ஷாலு மை வைஃப்

image

“என்னடா பண்ணிக்கிட்டிருக்கே ராமசிவா!”

“டேய் மாப்ளே ! என்னை ஸ்டைலா ராம்ஸ் அப்படின்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ! நீயும் அந்த HR மேடம்  மாதிரி முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடறயே?

“டேய்! இப்போ அதுவாடா  முக்கியம்? இன்னிக்குக் காலையிலே நான் முழிச்ச மூஞ்சி சரியில்லை !

“யார்  மூஞ்சிலடா  முழிச்சே. தினமும் என் மூஞ்சில தானே முழிப்பே ! நேத்து ஒரு நாள் நான் என் மாமா வீட்டுக்குப் போனபோது என்ன பண்ணினே ?”

“எல்லாம் அந்த HR மேடம் மூஞ்சில  தான் முழிச்சேன்  !”

“டேய் மாப்ளே! என்னடா சொல்லற? அப்ப ராத்திரி அவ கூட தான் படுத்துகிட்டிருந்தியா?”

“அடசே ! ரூமில நாம என்னிக்காவது முழிச்சிருக்கோமாடா? அப்படியே கண்ணை மூடிக்கிட்டே பல்லைத் தேய்ச்சுட்டு ஆபீஸ் பஸ்ஸில தூங்கி ஆபீஸ் வந்துதும் முழிக்கிறோமே அது தானேடா ரியல் முழிப்பு !”

“நான் உன்கூட தானடா பஸ்ஸில வந்தேன். ஏன்  உன்னை எழுப்பலே?”

“லூசு! அது நான் கேட்க வேண்டிய கேள்வி ! அந்த மாங்கா – அவன் தாண்டா நம்ம பாஸ்,  யாருகிட்டேயோ போனில மாம்ஸ் அப்படின்னு பேசிக்கிட்டு இறங்கினான். நீ லூசு மாதிரி ராம்ஸுன்னு உன்னைக் கூப்பிடறதா நினைச்சுக்கிட்டு அவன் பின்னாடியே ‘யெஸ் பாஸ் யெஸ் பாஸ் ’ னு ஓடினியே ! அப்பத் தான்  அந்த   HR மாமி என்னைத் தட்டி எழுப்பி ’  நேத்திக்கு ஹேங்க் ஓவர் இன்னும் போகலையான்னு கேட்டுட்டுப் போறாடா?  ”

“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு மச்சி!  நேத்து நான் இல்லாதபோது நிலவேம்பைக் குடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு நான் வைச்சிருந்த ‘அரிஸ்டோகிரெட்டை ’ ராவா அடிச்சிட்டியா?”

“போடா ! நேத்து ராத்திரி  தூக்கத்தில ஒரு கனவு கண்ணா!  ஒரு பொண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டாடா?”

“தெரியும்! பேய்ப்படம் பாத்திருப்பே ! யாரு? மாயா நயன்தாரா தானே?”

“அதில்லேடா! ஒரு அழகான பொண்ணு ! என்னைப்  பாத்த முதல் பார்வையிலேயே ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கிறா?”

image

“அப்ப இது பேய்க்கனவு தாண்டா !  அதுக தான் இப்படி அலையும் !”

“சே! சே! பேய் எல்லாம் இல்லடா ! நல்ல லட்சணமா ரெட் கலர் சாரி கட்டிட்டு வந்தா! ஆனா முகம் மட்டும் தெரியலைடா !”

“ அப்ப அது அந்த மிஸ் ஓ.எம்.ஆர். ஆக இருக்கும் !”

“யாருடா அந்த அழகு ராணி மிஸ்   ஓ.எம்.ஆர். ?

வேற யாரு உன்னோட HR குவீன் தான். அவ ஒரு தடவை ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்குப் போனாளா? அப்ப அங்கேர்ந்து   கான்பிரன்ஸ் கால்ல கூப்பிட்டு ’ ஐ மிஸ்  ஓ.எம்.ஆர். !  ஐ மிஸ்  ஓ.எம்.ஆர்! அப்படின்னு நூறு தடவை சொன்னாளாம். அதிலிருந்து அவளுக்கு இன்னொரு பெயர்  மிஸ்  ஓ.எம்.ஆர்.”

