
குவிகம் இலக்கிய வாசல் சிறுகதைச் சிறுவிழாவில் படிக்கப்பட்ட கதை !
அன்று வியாழக்கிழமை. மதியம் ஒரு மணி வாக்கில் வங்கியில் தனியாக
அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தேன் . என் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்குப்
பலவகைகளில் நான் உதவியிருக்கிறேன்.
அவர் தயக்கத்துடன், “என்னோடு கொஞ்சம் வர முடியுமா சார்?”
என்றார் .
“என்ன விஷயம்?”
என்று கேட்டேன்.
அவர் “ என் தம்பியைக் காணவில்லை” என்றார்.
“நான் காலையில் தானே பார்த்தேன் ?”
“அவன் இல்லை சார், இவன் வேறு ஒரு தம்பி” என்றார்
“எப்போதிலிருந்து காணவில்லை?”
“செவ்வாய்க்கிழமை காலையில் போனான். அன்று திரும்பி வரவில்லை.
அவன் சைக்கிள்ல சென்று கடை கடையா சரக்கு சப்ளை செய்வான். அன்று பட் ரோடு போயிட்டு
கே கே நகர் போகப் போவதாக அவன் மனைவியிடம் சொல்லியிருக்கான். செவ்வாய் இரவும்
வரவில்லை, புதன் இரவும் வரவில்லை.
கம்பெனியில் வேலை இருக்குமோ என்று அங்கும் விசாரித்தோம். அங்கேயும் வரவில்லை.
இப்போது ஒரு சேதி வந்தது. ஈக்காடுதாங்கல் ஆற்றில் ஒரு பிணம் மிதப்பதாகவும்,
போலீசார் அதைக் கரை ஏற்றுவதாகவும்
சொன்னார்கள். ஒருவேளை இவன்தானா என்று பார்த்துவரப் போகணும். நீங்கள் கூட
வந்தீங்கன்னா போலீசைப் பார்த்துப் பேச வசதியாயிருக்கும் ” என்றார்.
வங்கி மாடியில் குடியிருந்த மேலாளர் அவர்களைச் சந்தித்து விபரம்
கூறி, மதியம் லீவு சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டோம். நண்பர் சைக்கிளில்
செல்லாம் என்றார், நான் வேண்டாம்,. ஆட்டோவில் போகலாம் என்று கூறினேன்.
இருவரும் ஆட்டோவில் ஈக்காடுதாங்கலுக்கு விரைந்தோம். அங்கு இருநூறு,
முன்னூறு பேர் கும்பலாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தை
விலக்கி வாராவதி அருகே சென்றோம். போலீஸ்காரர்கள் பிணத்தைக் கரை
ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக நாங்கள் அருகில் செல்வதற்குள் பிணத்தை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டனர். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது கே கே
நகர் ஸ்டேஷனுக்குப் போவதாகச் சொன்னார்கள்.
நாங்களும் கே கே நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தோம். அங்கும் பல
விதமான கேச்களுக்கு ஒரே கும்பல். இன்ஸ்பெக்டரைப் பார்க்கமுடியவில்லை. 4
மணிக்குத்தான் பார்க்கமுடிந்தது.
“என்ன விஷயம்?”
“இறந்தவர் என் தம்பி?”
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
“அவன் போட்டிருந்த சட்டை மற்றும் உள்ளாடைகளை வைத்து.”
“சரி, சரி. பாடி போஸ்ட்மார்டத்திற்கு GH போய்விட்டது. அங்கு
போய் பாருங்கள்.”
உடனே GHக்கு அதே ஆட்டோவில் விரைந்தோம். பாடி போஸ்ட்மார்டம் பண்ணித்
தையல் போட்டுக்கொண்டிருந்தார்கள். விவரம் சொன்னதும் “பாடியை எங்கே கொண்டு
போறீங்க?” என்று கேட்டார்கள்.
“எங்க ஊர் திருச்சி அருகே.. அங்கேதான் கொண்டுபோறோம்.
"அப்ப ஏழு எட்டு மணிநேரம் ஆகுமே? அவ்வளவு நேரம் பாடி
தாங்காது. ஏற்கனவே இரண்டு மூணு நாள் ஊறி உப்பிப் போயிருக்கே. அதோட லோக்கல்னா
நாலைஞ்சு தையல் போட்டுக் கொடுத்திடுவோம். அவ்வளவு தூரம் போகணும்னா நல்லா பேக்
பண்ணி நிறையத் தையல் போடணும். செலவாகுமே?”
“பரவாயில்லை. நீங்க கேக்கறதைக் கொடுத்திடறோம். எங்க அம்மா
அங்கே இருக்காங்க. அவங்க பார்க்கணும்.”
