
ஆக மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. சரி, அப்படியானால் யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் தோன்றுகிறதல்லவா? சாஸ்திரங்களிலும், கருட புராணம், கடோபநிஷத் போன்றவற்றிலும் கூறப்படும் மறுபிறவி, பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும்.
பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ (அதாவது செல்வந்தர் வீட்டு நாய்க்குட்டிகள் போல) வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் பிறவி எடுத்த அனைவரும், அதாவது நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது எனலாம். விஞ்ஞானப் படிப் பார்த்தால் பிரபஞ்ச சக்தி என்ற பரம அணுவிலிருந்து பிரிந்து வந்த அணு என்னும் துகள் மீண்டும் அந்தப் பரம அணுவோடு ஒன்றிணைவதே முக்தி அல்லது வீடு பேறு எனப்படுகிறது.
உயிர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு பிறவியில் அந்த நிலையை எய்தத் தான் போகிறோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை .
(கார்த்திகேயன் என்பவர் தன்னுடைய BLOG இல் “அந்த நிலையை எய்யத் தான் போகிறோம் ’ என்ற கட்டுரையில் எழுதியதன் சாரம் இவை)


இப்போது நமது வக்கீல் விக்டர் பௌத்த மதம் இந்த மரணத்திற்கு அப்பாலைப் பற்றி என்ன சொல்கிறது என்று விளக்குகிறார்.
பௌத்தக் கோட்பாடு:
பௌத்தமும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த உலக வாழ்வில் நமக்கு இருக்கும் ஆசையே இந்த ஜனன-மரண வட்டத்துக்குள் நம்மை தள்ளுகிறது என்கிறார் புத்தர். இந்தச் சுழலிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் ஆசையிலிருந்து மனிதன் விடுபடவேண்டும். நிர்வாணம் என்பது விடுதலை மட்டுமல்ல துறவும் கூட. எல்லாவற்றையும் துறந்தவன் விடுதலை அடைகிறான். இந்த விடுதலை பெறுவதே ஒவ்வொரு மனிதனின் தலையான குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இந்துமதம் சொல்வது போல மனிதனிடம் அழிவற்ற ஆத்மா இருக்கிறது என்பதை புத்த மதம் ஒத்துக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு மனிதனிடமும் பழக்கம் , ஞாபகம், ஆசை, உணர்வு என்ற ஒரு மூட்டை உள்ளது. இவை மனிதனுடன் அடுத்தடுத்த ஜன்மங்களுக்கும் தொடர்ந்து போகின்றன. ’ நான்’ என்ற பொய்மை உணர்வை விட்டுவிடும் போது இந்த நினைவும் , தவிப்பும் மறைந்து அடுத்த ஜன்மம் வருவதற்கு வழியில்லாமல் போய்விடும். இது பிறவித் துன்பத்தையும் அழித்துவிடும்.
இந்தக் கருத்து இன்றைய மனிதனுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஏனெனில், இந்தக் கருத்து நமது நிகழ் வாழ்க்கையை மோசமான ஒன்றாகக் காட்டுகிறது. நிர்வாண நிலையும் அவ்வளவு பிடித்தமானதாகத் தோன்றவில்லை.
திபெத்திய புத்த கொள்கைப்படி, இறந்தவனின் உயிர் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட ‘பர்டோ’ என்ற ஒரு செயல்பாட்டில்
41 நாட்கள் இருக்கிறதாம். பர்டோ வாசம் முடிந்த பின் அடுத்த பிறப்புக்கோ அல்லது பிறப்பற்ற நிர்வாண நிலைக்கோ போகிறதாம்.
இறக்கும் மனிதனின் கடைசிகால ஆசைகளின் தன்மைகளே அவன் இறப்பிற்கு அப்பால் அமையும் நிலைக்குக் காரணங்களாக அமைகின்றன. அவை தான் அவனை நிர்வாண நிலைக்கோ அடுத்த பிறவிக்கோ உட்படுத்துகின்றன.

பர்டோவின் முதல் பயணம் மனிதன் இறந்ததிலிருந்து அரை நாள் முதல் நான்கு நாட்கள் வரை இருக்கும். இது இறந்தவனுக்குத் தன் உடல் தன்னிடமிருந்து பிரிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளும் காலமாகும். இறந்தவனுடைய மனம் ஒரு தூய வெள்ளை ஒளியை உணரத் தொடங்கும். ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட மனதுக்கு அந்த தூய ஒளி நன்றாகத் தெரிவதுடன் அதைத் தாண்டி உயர்ந்த நிலைக்குப் போகும் மார்க்கமும் தென்படும். சாதாரண மனிதன் அந்த ஒளியிலேயே விழுந்து விடுகிறான்.

இரண்டாவது பர்டோ நிலையில் இறந்தவன் அவனவன் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ற விளைவுகளைச் சந்திக்கிறான். பக்குவம் அடையாதவன் இன்னும் உடல் என்ற பந்தத்தில் விடுபடாதவனாக இருப்பான். அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப அவனுக்கு நல்லதும் கெட்டதும் இங்கு தான் நடக்கும். அவையெல்லாம் அவனுடைய உணர்வுகளின் மாயத் தோற்றமே தவிர வேறொன்று மில்லை. இறந்த மனிதன் அனைவரும் சலனமற்ற நிர்வாண நிலையை அடைய இந்தப் பாதையில் பயணித்துத் தான் ஆகவேண்டும். ஏற்கனவே பரிபூரண பக்குவ நிலையை அடைந்தவன் இந்த பர்டோ அனுபவத்தைப் பெறாமலேயே நிர்வாண சுவர்க்கத்தை அடைய முடியும்.

மூன்றாவது பர்டோவில் தான் அவன் மறுபிறப்பு என்ற பாதைக்கு வருகிறான்.
(மற்ற கருத்துக்கள் தொடரும்)