“ஏண்டா ! எப்பப் பாத்தாலும் அவளைப் பத்தியே பேசறே ? என்னை டிஸ்டர்ப் பண்ணினது அவ இல்லேடா ! சாஃப்டா கேட்டாடா – என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு”

“ அவளுக்குத் தான் உன் மேலே ஒரு சோடா. இல்லே ஷர்பத்.. இல்லே  அது என்னடா.. இம்.. கிரஷ் ”

“ வேணாம். இவ  அவ இல்லே!  இன்னொரு தடவை அவ இவன்னு சொன்னே எனக்குக் கெட்ட கோபம்  வரும் . இவ என்னை  ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிட்டாடா? ”

“ நீ டிஸ்டர்ப் டிஸ்டர்ப் னு சொல்லி என்னை டிஸ்டர்ப் பண்ணிட் டியே மாப்ளே ? எவடா  அவ?  சாரி இவ?  

” முகம் தான் தெரியல . ஆனால் நேத்திக்கு அவளை ஆஃபிஸ்ல பாத்திருக்கேன்னு தோணுது.“

” எல்லாம் வழக்கமா  பாக்கிற  ‘ஃபேர் அண்ட் லவ்லி’ தானே மச்சி ?

“இல்லேடா..இம். ஒருவேளை நேத்திக்கு பிரெஷ்ஷர் ஏழெட்டு பேரை இன்டர்வியூ பண்ணினேன் . அதுல ஏதாவது ஒண்ணாயிருக்குமோ?”

“என்னது.. நீ லேடிஸை இன்டர்வியூ பண்ணினியா? எப்படி எனக்குத் தெரியாமப் போச்சு?  நான் தானே சீனியர். நான் தானே இன்டர்வியூ பண்ணணும்? ”

“என்னடா சீனியர்? நீயும் நானும் ஒரே நாளிலே தானே ஜாயின் பண்ணினோம்!”

“ஆனா உனக்கு முன்னாடி நான் ரெஜிஸ்ட்டர்ல கையெழுத்து போட்டிருக்கேன் தெரியுமா?”

“எப்படிப் போட்டே! என்னத்தான்  முதல்ல கூப்பிட்டாங்க ! நீ தான் மச்சி எனக்கு ரொம்ப முட்டுது. கையெழுத்தைப் போட்டுட்டு ஓடறேன்னு கெஞ்சினே ! அதனால நீ சீனியரா? ”

“சீனியர்! சீனியர் தான் ! எப்படி யிருந்தா என்ன? இந்த மிஸ் ஓ.எம்.ஆருக்கு என்ன தைரியம் இருந்தா என்னை விட்டுட்டு உன்னை இன்டர்வியூ பண்ணச்  சொல்லியிருப்பா?

” போன தடவை நீ வழிஞ்சதை அவ கண்ணால பாத்துட்டா. காபி குடிக்கும் போது அப்படியாடா ஜொள்ளு விடறது. காபியைத் துப்பி கேண்டிடெட் மேலெல்லாம் கொட்டி- அத்தோட விடாம அதைத் தொடைச்சு விடறேன்னு நீ கர்சீபை எடுத்துக்கிட்டு அந்த லேடி கிட்டப் போக , HR மாமிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடுச்சு.  இனிமே உன்னை ஜென்மத்துக்குக் கூப்பிடமாட்டா!“

” விடுடா! இண்டர்வியூவில வந்தவங்க லிஸ்ட் எல்லாம் இந்த சிஸ்டத்தில இருக்கு. அதுலே எந்தக் குட்டி உன்னை டிஸ்டர்ப் பண்ணினான்னு பாக்கலாமா? “

” குட்டி கிட்டின்னு சொன்னே எனக்குக் கெட்ட கோபம் வரும். அவ நல்ல லட்சணமா இருந்தாடா.“