“சரி, ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்க”
உடனே பணம் கொடுக்கப்பட்டது
இந்த சம்பாஷனையின் போது ஒரு தினப்பத்திரிகை நிருபர் என்னிடம்
வந்து, இறந்தது யார், பெயர் என்ன,வயசு என்ன, என்ன தொழில், திருமணமானவரா, எத்தனைக்
குழந்தைகள், என்று எவ்வாறு இறந்தார் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. செவ்வாய்கிழமை மதியம் நடந்த விபத்தைப் பற்றி வியாழன்
அன்று மாலை விவரம் சேகரிக்கிறார். இது வெள்ளியோ
சனியோ பத்திரிக்கைச் செய்தியாக வரும்.
போஸ்ட்மார்ட்டம் முடிய மாலை 7 மணி ஆகிவிட்டது. பிணக்கிடங்கு
ஊழியர் “நன்றாகத் தைத்திருக்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் எடுத்துச்
செல்லலாம். யூடிகொலன் பாட்டில் நாலைந்து
வாங்கிக்கொள்ளுங்கள். பிணப் பெட்டியில் கற்பூரம் மற்றும் மிளகு நிறைய போட்டு
எடுத்துச் செல்லுங்கள். ரொம்ப குலுக்கல்
இல்லாமல் வேகமாகச் செல்லாமல்,
நிதானமாக எடுத்துச் செல்லுங்கள். நாற்றம் தாங்க முடியாது. அவ்வப்போது யுடிகொலன்
தெளித்து வாருங்கள்” என்று நிறைய அறிவுரை கூறி பிணத்தை ஒப்படைத்தார்.
இதற்குள் வேனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூ. 1500 வாடகை.
சுமார் 300 கிலோமீட்டர் செல்ல வேண்டுமே. என் நண்பரின் உறவினர்கள் ஆறு பேர், நான்,
என் நண்பர் அனைவரும் ஒரு சவப்பெட்டியில் கிடத்தி, ஆஸ்பத்திரி ஊழியர்
சொன்னபடி ஏற்பாடு செய்து, தேவையானவற்றை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.
வண்டி செங்கல்பட்டைத் தாண்டுவதற்குள் வேனில் இருந்தவர்கள் வேனை
நிறுத்தச் சொன்னார்கள். என்ன விவரம் என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை என்றார்கள் நானும் கொஞ்சம் இறங்கி நின்றேன். வேனில் காலை நீட்ட வசதியில்லை. இருபுற
இருக்கைகளுக்கு இடையில் சவப்பெட்டி. இந்தப்பக்கம் நாலு பேர். அந்தப் பக்கம் நாலு
பேர். முன்னால் இருவர். கீழே இறங்கிய 3 பேர் குபுக் குபுக்கென்று வாந்தி
எடுத்தார்கள். பின்னர் மேலும் 4 பேர் வாந்தி எடுத்தார்கள். நான் மட்டும் ஏனோ
வாந்தி எடுக்கவில்லை . மதியம் ஒரு மணிக்கு சாப்பிடச் செல்லவேண்டிய நான், நண்பரின்
வருகையால் சாப்பிடவில்லை. ஒரு வேளை அதுதான் காரணமோ என்னவோ?
திண்டிவனம் செல்லும்போது மணி 9.30 ஆகிவிட்டது. பிறகு எங்கும்
ஓட்டல்கள் திறந்திருக்காது என்பதால்
அனைவரும் பசி எடுத்து.. சாப்பிடலாம்
என்றார்கள். யாரவது ஒருவராவது சவப்பெட்டி அருகில் இருக்கவேண்டும் . நான் நானாகவே
“நான் இங்கு இருக்கிறேன். இது நகரமாகையால் , ஒரு வேளை வாடை தாங்காமல் யாரவது
போலீசில் சொல்லி அவர்கள் வந்து விசாரித்தால்.. நான் இருந்தால்தான் நல்லது.”
என்றேன். அவர்கள் அனைவரும் படிக்காத வியாபாரிகள் . அதனால் இதற்குச்
சம்மதித்தார்கள். என் நண்பர் மட்டும், “டிரைவரும் கூட இருக்கட்டும் உங்களுக்கு உணவு வாங்கி வருகிறோம்”
என்றார். நான் மட்டும் தனியாக
சவப்பெட்டியுடனும் டிரைவர் முன் சீட்டிலும் அமர்ந்திருந்தோம்.
சாப்பிடப் போனவர்கள் திரும்பும்போது அரை பாட்டில் பிராந்தியும்
கொண்டு வந்தார்கள் அனைவரும் குடித்திருந்தனர். என்னை மது அருந்துமாறு வற்புறுத்தி
சாப்பிட வைத்தார்கள். நான் மது அருந்தினேன். உணவு உண்ணவில்லை.
ஒருவழியாக இரவு 3 மணிக்கு அவரது
ஊரை அடைந்து அவரது வீட்டில் சவப் பெட்டியை இறக்கி, உள்ளே வைத்தார்கள்.
