது எப்படி சாத்தியம்” என்றான் நாவரசு.
“ எனக்கு வர
கேசஸ்லே திஸ் ஈஸ் நாட் தி ஃபஸ்ட் கேஸ்.
காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு.
திஸ் ஈஸ் எ ராக்கெட்..
ஆஸ்பத்திரியிலே உள்ள அஸிஸ்டென்டுகளைக் கையிலே போட்டுக் கொண்டு, அங்கு டாக்டர்கள் யூஸ் பண்ணிய பஞ்சை மலிவாக வாங்கிக்கிறாங்க இந்த கூட்டம். அந்த அஸிஸ்டென்டுகளும் விளைவு தெரியாம, ‘ என்ன ஆயிடப் போறது.. அவர்கள் சுத்தம் செய்துதானே விற்கப் போறாங்க’ என்று சில சில்லரைக் காசுக்கு ஆசைப்பட்டுக் கொடுத்திடறாங்க.
இவங்க அந்தப் பஞ்சை மேல்வாரியா சுத்தம் செய்து பெயர் பெற்ற கம்பெனியின் பெயரில்
டியூப்ளிகேட் பேக் செய்து விற்றுடராங்க. ஏதோ, ஒரிஜினலாக, அதிகம் வீரியம் இல்லாத பாக்டீரியாக்கள், வைரஸ்களை க்ளீன் செய்த பஞ்சாக இருந்தால் இந்த டியூப்ளிகேட்
பஞ்சு யூஸ் பண்ணறவங்களை அதிகம் பாதிப்பதில்லை… பட், வீரியம் மிக்க வைரஸும்,
பாக்டீரியாக்களும் உள்ள பேஷன்டை க்ளீன் பண்ணிய பஞ்சு என்றால் … மை காட்.. ஐ
கான்ட் இமாஜின்..”
நாவரசின்
தண்டுவடத்தில் ஜிலீரென்றது.
“ இன்னொரு
விஷயம் தெரியுமா? இந்த வைரஸ் ஆர் பாக்டீரியாக்கள் இன்னொருத்தருக்குப்
போகக் கூடாதென்றுதான் டிஸ்போஸபிள் ஸிரிஞ்சை யூஸ் பண்ணறோம். ஆனா, அதிலே கூட இந்த ஆஸ்பத்திரியில் உள்ள அசிஸ்டென்டுகள் செய்யும் கொடுமை இருக்கே…
நார்மலி, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்ஸ், நியூ ஸிரிஞ்சை எடுத்து மருந்தை நிறைத்து இஞ்செக்ஷன்
கொடுப்பதற்கு அசிஸ்டென்ட் ஹெல்ப் எடுத்துக்கறாங்க. ஆனா அந்த அசிஸ்டென்ட்ஸ்
ஸிரிஞ்சை மாத்தறது இல்லே. ஒருத்தருக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சையே இன்னொருத்தருக்கும்
யூஸ் பண்ணிடறாங்க. ஆனால் நியூ ஸிரிஞ்சை
எடுத்து யூஸ் பண்ணியதா கணக்கில் எழுதிடறாங்க.
சில சில்லரைக் காசின் மீதுள்ள ஆசைக்காக, பட்.. அட்.. வாட்.. காஸ்ட் .. என்னுடைய கிளினிக்கில் இது நாலாவது கேஸ். ஆல் ரெடி போலீஸிலே ரிப்போர்ட் பண்ணி
இருக்கேன். தே ஷூட் ஹாவ் ஃபௌண்ட் அவுட்
ஸம்திங்க் பைதிஸ் டைம்..” என்று கூறியபடியே நாவரசன் மகன் காயத்துக்கு மருந்து
போட்டு டிரஸ் செய்ய ஆரம்பித்தார்.
தலை சுற்றியது
நாவரசுக்கு. அரசாங்க ஆஸ்பத்திரியில்
அசிஸ்டென்டாக வேலை பார்க்கும் அவன் டாக்டர் கூறியபடி, பேஷண்ட்ஸுக்கு யூஸ் பண்ணிய பஞ்சை வித்திருக்கிறான். ஒரு பேஷண்டுக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சை இன்னொரு
பேஷண்டுக்கு யூஸ் பண்ணுவதும்,
புது ஸிரிஞ்ச் யூஸ் பண்ணியதாகக் கணக்குக் காட்டுவதும் அவன் விஷயத்தில் சர்வ
சாதாரணம்.
இதைத்தான் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று சொல்வார்களோ..?
நான் செய்து வந்த அநியாயம்,
என் பையைனையே, சுற்றி விட்ட ‘பூமராங்’ துவங்கிய இடத்துக்கே வருவது போல், பாதித்து விட்டதோ’ என்ற கலவரத்தோடு அந்தக் கிளினிக்கின் ஜன்னல் பக்கத்தில் இருந்த நாற்காலியில்
அமர்ந்தான். ஜன்னல் வழியே அந்தக் கட்டிடத்தின் மெயின் கேட்டைத் தற்செயலாகப்
பார்த்தான்.
போலீஸ் வான்
அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது.