“மூஞ்சி தெரியலைங்கிரே ! அப்புறம் என்னடா லட்சணத்தைக் கண்டுட்டே? ”

“ போடா! அந்த லிஸ்டை சிஸ்டத்தில பத்து தடவை பாத்துட்டேன். அதில  என்னை டிஸ்டர்ப் பண்ணினவ இல்லேடா”

“ ஏண்டா!  ஒருவேளை இந்த பார்க்காம காதல், பேசாம காதல்,கேக்காத காதல்  தொடாம காதல் இந்த மாதிரி ஏதாவது இண்டர்வியூவுக்கு வராத பொண்ணை லுக் விட்டிருப்பியோ?”

“ ஏய்! ரைட்டா! கையைக்கொடு! இண்டர்வியூவுக்கு வராத பொண்ணு தான் என் கனவில வந்திருந்தா! அவ தான் அந்த சிவப்பு சாரிக் காரி. ”

“ என்னடா உளர்ரே? ”

“ கண்ணா!  நேத்திக்கு என்கிட்டே கொடுத்த லிஸ்டில மொத்தம் ஒன்பது பேர் இருந்தாங்க! நான் சிஸ்டத்தில ஒன்பது பேரைப் பாத்தேன். அதில ஒண்ணு தான் அந்த சிவப்பு சாரி. ஆனா இண்டர்வியூவுக்கு எட்டு பேர் தான் வந்தாங்க !. இவ மட்டும் வரலை”

“ இவ தான் ஓம்பதா?”

“ அடி வாங்கியே சாகப் போறே! அவ போட்டோ ஏண்டா சிஸ்டத்தில இல்லே? ”

“பிரதர், வராதவங்க டீடைல்ஸ் எல்லாம் HR கிட்டே தான் இருக்கும். நீ வேணுன்னா  நம்ம மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் வாங்கிக்கோ! டேய்! என்ன சொன்னே ! ரெட் சாரியா? டேய் நானும் நேத்திக்கு அந்தப் பொண்ணை HR ரூமில பாத்தேண்டா ! ஒருவேளை உன் மூஞ்சியைப் பாத்துட்டு இந்தக் கம்பெனியே வேண்டாமுன்னு போயிட்டாளோ  என்னவோ? ”

“ நீ அவ முகத்தைப் பாத்தியாடா? எப்படி இருந்தா? ”

“ சாரி மச்சி! எனக்கும் முதுகு தான் தெரிஞ்சுது. முதுகு ஓகே! முகத்தைப் பாக்கலாமுன்னு  மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போனேன். என் போராத நேரம் , அப்பவும் என் கையிலே காபி கப் இருந்தது.  மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டேயே வராதேன்னு கண்ணாலேயே மிரட்டினா! நேரா திரும்பிட்டேன்.”

“ சரி, நீ இங்கேயே இரு. நான்  மிஸ் ஒ.எம்.ஆர். கிட்டே போய் அவளைப் பத்திய  தகவலைப் பிடிச்சிட்டு வர்றேன்”

“ அவளைப் பத்தியா ? இவளைப் பத்தியா?  அப்போ இவள்ன்னு சொன்னே ! இப்போ அவள்ன்னு சொல்லிக் கன்பியூஸ் பண்ணறியே? ”

“ சும்மா இருடா!”

“ ஏண்டா!  ரைட் அபௌட் டர்ன் அடிச்சு உடனே  வர்ரே! எனக்குப் புரிஞ்சுது!  நீ போய் அவ கிட்டே ரெட் சாரி வேணும்னு கேட்டிருப்பே ! அவ இன்னிக்கு ரெட் சாரி .கட்டியிருக்கா! பளார்னு  அறைஞ்சு அனுப்பியிருப்பா? சரியா? ”

“ போடா! இடியட் ! மிஸ் ஒ.எம்.ஆர். சீட்டில காணோம். வர இன்னும் ஒன்றரை மணிக்கூர்  ஆகும்னு அந்த மலையாள  அசிஸ்டெண்ட் பறஞ்சுது. ”

“ ஒ! ஓமனக்குட்டியா ?  தப்பா நெனைச்சுக்காதே! பேரே அப்படித் தான். அட! புரிஞ்சு போச்சு! நம்ம  மிஸ் ஒ.எம்.ஆர். எங்கே போயிருக்குன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கு என்ன கிழமை?