தொலைபேசியில் முன்னமே விவரம் அறிவிக்கப் பட்டிருந்ததால் தயார் நிலையில் இருந்தார்கள். உள்ளே ஒரே
ஒப்பாரி சத்தம். இதற்கிடையில் ஒரு பெண்மணி வண்டியில் வந்தவர்கள் எல்லோரும் வீட்டின் வெளியில் நின்றிருந்த இடத்திற்கே
வந்து காப்பி கொடுத்தாள்.என் நண்பர், என் டம்ளரை வாங்கி, அந்தப் பெண்மணியிடம் " அவரு பிராமணன். இன்னும் கொஞ்சம் பால்
ஊற்றிக் கொண்டுவா “ என்றார். என் மணம் நெகிழ்ந்தது. தன் தம்பி இறந்திருக்கும்
தருணத்திலும், இவர் நமக்கு மரியாதை செய்கிறாரே என்று வருந்தியது. இரவெல்லாம் என்ன
நடந்தது என்று பேசிக் கொண்டிருந்தோம். உறவினர், கிராம மக்கள் அனைவரும் வந்து
விவரம் கேட்டபடி இருந்தனர்.
மறுநாள் காலை 6 மணிக்கு, வெட்டியான் வீட்டிற்கே ஆளனுப்பி
வரவழித்து, பேரம் பேசி, பணம் கொடுத்து அடக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 7 மணி
வாக்கில் மெயின் ரோடில் இருந்த டீக்கடை போன்ற ஒரு ஹோட்டலில் காலை உணவு
அருந்தினோம். 10 மணிக்கு வெட்டியானிடமிருந்து செய்தி வர, சவ ஊர்வலம் புறப்பட்டு
மயானத்தை அடைந்தது. லேசாகத் தூறல் ஆரம்பித்திருந்தது. வெட்டியான் அது போதும் என்று
நினைத்தான். ஆனால், ஊர்ப்பெரியவர் "இன்னும் 2 அடி தோண்டவேண்டும். இது
காட்டுப் பகுதி.ஓநாய்களும், நரிகளும் நடமாடும் இடம் இன்னும் ஆழம்
தோண்டவேண்டும்.” என்றார். வெட்டியான் மேலும் ஆயிரம் ரூபாய் கேட்டான். வாக்குவாதம் தொடங்கி, கைகலப்பு ஆகும் அளவிற்கு
இருந்தது. மழை கனமாகக் கொட்டத் தொடங்கியது. சச்சரவு முடிவடையும் என்று
தோன்றவில்லை.
நான் நண்பரிடம், “ஏற்கனவே 4 நாள் ஊறிவிட்ட பாடி. வெட்டியான்
பிடிவாதமாக இருக்கிறான். கொடுத்துவிடுங்கள்” என்றேன்.
அவர் ரகசியமாக, “பணம் இல்லை. ஏற்கனவே கடன் வாங்கி வந்த
பணமெல்லாம் மற்ற செலவாகிவிட்டது” என்றார்.
மழையில் பிணமும், கூட வந்த 50 பேரும் நனைந்துகொண்டு இருந்தோம்.
எனவே நான், “அவன் தோன்டவில்லை என்றால், நான் தோண்டுகிறேன் ” என்று
குழியில் இறங்கி, மண்வெட்டி கடப்பாரை எடுத்துத் தோண்ட ஆரம்பித்தேன். கிராம மக்கள்
பதறிவிட்டனர். எல்லோரும் “நீங்க மேல வாங்க சார்” என்றார்கள். “இது ஒண்ணும் சரிப்பட்டு
வராது” என்று சொல்லித் தொடர்ந்தேன்.
அப்போது அங்கு வேடிக்கைப் பார்க்க வந்திருந்த கிராம இளைஞன், "நான் தோண்டுகிறேன், நீங்க ஏறுங்க சார்.
அவன் என்னை என்ன பண்ணிடுவான்,
பார்த்துடறேன்.“ என்று புதை குழியில்
குதித்தான். அவனிடம் பொறுப்பை ஓப்படைத்தபின் மேலே ஏறி வர ஒருவர் கை
கொடுக்க, ஏறும்போது சறுக்கி விழ இருந்த என்னை மற்றொருவரும் கை கொடுத்துத்
தூக்கிவிட்டார்கள். ஒரு வழியாக அடக்கம் செய்து முடித்தோம்.
பின்னர் மதிய சாப்பாடு
மெயின் ரோடு விடுதியில் சாப்பிட்டபின், காத்திருந்த வேனில் ஏறி, சென்னை
வந்தடைந்தோம் மறுநாள் என் நண்பர் நடந்ததை
என் அலுவகத்தில் எல்லோரிடமும் விவரிக்க, ஆண், பெண் சக ஊழியர்கள் என்னை ஆச்சரியத்தோடு
பார்த்தார்கள். நான்தான் அன்றைய ஹீரோ. எனக்கென்னமோ, 63 வயதில் அதை நினைக்கும்பொழுது, என் வாழ்வில்
நடந்தவைகளை நினைத்துப் பார்க்கும்பொழுது, என்னை ஒரு ஹீரோவாக நினைத்துப் பார்க்க
முடியவில்லை.
page