” அதுக்கும் கிழமைக்கும் என்னடா சம்பந்தம்? “

” இன்னிக்கி செவ்வாய்க் கிழமை. சாயங்காலம் மூணு முதல நாலரை   வரை ராகு கால பூஜை பக்கத்தில இருக்கிற துர்க்கை கோயில்ல நடக்கும். கல்யாணம்  ஆகணுமுன்னு வேண்டிக்க நிறைய பெண்கள் அங்கே போவாங்க!. மிஸ் ஒ.எம்.ஆர்.  சிவப்புப் புடவை -ராகு காலம் – ஒண்ணும் அரையும் ஒண்ணரை.“

” உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்? “  

“நானும் அங்கே போயிருக்கேன். முறைக்காதே! அங்கே வந்திருக்கறதில ஏதாவது நமக்குத் தோதாகுமான்னு  பாக்க!நம்ம  மிஸ் ஒ.எம்.ஆர். வர்ரதைப் பாத்தப்புறம் அந்தப் பக்கமே போகிறதில்லே!”

“இந்த ரெட் சாரியை விடுடா? நம்ம ரெட் சாரி மேட்டருக்கு வாடா? ”

“என்ன என் ரெட் சாரியைப்  பத்தி ஏதாவது காமெண்டா?” என்று கேட்டுக் கொண்டே  மிஸ் ஒ.எம்.ஆர்.  என் கிட்டே வந்தாள். இவன் சாரின்னு இடத்தை விட்டே ஓடிட்டான்.

“ என்னது? சாரியா? இது வேற சாரி மேடம்! இவன் இன்னைக்கும் காபியை என் டேபிள்ள கொட்டிட்டானாம். அதுக்குத் தான் சாரி கேட்டுட்டுப் போறான். ”  

“  நீங்க அவசரமா இன்டர்வியூ ரூமுக்கு வரணும். நேத்திக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணமுடியாத கேண்டிடெட் இன்னிக்கு வந்திருக்காங்க . நீங்க ஃப்ரியா ?”

“ யார் ? அந்த ரெட் சாரி கேண்டிடெட் தானே? ”

“ எப்படித் தெரியும்? ஒ! நேத்திக்கு அவ வந்து என் கிட்டே பர்மிஷன் கேட்ட போது பாத்தீங்களா? ”

“ சிஸ்டத்தில புரபைலில் பாத்தது தான்”

“ எனக்கு ஒரு அர்ஜண்டான வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்ரதுக்கு ஒண்ணரை  மணி நேரம் ஆகும். அதனால நீங்களே சோலாவா இண்டர்வியூவை முடிச்சுட்டு ரிபோர்ட் அனுப்பிடறீங்களா? ”

“ஓகே மேடம்!”

“என்னை  மிஸ் ஒ.எம்.ஆர்.என்றே கூப்பிடலாம் . அது எனக்குப் பிடிச்ச பட்டப் பெயர் தான்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

நானும் வழிந்து கொண்டே  என்னை டிஸ்டர்ப் செய்த பெண்ணை இன்டர்வியூ செய்ய   ஆவலுடன் சென்றேன்!

இன்றைக்கும் அவள் சிவப்பு சாரியில் தான் வந்திருந்தாள். ‘சிவப்பு தான் இவளுக்குப் பிடிச்ச கலரோ?’ இல்லே இருப்பது ஒரே ஒரு சிவப்பு கலர் சாரி தானா என்று நினைத்துக் கொண்டே கேட்டேன்.

உங்கள் பெயர்?

“ஷாலு” என்றாள்.

(வளரும்)